Published:Updated:

“டுப்பாக்கி... ரோல் கேப்பு... பிஜிலி வெடி!”

தீபாவளி கொண்டாட்டம்
பிரீமியம் ஸ்டோரி
தீபாவளி கொண்டாட்டம்

நகைச்சுவை

“டுப்பாக்கி... ரோல் கேப்பு... பிஜிலி வெடி!”

நகைச்சுவை

Published:Updated:
தீபாவளி கொண்டாட்டம்
பிரீமியம் ஸ்டோரி
தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளின்னாலே கொண்டாட்டம்தானே மக்கா! அந்தக் காலத்துலருந்து தீபாவளிக் கொண்டாட்டம் எப்படியெல்லாம் பரிணாம வளர்ச்சியடைஞ்சு வந்திருக்குன்னு, நான் கொஞ்சம் ஜாலியா ரீவைண்ட் பண்ணிப் பார்க்கப்போறேன். நீங்களும் வந்து ஜாய்ன் பண்ணிக்கோங்க!

புருஷன்மாரை `பிராணநாதா' என்றழைத்த பிளாக் அண்டு ஒயிட் காலகட்டத்துல, தீபாவளின்னாலே கார்த்திகை தீப ஒளித் திருநாளின் எக்ஸ்டென்ஷனாத்தான் கொண்டாடியிருக்கான் என் முப்பாட்டன். ரசனையாக ஒளி விளக்கேத்தி, சாமி கும்பிட்டு, பலகாரம் பட்சணங்களை பக்கத்து வீட்டுக்குப் பரிமாறி... ஆஹகா `ஷேரிங் நல்லது'னு என்ன ஓர் ஆனந்தம் கிளாஸிக் தமிழனுக்கு!

ஒரு பலகாரத்துக்கும் `அதி'ரசமாய் பேர் வைத்தவனல்லவா தமிழன்? அப்பல்லாம் `பாண்டுரங்கா பண்டரிநாதா'னு பக்தி மணம் கமழக் கமழ நரகாசுர வதத்தைக் கொண்டாடியிருக்கான். கொஞ்சம் டீடெய்லா தெரிஞ்சுக்கலாமேனு `தீபாவளியை எப்படிக் கொண்டாடுனீங்க?'னு என் அப்பத்தாகிட்ட கேட்டேன். பதில் சொன்னுச்சு பாருங்க... கந்தர்வக்கோட்டை சமஸ்தானமே கிடுகிடுனுச்சு.

``ஆக்குவெத்தல பாக்கு வெத்தலையாம், கொல்லைக்குப் போக தண்ணி பத்தலையாம்...

வண்டல் மண்ணைக் களியா தின்னு செமிச்ச வம்சம். தட்டிப்போட்ட ரொட்டி... பெரட்டிப் போட நாதியில்லே. இதுல எங்கிட்டு கொண்டாட்டம்லாம்?

“டுப்பாக்கி... ரோல் கேப்பு... பிஜிலி வெடி!”

அன்னிக்குத்தான் கூழு, களி கம்பலய விட்டுட்டு, இட்டிலி சுட்டு திம்போம்ப்பு! அப்புறம் கொஞ்சம் வசதி வாய்ப்பு பெருகுனவுடனே அதிரசம், சுவியம் சுடுவோம்! பட்டாசு மத்தாப்புல்லாம் உங்க காலம்தேன். வேறென்ன தீவாளியக் கண்டோமா... கீவாளியக் கண்டோமா?'' என்று ஏகத்துக்கும் நொடித்துக்கொண்டது அப்பத்தா. அவ்வளவுதான், வாயடைச்சுப் போய் தாத்தாகிட்ட கேட்டதுக்கு விலாவாரியாகச் சொன்னார். ``வாண வேடிக்கை ஊர் மொளக்கொட்டு திண்ணையில போடுவோம். அது சடங்கு... வீட்டுல விளக்கேத்தி சாமி கும்பிடுவோம். அன்னிக்கு சாமிக்கு நேர்ந்துக்கிட்ட கோழி அடிப்போம். வசதி படைச்சவக கிடா வெட்டி சோறாக்குவாக. குளிச்சு, சுத்தபத்தமா குறுக்காருடையாரு நம்ம குலசாமியக் கும்பிட்டு படையல் வெச்சுட்டு, பிறகு கூடி சாப்பிட்டு வயலுக்குப் போவோம். ஆக்குறதும் சேர்ந்து திங்கறதும்தான்... அம்புட்டுத்தேன் எங்க காலத்து தீவாளிடா பேராண்டி!''ன்னாரு.

``சூப்பர் தாத்தா''னு சொல்லிட்டு வந்தேன்.

என்னோட சின்ன வயசுல, டவுசர் போட்டு ஓணான் அடிச்சு விளையாண்ட காலத்துல, எஞ்சோட்டு பசங்களோட கொண்டாடுன தீபாவளில்லாம் வேற லெவல். நரகாசுரனை கடவுள் வதம் செஞ்ச நாள்னு என்னமோ புராணங்களைக் கரைச்சுக் குடிச்ச மாதிரியும், நரகாசுரனுக்கும் எங்களுக்கும் ஜென்மப் பகையாட்டமும் சீன்போட்டு பட்டாசு வெடிச்சுத் திரிவோம். நாலு மாசத்துக்கு முன்னாடியே ரஃப் நோட்டுல தீபாவளிக்கு என்னென்ன பட்டாசுங்க வாங்கணும்னு லிஸ்ட் போட்டு வெச்சு, அடிக்கடி வாசிச்சுப் பார்த்து சிலிர்த்துக்குவோம். கொஞ்சம் விவரமான பசங்க பட்டாசு சீட்டு போடுவாங்க. பெரும்பாலும் அந்த நாள்கள்ல 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ் கோவா டூர் பிளான் போட்ட மாதிரிதான் இந்த பட்டாசுப் பட்டியலும்! `டுப்பாக்கி... ரோல் கேப்பு... பிஜிலி வெடி... வெங்காய வெடி... தவுசண்ட் வாலா...'னு கல் உப்பு, வெங்காயம், தயிர்னு ராகுல் காந்தி சொன்ன மாடுலேஷன்ல ஆயிரம் ரூபாய்க்கு பட்டியலை மட்டுமே வாசிச்சு சந்தோஷப்பட்டுக்குவோம்.

`இன்னிக்கி ஒரு புடி' ரேஞ்சுக்கு லிஸ்ட்டோட பட்டாசுக் கடைல போயி அப்பாவோட நிப்போம். ஆனா, அப்பா 100 ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்து, அழவெப்பாரு. ``எலேய்... காசைக் கரியாக்க வேணாம். அடுத்த வருஷம் நிறைய வாங்கித் தர்றேன். அழாம வீட்டுக்கு வா''னு அடிச்சு கூட்டிட்டு வருவாரு. வருஷம் தவறாம அதே டயலாக்தான் ஒவ்வொருவாட்டியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“டுப்பாக்கி... ரோல் கேப்பு... பிஜிலி வெடி!”

``அழாதடா... அம்மா பொட்டு வெடி வாங்கித் தர்றேன்''னு வெந்த புண்ணுல கம்பியவெச்சு குத்தும். நல்லவேளை... மாமா, சித்தப்பானு வெடி வாங்கிட்டு வந்து ஏரியால நம்ம மானத்தைக் காப்பாத்துவாங்க.

