Published:Updated:

கிள்ளி தேவதைக்கு என்ன சோகம்? - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #BedTimeStories

உங்கள் செல்லக் குழந்தைகளுக்கு, தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... கிள்ளி என்ற குட்டித் தேவதை சந்தித்த பிரச்னை என்ன? அது எப்படி சரியாச்சு?

தேவதை
தேவதை ( pixabay )

ந்தப் பரபரப்பான நகரத்துக்கு கடைசியில ஒரு மலை இருந்துச்சு. அந்த மலையை ஒட்டி ஒரு குட்டிக் காடு இருந்துச்சு. அந்தக் காட்டுக்குள்ளே, சின்னப் பாப்பா செடியிலிருந்து பெரிய தாத்தா மரம் வரை இருந்துச்சு.

ஒல்லி மரம், குண்டு மரம், உயரமான, குட்டையான என விதவிதமான மரங்கள், செடிகள், கொடிகள் இருந்துச்சு. இலைகளிலேயே வெவ்வேறு பச்சை நிறங்கள் இருந்துச்சு. மஞ்சள், நீலம், சிவப்பு எனப் பல நிறங்களில் பூக்களும் இருந்துச்சு.

தேவதை
தேவதை
pixabay

அவ்வளவு அழகான காட்டுக்கு நடுவுல, ஒரு வித்தியாசமான செடி இருந்துச்சு. அந்தச் செடி, தங்க நிறத்துல பூக்கள் பூக்கும். ஒவ்வொரு பூவிலிருந்தும் ஒரு குட்டித் தேவதை வெளியே வருவாங்க. தங்க நிறப் பூக்களின் மகரந்தத்தை எல்லாம் உடம்பில் ஒட்டிக்கிட்ட மாதிரி அவங்களும் தங்க நிறத்துல ஜொலிப்பாங்க.

மனுஷங்க கண்களுக்குத் தெரியாத இந்த குட்டித் தேவதைகளுக்கு, சின்னச்சின்ன இறக்கைகள் இருக்கும். குட்டியான கை கால்கள், அதுல குட்ட்ட்ட்ட்ட்டிக் குட்ட்ட்ட்டியா விரல்கள் இருக்கும். அந்தக் குட்டி விரல்களை அசைச்சா, தங்க நிறத்தில் பொடி மாதிரி கொட்டும். அதை வெச்சுதான் அவங்க வேலை செய்வாங்க.

என்ன வேலை தெரியுமா சுட்டீஸ்?

சூரியன் வர்றதுக்கு முன்னாடி, தங்களோட பூக்களிலிருந்து வெளியே வர்ற இந்த குட்டித் தேவதைகள், காட்டில் கூடுகட்டி வசிக்கும் பறவைகளை எழுப்புறது, பூக்களுக்கு நிறங்கள் கொடுக்கிறது, பட்டாம்பூச்சிகளுக்கு வண்ணமும் வடிவமும் கொடுக்கிறது... இதுதான் இந்த குட்டித் தேவதைகளின் வேலை.

இப்படி பிஸியா வேலையை முடிச்சுட்டு, மறுபடியும் தங்களோட பூக்களில் போய் ஓய்வு எடுத்துப்பாங்க. அடுத்த நாள்தான் வெளியே வருவாங்க.

தேவதை
தேவதை
pixabay

ந்த குட்டித் தேவதைகள் குழுவில் ஒருநாள், ஒரு தங்க நிறப் பூ மலர்ந்து, ஒரு குட்டித் தேவதை வெளியில வந்தாள். அந்த குட்டித் தேவதையின் பெயர், கிள்ளி.

கிள்ளி, மற்ற தேவதைகள் மாதிரி முழுசா தங்க நிறத்தில் இல்லை. ஆங்காங்கே வெள்ளி நிறத்தை தெளிச்சுவிட்ட மாதிரி புள்ளிகளும் வரிகளும் இருந்துச்சு.

அதனால, கிள்ளிக்கு ரொம்ப வருத்தமா இருந்துச்சு. மற்ற தேவதைகளுடன் சேர்ந்து தினமும் அதுக்குக் கொடுக்கிற வேலையைச் செய்யும். ஆனாலும் மற்ற குட்டி தேவதைகள் மாதிரி உற்சாகத்தோடு செய்யாது. மனசுக்குள்ளே கவலையோடு செய்யும்.

இதனால் என்ன ஆகும் தெரியுமா சுட்டீஸ்? பூக்களுக்கு சரியான நிறங்கள் கிடைக்காமல் மங்கலா இருக்கும். பறவைகளை எழுப்ப முடியாமல் திரும்பி வந்துடும். வேலைகளை முடிக்கவும் ரொம்ப நேரம் எடுத்துக்கும்.

அதனால சோர்ந்துபோன கிள்ளி தேவதை, தன்னுடைய பூவுக்குள் இதழ்களை மூடிக்கிட்டு அமைதியா இருக்கும். ஒருமுறை வெளியே வரவே பிடிக்காமல் ரெண்டு நாளாக பூவுக்குள்ளே இருந்துச்சு.

