Published:Updated:

திட்டி திட்டி விளையாடுறாங்க!

திட்டி திட்டி விளையாடுறாங்க!

‘கிரிக்கெட் என்பது பெரிய மனுஷங்க விளையாட்டு. அதுல கப்பித்தனமா திட்டிக்கவோ, அடிச்சுக்கவோ மாட்டாங்க’னு கிரிக்கெட் ரசிகர்களும் அவ்வப்போது கரியை அள்ளிப் போடுவார்கள். உண்மையில், வீரர்கள் எதிரணி வீரர்களைக் கடுமையான வார்த்தைகளால் திட்டிக்கொள்வார்கள். இதற்கு ‘ஸ்லெட்ஜிங்’ என பெயர். சாம்பிளுக்கு சில சாஃப்டான ‘ஸ்லெட்ஜிங்குகள்’.

திட்டி திட்டி விளையாடுறாங்க!

•  இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி. சேவக்கும், சச்சினும் களத்தில் ஆடிக்கொண்டிருந்தனர். சேவக்குக்கு அக்தர் பவுன்ஸர்களாக போட்டுக் கடுப்பேற்றியிருக்கிறார். மேலும், சேவக்கிடம் ‘பவுன்ஸர் போட்டால் ஹூக் ஷாட் ஆடுங்க சேவக். அப்போதானே சீக்கிரம் அவுட் ஆகுவீங்க’ என கலாய்க்கவும் செய்திருக்கிறார். அதற்கு சேவக், ‘நான் ஹூக் ஷாட்டெல்லாம் ஆட மாட்டேன். உங்க அப்பா அந்தப் பக்கம் கையில் பேட் வெச்சுகிட்டு நின்னுட்டு இருக்கார். அவர் ஹூக் ஷாட் ஆடுவார்’ என அக்தரிடம் சச்சினைக் காட்டியிருக்கிறார். அக்தர் தன் அடுத்த ஓவரில் சச்சினுக்கும் பவுன்ஸர் போட ஹூக் ஷாட் ஆடி பந்தை சிக்ஸருக்கும் விரட்டியிருக்கிறார் சச்சின். போச்சா...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

•  ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பிரட்லீ. மணிக்கு சுமார் 160 கி.மீ வேகத்தில் பந்து வீசி சாதனை செய்திருக்கிறார். ஒருமுறை பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்-ஹக் பிரட்லீயிடம் ‘முதலில் நீ சுழற்பந்து போடுவதை நிறுத்து’ என கலாய்த்திருக்கிறார். பார்றா...

திட்டி திட்டி விளையாடுறாங்க!

•  ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் ஸ்டீவ்வாக்கின் கடைசி டெஸ்ட் போட்டி. இந்தியாவுக்கு எதிரான அந்தப் போட்டியில் ஸ்டீவ் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தாராம். அப்போது கீப்பராக இருந்த பார்த்திவ் பட்டேல், ‘உங்களுக்கு ஆட வராத ஸ்வீப் ஷாட் ஆடி, சீக்கிரம் அவுட் ஆகிக் கிளம்புங்க’ என ‘கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்’ என்ற ரேஞ்சுக்குப் பேசியிருக்கிறார். அதைக் கேட்டதும் ஸ்டீவ் கொந்தளித்து  ‘நான் என் நாட்டுக்காக கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சப்போ, நீ உன் டயப்பர்ல மூச்சா போயிட்டிருந்தே. வாயை மூடி அமைதியா இரு’ என்று பார்த்தீவுக்கு பல்பு கொடுத்திருக்கிறார்.

•  இது தாத்தா காலத்து ஸ்லெட்ஜிங். இந்திய அணிக்கும் மேற்கிந்திய அணிக்கும் நடைபெற்ற போட்டியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனான சுனில் கவாஸ்கர் நான்காவதாக இறங்கி ஆடத் திட்டமிட்டிருக்கிறார். மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் இரண்டு ஓப்பனர்களையுமே டக்-அவுட் செய்துவிட, கவாஸ்கர் களமிறங்கியிருக்கிறார். அப்போது விவியன் ரிச்சர்ட்ஸ் கவாஸ்கரிடம் ‘நீ ஓப்பனிங் இறங்கினாலும் நாலாவதா இறங்கினாலும் டீம் ஸ்கோர் ஜீரோவாதான் இருக்கும்’ என அசிங்கப்படுத்திவிட்டாராம். ச்சே...

