Published:Updated:

விளையாட்டுல நடந்த விபரீதம்... கவின் என்ன செஞ்சா? - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories

குட்டிக் கதை ( pixabay )

உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... லீவு நாளில் ஒண்ணுசேர்ந்து விளையாடும்போது கவனமா இருக்கணும். இல்லேன்னா இப்படியும் ஆகலாம். எப்படி?

விளையாட்டுல நடந்த விபரீதம்... கவின் என்ன செஞ்சா? - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories

உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... லீவு நாளில் ஒண்ணுசேர்ந்து விளையாடும்போது கவனமா இருக்கணும். இல்லேன்னா இப்படியும் ஆகலாம். எப்படி?

Published:Updated:
குட்டிக் கதை ( pixabay )

மழை காரணமாக மூணாவது நாளும் ஸ்கூல் லீவு விட்டுட்டாங்க. அந்த `ரெயின்போ அப்பார்ட்மென்ட்'ல இருந்த அத்தனை வாண்டுகளும் வானவில்லாக ஆங்காங்கே ஒண்ணுகூடி விளையாட ஆரம்பிச்சாங்க.

எல்லோரும் இருக்கும்போதே அட்டகாசத்தை அடக்கறது கஷ்டம். இப்போ நிறைய ஃபிளாட்களில் அப்பா, அம்மாக்கள் வேலைக்குப் போய்ட்டாங்க. கலாட்டாவுக்குச் சொல்லணுமா? இடி இடிக்கிற மாதிரி கூச்சல்... மின்னல் மாதிரி ஓட்டம்... `சோ... ஓஓஓ' மழை கொட்டற மாதிரி திடீர்னு யாராவது அழுகை...

குட்டிக் கதை
குட்டிக் கதை
pixabay

அந்த `ரெயின்போ அபார்ட்மென்ட்' ஆறு அடுக்கு மாடி. ஒரு மாடிக்கு நாலு ஃபிளாட்ஸ்... அப்போ மொத்தம் எத்தனை ஃபிளாட்ஸ்? எஸ்... 24 ஃபிளாட்ஸ்!

ஒவ்வொரு மாடியிலும் நீளமான வராண்டா இருக்கும். மழை விட்டு விட்டு வந்துட்டே இருந்ததால, வெளியே போகமுடியாமல் வராண்டாவிலே சில பெரிய பசங்க கிரிக்கெட் விளையாடிட்டு இருந்தாங்க.

குட்டிப் பசங்க குட்டி சைக்கிள், ஸ்கேட் ஸ்கூட்டர் என ஓட்டிக்கிட்டு இருந்தாங்க. சிலர் பந்து தூக்கிப் போட்டு விளையாடிட்டு இருந்தாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிலர் வீட்டுக்குள்ளேயே விதவிதமாக அமர்க்களம் பண்ணிட்டிருந்தாங்க. சில ஃபிளாட்களில் இருக்கிற தாத்தா, பாட்டிகளின் அதட்டல் குரல் அடிக்கடி கேட்டுட்டு இருந்துச்சு. ஆனா, எல்லாம் வெள்ளத்துல விட்ட பேப்பர் கப்பல் மாதிரி அப்பவே மூழ்கிப் போச்சு.

இப்படி இருக்கிற அந்த ரெயின்போ அபார்ட்மென்ட்டின் ஐந்தாவது மாடியில்தான் இந்தக் கதை நடக்குது. அப்படின்னா, அங்கே இருக்கிற சுட்டிகள்தானே நம்ம ஹீரோ, ஹீரோயின்ஸ்...

kids
kids
pixabay

என்னது வில்லன் யாரா? இந்தக் கதையில வில்லனே இல்லே. வாங்க, ஐந்தாவது மாடிக்குப் போகலாம்.

அங்கே விக்னேஷ், அபிநயா, ஆஷிகா, உறுதிமொழி, கவின், பரமேஷ், ராஜகணேஷ் என ஏழு பேரும் ஒண்ணுகூடி விளையாடிட்டு இருந்தாங்க.

பந்து விளையாடி போர் அடிச்சுப்போச்சு... ஓடிப்பிடிச்சு அலுத்துப் போச்சு... கதைகள் பேசி களைப்பாகிப் போச்சு...

``அடுத்து என்ன பண்ணலாம்?''னு கேட்டான் விக்னேஷ்.

``மொட்டை மாடிக்குப் போய் வாட்டர் ஸ்கேட்டிங் விளையாடலாமா?''னு கண்களை அகல விரிச்சு கேட்டாள் அபிநயா.

``மழை வந்துட்டிருக்கு...''னு சொன்னாள் ஆஷிகா.

``லேசாதான் தூறிட்டிருக்கு. மாடியில தேங்கியிருக்கிற தண்ணியில சறுக்கி விளையாடினா ஜாலியா இருக்கும்''னு சொன்னான் பரமேஷ்.

``மாடிக் கதவு பூட்டி இருக்குமே''னு சொன்னாள் கவின்.

