கட்டுரைகள்
Published:Updated:

எ பிலிம் பை கொரோனா

jokes
பிரீமியம் ஸ்டோரி
News
jokes

தியாகராஜன் குமாரராஜா `கொரோனா’ பற்றிப் படம் எடுத்தால் பயங்கரமாக இருக்கும்!

எது தலைப்புச் செய்தியாக வந்தாலும், அதைக் கதையாக்கிப் படம் இயக்கக் கிளம்புவதுதான் கோலிவுட்டின் ஸ்டைல். கோலிவுட்டின் அந்த ஸ்டைலை கொரோனா வைத்து கேலி பண்ணும் நோக்கத்தோடு தனியாக அமர்ந்திருந்த வேலையில் சிந்தித்துப்பார்த்தேன். இங்கு குறிப்பிடப்படும் இயக்குநர்களும் அதை ஜாலியாக எடுத்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையோடு தொடங்குகிறேன்... #கோ_பேக்_கொரோனா

ஏ.ஆர்.முருகதாஸ்

சிக்கன் நூடுல்ஸ் என்பதே சீனாவின் பயோவார் யுத்திதான் என பயம் கிளப்பிய முருகதாஸ்தான் கொரோனா படத்திற்குச் சரியான சாய்ஸ். 500 ஆண்டுகளுக்கு முன்பு நிலக்கோட்டை அருகே நிலவேம்புத் தோட்டம் ஒன்றில் வசித்துவருகிறார் மருத்துவர் வேதிதர்மர். அப்போது ஒரு சீன வியாபாரி, நிலக்கோட்டைக்குச் சீனக் களிமண் பாத்திரங்கள் விற்க வருகிறான். ஆடித் தள்ளுபடி ஆஃபரைப் பார்த்ததும் வேதிக்கு ஆசை வர, மூன்று குண்டா, நான்கு லோட்டா, கொசுறாக ஒரு கிண்ணம், அடித்துப்பேசிக் கட்டைப்பை ஒன்றும் வாங்குகிறார். மறுநாள், புதுப்பாத்திரத்தில் மருந்து அரைத்துக் கொடுக்க, வாங்கிக் குடித்தவர்களெல்லாம் வாந்தி, பேதியெனப் படுக்க, வருகிறது வேதிக்குக் கோபம். இது அந்தப் பயணியின் சதிதான் எனத் தேடி ஓடும் வழியில் வேதியும் மண்டையைப் பிடித்துக்கொண்டு மயங்கி விழ, பிறகுதான் தெரிகிறது, நம் வேதியும் அன்று காலை கண்டங்கத்திரிக் கசாயத்தை டேஸ்ட் பார்க்கிறேன் என நான்கு லோட்டாக்கள் உள்ளே தள்ளியது. கட்!

jokes
jokes

2020-ம் ஆண்டு, சீனாவிலிருந்து பரவிய கொரோனா உலகத்தையே ஆட்டிப்படைக்கிறது. வேதியியல் மாணவனான நம் நாயகன், மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்குகிறான். சீனாவின் ஸ்லீப்பர் செல்கள் சிலர், நம் ஊரில் இருந்துகொண்டு இருபது நிமிடத்துக்கு ஒருமுறை இருமி, வியாதியைப் பரப்புவது அவனுக்குத் தெரிகிறது. அப்படி ஒரு ஸ்லீப்பர் செல் இருமும்போது, அவன் வாயில் தன் கைக்குட்டையை வைத்து அடைத்து வீட்டுக்குத் தூக்கி வருகிறான் ஹீரோ. ஸ்லீப்பர் செல்லின் பாக்கெட்டில் ஒரு வெள்ளை பேப்பர், அதில் சில சிவப்புப் புள்ளிகளும் இருக்கின்றன. அது கொரோனா பற்றிய சீக்ரெட் எனக் கண்டுபிடிக்கும் ஹீரோ, அதை டீகோட் செய்ய அமர்கிறான். அமரும் முன் அவனுக்கு உச்சா வர, பாத்ரூமுக்குள் நுழைகிறான். அந்த கேப்பில் அந்தப் பேப்பரை எடுத்து, புள்ளிகளை இணைத்து எட்டு வரிசை ஊடு புள்ளிக் கோலம் ஒன்றைப் போட்டுவிடுகிறார் அவன் அம்மா. உச்சா போய்விட்டு உற்சாகமாக வந்தவன், அந்தக் கோலத்தைப் பார்த்து உச்சக்கட்டக் கோபமடைகிறான். பிறகுதான், அவனுக்குப் புரிகிறது, அந்தக் கோலம்தான் கொரோனா வைரஸின் அட்டாமிக் மாடல் என்று. லேபில் மூழ்கி, மருந்து கண்டுபிடிக்கிறான். அந்தக் கோலத்தை எப்படிப் போட்டீர்கள் எனக் கேட்க, `அது நம் பரம்பரைக் கோலம். உன் முன்னோர் வேதிதர்மர் சொல்லிக்கொடுத்தது’ என அம்மா சொல்ல, அவனுக்கு எல்லா உண்மையும் புரிகிறது.

