Published:Updated:

இது தமிழ் சினிமா அகராதி!

Vikatan Correspondent

மிழ் சினிமாவில் எது எதுக்கு என்னென்ன அர்த்தம்னு பார்க்கலாமா?

இது தமிழ் சினிமா அகராதி!

ஓபனிங் சீனில் கடலையோ பாலத்தையோ காட்டினா, ஹீரோ வரப்போறார்னு அர்த்தம். சுறாவை விட வேகமாக  நீந்தி, மேம்பாலத்திலிருந்து பருந்தைவிட வேகமாகப் பறந்து, பத்தாவது மாடியிலிருந்து பல்டியடித்து  வந்தால் அதுதான் மாஸ் ஹீரோ அறிமுகம். இன்னொன்னும்  இருக்கு. ‘எங்களைக் காப்பாத்துங்க ஐயா’னு ஒருத்தர் கத்தும்போது வெட்ட வரும் ரவுடியின் அருவாளை வெறும் கையால் பிடித்து ரத்தம் சொட்ட அதை இரண்டாக உடைத்து வீசுவது, டிராவலிங்கில் இருக்கும் துப்பாக்கிக் குண்டை வெறும் பல்லால் கடிச்சுத் துப்புவது என்று டெரர் காட்டினால் அது மரண மாஸ் ஹீரோ இன்ட்ரோ.

இது தமிழ் சினிமா அகராதி!

தமிழ் வாத்தியார், அந்த வாத்தியாரோட பொண்ணு, காய்கறி விற்கிறவர், பொறி விற்கிறவர், ஐயர் இவங்கல்லாம் ஒரே இடத்துல கூடியிருந்தா என்ன அர்த்தம் தெரியுமா பாஸ்? இன்னும் கொஞ்சம் நேரத்துல ஜெயில்ல இருந்து ரிலீஸான பிச்சுவா பக்கிரி டாடா சுமோவில அங்கே வந்து இறங்கப்போறார்னு அர்த்தம். இறங்கியவுடன் தன் பவரைக் காட்ட வாத்தியார் பெண் கையைப் புடிச்சு இழுத்து வம்பு பண்ணுவார். அதைப் பார்த்த ஐயர் ‘பகவான் உங்களையெல்லாம் தண்டிப்பார்’னு புலம்புவார். பொறிகளைப் பறக்கவிட்டு ‘வழக்கம்போல ஒழுங்கா மாமூல் வரணும். இல்ல பிச்சுப்புடுவான் இந்த பிச்சு’னு எல்லோருக்கும் வார்னிங் விடுவார் பக்கிரி.

ஹீரோயின் வீட்டைச் சுற்றி மழை பேஞ்சா நைட் 12 மணின்னுகூடப் பாக்காம அதில் போய் ஆடப்போறாங்கனு அர்த்தம். அதுவே ஹீரோ வீட்டைச் சுற்றி மழை பேஞ்சா, அவரைத் தீர்த்துக்கட்ட  ரவுடிகள் அங்கங்க ஒளிஞ்சிருக்காங்கனு அர்த்தம். இந்த மழை சண்டையில் முக்கியமான அம்சமே, சண்டை நடக்கும்போது அந்த ரவுடிகளில் ஒருத்தன் மட்டும் ட்ரான்ஸ்ஃபார்மரில் போய் விழுந்து அதை வெடிக்க வைத்து தெறிக்க விடுவான்.

இது தமிழ் சினிமா அகராதி!

ஹீரோஸ் நாய் வளர்த்தா என்ன அர்த்தம்? க்ளைமாக்ஸ்ல வில்லன்கள் ஹீரோவை கட்டிப்போட்டு ஒரு பாமையும் வைத்துவிட்டுப் போக, பாம் வெடிக்க இருக்கும் கடைசி  செகண்டில் அந்த நாய் ரகசியமா உள்ளே வந்து தன்னுடைய  பல்லாலேயே கயிற்றைக் கடித்து கட்டை அவிழ்த்து ஹீரோவைக் காப்பாத்தும். இல்லாட்டி எரிகிற திரி மேல ஒண்ணுக்கடிக்கும்.

ஹீரோ டீக்கடையில் நிற்கும்போது ‘டேய் மாப்ள’னு ஒரு ஃப்ரெண்ட் கேரக்டர் கத்திக்கிட்டே ஓடி வந்தா, ‘மலரைக் கடத்திட்டாய்ங்கடா’, ‘அப்பாவை அடிச்சிட்டாய்ங்கடா’, ‘தங்கச்சிக்குப் பிரசவ வலிடா’, ‘நாம பத்தாவது பாஸ் பண்ணிட்டோம்டா’னு இதில் ஏதோ ஒண்ணைச் சொல்லத்தான் ஓடிவரான்னு அர்த்தம்.

படத்தில் வைக்கோல் போரைக் காட்டினால் ஹீரோயின் அதில் ஏறி கோழி பிடிக்கவோ, கலவரத்தை ஏற்படுத்த அதைக் கொளுத்திவிடவோ, சேஸிங் காட்சியில் காரைக் கொண்டுபோய் அதில் ஒளித்து வைக்கவோ  போறாங்கனு அர்த்தம்!

-ஜுல்ஃபி