Published:Updated:

மக்கு மாடசாமி நிஜமாகவே மக்குதானா? - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast

உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... புதிதாக வகுப்புக்கு வந்த மாடசாமி யாரு? அவன் எதுவுமே தெரியாத மக்கு மாடசாமியா என்ன?

மாடசாமி
மாடசாமி ( pixabay )

பள்ளிக்கூடம் திறந்த நாளுல இருந்து ஆறாம் வகுப்பு `பி' செக்‌ஷனில் மாடசாமி பற்றித்தான் வகுப்பின் மற்ற எல்லோரும் பேசிட்டிருந்தாங்க.

மாடசாமி அந்த வகுப்புக்குப் புதுசா வந்திருந்தான். முதல் விஷயம்... அவனோட பெயரே எல்லோருக்கும் சிரிப்பை வரவெச்சது.

"இது என்னடா நேம். ரொம்ப வயசானவங்க மாதிரி இருக்கு'' - அப்படின்னு மாடசாமிகிட்ட முதலில் கேட்டது விஷால்தான். மற்ற எல்லோரும் சிரிச்சாங்க.

மாடசாமி
மாடசாமி

கணக்கு ஆசிரியர் ஆறுமுகம், ``இந்தக் காலத்துல இப்படி ஒரு பெயரை வெச்சிருக்காங்களே... உங்க அப்பா என்ன வேலை செய்யறார்?'' - அப்படின்னு ஆச்சர்யத்தோடு கேட்டார்.

``அப்பா பிஸினஸ் பண்றார் சார்''- அப்படின்னு சொன்னான் மாடசாமி.

``என்ன பிஸினஸ்... புண்ணாக்கு பிஸினஸா?'' - அப்படின்னு பின்னாடி இருந்து யாரோ ஒரு பையன் கேட்க, எல்லோரும் சிரிச்சாங்க.

ஆசிரியர் ஆறுமுகமும் சிரிச்சுக்கிட்டே, ``சரி, சரி உட்காரு'' என்று சொல்லிட்டார்.

ஒருநாள் கரும்பலகையில் ஒரு கணக்கைப் போட்ட அவர், ``மாடசாமி... இதுக்கு விடையைச் சொல்லு''- அப்படின்னு கேட்டார்.

எழுந்து நின்ன மாடசாமி, அந்தக் கணக்குத் தெரியாமல் தடுமாற, ``ரொம்ப சுலபமாச்சே... அட.. மக்கு மாடசாமி''- அப்படின்னு சொல்ல, எல்லோரும் சிரிச்சுட்டாங்க.

அதிலிருந்து எல்லோரும் அவனை `மக்கு மாடசாமி... மக்கு மாடசாமி' எனக் கூப்பிட ஆரம்பிச்சாங்க. ஆனால், மாடசாமி அதுக்காக கவலையேபடலை.

boy
boy
pixabay
சிங்கம் பிடரி ஏன் உதிருது? - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast

அடுத்த விஷயம்... அவனுக்கு செல்போன்ல பல விஷயங்கள் பற்றியே தெரியாதது.

``என்னடா சொல்றே... நீ யூடியூப்பே பார்த்தது இல்லியா?'' - அப்படின்னு ஒருநாள் கேட்டான் பரத்.

``ம்ஹூம்... ஃபிரெண்ட்ஸ்கிட்ட பேசறதுக்கு மட்டும்தான் செல்போனை யூஸ் பண்ணுவேன்'' - அப்படின்னு மாடசாமி சொன்னதும் எல்லோருக்கும் ஆச்சர்யம்.

``அதுல எவ்வளவு கேம்ஸ் இருக்கு தெரியுமா? பாட்டு இருக்கு தெரியுமா? அட... பாடம் சம்பந்தமான விஷயங்களே இருக்கு. அதுகூடத் தெரியலையே உனக்கு'' - அப்படின்னு கிண்டல் பண்ணினாங்க.

மாடசாமி அதுக்கும் கவலைப்படலை. இப்படி அடிக்கடி அவங்க கேலி பண்ணினாலும், எல்லோர்கிட்டேயும் எப்பவும்போல பேசிட்டுத்தான் இருப்பான்.

கொஞ்ச நாளுல அந்தப் பள்ளிக்குப் புதுசா வந்தாங்க ஜோதி டீச்சர். எல்லோரிடமும் அன்போடு சிரிக்கச் சிரிக்கப் பேசினாங்க. அவங்க அறிவியல் டீச்சர். ஆனால், ஒவ்வொரு வகுப்பிலும் கடைசி 10 நிமிடங்கள் குட்டிக் குட்டிக் கதைகள் சொல்வாங்க. நேரம் கிடைக்கிறப்ப எல்லாம் ஒவ்வொரு மாணவரிடமும் தனியாகப் பேசி அவங்க குடும்பம் பற்றியும் தெரிஞ்சுப்பாங்க.

boy
boy
pixabay

அதனால், ஜோதி டீச்சரை எல்லோருக்குமே ரொம்ப பிடிச்சுப்போச்சு. டீச்சருக்கும் அந்த வகுப்பில் எல்லோரையும் பிடிச்சுப்போச்சு. பசங்க மாடசாமியை அடிக்கடி `மக்கு மாடசாமி'ன்னு சொல்றதுதான் பிடிக்கலை.

ஆனாலும் அதுபற்றி எதுவும் சொல்லலை. சரியான நேரம் வரட்டும்னு இருந்தாங்க.

