Published:Updated:

ஆலா செஞ்ச காகிதக்கொக்கு என்ன பண்ணுச்சு? - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories

உங்கள் செல்லக் குழந்தைகளுக்கு, தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... ஆலா என்கிற சிறுமி செய்த காகிதக்கொக்கு, அவளோடு பேச ஆரம்பிச்சது. அப்புறம் என்ன ஆச்சு?

ஆலா
ஆலா ( pixabay )

ஆலாவுக்கு இன்றைக்கு பரிசு கிடைச்சது. ஆலாவுக்கு மட்டுமில்லே, அவங்க வகுப்பில் இருக்கிற எல்லோருக்கும் பரிசு கிடைச்சது. அது என்ன பரிசு தெரியுமா சுட்டீஸ்?

யாழினி மிஸ் எப்போவெல்லாம் வகுப்புக்கு வர்றாங்களோ, அப்போவெல்லாம் புதுசு புதுசா எதையாவது சொல்லிக் கொடுப்பாங்க.

ஒரு தடவை கத்திக் கப்பல். இன்னொரு தடவை தொப்பி. ஒருமுறை யானை முகமூடி இப்படி நிறைய சொல்லிட்டே போகலாம்.

ஆலா
ஆலா

இன்னிக்கு வந்தப்போ, கொக்கு செய்றதுக்கு சொல்லிக் கொடுத்தாங்க. அதுதான் அந்தப் பரிசு.

யாழினி மிஸ்ஸை ஆலாவுக்கு ரொம்ம்ம்ம்ம்ம்பப் பிடிக்கும். அதுசரி, யாழினி மிஸ்ஸை யாருக்குதான் பிடிக்காது. அந்த வகுப்பில் இருக்கிற எல்லோருக்குமே அவங்களைப் பிடிக்கும்.

யாழினி மிஸ் நிறைய கதைகள் சொல்வாங்க. அந்தக் கதைகளைக் கேட்கும்போதே நல்லா தூக்கம் வரும். அப்புறம், கதையில் வர்ற விலங்குகள் மாதிரி நடிக்கச் சொல்வாங்க. அதுக்காகவே, தூங்காமல் கதையைக் கேட்பாள் ஆலா.

இன்னிக்கு செஞ்ச காகிதக் கொக்கை பத்திரமா வீட்டுக்குக் கொண்டுவந்து அலமாரியில் வைத்தாள் ஆலா. அப்புறமா, அம்மாவின் போனை எடுத்துக்கிட்டு விளையாட ஆரம்பிச்சுட்டா.

ஆலா தினமும் இப்படித்தான்... அம்மாவின் போனில் வீடியோ பார்ப்பாள், விளையாடுவாள். அம்மாவும் நம்மை தொல்லை பண்ணாமல் இருந்தா போதும்ன்னு விட்டுருவாங்க.

ஆலா
ஆலா
pixabay

போனில் விளையாடிட்டே இருந்த ஆலாவுக்கு திடீர்னு ஒரு சந்தேகம் வந்துச்சு. அம்மாகிட்ட கேட்கலாம்னு அடுப்பங்கறைக்குப் போனாள்.

``அம்மா, கொக்கு என்ன சாப்பிடும்?'’

``கொக்கா..? என்ன திடீர்னு... எனக்குத் தெரிஞ்சு அது மீன்களைத்தான் சாப்பிடும்''னு சொன்னாங்க அம்மா.

உடனே ஆலா, அடுத்த கேள்வியைக் கேட்டாள். ``எங்கே தூங்கும்?''

``அ... அதோட வீட்டுல தூங்கும்'' எனச் சொன்னாங்க அம்மா.

``அதுவும் ஸ்கூலுக்குப் போகுமா? அதுக்கு உடம்பு சரி இல்லைன்னா யாரு பார்த்துப்பாங்க?'’

ஆலா இப்படிக் கேட்டதும் அம்மாவுக்கு டென்ஷன் ஆகிடுச்சு.

“இன்னிக்கு நான் சமையல் முடிச்ச மாதிரிதான். இதையெல்லாம் கொக்குகிட்டயே போய் கேட்டுக்கோ”னு சொல்லிட்டாங்க.

ஆலாவும் சரின்னு தலையாட்டிட்டு நேராக கொக்கு இருந்த அலமாரிக்கு வந்தாள்.

“கொக்கே... கொக்கே... நீ என்ன சாப்பிடுவே?”னு கேட்டாள்.

கொக்கு பதிலே சொல்லலை. ஆலா திரும்பவும் கேட்டாள், “கொக்கே... கொக்கே நீ என்ன சாப்பிடுவே?”

“எனக்கு மீன்தான் ரொம்பப் பிடிக்கும்.”

திடீர்னு பதில் சொல்லிச்சு. கொக்கா என்ன? காகிதக் கொக்கு பேசுமா? ஆலாவுக்கு நம்பவே முடியலை.

