Published:Updated:

இந்த வதந்திக்கு இல்லையா சார் ஒரு எண்டு?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இந்த வதந்திக்கு இல்லையா சார் ஒரு எண்டு?
இந்த வதந்திக்கு இல்லையா சார் ஒரு எண்டு?

ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க இரண்டு கிராம்பு போதும் என்ற வீடியோ வதந்திதான் அது. மாஸ்க் அணியும்போதெல்லாம் இரண்டு கிராம்பை மென்று விழுங்கினால் போதுமாம்.

பிரீமியம் ஸ்டோரி

'திண்ணைல கிடந்தவனுக்கு திடுக்குனு கிடைச்சதாம் பஞ்சு மெத்தை'ன்னு சொல்றமாதிரி ஒரு வாய்ப்பை இந்தக் கொரோனா சிலபேருக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கு. சொல்லப்போனா இந்தக் கொரோனாப் பேரிடர் காலத்தின் ஆகப்பெரும் சிக்கல்களில் ஒன்று... எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் வாட்ஸப் வதந்தி வாயர்கள்தான்! கைக்கு வந்ததையெல்லாம் டைப் செஞ்சு சுற்றலில் விடுறதென்ன... கண்டதையும் ஃபார்வர்டு செஞ்சு ‘அரை வைத்தியனா... அரைப்பைத்தியமா'ன்னு நம்மை கன்ஃபியூஸ் பண்றதென்ன... ஆஹகா! இவர்களின் அட்ராசிட்டி வைத்தியக்குறிப்புகளில் சில இங்கே...

இந்தக் கருஞ்சீரகமும் மிளகும் இவனுககிட்ட படுற பாடு இருக்கே... அதுகளுக்கு மட்டும் வாயிருந்தா `எங்களை விட்ருங்கடா!'ன்னு கதறி அழுதிருக்கும். இதோ எவ்ளோ சிம்பிளா ‘படித்தவுடன் கிழித்துவிடவும்’ போல ‘ஷேர் செய்யவும்’ எனச் சொல்லும் எளிய பதிவு:

‘காலை வணக்கம். நண்பர்களுக்கு எளிய கொரோனாத் தற்காப்பு நடவடிக்கை. கொரோனாக் கிருமிகள் உங்களை அண்டாமல் இருக்க நாள்தோறும் சித்தர்கள் நமக்கு அருளியதைச் செய்வோம்.

இந்த வதந்திக்கு இல்லையா சார் ஒரு எண்டு?

 காலை மாலை இரவு வேளைகளில் கருஞ்சீரகப்பொடியைச் சுடுநீரில் கரைத்துக் குடிப்போம். தேவைப்பட்டால் அதில் இரண்டு துளி எலுமிச்சை கலப்பது நல்லது.

 சாப்பிட்டபிறகு மறக்காமல் நான்கைந்து மிளகை வாய்க்குள் கடித்து விழுங்குவோம். அதன் காரத்தன்மை நுரையீரலுக்குச் செல்லவிருக்கும் வைரஸை வெளியிலேயே தடுத்து நிறுத்தி விடுகிறது.

இவ்வாறு மூன்று நாள்கள் தொடர்ந்து செய்தால் மூச்சுக்குழாயில் இருக்கும் கெட்ட செல்கள் அழிவதோடு உடலுக்குள் வைரஸ் கிருமிகள் பரவாமல் அரணாக இருக்கும் செயலை மிளகும் கருஞ்சீரகமும் செய்கிறது.

நாலு மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் விருந்து உண்ணலாம் என சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள்?

- இப்படி சிம்பிளாய் சீன் வைத்து எழுதி அனுப்புகிறார்கள். இதெல்லாம்கூடப் பரவாயில்லை... வீடியோவில் வந்த இன்னொரு வைத்தியம்தான் வேற லெவல்.

ஆக்சிஜனுக்காக மாநிலங்களே இன்னொரு மாநிலத்திடம் கையறுநிலையில் கையேந்தித் தவிக்குது. ‘தற்சார்பா நாமளே தயாரிக்கலாம்'னு நம்ம முதல்வர் சொன்னாலும் சொன்னார் வதந்தி வாயர்கள் அதையும் எளிமைப்படுத்தி, `நம்ம உடலே ஒரு உற்பத்திக்கூடம்... நமக்கு நாமே ஆக்சிஜன் தயாரிக்க எளிய வழி'ன்னு கோதாவில குதிச்சிட்டாங்க.

