Election bannerElection banner
Published:Updated:

சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலு!

சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலு!
சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலு!

சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலு!

சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலு!

ன்லைன் புக்கிங், எஸ்.எம்.எஸ்.டிக்கெட், ஆல்டர்னேடிவ் ரிசர்வேஷன், டோல்ஃப்ரீ என்கொயரி, வாடகைக்குப் போர்வை, தலையணை என்று ரயில் பயணமே ரொம்ப அட்வான்ஸாக மாறி என்னதான் நவீனமடைந்தாலும், ரயிலில் பயணம் செல்பவர்களின் மனநிலை மட்டும் இன்னும் அரதப்பழசாகவே உள்ளது.

டிக்கெட் கன்ஃபார்ம் ஆகாமல் அன் ரிசர்வர்ட் கம்பார்ட்மென்டில் பயணம் செய்யும்போது நீங்கள் ஜென் நிலைக்கு மாறிவிட வேண்டும். அந்த அளவுக்குப் பயணிகள் அட்டகாசம் செய்வார்கள். நெருக்கியடித்து ஐந்து பேர் உட்காரும் சீட்டில் ரிலாக்ஸாக மூன்று பேர் காலை நீட்டி சொகுசாக உட்கார்ந்துகொண்டு, குலசாமி கோயில் திருவிழாவில் சரக்கடித்ததையும் சண்டை போட்டதையும் சத்தமாகப் பேசிக்கொண்டு இருப்பார்கள்.  யாருக்கும் உட்கார இடம் தர மாட்டார்கள். இவர்கள் உருவத்தைப் பார்த்து, யாரும் தள்ளி உட்காரச் சொல்ல மாட்டார்கள். சிலர் அதே சீட்டில் குறுக்கும் நெடுக்குமாக சயனத்தில் ஆழ்ந்துவிடுவார்கள். அதே நேரம் நமக்கு சீட் கிடைத்து உட்கார்ந்திருந்தால் போதும், ‘தம்பி தள்ளி உக்காருப்பா’ என்று முதலில் ஒருவர் உட்காருவார், அடுத்து வரிசையாகப் பத்து பேர் அதே சீட்டில் நெருக்கி உட்கார்ந்து நம்மை ஜன்னலோடு ஸ்டிக்கர் போல் ஒட்டிவிடுவார்கள். ஊர் வந்ததும் யாராவது நம்மைப் பிய்த்து எடுக்க வேண்டும்.

சரி, இந்த இம்சை வேண்டாம், கக்கூஸ் பக்கத்தில் கொஞ்சம் ப்ரீயாக நின்றுகொண்டு பயணம் செய்யலாமென்று நினைத்தால், நம்மைப் போலவே அங்கே நூறு பேர் நின்றுகொண்டிருப்பார்கள். கால் வைக்க மட்டுமே இடம் இருக்கும், காலைத் தெரியாமல் எடுத்துவிட்டால் அங்கே வேறு கால் வந்து  சேர்ந்துவிடும். அதையும் அட்ஜஸ்ட் செய்து நின்றுகொண்டிருந்தால், பாத்ரூமுக்குப் போகிறேன் என்று வரிசையாக வருவார்கள் பாருங்கள்...அப்பப்பா, பாத்ரூம் போய்விட்டு நம் தலைமேல் கால் வைத்து போய்க் கொண்டிருப்பார்கள். இந்தக் கொடுமையை அனுபவித்தவர்கள், ‘விருதகிரி’ படத்தைக்கூட தைரியமாகப் பார்க்கலாம்.

நாம் தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் சிலர் கொஞ்சமும்  தயங்காமல், அவர்களே ஓப்பன் செய்து உரிமையோடு எடுத்து மடக்கு மடக்கு என்று சிங்கமுத்து மாதிரி குடிப்பார்கள். போரடிக்குது என்று புத்தகமோ, பேப்பரோ எடுத்து வெளியே வைத்தால் கேட்காமல் எடுத்துப் படிப்பவர்கள், கொஞ்ச நேரத்தில் நம்ம பேப்பரைக் கீழே விரித்துப் படுத்துவிடுவார்கள்.

என்னைக்காவது முன் பதிவுசெய்து பயணம் செய்ய நேர்ந்தாலும் நிம்மதியாகப் பயணம் செய்ய முடியாது, ஏழரை நாட்டு சனி கூடவே வந்து ஒரண்டையை இழுக்கும்.

