Published:Updated:

`கீரைப் பாட்டி அமிர்தா வீட்டுக்கு வருவாங்களா?' - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories

உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... அமிர்தா வீட்டுக்கு வரும் கீரைப் பாட்டி, பழம் தாத்தா, பூ அத்தையைச் சந்திக்கலாமா?

கீரைப் பாட்டி
கீரைப் பாட்டி ( Peter Kennedy )

``அம்மா... அம்மா... கீரைப் பாட்டி வர்றாங்க!''

ஜன்னல் வழியாகத் தெருவைப் பார்த்துட்டுச் சொன்னாள் அமிர்தா.

மூங்கில் கூடையைத் தலையில் வெச்சுக்கிட்டு தெருச்சாலையின் ஓரமாக மெதுவா வந்துட்டிருந்தாங்க கீரைப் பாட்டி.

அவங்க தலை முழுக்க நரைச்சு இருந்துச்சு. ஒரு கறுப்பு முடிகூட இல்லை. உடம்பிலும் முகத்திலும் தோல்கள் சுருங்கி இருந்துச்சு. கண்கள்கூட இடுங்கி, சுருங்கிப் பார்க்கிற மாதிரி இருந்துச்சு. அவங்க கட்டியிருந்த காட்டன் சேலையும் சுருங்கியே இருந்துச்சு.

Vikatan Podcast
Vikatan Podcast

``கீரைப் பாட்டியா... இருக்கச் சொல்லு... வந்துடறேன்'' - அப்படின்னு அம்மாவின் குரல் கேட்டுச்சு.

வாசல் கதவைத் திறந்துட்டுப்போன அமிர்தா, படிகளில் இறங்கிப்போய் சின்ன இரும்புக் கதவை திறக்கிறதுக்கும் கீரைப் பாட்டி அங்கே வர்றதுக்கும் சரியா இருந்துச்சு.

``வாங்க பாட்டி வாங்க'' எனச் சொல்லிக்கிட்டே கால்களை எக்கி, பாட்டியின் தலையில் இருந்த கூடையைப் பிடிச்சு இறக்கினாள்.

``இன்னா அமிதா கண்ணு... நல்லா இருக்கியா?'' எனப் பொக்கை வாயில் சிரிப்போடு கேட்டாங்க கீரைப் பாட்டி.

அவங்களுக்கு `அமிர்தா' எனச் சொல்ல வராது. `ர்' விட்டுட்டு, `அமிதா... அமிதா...' அப்படின்னுதான் சொல்வாங்க.

``நல்லா இருக்கேன் பாட்டி, நீங்க எப்படி இருக்கீங்க?'' எனக் கேட்டுக்கிட்டே கூடையோடு 'கிடு கிடு' என வாசற்படிகளில் ஏறிப்போய், ஹாலுக்குள்ளே வைத்தாள் அமிர்தா.

வாசல் கதவை ஒரு கையால் பிடிச்சுக்கிட்டு மெதுவாகப் படிகளில் ஏறி உள்ளே வந்தாங்க கீரைப் பாட்டி. அதுக்குள்ளே கிச்சனுக்குள்ளே 'குடு குடு' என ஓடிப்போன அமிர்தா, ஒரு டம்ளரில் தண்ணியை எடுத்துக்கிட்டு வந்தாள்.

``ஸ்..ஸ்..ஸ்... முருகா'' எனச் சொல்லிக்கிட்டே, கூடைக்குப் பக்கத்தில் கால்களை நீட்டி உட்கார்ந்தாங்க கீரைப் பாட்டி. தன்னோட சேலை முனையாலே முகத்தைத் துடைச்சுக்கிட்டாங்க.

கீரைப் பாட்டி
கீரைப் பாட்டி
Peter Kennedy
காகம் கயலும் குட்டிப் பாப்பாவும் - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast

``இந்தாங்க பாட்டி தண்ணி குடிங்க'' எனச் சொல்லி கொடுத்தாள் அமிர்தா.

``என் கண்ணு...'' என மறுபடியும் பொக்கை வாயோடு சிரிச்ச பாட்டி, தண்ணியை வாங்கிக் குடிச்சாங்க.

அப்போது, கை ஈரத்தைத் துடைச்சுக்கிட்டே வந்தாங்க அமிர்தா அம்மா. ``பாட்டிம்மா... எங்கே ஒரு வாரமா காணலை?'' எனக் கேட்டாங்க.

