Published:Updated:

21 நாள்கள்

21 நாள்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
21 நாள்கள்

மனதோடுதான் நான் பேசுவேன்ஓவியம் : வேலு

`ஒரு விஷயத்தை 21 நாள்கள் தொடர்ந்து செய்தால், பிறகு அதுவே நம்ம வாழ்கையின் ஒரு பகுதியாகிடுமாம்!’ என்று என் தோழி ஆலோசனை சொன்னாள். அப்போது ட்விட்டரிலிருந்து வெளியேறும் முயற்சியிலிருந்தேன். `ட்வீட்’ போடுவது ஒன்றும் கொலைபாதகச் செயல் என்று சொல்ல முடியாவிட்டாலும், குற்றவுணர்ச்சியைத் தரக்கூடிய அளவுக்குப் போதைதான்.

21 நாள்கள்

சமூக வலைதளங்களில் எழுதத் தொடங்கிவிட்டால், கிட்டத்தட்ட பேய்க்கு வாழ்க்கைப்படுவதுபோல. நாம் அதை விட நினைத்தாலும், அது நம்மை விடாது. அதிலும் சில ஆயிரம் பேராவது பின் தொடர ஆரம்பித்ததும், நிகழ் உலகத்தில் ஒரு காலும், மெய்நிகர் (விர்ச்சுவல்) உலகத்தில் ஒரு காலுமாக அலைபாய்ந்துக் கொண்டிருப்போம்.

வலைதளங்களில் கணக்கு இருந்தால் மட்டும் போதுமா? எல்லா சமூக நிகழ்வுகளுக்கும் கருத்து சொல்லியாக வேண்டும். சொன்னது ஒன்றும், புரிந்துகொள்ளப்பட்டது வேறொன்றாகவும் இருந்தால், நிகழ்உலகில் அடுப்பை அணைத்துவிட்டு அல்லது வண்டியை ஓரம்கட்டிவிட்டு, மெய்நிகர் உலகுக்கு நீண்ட விளக்கவுரை எழுதியாக வேண்டும். ஒருவேளை நாமே `தேமே' என்றிருந்தாலும், நம் வாயைப் பிடுங்கவென்றே வில்லங்கங்கள் கணக்கு தொடங்கிக் காத்திருக்கும். இவ்வாறு தெரிந்த, தெரியாத, அனானி ஐடிக்களோடு வாளைச் சுழற்றி ஆக்ரோஷமாகச் சண்டையிடுவதாக, போன வாழ்க்கையில் ஒரு நாள் `ட்விட்டர் கணக்கை மூடலாம்’ என ஞானம் பிறந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
21 நாள்கள்பிறந்த ஞானம் முழுமையடையாததால், தோழியிடம் சரணடைந்திருந்தேன்.

``அதென்ன 21 நாள் கணக்கு?’’ என்றேன்.

``அதாவது மூன்று வாரங்கள் அல்லது மூன்று பாகங்கள்’’ என்று விளக்கத் தொடங்கினாள்.

முதல் பாகத்தை `தேன்நிலவு நாள்கள்’ என்கிறார்கள். ஆரம்ப ஜோர் என்போமே, அதுவேதான். ஜிம்மில், வருடம் பிறந்த முதல் வாரத்தில் ஏகப்பட்ட பேர் தேன்நிலவு கொண்டாடிக்கொண்டிருப்பார்கள். அலாரம் அடிக்காமலே அதிகாலை எழுந்திருப்பது, யோகா மேட் இல்லாவிட்டாலும் கிடைத்ததைக்கொண்டு செய்வது என்று ஒவ்வொருவருக்குத் தேன்நிலவு நாள்கள் ஒவ்வொரு மாதிரியானவை. நானும், ட்விட்டர் பக்கம் எட்டியே பார்க்கவில்லை.

இரண்டாவது பாகம் யுத்த காண்டம். மனது மெள்ள பழைய குருடி, கதவைத் திறடி எனக் கட்டளையிடுகிறது. மனதுக்கும் மூளைக்குமான சண்டையில் பலரும் மனதையே வெல்லவிடுகிறோம். யுத்த காண்டத்தில் வியூகம் முக்கியமல்லவா? முதல் வியூகம், மனதோடு சமரசம் பேசிப்பார்ப்பது.  இதற்கு ஒருவேளை மனது மசியாவிட்டால், ஒரு பேப்பர் பேனா எடுத்து, இதைப் பாதியில் விடுவதால் எனக்கு என்ன லாபம் அல்லது கடைசி வரை தொடர்வதால் நான் அடையப்போவது என்ன என்று எழுதலாம். கடைசி அஸ்திரம், ஐந்து வருடங்களுக்குப் பிறகு என் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என கற்பனை செய்வது.

அநேகமாக அந்தக் கற்பனையில், நாம் இப்போது விட நினைக்கும் பழக்கத்துக்கு இடமே இருக்காது அல்லது நாம் புதிதாகச் சேர்ந்துகொள்ள நினைக்கும் பழக்கத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் இருக்கும். ஒவ்வொரு முறை மனது யுத்தத்துக்கு அழைக்கும்போதும், `கொஞ்சம் இருப்பா’ என்று கற்பனைக்குள் புகுந்துவிட்டால், மனது அப்போதைக்கு அடங்கிவிடும்.

மூன்றாவது பாகம், பழக்கம் வழக்கமாக மாறுவது. எதிர்மறைச் சிந்தனைகளுக்கு இடமே தரக் கூடாது. `யோகா பண்றயா, பார்த்தா அப்படி ஒண்ணும் வித்தியாசம் தெரியலையே!’ என்று சொல்வது சொந்த மனதோ, மற்றவரோ, கொஞ்சம் விலக்கியே வைத்திருக்க வேண்டும். சூழ்நிலைகூட சில நேரத்தில் வில்லனாகும். அந்த வில்லனை வீழ்த்த ஒரே வழி, சூழல் சரியானதும் மீண்டும் மீண்டும் தொடர்வதுதான். என் விஷயத்தில் பல சமூக மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருந்தன. கை, கருத்து சொல்லச் சொல்லி பரபரவென்றிருந்த நாளில் வெறும் நோட்பேடில் எழுதி, டிராஃப்டில் போட்டு வைத்திருந்தேன்.

ட்விட்டர் கணக்கு இப்போது இல்லை. வலைதளங்களில் எழுதும் ஆர்வம் வெகுவாகக் குறைந்துவிட்டது. உண்மையில் இதை வெற்றியாகப் பார்க்கிறேனா என்றால் இல்லை. உண்மையான வெற்றி, மனதை வெல்வதுதான். அடம்பிடிக்கும் குழந்தையைக் குணமாகச் சொல்லித் திருத்திவிட்டால், கிடைக்கும் அதே கூடுதல் திருப்தி!

விக்னேஸ்வரி சுரேஷ்