மற்ற குட்டித் தேவதைகள், கிள்ளியை நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டாங்க. அந்த குட்டித் தேவதைகளிலேயே சீனியரா இருந்த தேவதை நீலா. அந்த நீலா, நேராக கிள்ளியின் பூவை நெருங்கி, இதழைப் பிடிச்சு எட்டிப் பார்த்துச்சு.

story
story
pixabay

உள்ளே இறக்கைகளையும் கை கால்களையும் மடக்கிக்கிட்டு சோகத்தோடு உட்கார்ந்திருந்துச்சு கிள்ளி தேவதை.

``இதோ பாரு கிள்ளி... இப்படி உன்னை நினைச்சு நீயே வருத்தப்படறதால எந்தப் பிரயோஜனமும் இல்லே. கிள்ளி, நாளைக்கு நாங்க எல்லாம் வெளியே போகப்போறோம். உனக்கு ஒரு முக்கியமான வேலை கொடுக்கப்போறோம்'' - அப்படின்னு சொல்லிச்சு நீலா தேவதை.

``எ... என்னது... நான் மட்டும் தனியா வேலை செய்யணுமா?'' - அப்படின்னு பயந்துடுச்சு கிள்ளி.

``ஒண்ணும் பயப்படாதே. பக்கத்துல இருக்கிற மரத்தில் நிறைய பட்டாம்பூச்சி கூடுகள் இருக்கு. அதிலிருந்து ஒரே நேரத்தில் நிறைய புழுக்களுக்கு சிறகு முளைச்சு பட்டாம்பூச்சிகளாக வரப்போகுது. அந்த வேலையை நீதான் கவனிச்சுக்கணும். எந்தப் பூச்சிக்கு என்னென்ன நிறங்கள் கொடுக்கலாம், எப்படி வடிவம் கொடுக்கலாம் என எல்லாத்தையும் நீயே முடிவுசெய்து கொடுக்கணும்'' - அப்படின்னு சொல்லிச்சு நீலா.

``ஐயோ... எனக்கு அனுபவமே இல்லியே? நீங்க சொல்றதைத்தானே இவ்வளவு நாளா செய்தேன். திடீர்னு தனியா செஞ்சு தப்பாயிடுச்சுனா...'' - அப்படின்னு சொல்லும்போதே கிள்ளி உடம்பு நடுங்கிச்சு.

story
story
pixabay

``அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. உன் மேலே முழுசா நம்பிக்கை வெச்சு செய். அது எப்படி வந்தாலும் வேற வழியில்லை. நாளைக்கு அதுதான் அந்த பட்டாம்பூச்சிகளுக்கான நிறமும் வடிவமும். சரியா?'' - அப்படின்னு சொல்லிட்டு கிளம்பிடுச்சு நீலா தேவதை.

கிள்ளி மனசுல பயம் இருந்தாலும், `வேற என்ன செய்றது. நம்மால முடிஞ்ச வரை அக்கறையா உண்மையா செய்வோம்'னு முடிவுசெஞ்சது.

டுத்த நாள், கிள்ளி தேவதை பூவைவிட்டு வெளியே வந்தப்போ, வேற தேவதைகளின் சுவடே இல்லே. எல்லோருமே கிளம்பி போய்ட்டிருக்காங்க போல.

அந்த மரத்துக்கு வந்த கிள்ளி தேவதை, கூட்டிலிருந்து வெளியே வரத் தயாராகிட்டிருந்த பட்டாம்பூச்சிகளுக்கு யோசிச்சு யோசிச்சு, ரசிச்சு ரசிச்சு நிறங்களைக் கொடுத்துச்சு. அழகான பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பிச்சதுங்க.

தன்னுடைய வேலையில் மூழ்கிவிட்ட கிள்ளி தேவதை, கடைசிப் பட்டாம்பூச்சியும் பறந்த பிறகுதான் நிமிர்ந்து பார்த்துச்சு. தன்னுடைய பூவை நெருங்கிச்சு. அடுத்த நிமிஷம், எல்லா தங்க நிறப் பூக்களிலிருந்தும் வெளியே வந்த குட்டித் தேவதைகள், `படபட' என இறக்கைகளை அடிச்சு கிள்ளியைப் பாராட்டினாங்க.

flower
flower
pixabay

பக்கத்துல வந்த நீலா தேவதை, ``கிள்ளி, நாங்க எங்கேயும் போகலை. உனக்குள்ளே இருக்கிற திறமையை முழுசா வெளியே கொண்டுவர இப்படிச் செஞ்சோம். ஒரு விஷயத்தை நாமதான் செஞ்சாகணும் என்று முடிவாகும்போது, நமக்குள்ளே இருக்கிற திறமைகள் முழுசா வெளியே வரும். அக்கறையோடு செய்யும்போது அது இன்னும் அழகாக மாறும்'' - அப்படின்னு சொல்லிச்சு.

கிள்ளி தேவதை விஷயம் புரிஞ்சு சந்தோஷமா சிரிச்சது. உங்களுக்கும் புரியுதா சுட்டீஸ்!

இந்தக் கதையை எழுதியவர்: நசீமா ரசாக்

இந்தக் கதையைச் சொல்பவர்: அபிநயா ஶ்ரீகாந்த்