அமிர்தாவுக்கும் அவங்க பாட்டிதான்... அமிர்தா அம்மாவுக்கும் அவங்க பாட்டிதான்.

``அதான் முன்னாடியே சொல்லியிருந்தேனே கண்ணு... என் பொண்ணு வீட்டுக்குப் போயிருந்தேன்'' - அப்படின்னு சொன்னாங்க கீரைப் பாட்டி.

அவங்களுக்கு அமிர்தாவும் கண்ணுதான்... அமிர்தா அம்மாவும் கண்ணுதான். அட... அமிர்தா அப்பாவையும் கண்ணுன்னுதான் கூப்பிடுவாங்க பாட்டி.

இந்தக் கீரைப் பாட்டிக்கிட்டதான் எப்பவும் கீரை வாங்குவாங்க. அமிர்தா எல்.கே.ஜி படிக்கிறப்போ இருந்தே கீரைப் பாட்டியைத் தெரியும். இப்போ, ஐந்தாம் வகுப்புப்படிக்கிறாள்.

ஒருமுறை, ``ஏம்மா... மார்க்கெட் பக்கத்திலேதான் இருக்கு. ஒருநாள் விட்டு ஒருநாள் போறோம். அங்கே கீரை கம்மியாவும் கிடைக்குது. அப்புறம் ஏன் பாட்டிக்கிட்டயே வாங்கறோம்'' - அப்படின்னு கேட்டாள் அமிர்தா.

grandma
grandma
Peter Kennedy
குரங்கு சொன்ன அதிசய இடம் எங்கே இருக்கு?- சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories

``அம்மு குட்டி... பாட்டிக்கு ரொம்ப வயசாகிடுச்சு. ஆனாலும், இந்த வயசிலும் உழைச்சு சாப்பிடணும்னு கீரை வாங்கித் தெருத் தெருவா கொண்டுவந்து விற்கிறாங்க. இந்த மாதிரி இருக்கிறவங்களுக்கு நாம மதிப்பு கொடுத்து உதவணும். அதுக்குத்தான் 2 ரூபாய், 5 ரூபாய் அதிகம் கொடுத்து வாங்கறோம்'' எனச் சொல்லியிருந்தாங்க அம்மா.

அப்பாவும் அப்படித்தான் அமிர்தாவை மார்க்கெட்டுக்குக் கூட்டிட்டுப் போகும்போது, அங்கே தள்ளுவண்டியில் கொஞ்சமாக வெச்சிருக்கிற ஒரு தாத்தாகிட்டதான் பழங்கள் வாங்குவார்.

``அப்பா... என் ஃப்ரெண்ட்ஸ் அப்பாவெல்லாம் சூப்பர் மார்கெட்லதான் பழங்கள் வாங்கறாங்களாம். அங்கே கண்ணாடி பாக்ஸ்ல ஃப்ரெஷ்ஷா இருக்குமாம். நாம ஏன்ப்பா இந்தத் தாத்தாகிட்டயே வாங்கறோம்'' - அப்படின்னு கேட்டிருக்கிறாள்.

``அம்மு குட்டி... சூப்பர் மார்க்கெட்ல ஃப்ரெஷ்ஷா... பெருசா இருக்கிறதாலே அது நல்லா பழமா இருக்கும்னு நினைக்கக் கூடாது. இயற்கையா விளையும் பழங்கள், காய்கள் எல்லாம் அப்படி பளபளப்போடும் இருக்காது. அதுவுமில்லாம, சூப்பர் மார்க்கெட்ல அதைத் தவிர நிறைய பொருள்கள் விற்கிறாங்க. ஆனா, இந்தத் தாத்தாவுக்கு இதுமட்டும்தான் வியாபாரம். இவர்கிட்ட நாம வாங்கினா தாத்தாவுக்கு உதவியா இருக்கும்'' - அப்படின்னு சொல்லியிருக்கார் அப்பா.

girl
girl
pixabay

இப்படித்தான் கீரைப் பாட்டி... பழம் தாத்தா... பூ அத்தை... ஜூஸ் மாமா என நிறைய பேரை அமிர்தாவுக்குத் தெரியும். எல்லோரும் ரொம்ப அன்போடு நடந்துப்பாங்க.

