Published:Updated:

கொக்கிபீடியா - ஜெ.தீபா

கொக்கிபீடியா - ஜெ.தீபா
பிரீமியம் ஸ்டோரி
News
கொக்கிபீடியா - ஜெ.தீபா

கட்டற்ற ‘கலாய்’க் களஞ்சியமான கொக்கிபீடியாவில் இருந்து...

கொக்கிபீடியா - ஜெ.தீபா

பெயர்: ஜெ.தீபா

பிறப்பு: 1974

இருப்பிடம்: தி.நகர், சென்னை. (சனி, ஞாயிறுகளில் மட்டும் கடை உண்டு)

பொறுப்பு: நிறுவனர், எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை. (பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகளின் பஞ்சாயத்து இன்னும் தீரவில்லை)

கொள்கை: ‘அத்தையின் பதவிக்கு ஆசைப்படு...’

பட்டங்கள்: இளைய புரட்சித் தலைவி, குட்டியம்மா.

வகித்த பதவிகள்: இதுவரை ஒன்றுமில்லை. வகிக்கப் போகும் பதவிகளை இனி வரலாறு சொல்லும். (‘வருங்கால முதல்வரே...’ பேனர் வைக்கப்பட்டு அகற்றப்பட்டது கொசுறு செய்தி!)

 இவரைப் பற்றி:  ஜெ.தீபா என்கிற ஜெயதீபா என்கிற ஜெ.தீபா மாதவன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஆவார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, சசிகலா குடும்பத்தினரிடமிருந்து கட்சியையும், தொண்டர்களையும் காக்க, ரட்சகராய் அவதரித்துப் புதுக்கட்சித் தொடங்கியுள்ளார். தமிழக அரசியலில் முக்கிய இடத்தைப் பிடிக்க முதல் ஆளாகத் துண்டு போட்டுக் காத்திருக்கும் சீட்தான் ஆர்.கே.நகர்.

 சாதனைகள்:  கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்ந்தார்களோ இல்லையோ, கட்சித் தொடங்கிய முதல் நாளிலேயே ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் ட்ரெண்ட் அடித்தது அசகாய சாதனை. தன் கட்சிக்குத் தன் பெயரையே சூட்டிக்கொண்ட தானைத் தலைவி எனவும் போற்றப்படுகிறார் தீபா. ‘ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் கட்சியைக் காப்பேன். வரலாறு திரும்பும். அ.தி.மு.க வரலாற்றைத் திருத்தி எழுதுவேன்’ என அவ்வப்போது ஸ்டன்ட் காட்சிகளை அரங்கேற்றி, ஆளே இல்லாத ரோட்டுல பெல் அடித்துக்கொண்டிருக்கும் தீபா இல்லாத தலைப்புச் செய்திகளே தமிழ்நாட்டில் இல்லை எனலாம்.

‘அம்மாவின் மருமகளே... தமிழகத்தின் திருமகளே..!’ என பேனர்கள் திரும்பும் பக்கமெல்லாம் பளிச்சிடுவது, அவரின் ஆதரவாளர்கள் திக்கெட்டும் இருப்பதைக் காட்டுகிறது. தீபா கட்சியில் உறுப்பினர்களே இல்லை என எதிர்த்தரப்பு கெக்கலி காட்டிச் சிரித்துக்கொண்டிருக்க, ‘எங்க கட்சியில கோஷ்டிச் சண்டையே இருக்கப்பூ...’ எனப் பத்துப் பேர் ரெண்டு மூணு டீம்களாகப் பிரிந்து சண்டை போட்டுக் காட்டியதும் இந்தச் சாதனை லிஸ்ட்டில் வரும். ‘பல் முளைக்காத கட்சிக்கு இதெல்லாம் ரொம்ப ரொம்ப ஓவர்யா...’ எனும் மக்களின் மைண்ட் வாய்ஸ்களைத்தான் எந்த லிஸ்ட்டில் சேர்ப்பதெனத் தெரியவில்லை.