``சாவி எங்க வீட்லதானே இருக்கு. பாட்டியும் தூங்கிட்டிருக்காங்க. நான் ரகசியமா போய் எடுத்து வர்றேன்''னு சொன்னாள் உறுதிமொழி.

ஆறாவது மாடியில் இருக்கும் அவங்க அம்மாதான் அந்த அபார்ட்மெட்டின் செக்ரட்டரி.

``ஆனா, பெரியவங்களுக்குத் தெரியாமல் மொட்டைமாடிக்குப் போகக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்களே''னு சொன்னாள் கவின்.

kids
kids
pixabay

``யம்மா ரூல்ஸ் ரூபாவதி... அதையெல்லாம் பார்த்தா ஜாலியா இருக்க முடியாது. நாம ஒண்ணும் சின்னக் குழந்தைகள் கிடையாது. அங்கே போனா பயந்துட மாட்டோம். கொஞ்ச நேரம் விளையாடிட்டு வந்துடப் போறோம்''னு சொன்னான் ராஜகணேஷ்.

``அதானே யாருக்குத் தெரியப்போகுது''னு சொன்னான் விக்னேஷ்.

``சரி, நான் போய் சாவியை எடுத்து வர்றேன். எல்லோரும் மேலே வாங்க'' - அப்படின்னு சொல்லிட்டு போனாள் உறுதிமொழி.

``அப்போ நான் வீட்டுக்குப் போய் ரெயின் கோட் எடுத்துட்டு வரட்டுமா?''னு கேட்டாள் கவின்.

``ஓ... படகு, வாட்டர் ஜாக்கெட் எல்லாத்தையும் கொண்டு வா. பயர் சர்வீஸுக்கும் போன் பண்ணிடு''னு கேலியா சிரிச்சா ஆஷிகா.

``மழையில ஜாலியா விளையாடி என்ஜாய் பண்றதை விட்டுட்டு ரெயின் கோட்டாம் ரெயின் கோட்''னு முறைச்சான் பரமேஷ்.

``நான் என்னோட ரெயின்போ குடையைக் கொண்டுவர்றேன். அதை வெச்சும் விளையடலாம்''னு சொல்லிட்டுப் போனாள் அபிநயா.

வீட்டுக்குப் போன உறுதிமொழி, ரூமுக்குள்ளே எட்டிப் பார்த்தாள். பாட்டி அசந்து தூங்கிட்டிருந்தாங்க. நைசா மாடியின் சாவியை எடுத்துக்கிட்டு வெளியே வந்தாள்.

 story
story
pixabay

ஏழு பேரும் மொட்டை மாடியின் கதவைத் திறந்தாங்க. லேசா தூறல் போட்டுட்டு இருந்துச்சு. சிலுசிலு காற்றும் வீச, முகத்துல பன்னீர் தெளிச்ச மாதிரி இருந்துச்சு.

``ஹேய்ய்ய்ய்ய்ய்''னு கத்திக்கிட்டே மாடியில் கால்களை வெச்சாங்க. மூன்று நாளாக பெய்யும் மழையாலும் கொஞ்சமாகத் தேங்கியிருந்த தண்ணீராலும் கால்களை வெச்சதும் ஐஸ்கட்டியில வெச்ச மாதிரி இருந்துச்சு.

``ஹேய்... ஹேய்... ஹேய்''னு சொல்லிக்கிட்டே துள்ளித் துள்ளிக் குதிச்சாங்க. தண்ணீர் சிதறி சிதறி உடம்பில் பட்டுச்சு.

விக்னேஷும் பரமேஷூம் கைகளைப் பிடிச்சுக்கிட்டு, `சர்ர்ர்ர்ர்'னு சறுக்கிக்கிட்டே போனாங்க. அதைப் பார்த்து ஆஷிகாவும் அபிநயாவும் கைகளைப் பிடிச்சுக்கிட்டு சறுக்கினாங்க.

அபிநயாவின் குடையை விரிச்சு வெச்சுட்டிருந்த உறுதிமொழி, தூக்கிப் பிடிச்சு கம்பியைச் சுற்ற, குடை மேலே விழுந்த தூறல், நாலா பக்கமும் சிதறிச்சு. கொஞ்சம் பயந்துட்டிருந்த கவினும் அவங்களோட மழை விளையாட்டில் சேர்ந்துக்கிட்டா.

திடீர்னு ராஜகணேஷின் குரல் மேலே இருந்து கேட்டுச்சு. எல்லோரும் நிமிர்ந்து பார்த்தாங்க. வாட்டர் டேங்க் பக்கத்துல நின்னுட்டிருந்தான்.

``டேய்... அங்கே ஏன்டா போனே?''னு கத்தினாள் உறுதிமொழி.

``இங்கே வந்து பாருங்க... நிறைய வீடுகளின் மொட்டைமாடியும் தூரத்து ரோடும் பார்க்க சூப்பரா இருக்கு''னு சொன்னான் ராஜகணேஷ்.