இப்படி பிளான் போட்ட பட்டாசை எல்லாம் வாங்குனதா சரித்திரமோ, பூகோளமோ இல்லை. ஆனா, கிஃப்ட் பாக்ஸ் ப்ளஸ் அப்பா வாங்கிட்டு வர்ற வெடினு சீனிவெடி, லெட்சுமி வெடி, குயில் வெடி, சரவெடி, ஆட்டம் பாமுனு காசைக் கரியாக்குவோம். நண்பர்கள் குழுவா சேர்ந்து முதல்நாளே பட்டாசு பண்டலைப் பிரிச்சு, திரியக் கிள்ளிவெச்சு, விடியக்காலைல கோழி கூப்பிடுற நேரத்துல எந்திரிச்சு அப்படியே தெருத்தெருவா சந்துபொந்து, இண்டு இடுக்கெல்லாம் வெடியக் கொளுத்தி, சவுண்டைக் கிளப்பி ஊரைக் கண்ணு முழிக்கைவெப்போம். வயசானவங்க `கூரை இடிஞ்சிருச்சோ'னு பயந்து ஓடிவந்து பார்த்து சாபம் விடுவாங்க. சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலைல வேலைபார்க்குற ஆளுக கணக்கா அன்னிக்கு மட்டும் சில்வர் கலர்ல சிலையாட்டம் மருந்தை மூஞ்சு முகரைல அப்பிக்கிட்டுத் திரிவோம். விடிஞ்சு பார்த்தா நம்ம வீட்டு வாசல்ல பட்டாசு வெடிச்ச பேப்பரு கம்மியா கெடக்கும். நல்லவேளை யாரும் கவனிக்கிறதுக்குள்ள, ஏரியா முழுக்கக் கிடக்குற பட்டாசு வெடிச்ச பேப்பர் குவியல்களை பொறுக்கிட்டு வந்து, நம்ம வீட்டு வாசல்ல கொட்டி படம் காட்டுனதையெல்லாம் மறக்க முடியுமா?

“டுப்பாக்கி... ரோல் கேப்பு... பிஜிலி வெடி!”

வாழ்த்து அட்டை இல்லாத தீபாவளியா? பக்கத்து வீட்டு நண்பனுக்கு ரஜினி, கமல் மத்தாப்பு அட்டை போட்ட வாழ்த்து அட்டை நீட்டி சர்ப்ரைஸ் கொடுப்போம்.

தீபாவளின்னதும் அப்பல்லாம் சொல்லிவெச்ச மாதிரி மழை பெய்யும். பல வருஷ தீபாவளியை மழையை சபிச்சிக்கிட்டேதான் வீட்டுக்குள்ள பலகாரத்தை அதக்கிக்கிட்டே கொண்டாடுவோம். ஊரே வெள்ளக்காடாக் கெடக்கும். எங்கிட்டுப்போயி பட்டாசு வெடிக்க..? டி.வி-யிலே சாலமன் பாப்பையா பட்டிமன்றம் பார்த்துக்கிட்டு, கேபிள் டி.வி-ல போடுற புதுப்படம் பார்த்துட்டு, கறிக்கொழம்பை தின்னுட்டு தூங்கி எந்திரிச்சா... பண்டிகை முடிஞ்சுடும். அம்புட்டுதேன். தீபாவளி இஸ் கான். போயே போயிந்தே..!

“டுப்பாக்கி... ரோல் கேப்பு... பிஜிலி வெடி!”

ஆசைப்பட்ட டிரெஸ் பெரும்பாலும் கிடைக்காது. ஏன்னா ரெடிமேடைவிட பெரும்பாலும் டெய்லர் கடைதான் அப்பாக்களின் சாய்ஸா இருக்கும். காடாத்துணியாட்டம் பேன்ட் துணி, நீளமா கோடு போட்ட சட்டைத் துணினு அப்பா பேக் டு தி ஓல்டு டேய்ஸ்க்கு கூட்டிட்டுப் போவார். `அண்ணாச்சி நல்லா எறக்கம்வெச்சு தெச்சுவிடுங்க. வளர்ற புள்ளயா... பத்தாம போயிடுது!'னு அப்பா கொடுத்த டிப்ஸ்ல மாவு மெஷின்ல தொங்குமே துணி... அது மாதிரி லாலி லோலினு சுருட்டிவிட்டுக்கிட்டு `ஒரே அசிங்கமாப் போச்சு குமாரு' மொமன்ட்ல திரிவோம்.