இந்த வதந்திக்கு இல்லையா சார் ஒரு எண்டு?

ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க இரண்டு கிராம்பு போதும் என்ற வீடியோ வதந்திதான் அது. மாஸ்க் அணியும்போதெல்லாம் இரண்டு கிராம்பை மென்று விழுங்கினால் போதுமாம். இதில் ஒவ்வொருமுறை ஆக்சிஜன் லெவல் கூடுவதை கிராம்பு சாப்பிடும் முன் - கிராம்பு சாப்பிட்ட பின் என பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வெச்சு டெமோ வேறு செய்து காட்டியிருக்கிறார் ஒரு டாக்டர். ஆனால், அவர் அலோபதி, ஹோமியோபதி, சித்தா டாக்டர் அல்ல. இன்ஜினீயரிங் படித்த டாக்டராம்... ரெண்டே ரெண்டு கிராம்பு கொரோனாவைக் கொல்லும்னு உறுதியா அந்த ஆள் நம்பவைக்க அவ்வளவு மெனக்கெடுகிறார். இப்படி ஒரு விஞ்ஞானியை வைத்துக்கொண்டு என்ன செய்கிறார் உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ராஸ்? எல்லாம் சரி... மூணு வயசுக்குழந்தை, எம்பது வயசுத் தாத்தா கிராம்பு தின்னா பேதியாகுமேனுகூட யோசிக்காம ஷேர் பண்றவங்களை என்ன சொல்ல..? அந்தத் திடீர் டாக்டர் `சுயம்புலிங்கத்தை' ஏன் இன்னும் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. வார் ரூமில் உட்காரவைத்து அழகு பார்த்திருக்கலாமே? ரேஷன் கடையில 4,000 ரூபாய் கொடுக்குறப்போ 400 கிராம் கிராம்பு கொடுக்குறது கஷ்டமா என்ன?

உஸ்... யப்பா... முடியல!

சமீபத்திய இன்னொரு வாட்ஸப் டிரெண்ட் `ஆவி பிடித்தல்.' டீத்தூள் விளம்பரத்தில் வரும் மருத்துவப் பொருள்களையோ, பிரியாணி மசாலாவில் சேர்க்கும் பொருள்களையோ குந்தாங்கூறாக குக்கரில் வேக வைத்து அதன் ஆவியை டியூப் வைத்து மூஞ்சியில் அடித்து ஆவி பிடிக்கிறார்கள். ஆவியைவிட முக்கியம் இந்தப் பாவிகள் அதை கேமராவில் படம் பிடிப்பது. ஆளாளுக்கு நொச்சி இலை, யூகலிப்டஸ் இலை, வேப்பிலை என இலையை மட்டும் மாற்றிமாற்றிக் கொதிக்க விடுகிறார்கள். ஆர்வத்தில் கறிவேப்பிலை வரை அடுப்பில் கொதிக்கிறதுலாம் ரொம்பவே தப்பு மக்களே!

சிலர், ‘ஆவிதானே பிடிக்கணும்?' என இட்லி சட்லியில் முகத்தைக் காட்டி வியர்க்க வியர்க்க வீடியோ எடுத்து எதையோ சாதிச்சதுபோல வாட்ஸப்பில் பரப்புகிறார்கள். அட ஆவிகளா... சீ... பாவிகளா!

 ரூமி, அப்துல்கலாம் சொல்லாததை மட்டுமே ஷேர் செஞ்ச ஆட்கள் எல்லாம் இப்போது வாட்ஸப்பில் தப்பும் தவறுமான மருத்துவக்குறிப்புகளை யார் பெயரையாவது போட்டு ஷேர் செய்வதை டிரெண்ட் ஆக்கிவிட்டார்கள். லேட்டஸ்ட்டாய், சிவகங்கை டாக்டர் ஃபரூக் அப்துல்லா, கு.சிவராமன், டாக்டர் அஸ்வின், வீரபாபு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் சொன்னதாகப் பல போலி ஷேரிங்ஸ் சுற்றுகின்றன. இதுபோல சொல்லாததைப் பரப்பும் ‘வைரஸ்' மனிதர்களிடம் நாம் சொல்வது ஒண்ணே ஒண்ணுதான்.