எல்லோரும் இரும்பு ஏணியில் ஏறி மேலே போனாங்க. உண்மையிலே அங்கிருந்து பார்க்க சூப்பரா இருந்துச்சு.

kid
kid
pixabay

``எனக்கு ரொம்ப நாளா இந்த டேங்க் உள்ளே பார்க்க ஆசை''னு சொன்னான் விக்னேஷ்.

அங்கிருந்த இரண்டு கறுப்பு தண்ணீர் டேங்க் ஒவ்வொண்ணும் ஆறடி உயரம் இருந்துச்சு. ``பார்த்துட்டா போச்சு''னு சொன்ன பரமேஷ், விக்னேஷைத் தூக்கினான்.

விக்னேஷ் ஒரு தாவு தாவி டேங்கின் மூடியைத் திறந்தான். ``ஏய்... தண்ணீர் ஃபுல்லா இருக்குடா''னு சொன்னான்.

``கொஞ்சம் முன்னாடிதான் செக்யூரிட்டி மாமா மோட்டார் போட்டார்... நீச்சலடிக்கிறியா?''னு சொல்லிக்கிட்டே பரமேஷ் இன்னும் வேகமா மேலே தூக்கினான்.

அவன் விளையாட்டாகத்தான் செஞ்சான். ஆனால், அதை எதிர்பார்க்காமல் குனிஞ்சு தண்ணியைப் பார்த்துட்டிருந்த விக்னேஷ் உள்ளே விழுந்துட்டான்.

`குபுக்'னு சத்தம்... கொஞ்சம் தண்ணீர் அப்படியே வெளியே இவங்க மேலே கொட்டிச்சு.

அவ்வளவுதான்... ``அய்யோ! விக்னேஷ்... விக்னேஷ்...''னு அலற ஆரம்பிச்சாங்க.

``சீக்கிரம்... சீக்கிரம்... செக்யூரிட்டி மாமாவைக் கூட்டிட்டு வாங்க... ஓடுங்க''னு கத்தினாள் ஆஷிகா.

பயத்தில் நகரமுடியாமல் அங்கேயே நின்னுட்டான் பரமேஷ்.

kids
kids
pixabay

வேக வேகமா இறங்கின மத்தவங்க கீழே ஓட ஆரம்பிச்சாங்க. ``டேங்க் ஃபுல்லா தண்ணி இருக்கிறதா சொன்னானே... மூழ்கிடுவானே''னு அழுதாள் உறுதிமொழி.

சடார்ன்னு நின்ன கவின், ``யாராவது ஒருத்தர் மட்டும் செக்யூரிட்டியைக் கூப்பிடப் போங்க. மத்தவங்க எல்லா பிளாட்களிலும் போய் எல்லாக் குழாய்களையும் திறந்துவிடச் சொல்வோம். ஒரு குழாய் விடாமல் திறந்துவிடணும்'' என்று கத்தினாள்.

எதுக்குன்னு புரிஞ்சதா சுட்டீஸ்? டேங்க் ஃபுல்லா இருக்கிற தண்ணீரை குறைக்கிறதுக்கு.

உடனே மத்தவங்க ஒவ்வொரு மாடியா போய் அங்கே விளையாடிட்டு இருந்த பசங்ககிட்ட சொன்னாங்க. எல்லோரும் அவங்க அவங்க பிளாட்டுக்குப் போய் குழாய்களைத் திறந்து விட்டாங்க.

எல்லோர் வீட்டிலும் தண்ணீர் கொட்ட ஆரம்பிச்சது. இதுக்குள்ளே விஷயம் தெரிஞ்சு, அங்கிருந்த பெரியவங்க மொட்டைமாடிக்கு ஓடினாங்க. செக்யூரிட்டியும் வந்துசேர, டேங்கில் இறங்கி விக்னேஷை தூக்கிட்டாங்க.

நல்லவேளை... வேகமா தண்ணீர் குறைஞ்சதாலும் சீக்கிரமா வந்து தூக்கினதாலும் விக்னேஷ் ஆபத்தில்லாமல் தப்பிச்சான்.

அந்த நேரத்திலும் யோசிச்சு சாமர்த்தியமாகச் செயல்பட்ட கவினை எல்லோரும் பாராட்டினாங்க.

``ஆனாலும், பெரியவங்க சொல்லிவெச்சும் அவங்களுக்குத் தெரியாமல் மாடிக்குப்போனது தப்புதான். அதுக்காக, நானும் இவங்களோடு சேர்ந்து மன்னிப்பு கேட்டுக்கறேன்'னு சொன்னாள் கவின்.

ஜாலி தேவைதான்... ஆனா, கவனமா இருக்கணும். பெரிவங்க சொல்றபடி விளையாடணும். ஏன்னா, பெரியவங்க எப்பவும் நம்ம நல்லதுக்குத்தான் சொல்வாங்க!

இந்தக் கதையை அழகான குரலில் ஆடியோவில் கேட்க...

கதை சொல்பவர்: அபிநயா ஶ்ரீகாந்த்