“நீதானே இப்போ பேசினே” என ஆச்சர்யத்தோடு கொக்கின் மூக்குப் பக்கத்தில் போய் கேட்டாள்.

“ஆமா! நான்தான் பேசினேன்” என்ற கொக்கின் வாய் மெதுவாக அசைஞ்சது.

ஆலா
ஆலா
pixabay

ஆலாவுக்கு ஒரே சந்தோஷம்... “அம்மா, கொக்கு பேசுது... இங்கே வந்து பாரேன்” எனச் சத்தம் கொடுத்தாள்.

கொக்கு அவசர அவசரமாகப் பேசியது, ``வேணாம் ஆலா... அம்மாவைக் கூப்பிடாதே. அவங்களுக்குத் தெரிஞ்சா என்னோட பேசும் சக்தி போய்டும்” எனச் சொல்லிச்சு.

உடனே கொக்கை மெதுவா தூக்கிட்டு பக்கத்து அறைக்குப் போனாள் ஆலா.

கொக்கு பற்றி அம்மாகிட்ட கேட்க நிறைய கேள்விகள் வைத்திருந்தாள். ஆனா, இப்போ கொக்கு பேச ஆரம்பிச்சதும் என்ன கேட்கிறதுன்னே தெரியலை.

இதைப் புரிஞ்சுக்கிட்ட கொக்கு, “நான் வேணும்ன்னா உனக்கு ஒரு கதை சொல்லவா?” எனக் கேட்டுச்சு.

“ஆஹா... சரி” எனச் சந்தோஷமாகத் தலையாட்டினாள் ஆலா.

அன்று முதல் அந்தக் காகிதக் கொக்கு, தினம் ஒரு கதையை ஆலாவுக்குச் சொல்ல ஆரம்பிச்சது. ஆலாவும் நிறைய கதைகள் கேட்டுக் கேட்டு சொந்தமா கதை சொல்ல ஆரம்பிச்சுட்டா.

அதுமட்டுமா? ஒரு சிறார் புத்தகத்தில் ஆலாவின் போட்டோவுடன் அவள் எழுதிய கதையும் வந்துச்சு. வண்ண வண்ண ஓவியங்களோடு பார்க்கவே அழகா இருந்துச்சு.

crane
crane
pixabay

அம்மா, அப்பா, பள்ளியில் ஆசிரியர்கள் எல்லோருக்கும் சந்தோஷம். நண்பர்கள் எல்லாம் பாராட்டினாங்க.

ஒருநாள் அந்தக் கொக்கு, ``ஆலா, உன்னோட ஆசை என்ன?'' எனக் கேட்டுச்சு.

``யாழினி மிஸ் மாதிரியே நானும் எல்லோருக்கும் பிடிச்ச டீச்சரா இருந்து நிறைய நிறையக் கதைகள் சொல்லணும்'' என்றாள்.

``ரொம்ப சந்தோஷம் ஆலா... நான் வந்த வேலையும் முடிஞ்சு போச்சு. இப்போ நீ எனக்கு ஒரு உதவி செய்யணுமே...'' என்றது அந்தக் கொக்கு.

``சொல்லு கொக்கு... என்ன செய்யணும்?. உனக்காக எதுவும் செய்வேன்'' எனச் சொன்னாள் ஆலா.

``பெருசா ஒண்ணுமில்லே... என்னைப் பறக்க விட்டுடு. அப்புறம், உன்னைவிட சின்னக் குழந்தைகளுக்கு என்னை மாதிரியே கொக்கு செய்ய கத்துக்கொடு''னு சொல்லிச்சு கொக்கு.

story
story
pixabay

ஒரு நிமிஷம் திகைச்ச ஆலாவுக்கு அப்புறம்தான் புரிய ஆரம்பிச்சது. யாழினி மிஸ் எப்படி இவ்வளவு அழகா கதை சொல்றாங்கன்னு புரிஞ்சது.

''சரி கொக்கு'' எனச் சொல்லிட்டு, தோட்டத்துப் பக்கம் வந்தாள் ஆலா.

அந்தக் கொக்கை கையில் ஏந்தி தூக்கிப் பிடிச்சதும், அது படபட எனச் சிறகை அடிச்சுக்கிட்டு பறந்துச்சு. வானத்தில் கொஞ்ச தூரம் போனதும் திரும்பிப் பார்த்துச்சு. ஆலா கையசைக்க, கொக்கு சிறகை அசைச்சுட்டு போச்சு.

அடுத்த நாளே, தன் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த சின்னச்சின்ன பிள்ளைகளை ஒண்ணுசேர்த்து, கொக்கு செய்ய கற்றுக்கொடுத்தாள் ஆலா.

அந்த காகிதக்கொக்கை நீங்களும் செய்றீங்களா சுட்டீஸ்... கதை கொக்கு உங்க வீட்டுக்கும் வரும்!

இந்தக் கதையை அழகான குரலில் கேட்க...

கதை சொல்பவர்: அபிநயா ஶ்ரீகாந்த்