Published:Updated:

சிங்கம் பிடரி ஏன் உதிருது? - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast

உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... காட்டு ராஜா சிங்கம் பிடரிக்கு என்ன ஆச்சு... உதவிக்கு வந்த நண்பன் நரி என்ன பண்ணுச்சு?

சிங்கம்
சிங்கம் ( pixabay )

திகாலை நேரம்...

காட்டுக்குள்ளே பறவைகள் எல்லாம் கண் விழிச்சு விதவிதமாகக் குரல் கொடுக்க ஆரம்பிச்சதுங்க. `படபட' என இறக்கைகளை அடிச்சுக்கிட்டு பறக்க ஆரம்பிச்சதுங்க.

பொந்துக்குள்ளே இருந்த முயல்கள், புதர் மறைவில் படுத்திருந்த மான்கள், மரத்தடியில் இருந்த யானைகள் என ஒவ்வொன்றாகக் கண்விழிச்சு, விதவிதமாகக் கொட்டாவிவிட்டு, உடம்பை முறுக்கி உடற்பயிற்சி செய்ய ஆரம்பிச்சதுங்க.

சிங்கம்
சிங்கம்
pixabay

காட்டின் அடர்த்தியான மரங்களை ஊடுருவிக்கிட்டு சூரியனின் கதிர்கள் இறங்க ஆரம்பிச்சது. சிங்கராஜாவின் குகை வாசலில் இறங்கின வெளிச்சம், நத்தை மாதிரி மெல்ல மெல்ல தவழ்ந்துட்டுப் போச்சு.

குகையின் உள்ளே இருந்த ஒரு கல் மேடையில் உடம்பை நீட்டி, தலையைச் சாய்ச்சு படுத்திருந்துச்சு சிங்கராஜா.

தரையில் சிந்தின தண்ணீர் மாதிரி வெயில் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து சிங்கராஜாவின் அடர்த்தியான பிடரிக்குள் இருந்த கண்களில் பட்டுச்சு.

கண்களைச் சுருக்கி, `உம்... உம்...' என மூக்கை இழுத்த சிங்கராஜா, அந்தப் பக்கமாகத் தலையைத் திருப்பி வெச்சுகிட்டு தூங்க ஆரம்பிச்சது.

ஆனால், அந்த வெயில் இன்னும் பரவி உடம்பு முழுக்க பாய்ஞ்சு, அந்தப் பக்கத்தையும் தொட்டுச்சு.

சிங்கராஜா மெதுவாகக் கண்களைத் திறந்துச்சு. ``ச்சை... இன்னிக்கு என்ன இந்த வெயில் இவ்வளவு சீக்கிரம் வந்துருச்சு'' - அப்படின்னு அலுப்போடு புலம்பிச்சு.

lion
lion
pixabay
உயரம் உணர்ந்த கீக்கி கழுகு - சுட்டிகளுக்கான குட்டிக் கதை #DailyBedTimeStories #VikatanPodacast

``அது எப்பவும் வர்ற மாதிரிதான் வந்திருக்கு. நீங்கதான் நேரம் கழிச்சும் தூங்கறீங்க'' - அப்படின்னு குரல் வந்துச்சு.

கொஞ்சம் தள்ளி சிங்கராணி இருந்துச்சு. அது சீக்கிரமே எழுந்து தன்னோட மூணு குட்டிகளையும் எழுப்பிருச்சு. நாலு பேருமா வெளியே போகத் தயாராகிட்டு இருந்தாங்க.

``ஓ... அப்படின்னா இந்தக் குகையை மாத்தணும். வெயில் சீக்கிரம் வராத இடமாகப் பார்த்து குடிபோகணும். இல்லேன்னா, இந்தக் குகையின் வாசலையே கொஞ்சம் ஆல்ட்ரேஷன் செஞ்சு, சீக்கிரம் வெயில் உள்ளே வராமல் பண்ணணும்'' - அப்படின்னு சொல்லிக்கிட்டே தலையைச் சிலுப்பிக்கிச்சு சிங்கராஜா.

``அதைவிடச் சுலபமான வழி இருக்கு. குகையைப் பெரிய கல் வெச்சு அடைச்சுடுங்க. வெயிலே வராது'' - அப்படின்னு கோபமாகச் சொல்லிச்சு சிங்கராணி.

``அப்பா... தூங்கினது போதும் எந்திரிங்க. காட்டு ராஜாவா இருந்துக்கிட்டு இப்படியா சோம்பேறியா இருக்கிறது'' என்று கிண்டலாகச் சொல்லிச்சு மூணு குட்டிகளில் ஒன்றான பெண் குட்டி.