‘நீ விரும்புபவரைவிட உன்னை விரும்புபவரை நேசி! - அப்துல் கலாம்' என்ற மெசேஜையே ஷேர் செஞ்சுக்கங்கப்பா. மக்கள் உசிரோட விளையாடாதீங்கப்பா!'

 புதுசு புதுசா போஸ்ட்டிங் உருவாக்கி அரசாங்கம் செய்ய வேண்டிய விஷயத்தையெல்லாம் செய்வாங்க சிலபேர். உண்மைபோலவே இருக்கும் அந்தச் செய்திகள் `சற்றுமுன் கிடைத்த செய்தி' என்ற தலைப்பில் நம் செல்போனுக்கும் வரும். பெரும்பாலும் அரசாங்க அதிகாரிகள் புதிய பதவி குறித்த தகவல்கள்தான் இதில் றெக்கை கட்டிப் பறக்கும். அண்மையில் தலைமைச் செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டதும், மற்றொரு 90s கிட்ஸ்களின் நாயகனான சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்-க்கு டிஜிபி போஸ்ட்டிங் கொடுத்து சுத்தலில் விட்டார்கள். அதைக்கூட மன்னிக்கலாம். ஆனால், இது அதுக்கும் மேல... `சித்த மருத்துவர் வீரபாகுவுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கிடப் பரிந்துரை செய்தது இந்திய அரசாங்கம். இதற்கான ஐநா சபை நடத்திய வாக்கெடுப்பில் 1850065 வாக்குகள் பெற்று முதல் பத்துப் பேரில் 8வது இடத்தில் இருக்கிறார். எட்டிப் பிடிக்கும் தூரத்தில் இருக்கும் சாதனைத் தமிழனை உச்சத்தில் உட்காரவைக்க அழகான வாய்ப்பு. இந்த மெசேஜை அதிகம் பகிருங்கள். ஒவ்வொரு பகிர்தலும் அவருக்கான வாக்காக மாறி ஒரு தமிழன் நோபல் பரிசெனும் உச்சபட்ச அங்கீகாரத்தைப் பெறுவான்' என ஏக்கர்கணக்கில் புளுகியிருந்தார்கள். உங்க பொது அறிவு புண்ணாக்கில் தீ வைக்க!

இந்த வதந்திக்கு இல்லையா சார் ஒரு எண்டு?

 வெறும் மிளகு, கருஞ்சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலின்னு மட்டும் சொல்லிட்டிருந்தா எப்படி... கொஞ்சம் அப்கிரேட் ஆகிக்கலாமான்னு சில பக்கிங்க சயின்டிஸ்ட் அவதாரம் எடுத்து வதந்திகளை லிட்டர் கணக்கில் பரப்புதுங்க. இல்லாத வேதியியல் விஷயங்களை வாட்ஸப்ல பேசுதுங்க...

‘வெற்றிலையில் அமினோ பொளாடியம்(!)என்ற தனிமம் இருக்கு. அது நெஞ்சுச் சளியை நீக்க வல்லது!'

‘பாகற்காயில் இருக்கும் பொட்டாசியம் நைட்ரேட் நிமோனியா காய்ச்சல் உண்டாக்கும் வைரஸைக் கொல்லும் என உலக சுகாதார நிறுவனத்தின் ஆராய்ச்சி சொல்கிறது!'

‘லவங்கப்பட்டைப் புகையில் அம்மோனியம் பெலரோஃபோர்' என்ற ஆக்சிஜன் செறிவூட்டி இயற்கையாகவே இருக்கிறது!'

‘மெக்னீசியம் டார்டாய்ஸ்' (கொசுவத்தி சுருள் அல்ல) என்ற நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே வேப்பிலையில் காணப்படுவதால் வேப்பிலையையும் மஞ்சளையும் முகக்கவசத்தோடு சேர்த்துக் கட்டிக்கொண்டால் கிருமிகள் உடலுக்குள் செல்வதைத் தடுத்துவிடுகிறது!'

- என்னென்ன கம்பி கட்டுற கதைலாம் சொல்றாய்ங்க பாருங்க மக்களே! இவய்ங்க சொல்ற தனிமங்கள் லிஸ்ட்லாம் வேதியியல் பாடத்திலேகூட கிடையாது.