சரி, இப்போ கீரைப் பாட்டிக்கிட்டே வரலாமா. அவங்ககிட்ட கீரையை வாங்கிக்கிட்டு பணமும் கூடவே குடிக்க மோரும் கொடுத்தாங்க அமிர்தா அம்மா.

``பாட்டி ஒரு விஷயம்... அடுத்த மாசத்திலிருந்து நாங்க வீடு மாறப்போறோம்'' - அப்படின்னு சொன்னாங்க அமிர்தா அம்மா.

``அப்படியா... எங்கே போறீங்க கண்ணு?'' எனக் கேட்டாங்க கீரைப் பாட்டி.

``பாட்டி... இங்கிருந்து நாலாவதா நேதாஜி தெரு இருக்கில்லே, அங்கே பெருசா ஒரு அபார்ட்மென்ட் கட்டி இருக்காங்களே... அங்கேதான் ஒரு பிளாட்டை சொந்தமா வாங்கப்போறோம். இனிமே அங்கே வந்து கீரையைக் கொடுங்க'' என உற்சாகமாகச் சொன்னாள் அமிர்தா.

``சந்தோஷம்... சரி கண்ணு'' எனச் சொன்னாங்க கீரைப் பாட்டி.

அன்றைக்குச் சாயந்திரமே அந்த அடுக்குமாடியில் தாங்கள் வாங்கப்போகிற பிளாட்டில் ஒரு அலமாரி செய்யற விஷயமா பார்க்கப் போனாங்க அமிர்தாவும் அப்பா அம்மாவும்.

பார்த்து முடிச்சுட்டு வெளியே வந்தப்போதான் அமிர்தா ஒரு விஷயத்தை கவனித்தாள். அங்கே நுழைவாயிலில் இருந்த பெரிய இரும்பு கதவில்... `வியாபாரிகள் யாரும் கண்டிப்பாக உள்ளே வரக்கூடாது' என்ற அறிவிப்புப் பலகை தமிழிலும் ஆங்கிலத்திலும் இருந்துச்சு.

girl
girl
pixabay

``இது என்னம்மா? ஏன் அவங்க வரக்கூடாது'' எனக் கேட்டாள் அமிர்தா.

``இது வாங்கிக்கங்க... அது வாங்கிக்கங்கன்னு சொல்லிக்கிட்டு நிறைய பேர் உள்ளே வருவாங்க. இவ்வளவு பெரிய இடத்துல அவங்களைக் கவனிக்கிறது கஷ்டம். பாதுகாப்புக்காகவும் இடம் சுத்தமாக இருக்கவும் பெரிய இடங்களில் இப்படி விதிமுறை இருக்கும். நாமும் அதைப் பின்பற்றணும்'' எனச் சொன்னார் அப்பா.

``அ... அப்போ... கீரைப் பாட்டி இங்கே வர முடியாதா, அவங்ககிட்ட நாம கீரை வாங்க முடியாதா?'' என வருத்தத்துடன் கேட்டாள் அமிர்தா.

புன்னகையோடு அமிர்தாவின் தலையை வருடின அம்மா, ``இல்லே அம்முகுட்டி, நாம இங்கிருக்கிற செக்ரட்ரியிடம் சொல்லி பெர்மிஷன் வாங்கிடலாம். அப்படியும் முடியாதுன்னு சொன்னா, இங்கே வாசலுக்கு கீரைப் பாட்டியை வரச்சொல்லிடுவோம். செக்யூரிட்டி தகவல் கொடுத்ததும் வந்து வாங்கிப்போம். கீரைப் பாட்டிதான் எப்பவுமே நமக்குக் கீரையைக் கொடுக்கும் பாட்டி'' எனச் சொன்னாங்க.

அதைக் கேட்டதும் சந்தோஷமாகத் தலையாட்டிக்கிட்டாள் அமிர்தா.

அவங்க வண்டியில் சந்தோஷமா கிளம்பினாங்க.

புகைப்படங்கள்: அ.பீட்டர் கென்னடி

காட்டுக்குள்ளே டாக்டர் முயலின் வைத்தியம்- சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories

இந்தக் கதையை அழகான குரலில் கேட்க...

இந்தக் கதையை உங்களுக்குச் சொல்பவர்: அபிநயா ஶ்ரீகாந்த்