இப்படித்தான் ஒரு வருஷ தீபாவளிக்கு, `போலீஸ் டிரெஸ் வேணும்'னு அடம்பிடிச்சு காக்கி கலர்ல டெய்லர் அண்ணாச்சிகிட்ட கொடுத்து தீபாவளி முதல்நாள் அட்டையைக் கொண்டு போய் காட்டுனா, அவர் அப்போதான் ஓவர் டைமுக்கு ஆள் போட்டு தைக்கவே ஆரம்பிச்சிருப்பார். பென்சிலுக்கு பதிலா சோப்புத்துண்டைவெச்சு கோடு கிழிச்சுக்கிட்டே, `மொதநாள் ராத்திரி வா தம்பி... ரெடி ஆகிடும்'னு வாய் கூசாம சொல்வார். ஒருவழியா தீபாவளி அன்னிக்கு காலையில தெச்ச டிரெஸ்ஸை வீட்டுக்கு வாங்கிட்டு வந்து அதை போட்டுப் பார்த்தா... போலீஸ் மாதிரிலாம் இருக்காது. எங்க தெருவுக்கு வரும் கூர்க்கா மாதிரியே இருக்கும். பாக்கெட்வெக்காம, பட்டன் ஒழுங்கா தைக்காம அவசர அடி அலங்கோலப்பனா இருக்கும் அந்த டிரெஸ். எல்லாம் நேரம்னு நினைச்சுக்கிட்டு அதையும் வெட்கமில்லாம போட்டுக்கிட்டு வெடி வெடிப்போம் பாருங்க... ஒரே சிரிப்பாணிதான் போங்க!

“டுப்பாக்கி... ரோல் கேப்பு... பிஜிலி வெடி!”

ஒரு வருஷம்லாம் பிங்க் கலர் லேடி சுடிதாரை பைஜாமான்னு தப்பா வாங்கிட்டு வந்து அதையும் மாட்டிவிட்டு, ஒரு தீபாவளியவே `ஷேம் ஷேம் பப்பி ஷேம்' ஆக்கிட்டாங்க மை பேரன்ட்ஸ். ஸோ ஸேடு மொமன்ட்டுகள்!

தீபாவளின்னதும் அப்பத்தாக்களின் அன்பையும், தீபாவளிக்கு முதல்நாள் கண்ணுமுழிச்சு முறுக்கு சுடும் அக்காக்களின் பேரன்பையும் மறக்க முடியுமா?

இட்லி, வடை, அதிரசம், முறுக்குனு நல்லாப் போய்க்கிட்டிருந்த கொண்டாட்ட தின்பண்டங்கள்ல, திடீர்னு ஒரு வருஷம், ரவா லட்டு, ஜிலேபி, மைசூர் பாக்குல்லாம் எப்படி வந்துச்சுன்னே தெரியலை. வந்தேறிப் பலகாரங்களோட என்ட்ரியால அதிகம் பாதிக்கப்பட்டது பல்லுபோன வயசானவங்கதான். சில வீடுகள்ல செய்ற மைசூர் பாகுலாம் கட்டுமானத்துக்கு செங்கலுக்கு மாற்றா பயன்படுத்துற அளவுக்கு டபுள் ஸ்ட்ராங்கா இருக்கும். `கலகலா’னு ஒரு ஸ்வீட் செய்வாங்க. கடக்முடக்னு சாப்பிடுறதுக்கள்ள பல்வரிசை கலகலத்துப் போயிரும். இதுல நல்லெண்ண அடிப்படையில பக்கத்து வீடுகளுக்கு பலகார எக்ஸ்சேஞ்ச் வேற பண்ணிக்குவாங்க. நாம சண்டை போட்ட பசங்க வீட்டுல இருந்துகூட பலகாரம் வரும். அந்த டேஸ்ட்டுக்காகவே சமாதானமான வரலாறுல்லாம் உண்டு. `இதுவும் ஒரு பலகாரம்னு கொடுத்து விட்ருக்காய்ங்களே'னு முறைச்சுக்கிட்டதும் உண்டு பார்த்துக்கங்க! இஷ்டத்துக்கு நாலு வீட்டு பலகாரத்தை தின்னுட்டு, கடமுடானு வயித்து வலியோட கஷாயம் குடிக்கிற சுகம் இருக்கே... அடடடடா!