ருநாள் வழக்கம்போல பாடத்தை முடிச்சிட்டு, ஒரு கதை சொல்ல ஆரம்பிச்சாங்க. அது ஒரு அரிசி பற்றின ஜாலியான கதை. அதைச் சொல்லி முடிச்சதும் ஒரு கேள்வி கேட்டாங்க.

``நமக்கு அரிசி எங்கிருந்து கிடைக்குது?'' எனக் கேட்டாங்க.

உடனே எழுந்த தீபிகா, ``சூப்பர் மார்க்கெட்ல இருந்து மிஸ்'' - அப்படின்னு சொன்னாள்.

விக்னேஷ் எழுந்து, ``அரிசிக் கடையிலிருந்து மிஸ்'' - அப்படின்னு சொன்னான்.

அப்போ எழுந்த மாடசாமி, ``வயலில் நெல் விளையும் மிஸ். அந்த நெல்லில் இருந்துதான் அரிசி வரும்'' என்றான்.

உடனே மாடசாமி பக்கத்தில் வந்த ஜோதி டீச்சர், அவன் கையைக் குலுக்கினாங்க.

kids
kids
pixabay
உயரம் உணர்ந்த கீக்கி கழுகு - சுட்டிகளுக்கான குட்டிக் கதை #DailyBedTimeStories #VikatanPodacast

``மாடசாமி... இது உனக்கு எப்படித் தெரியும்? எதிலாவது படிச்சியா?'' என்று கேட்டாங்க.

``இல்லே மிஸ்... நேரடியாவே பார்த்திருக்கேன். அது எப்படி விளையுதுன்னு எனக்குத் தெரியும்'' - அப்படின்னு சொன்னான் மாடசாமி.

``சரி, அதுபற்றி எல்லோருக்கும் சொல்லு'' - அப்படின்னு சொன்னாங்க ஜோதி டீச்சர்.

``எங்க அப்பா பிஸினஸ் பண்ணினாலும், அவருக்கு விவசாயம் செய்யவும் பிடிக்கும். கிராமத்துல கொஞ்சம் விவசாய நிலம் இருக்கு. லீவு நாளுல நாங்க அங்கே போய்டுவோம். வயலில் உழுவது, நாற்று நடுவது, களை எடுப்பது, தண்ணீர் பாய்ச்சுவது, கதிர் அறுப்பது... இப்படி எல்லா வேலையிலும் விவசாயிகளோடு சேர்ந்து நானும் உதவி செய்வேன்.''

மாடசாமி இப்படிச் சொல்ல சொல்ல பசங்க எல்லாம் ஆச்சர்யத்தோடு பார்த்தாங்க. மாடசாமி பேசின பல வார்த்தைகள் கேள்விப்படாத, புதிய வார்த்தைகளாக இருந்துச்சு. வாயைப் பிளந்துட்டுப் பார்த்தாங்க.

``களத்துமேடுன்னா என்ன?''

``களை எடுக்கிறதுன்னா என்ன?''

``கதிரா.. அப்படின்னா?''

இப்படி நிறைய கேள்விகள் அவங்களுக்குத் தோணிச்சு. அதற்குள்ளே வகுப்பு முடிந்ததுக்கான மணி அடிச்சுட்டாங்க.

boy
boy
pixabay

``உங்களுக்கு ஓய்வு கிடைக்கும்போது இந்தக் கேள்விகளுக்கான பதில்களை மாடசாமியிடம் கேட்டுத் தெரிஞ்சுக்கங்க. இப்போ எல்லோரும் அவனைப் பாராட்டுவோம்'' - அப்படின்னு ஜோதி டீச்சர் சொல்ல, எல்லோரும் கை தட்டினாங்க.

அதுக்கு அப்புறம் சாப்பிடும்போது, விளையாடும்போது, ஓய்வாக இருக்கும்போதெல்லாம் மற்ற மாணவர்கள், மாடசாமிகிட்ட விவசாயம் பற்றி நிறைய விஷயங்களைக் கேட்டு தெரிஞ்சுக்கிட்டாங்க. இப்போ யாருமே மாடசாமியை மக்கு மாடசாமின்னு சொல்றதே இல்லே.

ருநாள் ஜோதி டீச்சர், ``யாரெல்லாம் வயல்வெளியை இதுவரை நேரில் பார்த்தது இல்லை?'' என்று கேட்டாங்க.

வகுப்பில் முக்கால்வாசி பேர் கைகளை தூக்கினாங்க. ``சரி, நாம ஒண்ணு செய்யலாம். ஒரு விடுமுறை நாளில், எல்லோருமா மாடசாமியின் வயலுக்குப் போய்ப் பார்க்கலாம். நான் ஹெட்மாஸ்டர்கிட்ட பேசி பெர்மிஷன் வாங்கறேன். நம்ம ஸ்கூல் பஸ்ஸிலேயே போய்ட்டு வரலாம்'' - அப்படின்னு ஜோதி டீச்சர் சொல்ல, எல்லோரும் உற்சாகமாகக் குதிச்சாங்க.

வேலு கோமாளி ஆனது எப்படி? - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories

சுட்டீஸ்... நீங்க யாரெல்லாம் வயல்வெளியைப் பார்த்திருக்கீங்க? களத்துமேடு, களை எடுக்கிறது, கதிர் அறுக்கிறதுன்னா என்ன தெரியுமா?

வீட்டுல இருக்கிற பெரியவங்ககிட்ட கேளுங்க. ஒருநாளைக்கு வயல்வெளிக்குப் போய்ப் பாருங்க சரியா!

குரங்கு சொன்ன அதிசய இடம் எங்கே இருக்கு?- சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories

இந்தக் கதையைச் சொல்பவர்: அபிநயா ஶ்ரீகாந்த்