கௌதம் வாசுதேவ் மேனன்

ரொமான்டிக் வைரஸ் அவுட் பிரேக் ஜானரில் உருவாகும் கதைக்கு, `காதல் வைரஸ் உன்னைத் தாக்கியதோ’ தான் டைட்டில். “யெஸ் கொரோனா, அவ பேர் கொரோனா. பேருக்கு ஏத்த மாதிரியே என்னைப் போட்டுத்தாக்குனா, தலைகீழா போட்டுத் திருப்புனா. அந்தக் காதல் வைரஸ் தாக்குச்சு என்னையும். இருக்கேன் இப்போ தனியா” எனக் கையில் காப்பை ஏற்றிவிட்டு வாய்ஸ் ஓவரில் ஆரம்பிப்பார். நாயகி கொரோனாவை யாரோ கடத்திவிடுகிறார்கள்.

jokes
jokes

“அவளைத் தூக்கிடேன்டா அன்பு. உனக்கு வலிக்கும்டா, நீ அழுவடா. என் கூடதான்டா இருக்கா கொரோனா. முடிஞ்சா கண்டுபிடிச்சுக்கோடா” என லேண்ட் லைனிலிருந்து போன் செய்கிறான் வில்லன். லேண்ட்லைன் நம்பரை வைத்து அந்த வில்லப் பயபுள்ள மும்பையில்தான் இருக்கிறது எனக் கண்டுபிடிக்கும் நாயகன், காலேஜ் பேக்கில் லேப்டாப்பையும் கிடாரையும் தூக்கிக்கொண்டு ரயில் ஏறுகிறான். வாய்ஸ் ஓவருக்கும், இடையிடையே வரும் மான்டேஜ் பாடல்களுக்கும் ஜன்னலோர சீட்தான் சரியாக வரும் என நினைத்துக்கொண்டு, சென்னை டு மும்பை ஜன்னலோரத்திலேயே பயணிக்கிறான் அன்பு. அப்படியே, வாடைக்காற்று காதில் ஏறி, சளிப் பிடித்துக்கொள்கிறது. மும்பையில் வந்து இறங்கும்போது மருத்துவ ஆய்வாளர்கள் முகத்திலேயே, அன்பு சளியால் இருமித் தொலைக்க, `தும் கொரோனா?’ என இந்தியில் கேட்கிறார்கள். அவர்கள் தன் காதலி கொரோனாவைப் பற்றிக் கேட்கிறார்கள் எனத் தவறாகப் புரிந்துகொள்ளும் அன்புவோ, `யெஸ் கொரோனா’ எனப் புன்னகைக்க, அவனைக் குண்டுக்கட்டாகத் தூக்கிக்கொண்டு அரசு ஆஸ்பத்திரிக்குப் பறக்கிறார்கள். பயத்தில் பதறிக்கொண்டிருக்கும் அன்பு, அதே அரசு ஆஸ்பத்திரியில் தன் காதலி கொரோனாவைப் பார்க்கிறான். ஸ்ட்ரெக்சரில் படுத்திருக்கும் அவளை, சில செவிலியர்கள் மார்ச்சுவரியை நோக்கித் தள்ளிக்கொண்டு போகிறார்கள். துக்கமும் சளியும் தொண்டையை அடைக்க, கதறி அழும் அன்புக்கு, மறுபடியும் வில்லனிடமிருந்து போன் வருகிறது. அபூர்வ ரத்த வகையான பாம்பே பிளட் குரூப்பைக் கொண்ட வில்லனுக்குக் கொரோனா தாக்கி உறுப்புகள் காலியாக, அவனுக்கு வேறு உறுப்புகள் பொருத்தவே, பாம்பே பிளட் குரூப் கொண்ட நாயகியைக் கடத்தியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இந்த பாம்பே பிளட் மேட்டர் தெரியும் சிச்சுவேஷனில், பாம்பே ஜெய்யின் குரலில் ஒரு சோகமான பாடல். பிறகென்ன, ஐசலேஷனில் இருக்கும் நேரத்தில் உடம்பை ரெடியாக்கி, சிக்ஸ் பேக் வைத்துக்கொண்டு, வில்லனைத் தேடிப்பிடித்து உரி உரி என உரிப்பதோடு படம் முடிகிறது. தி எண்ட்.