திங்குறதுக்கு அப்புறம் படம் பார்க்குறது. ரஜினி, கமல் ரிலீஸ் படங்களுக்கு அப்புறம் விஜய், அஜித் காலம் வந்துச்சு. புடிச்ச ஹீரோக்களோட பட ரிலீஸுக்கு தீபாவளி அன்னிக்கே தியேட்டர்ல போயி படம் பார்க்குறது... புடிச்ச பொண்ணு இருக்குற ஏரியாக்குப் போயி அணுகுண்டு, சரவெடி, டபுள் ஷாட் வெடினு வெடிச்சு கெத்துகாட்டுறது... இது ரெண்டும் செய்யாட்டி எப்படி? போதாதற்கு ராத்திரியானா வாண வேடிக்கை வெடி போட்டு குதூகலிக்கிறதுனு செமையாப் போகும் அந்த நாள்கள்.

எவ்வளவு கஷ்டத்திலும் டிரெஸ் எடுக்காம விட்டதில்லை. பலகாரம் சுடாமல் இருந்ததில்லை. பட்டாசு வெடிக்காமல் இருந்ததில்லை. கேப்பே விடாம பெத்தவங்களை அனத்தி அடம்பிடிச்சு புத்தாடை, பட்டாசு வாங்கி கப்பித்தனமா கம்பி மத்தாப்பு சுத்துன அது ஓர் அழகிய மத்தாப்புக் காலம்!

“டுப்பாக்கி... ரோல் கேப்பு... பிஜிலி வெடி!”

ஆனா, இப்பல்லாம் மக்கப் பஞ்சம் தீர மாரி மழை பெய்யறது இல்லை. பங்குனி வெயில் ஐப்பசியிலேயே பல்லைக் காட்டிட்டு அடிக்குது. வெடி வெடிக்க கட்டுப்பாடுகள் வந்துருச்சு. பெரும்பாலும் சாங்கியத்துக்கு ரெண்டு மூணு வெடி வெடிச்சு கொண்டாடிட்டு டி.வி-ல மூழ்கிடுறோம். கறிக்குழம்பு மட்டும் மணக்குது. யோசிச்சுப் பார்த்தா வயசாகிடுச்சோனு தோணுது. ஆனா, சர்ட்டுக்கு மேட்ச்சா மாஸ்க் வாங்குறோம். நைட் நம்ம வீட்டு மொட்டைமாடில தனியா நின்னு வெடிக்கிற ராத்திரி வாண வேடிக்கை மட்டும் கடைகள்ல வாங்குறோம். தனியா குடும்பமா நின்னு கம்பி மத்தாப்பு சுத்துறோம்.

அதிரசம்லாம் மியூசியத்துல வெக்கிற பலகாரம் ஆகிடுச்சு. பக்கத்து வீடுகள்ல இருந்து பலகாரங்களும் வர்றதில்லை... நாமளும் கொடுக்குறதில்லை. அப்படியே கொடுக்கணும்னாலும் பேக்கரில வாங்கிடுறோம்.

சத்தம் வராம வெடி வெடிச்சுட்டு, அதே சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தை வீட்டுல உட்கார்ந்து பார்க்குறோம். புதுப்படம் ஓடிடி-ல ரிலீஸ் ஆகுது. அதைக் குடும்பமா உட்கார்ந்து குதூகலமா பார்க்குறோம். ஆனாலும் நாம 80ஸ் கிட்ஸ், 90ஸ் கிட்ஸ் கொண்டாடுன அந்த தீபாவளியைத்தான் ரொம்பவே மிஸ் பண்றோம்!