`ம்... அம்மா மாதிரியே பொண்ணு. என்னை மட்டம் தட்டிகிட்டே இருக்கிறது' - அப்படின்னு மனசுக்குள்ளே சொல்லிக்கிட்ட சிங்கராஜா, எழுந்து நின்னு கால்களை நீட்டி சோம்பல் முறிச்சு, `ஆவ்வ்வ்வ்வ்'னு கொட்டாவி விட்டுச்சு. தலையைச் சிலுப்பிக்கிச்சு.

``சரி... சரி... நாங்க வெளியே போய்ட்டு வர்றோம்'' - அப்படின்னு சொன்ன சிங்கராணி, குட்டிகளோடு வாசல் நோக்கிப் போச்சு.

lions
lions
pixabay

அடுத்த நிமிஷம்...

``ஓ காட்... நோ ஓ ஓ ஓ ஓ...''னு சிங்கராஜாவின் அலறல்.

சிங்கராணியும் குட்டிகளும் பதறிக்கிட்டு பக்கத்துல வந்துச்சுங்க. ``எ.. எ.. என்ன ஆச்சு?'' எனக் கேட்டுச்சு சிங்கராணி.

``இ... இங்கே பாரு... அன்னிக்கு ஒண்ணு... நேத்து ரெண்டு... இன்னிக்கு நாலு'' - அப்படின்னு தரையில் காண்பிச்சு அழுதது சிங்கராஜா.

``அப்பா... உங்களுக்குக் கணக்குச் சரியா தெரியலையா, இல்லே கண்ணு சரியா தெரியலையா? நாலு இல்லே ஐந்து'' - அப்படின்னு சொல்லிச்சு குட்டிகளில் ஒன்றான பையன்.

அவ்வளவுதான்... சிங்கராஜா முன்னங்கால்களால் கண்களைப் பொத்திகிட்டு இன்னும் இன்னும் சத்தமா ``ஓ''னு அழுதுச்சு.

அங்கே தரையில் சிங்கராஜாவின் பிடரியில் இருந்து ஐந்து முடிகள் உதிர்ந்து கிடந்தன.

கொஞ்ச நாளாகவே சிங்கராஜாவுக்கு இப்படித்தான் முடி உதிருது. அதை நினைச்சு சிங்கராஜா கவலைப்பட்டுட்டே இருந்துச்சு. ஒண்ணு... ரெண்டு முடிகள் உதிர்ந்ததுபோய் இன்னிக்கு ஐந்து முடிகள் உதிர்ந்திருக்கின்றன.

``இதுக்குத்தான் இப்படிக் கத்தினீங்களா?'' எனச் சொல்லிச்சு சிங்கராணி.

``என்ன இவ்வளவு அசால்ட்டா சொல்றே... ஆண் சிங்கத்துக்கு கம்பீரமே பிடரிதான். அதிலும் நான் காட்டு ராஜா. ஐந்து முடிகள்... ஐயோ... ஐந்து முடிகள்...'' எனப் பதறிச்சு சிங்க ராஜா.

fox
fox
pixabay

``சரி அதுக்கு என்ன செய்ய சொல்றீங்க? காட்டு வைத்தியர் கரடியைக் கூப்பிட்டு வைத்தியம் பார்க்கலாம்ன்னு சொன்னாலும் வேண்டாங்கறீங்க'' - அப்படின்னு சொல்லிச்சு சிங்கராணி.

``காட்டு ராஜாவுக்கு முடி உதிருதுன்னு வெளியே தெரிஞ்சா எவ்வளவு அசிங்கம்... அதிலும் அந்தக் கரடி வைத்தியர் சரியான தொணதொணப்பு. இதைச் சாப்பிடாதீங்க, அதைக் குறைங்கன்னு வைத்தியம் செய்யறதைவிட அட்வைஸ்தான் அதிகம் செய்வார்'' - அப்படின்னு புலம்பிச்சு சிங்கராஜா.

``சரி, இப்போ என்னதான் செய்யணுமாம்?'' - அப்படின்னு சலிச்சுக்கிச்சு சிங்கராணி.

``நீ போற வழியில் என் நண்பன் நரியை இங்கே வரச்சொல்லிட்டு போ'' எனச் சொல்லிச்சு சிங்கராஜா.

``அவன் என்ன வைத்தியனா?'' எனக் கேட்டுச்சு சிங்கராணி.

``சொன்னதை செய்'' - அப்படின்னு அதட்டலோடு தலையைச் சிலுப்பிக்கிட்டு சிங்கராஜா சொல்ல, அந்த வேகத்தில் பிடரியிலிருந்து இன்னொரு முடி காற்றில் பறந்துச்சு.