மிஷ்கின்

மிஷ்கின் படங்களில் வரும் ஊர்கள், நார்மல் நாள்களிலேயே ஊரடங்கு உத்தரவு போட்டதுபோல் வெறுமையாக இருக்கும் என்பதால் பெருமையாகச் சொல்லிக்கொள்ளலாம், கொரோனா படம் எடுக்க மிஷ்கினும் மிகச்சரியானவர். கதைப்படி, ஜப்பானைச் சேர்ந்த சாமுராய் குழு ஒன்று சென்னையில் கூலிப்படையாகச் செயல்பட்டுவருகிறது. அவர்களைப் பிடிக்கமுடியாமல், கண்ணீர் வடிக்கிறது காவல்துறை.

jokes
jokes

`நான் சாமுராய்களின் மென்னியைத் திருகுகிறேன்’ என வீரவசனம் பேசி வீறுகொண்டு கிளம்புகிறார் துப்பறிவாளர் கணியன் தஸ்தாவெய்ஸ்கி. புல்லெட்டில் வேகமாய்க் கிளம்பிய கணியன், அதைவிட வேகமாய் அமரர் ஊர்தியில் ரிட்டர்ன் வர, உறைந்துபோகிறது அவர் குடும்பம். தன் அண்ணனின் இறப்புச் செய்தியை நியூஸ் பேப்பரில் பார்த்துத் தெரிந்துகொள்ளும் அவர் தம்பி கணியன் டார்க்கோவ்ஸ்கி, புத்தகங்கள் சூழ்ந்திருக்கும் தன் அறையிலிருந்து அண்ணன் உடலிருக்கும் ஹாலுக்கு வருகிறார். தன் அண்ணனின் இறப்புக்குப் பழிக்குப்பழி வாங்குவேன் எனப் பல்லைக் கடிக்கும் டார்க்கோ, சாமுராய்களைக் கண்டுபிடிக்க சென்னையின் சப்வேக்களுக்குப் புறப்படுகிறார். அப்படி ஒரு சப்வேயில், மாறுவேடத்தில் வயலின் வாசித்துக்கொண்டிருக்கையில், மொட்டைத்தலையும், முழுக்கை கறுப்பு பனியனும் போட்டுக்கொண்டு சிலர் குனிந்த தலை நிமிராமல் நடக்க, அவர்கள்தான் ஜப்பானிய சாமுராய் குழு எனக் கண்டுபிடித்துவிடுகிறார். அதில் ஒருவனின் போனில், `மூங்கில் காடுகளே...’ என `சாமுராய்’ படத்தின் பாடலும் ஒலிக்க, கன்ஃபார்மே செய்துவிடுகிறான் நாயகன். மாஸாக, தன் வயலினை எடுத்து `மூங்கில் காடுகளே...’ பாடலை இசைத்துக் காட்ட, சாமுராய்கள் உஷாராகி டார்க்கோவின் முகத்துக்கு நேராக இருமிவிட்டு ஓடுகிறார்கள். டார்க்கோவ்ஸ்கிக்கு அப்போதுதான் புரிகிறது, இவர்கள் எப்படி கத்தியின்றி ரத்தமின்றிக் கொலை செய்கிறார்கள் என. இயல்பிலேயே இன்ட்ரோவெர்ட்டான நாயகன், மீண்டும் ஒரு இருபதுநாள் தன் அறைக்குள் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்கிறான். உள்ளே இருக்கும் பல புத்தகங்களை மீண்டும் தூசிதட்டுகிறான். தூசி மூக்கில் ஏறி இருமல் வருகிறது. க்ளூ கிடைக்கிறது. இருமினால் வைரஸ் அண்டாதவாறு, மாஸ்குகளை ஒன்று சேர்த்து ஒரு சூப்பர்ஹீரோ ஆடை ஒன்றைச் செய்கிறான். அப்புறம் என்ன, கத்திதான், ரத்தம்தான், சத்தம்தான்! அன்று சப்வேயில் அந்த சாமுராயின் போனுக்கு கால் செய்து காட்டிக்கொடுத்ததே தன் அண்ணன் தஸ்தாவெய்ஸ்கியின் தூய ஆவி என்பதைத் தெரிந்துகொண்டு அழுகிறான். இறுதியில், அந்த வைரஸைக் கண்டுபிடித்த மெயின் வில்லனை, `அவன் ஒரு குழந்தை’ என டார்க்கோ மன்னித்துவிட, கதறியழும் சைன்டிஸ்ட் தனக்குப் பால் பாட்டில் வாங்கப் புறப்படுகிறார். சுபம்!

தியாகராஜன் குமாரராஜா

தியாகராஜன் குமாரராஜா `கொரோனா’ பற்றிப் படம் எடுத்தால் பயங்கரமாக இருக்கும்! கதையில் மொத்தம் ஐந்து கதாபாத்திரங்கள். ஒரு சிறுவன், ஒரு பாட்டி, ஒரு சீனாக்கார இளைஞர், ஒரு தமிழ் இளைஞர் மற்றும் ஒரு இந்திப் பெண். அந்தச் சிறுவனின் பெயர் ஸ்மால் பாக்ஸ், பாட்டியின் பெயர் எபோலா, சீனாக்கார இளைஞரின் பெயர் ஹன்டா, தமிழ் இளைஞனின் பெயர் சார்ஸ் மற்றும் இந்திப் பெண்ணின் பெயர் இன்ஃப்ளூயன்ஸா எனக் கதாபாத்திரங்களின் பெயர்களில் குறியீடுகளைச் செருகுவார். இந்த ஐவருக்கும் எப்படிக் கொரோனா தொற்றுகிறது. யாரிடமிருந்து யாருக்குத் தொற்றுகிறது, எங்கிருந்து பரவுகிறது என்பதுதான் இந்த ஹைப்பர் லின்க் கதை. தியாகராஜா குமாரராஜாவின் படைப்புலகமான பின்னி மில்ஸ் மற்றும் பர்மா மார்க்கெட் ஏரியாவில்தான் மொத்தக் கதையும் நகர்கிறது.

jokes
jokes

`சூப்பர் டீலக்ஸ்’ படத்தில், தலையில் டி.வி விழுந்து இறந்த பெர்லின் கதாபாத்திரத்தின் முதலாம் ஆண்டு கண்ணீர் அஞ்சலி போஸ்டரையும் பின்னணியில் குறியீடாக வைப்பார். கூடவே, `தொட்டால் பூ மலரும், தொடாமல் நான் மலர்ந்தேன்’ என்பதில் தொடங்கி, `தொட்டுத்தொட்டுப் பேசும் சுல்தானா’ வரை பல பாடல்களைப் பின்னணியில் ஓடவி டுவார். இன்டர் வெல்லில், ஒரு ஏலியன்தான் இந்தக் கொரோனாவைப் பரப்பிவருகிறது என்பதைக் கண்டுபிடிக்கிறான் சார்ஸ். அவனுடன் பாட்டியும், சிறுவனும் மற்றும் இந்திப் பெண்ணும் கொரோனா எனும் அந்த ஏலியனைப் பிடிக்க ஜீப்பில் கிளம்புகிறார்கள். கடைசியாக, ஏலியன் இருக்கும் வீட்டைக் கண்டறிந்து, கதவைத் திறந்தால்... கட்டிலில் மட்ட மல்லாக்க மர்கயாவாகிக் கிடக்கிறது ஏலியன். அது ஏன்னு கேட்குறீங்களா? அதான் வாழ்வின் ரகசியம்..!