மூக வலைதளங்களில் நடிகர்களுக்காக அடித்துக் கொள்பவர்களைத் தெரியும். அதே சமூக வலைதளத்தில் நடிகைகளுக்காக கட்சி, இயக்கங்களை ஆரம்பித்தும் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். இது ஃபேஸ்புக், ட்விட்டரில் தென்பட்ட வித்தியாசமான பக்கங்களில் சில!

தங்கத் தலைவி வாழ்க!

 ‘சமந்தா முன்னேற்றக் கழகம்’, ‘தமிழ்நாடு சமந்தா மக்கள் இயக்கம்’, ‘சமந்தா ரசிகர் மன்றம்’ எனப் பல பக்கங்கள் பச்சைக்கொடி ஆட்டுகின்றன சமந்தாவுக்கு. துப்புரவுத் தொழிலாளர்களோடு போஸ் கொடுக்கும் காட்சி, குழந்தைகளுக்கு உதவி செய்யும் காட்சியெனப் பலவும் நார்மலான பக்கமாக நகர்ந்தால், ‘தமிழ்நாடு சமந்தா மக்கள் இயக்கம்’ இறங்கி அடிக்கிறது. உறுப்பு தானம் தொடர்பான விழிப்பு உணர்வு, பிறந்தநாள் விழா உதவிகள், தனது படங்கள் தொடர்பான செய்திகள், வீடியோக்கள் என வெரைட்டி விருந்து படைக்கிறது பக்கம். தவிர, ‘தங்கத்தலைவி’ சமந்தா, ‘பூமியில் வந்திறங்கிய தேவதை’ சமந்தா என விதவிதமான கோஷங்களில் வெறித்தனமான ரசிகர்கள் வெளுத்து வாங்கியிருக்கிறார்கள். இன்னும் சில பதிவுகளில், இருக்கும் அத்தனை நடிகைகளையும்விட சென்சேஷனலான நடிகை சமந்தாதான் எனப் புகழ்ந்திருப்பதோடு, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ பட்டமும் கொடுத்து அழகு பார்த்திருக்கிறார்கள் வெறித்தனமான சமந்தா ரசிகர்கள். ட்விட்டரிலும் சமந்தா ரசிகர்கள் செம ஷார்ப்!

தங்கத் தலைவி வாழ்க!

 எண்ண முடியாத அளவுக்கு விதவிதமான பெயர்களில் புகுந்து விளையாடிக் கொண்டிருக் கிறார்கள் நயன்தாரா ரசிகர்கள். சிலர் சினிமாவோடு ரசிப்பது போதாதென அரசியலுக்கும் இழுத்துவிட்டு அழகு பார்த்திருக்கிறார்கள். ஃபேஸ்புக்கில் மட்டுமே இயங்கும் இந்தக் கட்சிக்கு ‘நயன்தாரா கட்சி’ என்றே பெயர். ‘மாற்றம் முன்னேற்றம்’ அன்புமணியின் போஸ்டரைப் பழுது பார்த்து, ‘மாற்றம் முன்னேற்றம் நயன்தாரா’வாக மாற்றியிருக்கும் கொலவெறி ரசிகர்கள், இதே பக்கத்தில் ‘வருங்கால முதல்வர் நயன்தாரா வாழ்க’ எனக் குரல் புடைக்கக் கத்தியிருக்கிறார்கள். இன்னும் சிலர் ‘நயன்தாராவுக்குக் கோவில் கட்டிய வாலிபர்கள் சங்கம்’ என்ற முகநூல் குழு ஒன்றையும் ஆரம்பித்து, நயன்தாராவின் நடிப்பை, அழகை சீரியஸாக அலசிக்கொண்டிருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ஜோடியாச்சே, சும்மாவா?

தங்கத் தலைவி வாழ்க!