ஆந்திராவில் இப்படிப் பரவிய வாட்ஸப் வதந்தியால் ஒரு பள்ளி ஆசிரியர் இறந்தே போயிருக்கிறார். எலுமிச்சைச்சாற்றை சில துளிகள் மூக்கினுள் செலுத்தினால் கொரோனா வைரஸ் அழியும் என்ற வதந்தியே அது!

மன்சூர் அலிகானுக்கு மச்சான் போல ஹைப்பர் மோடிலேயே கண்டதையும் ஷேர் செய்யும் சில இளசுகளின் வாட்ஸப் ஸ்டேட்டஸே, ‘தடுப்பூசி எனும் மாயவலையைத் தடுப்போம்!' என்றே இருக்கிறது. ‘தடுப்பூசி ஒன்றே எங்களைக் காத்தது’ என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சொல்வதையே, ‘கைப்புள்ள குறளிவித்தை காட்டுறான் நம்பாதீங்க ஒறவுகளே!' எனத் தட்டிவிட்டு நீந்திக் கடக்கிறான் எளிய தமிழ்ப் பிள்ளை ஒருவன். ஆத்தீ கொரோனாவைவிட பெரிய வைரஸா பரவிக் கிடக்கிறாய்ங்களேய்யா!

வடக்கன்ஸ் இன்னும் வேற லெவல். மீரட்டில் கோபால் சர்மா என்ற பா.ஜ.க தலைவர் இஞ்சி, சுக்கு, அதிமதுரம், கசகசா, மாவிலை, மஞ்சள், வேப்பிலையை எரியவிட்டு அந்தப் புகையைத் தெருத்தெருவாக `ஸ்நேக் பாபு'வைப்போல பரப்பி கொரோனாவை விரட்டுகிறாராம்! அதென்ன கொசுவா ஓடுறதுக்கு?

இந்த வதந்திக்கு இல்லையா சார் ஒரு எண்டு?

சர்ச்சை புகழ் பிரக்யாசிங் தாக்கூர்லாம் ‘கோமியம் இஸ் மை சீக்ரெட் ஆஃப் எனர்ஜி!' என தம்ஸ்-அப் காட்ட, பல பா.ஜ.க எம்.எல்.ஏக்கள், ‘கோமுத்ர... ஆப்பிள் ஆரஞ்சு, மேங்கோ ஃப்ளேவரில் இருக்கு!' என போட்டோக்களைப் பரப்பினார்கள். ‘ஃப்ளேவரைவிட ஒரிஜினல் தான் ஹிட்!' என ஒரு வி.ஐ.பி சர்வே எடுத்து சொல்ல, ஒரிஜினல் அக்மார்க் கோமியத்துக்கு செம டிமாண்டாம்.

நம்ம ஊர் சேத்தாண்டிக்குளியல் போல சாணிக்குளியல் போட்டோ போட்டு தெறிக்க விடுகிறார்கள். உடம்பு பூரா வரட்டி தட்டிக் காயவிட்டால் அதுதான், ‘பதஞ்சலி பி.பி.இ கிட்!' என ஒரு போட்டோ வேறு செம வைரல். என்னமோ போடா மாதவா!

‘நம்ம ஊரில் நாங்க மட்டும் சும்மாவா’ என கொரோனா தேவி சிலை பிரதிஷ்டை செய்து வழிபடவே ஆரம்பித்துவிட்டார்கள். அதையும் இங்கிருக்கும் சில வாட்ஸப் வதந்திவாயர்கள், ‘கொரோனா தேவிக்கு நேர்த்திக்கடன் செய்து கொண்டால் தடுப்பூசிக்கே அவசியமில்லை தோழா’ என சீரியஸாய் ஷேர் செய்திருக்கிறார்கள். என்னடா இது கோவைக்கு வந்த சோதனை!

எனக்கும்கூட தினமும் வார்த்தை சித்தர் வலம்புரிஜான் போல் சுரைக்காய், அவரைக்காய், பிரண்டை, கரிசலாங்கண்ணி என கொரோனாவுக்கு மருத்துவ சமையல் குறிப்பினை அனுப்பி வைக்கும் தூரத்து சொந்தக்காரர் ஒருவரிடம், ‘‘நீங்க சித்தா டாக்டரா சித்தப்பா?’’ என்று கேட்டேன். ‘‘ஹாஹா... நான் பேங்க் ரிட்டயர்டு மகனே... இப்ப வாட்ஸப் அட்மினா இருக்கேன்!’’ என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு