Published:Updated:

டப்புச்சிக்கு டப்புச்சிக்கு டார்ச்சர்!

டப்புச்சிக்கு டப்புச்சிக்கு டார்ச்சர்!
பிரீமியம் ஸ்டோரி
டப்புச்சிக்கு டப்புச்சிக்கு டார்ச்சர்!

வாங்க, அகம் டிவி வழியே அகத்துக்குள்..!

டப்புச்சிக்கு டப்புச்சிக்கு டார்ச்சர்!

வாங்க, அகம் டிவி வழியே அகத்துக்குள்..!

Published:Updated:
டப்புச்சிக்கு டப்புச்சிக்கு டார்ச்சர்!
பிரீமியம் ஸ்டோரி
டப்புச்சிக்கு டப்புச்சிக்கு டார்ச்சர்!

‘பிக்பாஸ் நிகழ்ச்சியால் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு!’ என்று கமலைச் சீண்டிய எடப்பாடியார், மறைமுகமாக ஒரு விஷயத்தை நம் மனதில் பதிய வைத்திருக்கிறார். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்க்கிறார். 2021 சீஸனில் போட்டியாளராய் அவரையும் அவர் சகாக்களையும் களத்தில் இறக்கி விட்டால் அப்படியே சும்மா பிக்பாஸ் வீடு களைகட்டாதா? வாங்க, அகம் டிவி வழியே அகத்துக்குள்..!

எடப்பாடி பழனிச்சாமி

ஒவ்வொரு வாரமும் கமல் புத்தகப் பரிந்துரை செய்யும்போதெல்லாம் குறுக்கிட்டு, ‘‘சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் புத்தகத்தை விட்டுட்டீங்க, த்ரிஷா எழுதிய திருக்குறள் புத்தகத்தை ஏன் சொல்லலை, சிலம்பரசன் எழுதின சிலப்பதிகாரம் புத்தகத்தைச் சொல்லவேயில்ல?’’ என்று செம டார்ச்சர் செய்வார்.

கிச்சன் டீமில் போட்டாலும் எதையும் சமைக்க மாட்டார். கேட்டால் “நான் விவசாயிங்க. நீங்க சமைக்கிற தக்காளி, வெங்காயம், கீரையெல்லாம் என்னைமாதிரி விவசாயி உருவாக்கினது. நான் ஏன் சமைக்கணும்? நான் விவசாயிங்க” என்று ரவுசைக் கூட்டுவார்.

பிக்பாஸ் சொல்லும் எந்தக் கட்டளைக்கும் பணிய மாட்டார். கேட்டால் “எங்க பிக்பாஸ் இந்தியிலதாங்க பேசுவாரு. இவர் பேசுறது புரியவே மாட்டேங்குது” என்று கமலுக்கே கடுக்காய் கொடுப்பார்.

டப்புச்சிக்கு டப்புச்சிக்கு டார்ச்சர்!

நைட்டு தூங்கும்போது பன்னீர்செல்வம் பெட்டிலிருந்து தலையணை, போர்வையெல்லாம் நைஸாகச் சுட்டுவந்து தன் கட்டிலுக்கு அடியில் சுருட்டி ஒளித்துவைத்துவிடுவார். பன்னீர் கண்டுபிடித்துக் கேட்டால் “நான் பிடலு, நீங்க சே குவேரா. பிடலுக்கு பில்லோகூட கொடுக்கக்கூடாதா?” என்று பகீர் பாயின்ட் தட்டுவார். ஜெர்க் ஆகி நிற்பார் சே.

ஒவ்வொரு வாரமும் ‘இந்த வாரம் யார் எலிமினேட் ஆவாங்கன்னு நினைக்கிறீங்க?’ என்று கமல் கேட்கும் கேள்விக்கு எடப்பாடி தவறாமல் சொல்லும் ஒரே பெயர்..? வேறென்ன, அந்த மூன்றெழுத்துதான்!

காலையில் பாடல் போட எடப்பாடியின் நேயர் விருப்பம்: ஆடாம ஜெயிச்சோமடா!

ஓ.பன்னீர்செல்வம்

எடப்பாடி டாய்லெட் போகும் நேரம் வெளியே இருந்து தாழ்ப்பாள் போட்டுவிட்டு, மற்றவர்களைக் கூப்பிட்டு, “இந்த வாரம் கேப்டனைத் தூக்குறதுக்கு நாம ஓட்டு போடுவோம்” என்று குரூப்பிசம் செய்வார்.

பிக்பாஸ் ஹவுஸுக்குள் சின்னப் பிரச்னை என்றாலும் ஓரமாகப் போய் தியானத்தில் உட்கார்ந்துகொள்வார். யாராவது கேட்டால், “யார் வின்னர்னு அம்மா ஆன்மாகிட்ட ஆரூடம் கேட்டுக்கிட்டிருக்கேன்” என்று சொல்லிக் கண்களை மூடிய அரைமணி நேரத்தில் குறட்டை கன்பார்ம்.

வீட்டில் எப்போதாவது சிக்கன் பிரியாணி சமையல் செய்யும்போது செத்துக்கிடக்கும் சிக்கன் பாடியைப் பார்த்து லிட்டர் கணக்கில் கண்ணீர் வடிப்பார். “தஞ்சைப் பெரியகோயில்னு சொல்லத் தெரியாம பெரியகோழின்னு சொல்லி ராஜராஜ சோழனையே ராகிங் செய்த என் செல்ல மகன் ரவீந்திரநாத் எப்படியிருக்கானோ?” என்று உருகி மருகி அழுவார்.

23வது நாள் நேரம் - மாலை 6 மணி. எடப்பாடியை எப்படி பிக்பாஸ் ஹவுஸிலிருந்து வெளியேற்றலாம் என்ற ஆழ்ந்த யோசனையுடன் பன்னீர் வாக்கிங் போய்க்கொண்டிருந்தபோது வானத்தில் ஹெலிகாப்டர் போகும் சத்தம் கேட்டதும் பதறிப்போய்க் குனிந்து வணக்கம் வைத்தார்.

காலையில் பாடல் போட பன்னீரின் நேயர் விருப்பம் : ‘நீயும் நானுமா... கண்ணா நீயும் நானுமா?’

ஜெயக்குமார்

ஜெயக்குமார் குளிக்கப்போகிறார் என்றால் அவசரமாய் டாய்லெட் வந்தாலும் யாரும் பாத்ரூம் பக்கம் ஒதுங்க மாட்டார்கள். காரணம், குளியலறையில் கோட்டா சீனிவாசராவ் குரலில் ஜெயக்குமார் பாடும் பாடல்கள்தான். பாத்ரூம் கதவே படபடவென ஆடும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

பன்னீருக்கும் பழனிக்கும் பஞ்சாயத்து நடக்கும்போதெல்லாம் சிங்கிள் மேன் சமாதானக் கமிட்டி ஜெயக்குமார்தான். பஞ்சாயத்து பணியவில்லை என்றால் ‘அன்பு மலர்களே’ என்று அண்ணன் - தம்பி இணைய எம்.ஜி.ஆர் பாடிய பாடலை எம்.ஆர்.ராதா குரலில் பாடுவார். பஞ்சாயத்து பைசலாகிவிடும்.

“எம்.ஜி.ஆர் வாரிசுன்னு சொல்றீங்களே, எம்.ஜி.ஆர் நடிச்ச 87வது படம் என்ன, ‘தாய்க்குப் பின் தாரம்’ படத்தில் எம்.ஜி.ஆர் கேரக்டர் பேர் என்ன?” என்றெல்லாம் வாராவாரம் கமலுக்கே மினி க்விஸ் வைத்து டார்ச்சர் செய்ய... முதல் ஆளாக அவரை எலிமினேட் செய்வார் கமல்.

காலையில் பாடல் போட ஜெயக்குமாரின் நேயர் விருப்பம் : ‘என்னைப் பாடச் சொல்லாதே, கண்டபடி பாடிப்புடுவேன்.’

விஜயபாஸ்கர்

ஞாயிற்றுக்கிழமையில் கமல் கோட் பாக்கெட்டுக்குள் கைவிடும்போதே, “குட்கா பாக்கெட் எடுக்கிறீங்க. இது விதிமீறல்” என்று குய்யோமுய்யோ கூச்சலிடுவார் விஜயபாஸ்கர். “அட, இது எலிமினேஷன் கார்டுங்க” என்பார் கமல்.

பழக்கதோஷத்தில் பன்னீர்செல்வம் பாத்ரூம் போன நேரத்தில் வெளியே தகரம் அடித்து அவரை மெர்சல் ஆக்கிவிடுவார்.

“கமல் நீங்க ‘வசூல்ராஜா’ படத்தில் போலி டாக்டர். நான் நிஜ டாக்டர். டாக்டர் ஆகப்போறேன்னு சொல்றவனை நம்பலாம். டாக்டர்கிட்ட போறேன்னு சொல்றவனைக்கூட நம்பலாம். ஆனா டாக்டருக்கே படிக்காம ‘நான்தான் டாக்டர்’னு சொல்றவனை நம்பக்கூடாது” என்று வசனம் பேசி கமலை டரியலாக்குவார்.

காலையில் பாடல் போட விஜயபாஸ்கரின் நேயர் விருப்பம் : ‘காசு... பணம்... துட்டு... மணி.’

ராஜேந்திர பாலாஜி

ஆளாளுக்கு கிச்சன் டீம், பாத்ரூம் கிளீனிங் டீம் போனால், எப்போதும் பாத்திரம் கழுவும் டீமையே தேர்ந்தெடுப்பார் ராஜேந்திர பாலாஜி. யாரையாவது கழுவிக் கழுவி ஊத்துவதுதானே அவருக்குப் பிடித்த பொழுதுபோக்கு!

வாராவாரம் அடிக்கிற கலரில் மஞ்சக்கலர் சட்டை போட்டு ஆஜர் ஆவதால் கமலே கொஞ்சம் கடுப்பாவார்.

“மோடி எங்கள் டாடி. நீங்க ‘அவ்வை சண்முகி’யில் போட்ட கெட்டப் லேடி” என்று ரைமிங்கில் டைமிங் வசனம் பேசி டார்ச்சர் செய்வார் கமலை.

பன்னீர்செல்வம் டீ போட்ட பாலில் கலப்படம் என்று பகீர் கிளப்புவார் ஒரு வாரம்.

காலையில் பாடல் போட ராஜேந்திர பாலாஜியின் நேயர் விருப்பம் : ‘போடா போடா புண்ணாக்கு’ மற்றும் ‘மஞ்சக்கலரு சிங்குச்சா’ பாடல்கள்.

எல்லோருக்கும் பொதுவான பண்புகள்

* ரோபோ டாஸ்க்கைச் சிறப்பாகச் செய்ய இவர்களைவிட்டால் உலகத்தில் ஆளே இல்லை.

* காலில் விழும் கலாசாரத்தை விமர்சித்து கமல் பேசினால் போதும், கடும் கண்டனம் தெரிவிப்பார்கள். அதுவும் எடப்பாடி மூக்குப்புடைக்க ‘இதெல்லாம் ரொம்பத் தப்புங்க’ என்று எகிறுவார். பன்னீரோ பத்துநாள் ஆன பழைய போண்டாவைத் தூக்கி எறிவார்.

* காலையில் பாடல் போட எல்லோருக்குமான பேவரைட் நேயர் விருப்பம்: ‘நாற்காலிக்குச் சண்டை போடும்.’