 வேதனைகள்:  16 வருடங்கள் மக்களுக்காகப் போராடிய இரோம் சர்மிளாவுக்கே 90 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன என்பதைக் கேள்விப்பட்டதும், ‘நாமெல்லாம் வெறும் 90 நாள்தானே’ எனக் கொஞ்சம் அல்லுவிட்டது தீபா அக்காவுக்கு. ‘ஆர்.கே.நகர் தேர்தலில் நிற்கப் போகிறேன்’ என சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டுச் சொன்னாலும், ‘‘வழக்கமா பால்கனியில்தானே நிற்பீங்க... இப்போ என்ன புதுசா ரோட்டுலே எல்லாம்...’’ என எல்லோரும் கலாய்த்துத் தள்ளியது கண்ணீர் மல்கும் வேதனை.
‘‘கூலிப்படையினரை வைத்து என்னை மிரட்டுகிறார்கள், அரசியலில் இருந்து அகற்ற சதி நடக்கிறது’’ என அவர் வாக்குமூலம் கொடுக்க, ‘உளவுத்துறை ரேஞ்சுக்கு நீ வொர்த் இல்லையேம்மா...’ என சொந்தக் கட்சிக்காரர்களே அதை நம்ப மறுப்பது உச்சபட்ச வேதனை.

 குழப்பங்கள்:  கட்சி தொடங்கியதும், பதவிக்கு ஆசைப்பட்டுத் தலைவர் பதவியை ஏற்காமல், பெருந்தன்மையோடு பொருளாளர் பதவியைப் பெற்றுக்கொண்ட தீபாவுக்கு சர்ச்சைகள் சடையைப் பிடித்து இழுக்க, பிறகு பொதுச் செயலாளர் பதவியையும் அவரே  ஏற்றுக்கொண்டார். நிர்வாகிகள் அறிவிப்பில் தாமதமாவதைப் பார்த்துத் தொண்டர்கள் அதிருப்தியடைய, ‘கட்சியில் இருக்கும் எல்லோருக்கும் பதவி இருக்கு... கொஞ்சம் பொறுமையா இருங்க...’ என வெய்ட்டிங் லிஸ்ட்டுக்கு அட்டவணை போட்டுக் கொண்டிருக்கிறாராம். ‘எப்பயாவது குழப்பமா இருந்தா பரவால்ல... எப்பவுமே குழப்பமாவே இருந்தா எப்படிப்பா...’ என தீபாவே நெருக்கமானவர்களிடம் புலம்புவதால் இதற்கு மேலும் நாம் இதைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

 சமீபத்திய நிலவரம்:  ஜெயலலிதா சமாதிக்குச் சென்று தியானம் செய்வோர் பட்டியலில் சமீபமாக இணைந்திருக்கிறார் தீபா. 30 நிமிடங்கள் கண்களை மூடி அமர்ந்திருந்தவர், அப்படியே தூங்கிவிட்டதாக எதிர்க்கட்சிகள் வதந்தியைக் கிளப்பி விட்டது வரலாற்று வேதனை.

 பிடித்த வாசகம்: “அதை இப்போது கூற இயலாது. கருத்துகள் பின்னர் அறிவிக்கப்படும்!”

 மேலும் பார்க்க: குட்டியம்மா சபதம் வீக் எண்ட் காமெடி சண்டே ஃபண்டே!

 மேலும் படிக்க: MADP - ஒரு தலைவி உருவாகிறார்..!

தீபா - தி அன்டோல்டு ஸ்டோரி! வெகு விரைவில்...

பஞ்சாயத்து பால்டாயில் - ஒரு பின்நவீனத்துவ நாவல்

 மேலும் நிரப்ப:  MADP - உறுப்பினர் படிவம்

- விக்னேஷ் சி செல்வராஜ்

ஓவியம்: கார்த்திகேயன்மேடி