கலாய்
Published:Updated:

வாடகை கஷ்டங்கள்!

வாடகை கஷ்டங்கள்!

வுஸ் ஓனர்ஸ், இந்த வார்த்தையைப் படித்ததும் பகீர்னு இருந்துச்சுனா நீங்களும் என் இனமே. வீட்டில் வாடகைக்கு இருக்கும் ஆட்களை அடிக்கடி சுத்தவிட்டு சுண்ணாம்பு அடிக்கும் இவர்களின் குணாதிசயங்களைப் பார்ப்போம்...

•  பெரும்பாலான ஹவுஸ் ஓனர்கள் கீழ் வீட்டில்தான் குடியிருப்பார்கள். புதிதாய் யாராவது வீட்டு கேட்டைத் தொட்டாலே இவர்களுக்கு மூக்கு வேர்த்திடும். ஆல்வேய்ஸ் அலர்ட்டாவே இருப்பாங்க.

வாடகை கஷ்டங்கள்!

•  அதேபோல் பெரும்பாலான வீட்டுக்காரர்கள் நாய் வளர்ப்பார்கள். நம்மை விட அந்த நாயைத்தான் அதிகம் நம்புவார்கள். அதுங்களும் நமக்கு எதிராக சதி பண்ணும்.

•  வாடகைக்கு இருப்பவர்களிடம் அதிகம் சிரித்துப் பேச மாட்டார்கள். ஞாயிற்றுக்கிழமை ஆபீஸுக்கு வரச் சொன்னது போல் எப்போதும் ‘உம்’மென்றே திரிவார்கள்.

•  ‘வாடகைக்கு விடப்பட்ட வீட்டில் இருப்பவர்களும் தமக்கு சொந்தமே’ என்பது போல நடந்து கொள்வார்கள். திடீரென திறந்த வீட்டுக்குள் நுழைந்து ‘என்ன பாத்திரம் விளக்காம கிடக்கு?’,  ‘பொரியலில் உப்பு கம்மியா இருக்கு’ என புகார் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

•  பேச்சுலர்கள் குடியிருந்தால், தன் வீட்டில் மீந்துபோன சாப்பாட்டை ‘தம்பி, வீட்டு சாப்பாடு சாப்பிடுங்கப்பா’ எனக் கொடுத்து, அவர்களிடம் ‘பாசத்துல என் தாயை மிஞ்சிட்டீங்கம்மா’ எனப் பாராட்டு பெறுவார்கள்.

•  ‘தம்பி உங்களுக்கு தம், தண்ணி பழக்கம் இருக்கா? சும்மா சொல்லுங்க...’ என கூலாகப் பேசி குட்டையைக் கலைத்து, நமது வண்டவாளத்தை உருவி விடுவார்கள்.

•  வீட்டு வாடகை ரசீதில் பராமரிப்புச் செலவு 300 ரூபாய் என இருக்கும். ‘அது என்ன பராமரிப்பு?’ எனக் கேட்டால் வாசலில் கோலம் போட்டதையும், பால் பாக்கெட் போட கேட்டில் மஞ்சப்பை தொங்கவிட்டதையும் சொல்வார்கள்.

•  சில ஹவுஸ் ஓனர்கள் கரன்ட் பில்லை, ஹைவேஸில் இருக்கும் ஹோட்டல்கள் போன்று அவர்கள் இஷ்டத்துக்கு வசூலிப்பார்கள். டேங்கில் இருந்து தண்ணீர் ஓவர் ஃப்ளோ ஆவதை, உடம்பில் இருந்து ரத்தம் கொட்டுவது போல் நினைத்துப் பதறுவார்கள்.

•  ‘வீட்டுக்கு முன்னாடி செருப்பு கழட்டிப் போடக் கூடாது’, ‘ஆறு மணிக்கு முன்னாடி வீட்ல ட்யூப் லைட் போடக் கூடாது’னு வினோதமாக ரூல்ஸ் போடும் ஹவுஸ் ஓனர்களும் உண்டு.

•  நம்மை அடிக்கடி கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அதற்கு பதில் சொல்லிவிட்டோம், ‘என்னடா அண்ணனையே எதிர்த்துப் பேசுற’ என்பது போல் வீட்டை காலி செய்யச் சொல்லிவிடுவார்கள்.

•  ஒரு கிளாஸ் டீயின் விலை ஒரு ரூபாய் ஏற்றினாலும், அடுத்த மாதமே வீட்டு வாடகையையும் ஏற்றிவிடுவார்கள். பகவானே...

-ப.சூரியராஜ்