•  அதே விவியன் ரிச்சர்ட்ஸ். ஒருமுறை இங்கிலாந்து பந்து வீச்சாளர் க்ரெக் தாமஸ், பேட்டிங் செய்துகொண்டிருந்த விவியன் ரிச்சர்ட்ஸிடம் ‘இங்கே பார். சிவப்பு வண்ணத்துல, உருண்டையா இருக்கே. இதுக்கு பேர்தான் பந்து. இதைத்தான் நீ அடிக்கணும்’ என ரிச்சர்ட்ஸை பால்வாடிப் பையன் போல் கேலி செய்திருக்கிறார். அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரிச்சர்ட்ஸ் ‘உனக்கு பந்து எப்படி இருக்கும்னு தெரியும்ல... அதைப் போய் எடுத்துட்டு வா...’ என வழியனுப்பி வைத்திருக்கிறார்.

•  ஒருமுறை முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் இயான் ஹேலி பேட்டிங் செய்துகொண்டிருந்த இலங்கை வீரர் அர்ஜுனா ரனதுங்காவிடம் ‘ஏன் உன் கால் இப்படி நடுங்குது, என்ன பயமா?’ எனத் திரியைக் கிள்ளிப் போட, அதற்கு ரனதுங்கா ‘இல்ல... உன் வீடு வரைக்கும் போய்ட்டு வந்தேன். அதான் அலுப்பில் கால் நடுங்குது’ என சரவெடியே கொளுத்தியிருக்கிறார்.

திட்டி திட்டி விளையாடுறாங்க!

•  பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜாவித் மியான்டட். மனுஷன் வேற மாதிரி, பேட்டைக்கொண்டு அம்பயர் முன்னாலேயே எதிரணி வீரரை அடிக்கச் சென்றவர். எதிரணி வீரர்களிடம் ஒரண்டை இழுப்பதுதான் இவரது பொழுதுபோக்கே. ஒரு முறை ஜாவித் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தார். அப்போது பவுலிங் போட்டுக்கொண்டிருந்த திலீப் தோஸியிடம் ‘உனது ரூம் நம்பர் என்ன? சொல்லு...’ என நச்சரித்து இருக்கிறார். மைதானத்துக்கு அருகில்தான் ஹோட்டலும் இருந்திருக்கிறது. ஒரு அளவுக்கு மேல் பொறுமை இழந்த திலீப் ‘ரூம் நம்பர் 216. இப்போ அதுக்கு என்ன பண்ணப் போற?’ எனக் கேட்டிருக்கிறார். அதற்கு ஜாவித் ‘அடுத்த பந்தை நான் அங்கதான் அடிக்கப் போறேன்’ எனக் கூறியிருக்கிறார். ஓவர் சேட்டை...

•  இதுதான் இருப்பதிலேயே படு பயங்கரம். ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் மெக்ரத், ஜிம்பாப்வே அணி வீரரான பிரான்டெஸைப் பார்த்து ‘ஏன் இவ்ளோ குண்டா இருக்க?’ எனக் கேட்க, அதற்கு பிரான்டெஸ் ‘நான் உன் மனைவியோடு இருக்கும்போதெல்லாம், அவ எனக்கு பிஸ்கெட் தருவா’ என பதில் கூறியிருக்கிறார். கடுப்பான மெக்ரத் ‘அடுத்த முறை உன் வாயில் இருந்து என் மனைவி பற்றிய வார்த்தை ஏதாச்சும் வந்துச்சு, சங்கை கடிச்சுத் துப்பிடுவேன்’ என மிரட்டியிருக்கிறார்!

-ப.சூரியராஜ்