அந்த நாலு பேருக்கு நன்றி!
ஊருக்குள்ள நாலு பேர் நாலு விதமா பேசுவாங்கனு கேள்விப்பட்டிருப்பீங்க. எப்படி பேசுவாங்கனு பாருங்க...
சிம்பு - அனிருத் பீப் சாங் பற்றி:

• பெண்களைப் பற்றி இழிவா பாட்டு எழுதிப் பாடியிருக்காங்க. இவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்.
• அது அவர்களது ‘ப்ரைவசி’. அதில் நாம் தலையிடுவதே தப்பு.
• பாட்டு, மியூஸிக் சூப்பரா இருக்குங்க. அனிருத் மியூஸிக் பிச்சுருக்காப்ல. ஆனால், வரிகளைக் கொஞ்சம் மாத்தியிருக்கலாம்.
• ‘பீப்’ங்கிற சவுண்டுக்குப் பின்னாடி கெட்ட வார்த்தைதான் இருக்கும்னு என்ன நிச்சயம்?
அம்மா ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டதைப் பற்றி:

• மக்கள் பாதிக்கப்பட்ட நேரத்தில் இந்த விளம்பரம் தேவையா?
• நிவாரணப் பொருட்கள் அளித்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
• தமிழக அரசின் சின்னம் ‘ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம்’. ‘அம்மாவோ, கலைஞரோ’ கிடையாது.
• தரப் பரிசோதனை செய்த பொருள் என்பதைத்தான் அரசு ஸ்டிக்கர் ஒட்டித் தெரியப்படுத்துகிறது.
மாட்டிறைச்சி விவகாரம் பற்றி:

• அப்போ பால் குடிக்கக் கூடாதே, அதுவும் தப்பு தானே?
• என் தட்டுல என்ன இருக்கணும்னு நீங்க முடிவு பண்ணக் கூடாது.
• எருமை மாட்டைக் கொல்லலாம், பசுவைக் கொல்லக் கூடாது.
• அதுவும் ஒரு விலங்குதானே, அதை ஏன் கொல்லணும்?
மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் பற்றி:

• இவர் என்னய்யா ஊர் சுத்திட்டே இருக்கார். இவர் இந்தியாவுக்குப் பிரதமரா? இல்லை உலகத்துக்கே பிரதமரா?
• மனுஷன் ஊர் ஊரா சுத்தி சந்தோஷமா இருக்காப்ல, இதுக்கெல்லாம் கொடுத்து வெச்சிருக்கணும்.
• அவர் நம் நாட்டுக்கும், வெளிநாடு களுக்கும் இடையே உள்ள உறவைப் பலப்படுத்துற முயற்சியில்தான் பயணம் செய்றார். இந்தப் பயணங்களால் நாட்டுக்குதான் வருமானம்.
யார் எங்க போனா நமக்கென்ன பாஸு?
-ப.சூரியராஜ்