நமக்கு மிடில் பர்த் கிடைத்திருக்கும். சரி... பத்து மணிக்கு மேல் படுக்கலாம் என்று நினைத்தால், லோயர் பர்த்தில் உட்கார விடமாட்டார்கள். ‘சார் நான் படுக்கணும் எழுந்திரிங்க’ என்பார்கள். தூக்கம் வரவில்லை புத்தகம் படித்துவிட்டுத் தூங்கலாம் என்று நினைத்தால், இரக்கமே இல்லாமல் லைட்டை ஆஃப் செய்வார்கள்.

சமயங்களில் லோயர் பர்த் கிடைத்ததே என்று சந்தோஷப்பட்டால், ‘தம்பி, என்னால  மேலே ஏற முடியாது, பர்த்தை  சேஞ்ச் பண்ணிக்கலாமா?’ என்று திடகாத்திரமாக உள்ளவர் அப்பிராணியாக கேட்பார். அப்புறம் என்ன, பர்த்தை தானம் கொடுத்துவிட்டு மேலே ஏறிப் படுக்க வேண்டியதுதான்.

சில பயணிகள் ஏதோ வீட்டில் இருப்பதுபோல் நினைத்துக்கொண்டு நமக்கு முன்னால் நுரை தள்ளத் தள்ள பல் துலக்க ஆரம்பித்துவிடுவார்கள். சிலர் வறட்டு வறட்டென்று நாக்கு வழித்து நம்மை வாந்தியெடுக்க வைப்பார்கள். சோப்பு நுரை தடவி ஷேவிங் செய்வார்கள். சிலர் சட்டை போடாமல் ஃபேர்பாடியாக அலைவர்கள்.

சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலு!

குடும்பத்துடன் வருகிற சில பார்ட்டிகள் செய்கிற அழிச்சாட்டியம் சொல்லி மாளாது. வீட்டில் செய்த புளியோதரையை மூன்று வேளையும் வெளுத்துக்கட்டுவார்கள். பொட்டலத்தைத் திறக்கும்போதெல்லாம் அதில் இருந்து கிளம்பும் வாயு நம் வயிற்றில் புளியைக் கரைக்கும். எப்போது பார்த்தாலும் எதையாவது தின்றுகொண்டிருப்பார்கள். டாய்லெட் ரூமில் துணி துவைப்பார்கள். ஜன்னலில் துணியைக் காயப்போடுவார்கள். முடிந்தால் நம் முகத்திலும் காயப்போடுவார்கள்.

டிராலி சூட்கேஷ் வந்தாலும் வந்தது, அதன் சைஸுக்கு அளவில்லாமல் போய்விட்டது. ஆறடி பீரோ சைஸில் டிராலி சூட்கேஷ் கொண்டு வருவார்கள். அது கோச் வாசலுக்குள்ளேயே நுழையாது. எப்படியோ உள்ளே நுழைத்து வந்துவிடுவார்கள். அது கம்பார்ட்மென்டுக்குள் நுழையாது, பத்துப் பேர் தள்ளுவார்கள். யாரும் அந்தப் பக்கமோ இந்தப் பக்கமோ போக முடியாது. பெரும் போராட்டமே நடக்கும்.

சிலர் கம்பார்ட்மென்ட் மாறி ஏறி இது என்னோட சீட் என்று வாக்குவாதம் செய்வார்கள். டி.டி.ஆர் வரும் வரைக்கும் இந்த வாதம் நடந்து கொண்டிருக்கும். டிக்கெட் கன்ஃபார்ம் ஆகாதப் பயணிகள், டி.டி.ஆர்.பின்னால் வால் பிடித்துக்கொண்டு போவதும் வருவதுமாக இருப்பார்கள்.

நீங்கள் சீட்டிலிருந்து எழுந்து பாத்ரூம் சென்றிருந்தால் காலியாத்தான் இருக்கு என்று அதில் ஏறி சில பேர் குறட்டை விட ஆரம்பித்துவிடுவார்கள். திரும்ப வந்து இது என் பர்த் என்று எழுப்பினால், ‘என்ன சார் தூக்கத்துல எழுப்பிக்கிட்டு’ என்று கடுப்பேத்துவார்கள். இன்னும் சிலர் நம்மிடமே ‘சீட் நம்பர் என்ன, கன்ஃபார்ம் ஆயிடுச்சா’ என்று விசாரணை நடத்துவார்கள்.

இந்த பிரச்னைகளையெல்லாம் சந்திக்காமல் நான் ரயிலில் டிராவல் செய்தேன் என்று சொல்பவர்கள் கண்டிப்பாக செவ்வாய் கிரக வாசிகளாகத்தான் இருக்க முடியும்!

-செ.சல்மான்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு