Published:Updated:

இந்த டீலிங் எங்களுக்குப் பிடிச்சிருக்கு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இந்த டீலிங் எங்களுக்குப் பிடிச்சிருக்கு!
இந்த டீலிங் எங்களுக்குப் பிடிச்சிருக்கு!

ஓவியங்கள்: ராஜா

பிரீமியம் ஸ்டோரி
‘வருது வருது’ எனச் சொன்ன தேர்தலும் வந்தேவிட்டது. ‘காக்கிநாடா உன்னுது, விஜயவாடா என்னுது’ எனச் சிறிய கட்சிகள் டீல் பேச, ‘காரமா சாத்தூர் சேவு வேணா தர்றோம். வந்ததுக்கு சாப்பிட்டுட்டுப் போங்க’ என்கிற ரீதியிலேயே டீல் செய்கின்றன பெரிய கட்சிகள். ‘என்னய்யா, எதிர் டீம்கூட சண்ட செய்வாங்கன்னு பாத்தா அவங்களுக்குள்ளேயே அடிச்சுக்குறாங்களே’ என முழிபிதுங்கி நிற்கிறார் வாக்காளர் பெருமான். இந்தக் கட்சிகளெல்லாம் எப்படி டீல் பேசி சீட் வாங்கியிருப்பார்கள் என யோசித்தாலே கால் புத்தகத்துக்கு கன்டென்ட் கிடைக்கிறது.
இந்த டீலிங் எங்களுக்குப் பிடிச்சிருக்கு!

பா.ஜ.க

‘தேசியக் கட்சி’ என்கிற பரபரப்போடு காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு ஆபீஸ் ரூமுக்குள் நுழைந்திருப்பார்கள் பா.ஜ.க பெருந்தலைவர்கள். ‘வாங்க, வாங்க, இப்பத்தான் பேசிக்கிட்டிருந்தோம். உங்களுக்கு ரெண்டு சீட்டு முடிவாகியிருக்கு. மோடி ஒண்ணு, அமித் ஷா ஒண்ணுன்னு போட்டி போடச் சொல்லிடுங்க. எப்படியும் மாசத்துல 15 நாளு இங்கதானே இருக்காங்க. அப்படியே நாமினேஷன் ஃபைல் பண்ணச் சொல்லுங்க. அவங்க ரெண்டு பேருன்னா டெபாசிட்டாவது கிடைக்கும்’ என பதில் சொல்லியிருக்கும் அ.தி.மு.க இணை. ‘இருங்க, ஏதோ ஐ.டி ரெய்டு எங்க போலாம்னு டெல்லில கேட்டாங்க’ என போனைத் தூக்கியிருப்பார் முருகன். ‘அட இருங்க, கூட ரெண்டு சேர்த்துத் தர்றோம். எப்படியும் மிச்ச ஆளுங்க எல்லாம் கவர்னர் ஆயிடுவாங்கல்ல’ என அ.தி.மு.க தரப்பு சொல்ல, ‘இருங்க, அமலாக்கத்துறைகிட்ட பேசிட்டு...’ எனத் திரும்பவும் போனைத் தூக்கியிருப்பார் முருகன். ‘அட என்னாங்க, சின்னப்பசங்க சொப்பு சாமானைத் தூக்குற மாதிரி அடிக்கடி தூக்கிக்கிட்டு’ என டென்ஷனாகி, ‘சரி ஃபைனலா ஒரு இருபது தர்றோம். அத்தன சீட்டுக்கு ஆள் இருக்கா’ எனக் கேட்டிருக்கும் இந்த இணை. ‘ஓ... காயத்ரி ரகுராம், கங்கை அமரன்னு நிறையபேர் இருக்காங்களே’ என முருகன் பெருமையாகச் சொல்ல, ‘234-ல இவங்களுக்குக் கொடுக்குற கணக்கை இப்பவே கழிச்சுக்கோங்க பங்காளி’ என ஓ.பி.எஸ்ஸைப் பார்த்துச் சொல்லியிருப்பார் ஈ.பி.எஸ்.

இந்த டீலிங் எங்களுக்குப் பிடிச்சிருக்கு!

சமத்துவ மக்கள் கட்சி

‘நாங்க அ.தி.மு.க கூட்டணிலதான் இருக்கோம். ஆனா இது அ.தி.மு.க-வுக்கே தெரியாது’ என குபீர் கணக்கு பேசிவந்த சுப்ரீம் ஸ்டார், சட்டென ஜாகை மாற்றி கமல் பக்கம் சாய்ந்தார். கமலும் கட்டிப்பிடி வைத்தியம் பார்த்து ஆறுதல் சொல்ல, இப்போது கூட்டணியில் உட்கார்ந்திருக்கிறார். சீட் பேரம் பேசப்போவதற்கு முன்பே, ‘அது 2002. கமல் ஆளவந்தான், பம்மல் கே சம்பந்தம்னு தொடர் தோல்விகளால துவண்டுபோயிருந்த நேரம். என்னோட தென்காசிப்பட்டணமும் அவரோட பஞ்சதந்திரமும் ஒரே நேரத்துல ரிலீஸாகவிருந்த சமயம். கமலுக்கு இந்த வெற்றி ரொம்ப முக்கியம்னு தோணினதால என் படத்தை ஒருவாரம் முன்னாடியே ரிலீஸ் பண்ணி நானே ஓடவிடாமப் பண்ணினேன். எங்க நட்பு அப்பேர்ப்பட்டது’ என வெளியே சொல்லிவிட்டு உள்ளே நுழைந்திருப்பார். ‘இல்லன்னா மட்டும் அந்தப்படம் ஓடியிருக்குமா தலைவரே’ என அப்பாவியாய்க் கேட்டுக்கொண்டே கூட நுழைந்திருப்பார் கடைநிலைத் தொண்டன். ‘வாங்க வாங்க. இப்போத்தான் எஞ்சின கட்சியை எல்லாம் கணக்கெடுத்துக் கூட்டணி சேர்க்கச் சொல்லியிருந்தேன். நீங்களே வந்துட்டீங்க. வந்ததுக்கு சொற்ப சீட்டும் கூடவே ‘வெண்முரசு’ தொகுப்பும் தர்றேன். பத்தலன்னா சொல்லுங்க. உங்க ரெண்டு பேருக்கும் ம.நீ.மவோட துணைப் பொதுச்செயலாளர் பதவி தர்றேன். ‘இணைந்தது இணை. மய்யமானது சமத்துவம்’னு அறிக்கை விட்டுடலாம்’ என ஹாஸ்யமாய்ச் சிரித்திருப்பார் ஆண்டவர். தெறித்திருப்பார் புரட்சித்திலகம்.

இந்த டீலிங் எங்களுக்குப் பிடிச்சிருக்கு!

பா.ம.க

‘பிக்பாஸ்ல எல்லாம் ஓட்டு விழுகுது. எனக்குப் போடச் சொன்னா மட்டும் பிம்பிலிக்கா பிலாப்பின்னு சொல்லிடுறாங்க’ என மருகி வந்த சின்ன மருத்துவரய்யா, அந்தத் தாக்கத்தில் இப்போது வீட்டிலேயே கேமரா ஃபிக்ஸ் செய்து ஸ்கோர் செய்யத் தொடங்கிவிட்டார். ‘கேட்டதைப் பண்ணிட்டோம். இனி கொடுக்குறதை வாங்கிக்கோங்க’ என அ.தி.மு.க தரப்பில் சொல்ல, ‘அதான் பிரச்னையே, இப்போ அடுத்த தேர்தலுக்கு எதைவச்சு சிக்ஸ் அடிக்கிறதுன்னு தெரியல’ எனக் கையைப் பிசைந்திருப்பார்கள் அப்பாவும் மகனும். ‘அது உங்க பிரச்னை. ஆனா ஒண்ணு. இங்கே ஓகே சொல்லிட்டு, அப்புறம் அந்தப்பக்கமா போய் கலைஞர் கொள்ளுப்பேரன் காதுகுத்து விழாவுல வேற டீல் பேசி ஓடிறக்கூடாது. கையைக் கிள்ளி சத்தியம் பண்ணுங்க’ எனப் பாவமாய்க் கேட்டிருப்பார்கள் எடப்பாடியும் பன்னீரும். ‘சேச்சே, இது ரொம்ப லாஸ்ட் மினிட்டு. இதுக்குமேல அந்த வித்தையெல்லாம் வைகோதான் காட்டுவாரு. ஒரு உறைல ஒரு கத்திதானே இருக்கமுடியும்’ என சமாதானம் சொல்லியிருப்பார்கள் பெரிய ஐயாவும் சின்னய்யாவும். ‘சரி அப்போ வாங்க’ என கையில் துண்டைப் போட்டு ஃபைனல் டீலை முடித்து, ‘இலை துளிர்க்கத் துளிர்க்க மாம்பழம் செழிக்கும்’ என தம்ஸ் அப்பும் காட்டிவிட்டார்கள்.

இந்த டீலிங் எங்களுக்குப் பிடிச்சிருக்கு!

தே.மு.தி.க

‘கேப்டன் ஆக்டிவ்வா இருந்த காலத்துலயே எங்களுக்குக் கொள்கைன்னு ஒண்ணு இருந்ததில்ல. இப்ப மட்டும் என்னவாம்?’ என பயங்கர ஃப்ரீயாக ஒவ்வொரு தேர்தலையும் அணுகுவது தே.மு.தி.கதான். இந்தத் தடவையும், ‘கட்சிப் பொதுக்குழு, செயற்குழு எல்லாம் கூட்டி ஒரு நம்பர் சொல்றோம்’ என அண்ணியார் கெத்தாக அறிவிக்க, ‘எப்படியும் சீட்டு வாங்கி, நீங்க, உங்க பையன், தம்பின்னு மூணு பேரும்தான் நிக்கப்போறீங்க. இதுக்கு எதுக்குக் கூட்டம் எல்லாம் கூட்டி செலவு பண்ணிக்கிட்டு’ என லெஃப்ட்டில் டீல் செய்தது அ.தி.மு.க. ‘ஐயய்யோ அக்கா கோவப்பட்டாங்க, அக்கா தமிழ்நாட்டையே உடைக்கப்போறாங்க’ ரேஞ்சுக்கு சுதீஷ் பில்டப் செய்ய, ‘இது ‘பசங்க’ படத்துல பொடுசுக பண்ற காமெடிதானே’ எனக் கேட்டுக் கேட்டுச் சிரித்தது அ.தி.மு.க தரப்பு. ஆடி அமாவாசைக்குக் கூட்டமாக இருக்கும் பஸ்ஸில் கிடைத்த சீட்டிலெல்லாம் துண்டு போட்டுவிட்டு முண்டியேறுவது போல எல்லாப் பக்கமும் அலைபாய்ந்துகொண்டிருக்கிறார்கள். இதைப் பேசிக்கொண்டிருக்கும் இந்த நொடி வரையிலும், ‘நாங்க களமிறங்குனா களேபரம் ஆயிடும்’ என வீம்பாகக் கம்பு சுற்றிக்கொண்டே இருக்கிறார்கள் முரசுத் தரப்பினர். மொழி படத்தில் ‘கபில்தேவுக்கு அப்புறம் அஞ்சு கேப்டன் மாறியாச்சு’ என எம்.எஸ்.பாஸ்கரை எழுப்பும் பிருத்விராஜ்போல அ.தி.மு.க இவர்களை உசுப்பிவிட்டால்தான் உண்டு.

இந்த டீலிங் எங்களுக்குப் பிடிச்சிருக்கு!

காங்கிரஸ்

‘மத்தியில 2014-ல 44 சீட் ஜெயிச்சப்போ நமக்கு இங்க 40 சீட்டு கொடுத்தாங்க. 2019 தேர்தல்ல அதைவிட எட்டு சீட்டு அதிகமா ஜெயிச்சிருக்கோம். கண்டிப்பா 50க்குக் குறையாம கொடுப்பாங்க’ எனக் குதூகலமாக வந்த கதர் சட்டைக்காரர்களுக்கு, ‘50 சீட்டு உள்ளாட்சித் தேர்தல்ல வேணா தர்றோம்’ என குண்டு வைத்தது தி.மு.க. ‘நாங்க இல்லாம நீங்க எப்படி ஜெயிப்பீங்க?’ என இவர்கள் முறுக்க, ‘நீங்க இருந்ததாலதானே ஜெயிக்காமயே போனோம்’ என அவர்களுக்கு பழசெல்லாம் உறுத்த, முட்டிக்கொண்டது இருவருக்கும். ‘ராகுல் இங்கதான் ஒரு மாசமா இருக்காரு தெரியும்ல’ என இவர்கள் கொதிக்க, ‘வேணும்னா அவர் சமையல் பண்ணுன வீடியோவுக்கு எங்க சார்பா லட்சக்கணக்குல லைக்ஸ் தர்றோம். சீட்டெல்லாம் முடியாது’ என அவர்கள் எகிற, நீண்டுகொண்டே போனது பேச்சுவார்த்தை. ‘ஏற்கெனவே புதுச்சேரி போச்சு, தனியாப் போனா தமிழ்நாடும் மொத்தமாப் போயிடுமே’ என சீனியர்கள் வயிற்றில் புளியைக் கரைக்க, சந்தையில் அப்பா சட்டையில் பிடித்துத் தொங்கும் வாண்டு போலத் தொங்கிக்கொண்டிருக்கிறார்கள். ‘கோஷ்டிக்கு ஒண்ணுன்னு பிரிச்சுக் கொடுத்தாக்கூட இருபத்தி சொச்சம் போக மிச்சமா நிறைய கோஷ்டி இருக்கும். பார்த்து செய்ங்க’ ரேஞ்சுக்குத்தான் இருக்கிறது இந்தத் தேசியக் கட்சி.

இந்த டீலிங் எங்களுக்குப் பிடிச்சிருக்கு!

நாம் தமிழர்

அண்ணன் வழி எப்பவும் தனிவழி. ‘‘எனக்குப் பத்து பதினொரு வயசா இருக்கும்போது ஒருநாள் எம்.ஜி.ஆரை சந்திச்சேன். ‘வாடா என் இனமானச் சிங்கமே’ன்னு கூப்பிட்டு மடியில உட்கார வச்சுக்கிட்டார். இந்தத் தேர்தல்ல நாம கூட்டணி வச்சுக்கலாமாடா’ன்னு என்கிட்ட ரகசியமா கேட்டார். உங்களுக்கு அப்புறமா தி.மு.கவை எதிர்க்க ஆள் வேணும்ல. அப்போ வர்றேன் நான் அரசியலுக்குன்னு அவர்கிட்ட சொல்லிட்டேன். எல்லாரும் அவரு 77-ல தான் முதல்வர் ஆனார்னு நம்பிக்கிட்டு இருக்கீங்க. ஏன் எம்.ஜி.ஆரே அப்படித்தான் நம்பிக்கிட்டு இருந்தார். ஆனா அவர் அதுக்கு ஒரு வருஷம் முன்னாடியே சி.எம் ஆயிட்டார். எனக்கு மட்டும்தான் தெரியும் இது’’ என அண்ணன் அவிழ்த்துவிடும் கதையிலேயே கூட்டணிக்கு வரும் கொஞ்சநஞ்ச குட்டிக் கட்சிகளும் சிதறி ஓடிவிடும். அப்புறமென்ன, வழக்கம்போல ‘நமக்கு நாமேதான்’. ‘ஏண்ணே? எப்படியும் நீங்க ஒருத்தருதானே எல்லா முடிவையும் எடுக்குறீங்க? 234-லயும் நீங்க ஒருத்தரே போட்டியிடுறமாதிரி சட்டம் அனுமதிச்சாலும் நல்லாதானே இருக்கும். அடுத்த தடவை முயற்சி பண்ணிட லாம்ண்ணே’ என அப்பாவியாய்க் கேட்பார்கள் தம்பிமார்கள். ‘உலகத்துலயே எதிர்க்கட்சித் தலைவரைத் தோற்கடிக்கக் கிளம்புற இன்னொரு எதிர்க்கட்சி நாங்கதான்’ என சரித்திரம் கண்டிராத லாஜிக்கோடு களமிறங்கி காமெடிகள் செய்யவேண்டியது மட்டும்தான் பாக்கி. தம்பிகளிருக்க பயமேன்!

(பி.கு) இதெல்லாமே போனவாரத்தின் கணக்கு. நீங்கள் இதைப் படித்துக்கொண்டிருக்கும் இந்த நொடியில் ‘ராதிகாவுக்குத் துணை முதல்வர் பதவி தரல’, ‘அமித் ஷாவுக்கு ஜரிகை வச்ச சால்வை தரல’ என அக்கு அக்காய் கூட்டணிகள் சிதறவும் வாய்ப்பிருக்கிறது. இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு