பெயர்: விஜயகாந்த். ஆனால், கறுப்பு எம்.ஜி.ஆர்., கேப்டன் எனச் சில அடைமொழிகளிலும் அழைக்கப்படுகிறார்.
பிறப்பு: 25 ஆகஸ்ட் 1952
வயது: 64
இருப்பிடம்: சென்னை
விஜயகாந்த் என்பவர் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவரும், அந்தக் கால அதிரடி ஆக்ஷன் ஹீரோவும் ஆவார். சமீபகாலமாக மேடைகளில் காமெடி செய்யும் வித்தைகளையும் இறக்கிக்கொண்டிருக்கிறார்.

திரையுலகப் பங்களிப்பு:
விஜயகாந்த் இதுவரை 150 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். அவற்றில் காக்கிச் சட்டை அணிந்து நடித்த முக்கால்வாசி படங்கள் முரட்டு ஹிட் மக்களே. ‘கேப்டன் பிரபாகரன்’, ‘புலன் விசாரணை’, ‘சத்ரியன்’ எனப் பல கிளாஸிகல் படங்களில் நடித்திருந்தாலும் ‘நரசிம்மா’, ‘வல்லரசு’, ‘வாஞ்சிநாதன்’ போன்ற பக்கா மாஸ் படங்களிலும் நடித்ததால்தான் உலகப்புகழ் பெற்றார். விஜயகாந்த் படங்கள் என்றாலே திகில் கிளப்பும், அனல் பறக்கும், அடப்பு தெறிக்கும் சண்டைக் காட்சிகள் கட்டாயமாக இடம்பெற்றிருக்கும். தாம்பாளத்தின் உதவியோடு தோட்டாவைத் திருப்பி விடுவது, மீசையைச் சுண்டிவிட்டு அடியாட்களை ஆகாயத்தில் பறக்கவிடுவது, இரண்டு கைகளில் நடந்துபோய் சுற்றிச் சுற்றி அடிப்பது என அதகளம் பண்ணுவார். அதிலும், ‘நரசிம்மா’ படத்தில் இவர் தலையில் ஹெல்மெட்டை மாட்டிவிட்டு அன்னக் கரண்டியில் கரன்ட் வொயரைக் கனெக்ஷன் செய்து ஹெல்மெட்டில் டச் செய்வார்கள். அப்போது இவர் பல்லைக்கடித்து, கண்கள் சிவந்து பதிலுக்கு கரன்ட் சப்ளை செய்ய, கரன்ட் பாக்ஸே அவமானத்தில் வெடித்துவிடும். இதே போல், அடிக்கடி தலையில் டார்ச்லைட்டைக் கட்டிக்கொண்டு பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி அடியாட்களைத் தேடுவது இவர் வழக்கம்.
சட்டமன்ற சாதனைகள் :
2006-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.
2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார்.
சட்டமன்றத்தில் நாக்கைத் துருத்திய முதல் அரசியல்வாதி இவர்தான் என்கிறது ஒரு குத்துமதிப்பு ஆராய்ச்சி!
பிற சாதனைகள் :
கட்சி உறுப்பினராகவே இருந்தாலும், நடுரோட்டில் போட்டுப் பொளந்து எடுப்பது, மேடையிலேயே ‘வாடா போடா’ வசை பாடுவது என அவ்வப்போது அக்கப்போர் கொடுத்திருக்கிறார். இன்னும் பல சாதனைகள் புரிய ஆவலாய் இருந்த இவரை, பச்சைத் தலைப்பாகை கட்டிய ஒருவர் பார்சல் செய்து அனுப்பிவிட்டார். ஊருக்குள் பல மீம் க்ரியேட்டர்கள் உருவாக இவர் ஒரு முக்கிய காரணம். சென்னை, கடலூர் வெள்ள சமயத்தில் வேட்டியை மடித்துக்கொண்டு சாலையில் இறங்கி மக்களைச் சந்தித்தவர் இவர்தான். இதேபோல், ‘த்தூ’, ‘தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்க’, ‘ஆத்திரங்கள் கிளம்புது’, ‘நிக்கிறவய்ங்க என்ன சொம்பைகளா’, ‘என்னது கையில ஏதோ மாட்டுது?’ என இவர் கூறிய ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் ஒரு வரலாறே இருக்கிறது மக்கழே!!!
குழப்பங்கள்:
அவர் மாடுலேஷனிலேயே சொல்கிறேன். மன்னிச்சூ!
‘`குழப்பங்கள் என்பது பழைய சோற்றுக்குப் பச்சை மிளகாய் வைத்துச் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்... தமிழன் என்று சொல், சகாப்தம் சண்முக பாண்டியன்... இப்போ நான் ஏன் இதை எல்லாம் சொல்ல வர்றேனா யுத்தம், போர் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கின்ற யுத்தம். கட்சி ஆரம்பிச்சு எத்தனை வருசம் ஆச்சுனு கேட்டால் இந்த நாடகத்திற்கு முழுப் பொறுப்பு இவர்தான். அதனால் இதுதான் குழப்பம் என்பதை சொல்லிக்கொள்கிறேன் என்பதை சொல்லிக்கொள்கிறேன் நன்றி வணக்கம் மக்கழே, நன்றி வணக்கம்!” இப்படியாக, என்ன பேச வருகிறார் என்பதே நமக்குப் புரியாத அளவிற்கு பயங்கரமாகக் குழப்பக் கும்மி அடிப்பார். ஏன்னா, குழப்பறதுக்குப் பெயர்தான் விஜயகாந்த் என அவரே ஒருமுறை தன்னைப் புகழ்ந்து கூறியிருக்கிறார்.
மேலும் பார்க்க:
விருதகிரி, சபரி, மரியாதை, சாத்து நடை சாத்து, ஆட்டமா தேரோட்டமா பாடல்கள்...
மேலும் படிக்க:
கேப்டன் மொழி அகராதி, கிரேக்கத்து சோகம், சுவரும் சூப்பர் கிக்கும், பழம் நழுவி பால்டாயிலில் விழுந்த கதை.
- ஒத்தக்கடை ப.சூரியராஜ்