``அப்பா... தலையை ரொம்ப ஆட்டாதீங்க... மொத்தமா கொட்டிடப் போகுது'' என்று ஒரு குட்டி சொல்லிச்சு.

``ஐயோ.. ஐயோ...'னு ரெண்டு கால்களாலும் பிடரியைக் கெட்டியாகப் பிடிச்சுக்கிச்சு சிங்கராஜா.

``சரி... சரி... நரிகிட்ட சொல்லிட்டுப் போறோம். என்னமாச்சும் பண்ணிக்கங்க'' என்று குட்டிகளோடு கிளம்பிச்சு சிங்க ராணி.

கொஞ்ச நேரத்துல நரி ஒண்ணு குகைக்குள்ளே வந்துச்சு. ``நண்பா என்ன ஆச்சு? முடியா உதிருது? அக்கா விஷயத்தைச் சொன்னதும் என் இதயமே நொறுங்கிப் போச்சு. எல்லா முடியும் உதிர்ந்துட்டா நீ எப்படி வெளியே தலை காட்டுவே. இதைச் சொல்லியே அந்தப் போட்டி சிங்கம் ராஜாவாகிடுமே''

இப்படிச் சொல்லிட்டு சிங்கராஜாவைவிட ஓவரா குலுங்கிக் குலுங்கி அழுதுச்சு நரி.

``ஏய் யப்பா... என் பிரச்னைக்குத் தீர்வுச் சொல்லி ஆறுதல் படுத்துவேன்னு உன்னைக் கூப்பிட்டா, இன்னும் அழ வைக்கறியே'' எனப் புலம்பிச்சு சிங்கராஜா.

lion
lion
pixabay

கண்களைத் துடைச்சுக்கிட்ட நரி, ``டோண்ட் ஒர்ரி நண்பா... எனக்குத் தெரிஞ்ச ஒரு கீரிப்பிள்ளை வைத்தியன் பக்கத்து காட்டுல இருக்கான். நம்ம காட்டு கரடி வைத்தியன் எல்லாம் அந்த வைத்தியன் முன்னாடி இதோ உதிர்ந்திருக்கே இந்த முடிக்குச் சமம்'' - அப்படின்னு பில்டப் பண்ணிச்சு நரி.

``ஏய்... என் முடியை அவ்வளவு சாதாரணமா நினைக்கிறியா? தலையில இருந்தாலும் தரையில உதிர்ந்தாலும் ராஜா முடி'' என்று உறுமிச்சு சிங்கராஜா.

``அ... அது... ஒரு உதாரணத்துக்குச் சொன்னேன். சரி விடுப்பா, உன் பிரச்னையை அந்தக் கீரிப்பிள்ளை வைத்தியன் தீர்த்துடுவான். நான் மருந்தோடு வர்றேன். ஆனா ஒண்ணு... இந்த விஷயம் ரகசியமா இருக்கணும்'' - அப்படின்னு சொல்லிச்சு நரி.

``ரகசியமா இருக்கணும்னுதானே உன்னை வரச்சொன்னதே. போ... மருந்தோடு வா. என்ன செல்வனாலும் பரவாயில்லை'' எனச் சொல்லிச்சு சிங்கராஜா.

உடனே கிளம்பிச்சு நரி. ஆனால், சாயந்திரம்தான் திரும்பி வந்துச்சு. ``ஸாரிப்பா... அந்த கீரிப்பிள்ளை வைத்தியன் ரொம்ப பிஸி. அப்பாய்மென்ட் இல்லாமல் பார்க்க முடியாதுன்னு சொல்லிடுச்சு. காத்திருந்து கெஞ்சி கூத்தாடி மருந்து வாங்கிட்டு வந்தேன்'' - அப்படின்னு சொல்லி, பாக்குமட்டையில் செய்த கிண்ணத்தை நீட்டிச்சு.

அதுக்குள்ளே தண்ணீர் மாதிரி என்னமோ இருந்துச்சு. ``என்னடா இது... இவ்வளவு குறைவா இருக்கு. நிஜமாவே மருந்துதானா?'' எனக் கேட்டுச்சு சிங்கராஜா.

``என்ன இப்படிக் கேட்டுட்டே. எத்தனை மூலிகைகளைச் சேர்த்து பிழிஞ்சு, காய்ச்சி வடிகட்டி செஞ்சது தெரியுமா? இப்படித் தினமும் ரெடி பண்ணி வைக்கிறதாவும் வந்து வாங்கிட்டுப் போன்னும் சொல்லியிருக்கு'' எனச் சொல்லிச்சு நரி.

``ரொம்ப நன்றி நண்பா...'' எனச் சொல்லி வாங்கிகிச்சு சிங்கராஜா.

``நன்றியை நான் வாங்கிக்கறேன். ஆனால், அந்த வைத்தியனுக்கு கூலி கொடுக்கணுமில்லே... தினமும் ஒரு கிலோ கறி வேணுமாம். அதுக்கு என்ன செய்யறதுன்னுதான் யோசிக்கிறேன்'' - அப்படின்னு சொல்லிச்சு நரி.

``அதை நான் கொடுக்கிறேன். இந்த விஷயம் ரகசியமாவே இருக்கட்டும்'' - அப்படின்னு சொல்லிச்சு சிங்க ராஜா.

``ஆமாம்... ஆமாம்... ரகசியமாகத்தான் இருக்கணும். சரி, காலையில வர்றேன். கறியை ரெடி பண்ணி வை'' எனச் சொல்லிட்டு கிளம்பிச்சு நரி.

lion
lion
pixabay

அன்னையிலிருந்து தினமும் சிங்கராஜாவின் குகைக்கு நரி வரும். கறியோடு கிளம்பும். திரும்பி வர்றப்போ அந்தத் தண்ணீர் மாதிரியான மருந்தைக் கொடுக்கும். சிங்கராஜா அதைத் தலையில் தடவிக்கும்.

ஆனால், ஒரு மாசம் ஓடியும் ஒண்ணும் முன்னேற்றமே இல்லை. முடி அதிகமாகத்தான் உதிர ஆரம்பிச்சது.

``நான் சொல்றதைக் கேளுங்க. நம்ம கரடி வைத்தியரை வரச் சொல்றேன். அவர்கிட்ட ஒருமுறை வைத்தியம் பாருங்க'' என்று சிங்கராணி சொல்லிச்சு.

வேற என்ன செய்யறதுன்னு தெரியாமல் தலையாட்டிச்சு சிங்கராஜா. கொஞ்ச நேரத்துல அங்கே வந்துச்சு கரடி வைத்தியர்.

``ராஜா... இது சத்துக் குறைபாடு பிரச்னைதான். நான் சொல்றா மாதிரி சாப்பிட்டு வந்தாலே போதும். மருந்து எதுவும் இல்லை'' எனச் சொல்லிச்சு.

சாய்க்கும் பல்லவிக்கும் என்ன பிரச்னை..? - சுட்டிகளுக்கான குட்டிக் கதை #DailyBedTimeStories
bear
bear
pixabay

``ஆனா அப்பா தினமும் நரி மாமா கொடுக்கிற மருந்தைத் தடவறாரே'' என்று சொல்லிச்சு சிங்க மகள். சிங்கராஜாவும் நடந்த விஷயத்தைச் சொல்லிச்சு.

அதை வாங்கிப் பார்த்த கரடி, ``ராஜா, இது மருந்தே இல்லை. சாதாரண இலைகளின் சாறு. எனக்குத் தெரிஞ்சு கீரிப்பிள்ளை வைத்தியர்னு யாரும் இல்லை. நீங்க வேணும்ன்னா ஆள் அனுப்பி விசாரிச்சுப் பாருங்க'' எனச் சொல்லிச்சு கரடி.

``ஓஹோ... ஒரு உதவி பண்ணுங்க வைத்தியரே. போற வழியில அந்த நரிப் பயலை இங்கே வரச்சொல்லிட்டுப் போங்க. மிச்சத்தை நான் பார்த்துக்கிறேன்'' - அப்படின்னு கோபமாகச் சொல்லிச்சு சிங்கராஜா.

அதுக்கு அப்புறம், கரடி வைத்தியர் சொன்ன மாதிரி சிங்கராஜா நடந்துக்க, முடிஉதிர்வது குறைஞ்சு சரியாகிடுச்சு. இப்போ நம்ம சிங்கராஜா கம்பீரமா பிடரியைச் சிலுப்பிக்கிட்டு வெளியே போய்ட்டு வருது.

அது சரி, அன்னிக்கு கரடி சொன்னதுக்கு அப்புறம் நரி வந்துச்சா? என்ன ஆச்சு?

என்ன ஆகியிருக்கும்ன்னு நீங்களே சொல்லுங்க பார்க்கலாம்!

சிட்டு வீட்டு கிச்சன்ல என்ன சத்தம்? - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories  

இந்தக் கதையை அழகான குரலில் கேட்க...

இந்தக் கதையைச் சொல்பவர்: அபிநயா ஶ்ரீகாந்த்