 ‘இவங்கெல்லாம் ரசிகர்கள்... நாங்கெல்லாம் அடிமைகள் பாஸ்’ என்கிறார்கள் ‘டைம்பாஸ்’ அட்டைப்பட புகழ் தமன்னாவின் ரசிகர்கள். அம்மணிக்கும் பல பக்கங்களில் ரசிகர்கள் புகழ் பாடிக்கொண்டிருந்தாலும், பச்சக்கென பற்றிக்கொள்வது ‘தமன்னா அடிமையானவர்கள்’ பக்கம்தான். பக்கம் ஆக்டிவாக இல்லையே தவிர, இருக்கும் உறுப்பினர்கள் தமன்னாவின் ஒற்றைப் படத்தை ரசித்துக்கொண்டிருக்கிறார்கள். ‘தமன்னா ஆன்லைன்’, ‘தமன்னா லக்கி ஃபேன்ஸ்’, ‘தமன்னா நற்பணி மன்றம்’ என ஊருக்குச் சில தமன்னா ரசிகர்கள் ஸாரி... அடிமையானவர்கள் எல்லோருக்குமே தமன்னாவின் ‘அடடா மழைடா’ பாட்டுக்கு அடிமைபோல திரும்பிய இடமெங்கும் தென்படுகிறது இந்த போஸ்!

தங்கத் தலைவி வாழ்க!

 50 படங்களைக் கடந்தும் கலக்கிக்கொண்டிருக்கும் த்ரிஷாதான் உண்மையான ‘சூப்பர் ஸ்டார்’ என்கிறார்கள் த்ரிஷா ரசிகர்கள். எப்போதும் ஆக்டிவாக இருக்க... த்ரிஷாவின் நாய் மீதான பாசம், பொது உதவிகள், திரைப்படங்கள், திரைப்பட நிகழ்ச்சிகள் எனப் பல பக்கங்களில் நொடிக்கொரு அப்டேட் நடந்துகொண்டே இருக்கின்றன. ‘சூப்பர் ஸ்டார் த்ரிஷா’ என்ற பெயரில் குழு ஒன்றை ஆரம்பித்து, தங்கள் தலைவியின் படம் ஒளிபரப்பப்படும் நேரம், த்ரிஷாவின் செல்ஃபி ஸ்பெஷல், மெட்ரோவில் பயணித்ததை சிலாகித்து ஒரு பதிவு, முக்கியமாக கண்ணில் ஒற்றிக்கொள்ளும் ஹை-குவாலிட்டி புகைப்படங்களைப் பதிவேற்றி, நடிகைகளின் ரசிகர்களிலேயே தனித்துவமான ரசிகர்களாக கெத்து காட்டுகிறார்கள் த்ரிஷாவின் ரசிகர்கள். உலகத்துல எவ்வளவோ பொண்ணுங்க இருந்தும் ‘ஜெஸ்ஸி’ கேரக்டருக்கு ஏன் த்ரிஷாவைத் தேர்ந்தெடுத்தாங்கனு தெரியுதா?

தங்கத் தலைவி வாழ்க!

 அப்போதும், இப்போதும், எப்போதும் லைம்-லைட்டில் இருக்கும் குஷ்புவுக்கு இல்லாத ரசிகர்களா? ‘கொள்கையாளர் குஷ்பு குழுமம்’, ‘குஷ்பு இட்லி’, ‘குஷ்பு ஹார்ட்கோர் ஃபேன்ஸ்’ என எக்கச்சக்க பக்கங்கள். ஓவர் கான்ஃபிடென்ட் ரசிகர்கள் சிலர் ‘இந்திய தேசிய குஷ்பு காங்கிரஸ்’ என்ற பெயரில் சமூக வலைதளத்தில் ஒரு கட்சியே நடத்திக்கொண்டிருக்கிறார்கள். பக்கத்துக்கு ‘இது அடுத்த தமிழக முதல்வரின் பக்கம்’ அடைமொழி அமர்க்களம். அரசியல் அலசல்கள், குஷ்புவின் பேட்டிகள், இந்திராகாந்தி வடிவில் குஷ்புவை வரைந்திருப்பது... என அணு அணுவாக ரசித்துச் செதுக்கியிருக்கிறார்கள் குஷ்பு ரசிகர்கள்! 

 சம்பந்தமே இல்லாமல் நமீதாவின் புகைப்படத்தோடு ‘ஈழ நமீதா’ என்றொரு குழு இயங்குகிறது. இது தவிர, ‘கடவுள் லெட்சுமி மேனன்’, ‘ஆனந்தி ஆல் இந்தியா ரசிகர்கள்’, ‘ஓவியாவின் ரசிகர்கள் படை’, ‘அழகுப்புயல் அஞ்சலி ரசிகர்கள்’, ‘ஷகிலா ரசிகர்மன்றத் தலைவர்’ என வெறித்தனமான அன்பு காட்டும் ரசிகர்கள் நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கும் இருக்காங்க!

- கே.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு