Published:Updated:

போவோமா ஊர்கோலம்...

ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
ரஜினி

கொரோனாவைக் காரணமாக வைத்து `விர்ச்சுவல் யாத்ரா' என ஒன்றை அறிவிப்பார்.

போவோமா ஊர்கோலம்...

கொரோனாவைக் காரணமாக வைத்து `விர்ச்சுவல் யாத்ரா' என ஒன்றை அறிவிப்பார்.

Published:Updated:
ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
ரஜினி

`யாத்ரா கி கிருபியா ஜானே வாலி எக்ஸ்பிரஸ்' என ரயில்வே அறிவிப்பு போல படுவேகமாக ஆரம்பித்த பாஜக எல்.முருகனின் வெற்றிவேல் யாத்திரை ஆகட்டும், `என் பேச்சைக் கேட்டிருந்தால் கொரோனா கட்டுக்குள் வந்திருக்கும்' எனக் கூட்டத்துக்குள் உட்கார்ந்து கொண்டு கட்டுச்சோற்றை அவிழ்த்த உதயநிதியின் பரப்புரைப் பயணம் ஆகட்டும், எல்லாமே இரண்டு புயல்களால் பிசுபிசுத்துப்போனாலும் ‘காலையில் டிபன் சாப்பிட்டுவிட்டு அட்டெண்ட்டன்ஸ் போட்டால் தமிழ்நாட்டு போலீஸ் உதவியால் மதியம் கல்யாண மண்டபத்தில் லஞ்ச் கன்பார்ம். சாயங்காலம் டீ, காபி, வடையோடு ரிலீஸ்’ என யாத்திரைக்கும் பரப்புரைக்கும் தமிழக அரசியலில் இப்போ செம டிமாண்ட். வாங்க, யார் யாரெல்லாம் என்னென்ன காரணத்தைச் சொல்லி யாத்திரையை ஆரம்பிக்கலாம் எனச் சொல்கிறேன்...

போவோமா ஊர்கோலம்...

கமல்: `விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்று தி.மு.க பரப்புரைக்குப் பெயர் வைத்ததே ஏதோ தேசிய விருது பெற்ற மலையாளப் பட டைட்டில் போல இருக்கிறது. அதனால், `களத்தில் கமல்' என ரைமிங்காய் எளிமையாய் பெயர் வைத்து மக்களை ஈர்க்கலாம். அல்லது கொசகொசன்னு பெயர் வைப்பதுதான் டிரெண்டென்றால், ``60 வருடங்களுக்கு முன் களத்தூர் கண்ணம்மாவில் திரையில் களம் கண்ட உங்கள் நான். இன்று அரசியல் களம் காண்கிறேன். அன்று எப்படி 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே... அன்புடன் ஆதரிக்கும் தெய்வமும் நீயே' என இருகரம் கூப்பி உங்கள் ஒவ்வொருவரிடமும் பாடல் வழி ஆதரவு கேட்டேனோ, இன்று அவ்வழியிலே வீடுவீடாக ஓட்டு கேட்டு கேரவனில் வருகிறேன். இந்த யாத்திரைக்கு `அம்மாவும் நீயே அப்பாவும் நீயே யாத்திரை' என்றே பெயரிடுகிறேன். கே.எஸ்.சேதுமாதவன் என்னை `கன்னியாகுமரி' என்ற மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரத்திலிருந்து உயர்த்தி ஹீரோவாக்கினார். அவர் நினைவாக கன்னியாகுமரியில் இந்த யாத்திரை நிறைவுபெறும். நாம் கோட்டையில் கொடியை ஏற்றுவது உறுதி!’’ என்று டிவியை ஆக்ரோஷமாக உடைக்காமல் பிரசாரப் பயணத்தைச் சொல்லலாம்.

போவோமா ஊர்கோலம்...

சீமான்: “என் முப்பாட் டனுக்காக மயில் யாத்திரையை ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன் செய்கிறேன். கண்டி கதிர்காமத்தில் ஆரம்பித்து திரிகோண மலையைத் தொட்டு பூநகரி வழியாக பாம்பன் வந்து இளையான்குடியில் முடிப்பேன். தண்டி யாத்திரை போல `கண்டி யாத்திரை' எனப் பெயர் வைப்பேன். ஆட்சி மட்டும் என் கையில் சிக்கட்டும், யாருடைய வீடியோக்களுக்கு அதிக பார்வைகள் கிடைக்கிறதோ அவர்களே வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படும் புதுச் சட்டத்தை அமலாக்குவேன். ராமநாதபுரத்தை ராவணாதபுரம் என மாற்றிவிடுவேன். எனவே தேர்தல் பரப்புரைக்கு `ராவண யாத்திரை' எனப் பெயர் வைக்கிறேன். ஏனெனில், அரசியல் போரில் ராமனின் வாரிசுகளை ராவணனின் வாரிசுகளாகிய நாமே வீழ்த்துவோம்! ஆகவே தம்பிகளே, 2021 தேர்தலுக்கு தமிழகம் முழுவதும் யாத்திரை போவோம்... நமக்கு நித்திரை கிடையாது..!’’

போவோமா ஊர்கோலம்...

ரஜினி: கொரோனாவைக் காரணமாக வைத்து `விர்ச்சுவல் யாத்ரா' என ஒன்றை அறிவிப்பார். ஒரு பெரிய ஸ்க்ரீனை போயஸ் கார்டன் வீட்டின் கேட் முன் கட்டிவிடுவார்கள். ரஜினி தன் வீட்டு டிராயிங் ரூமில் தியானம் செய்தபடி கண்களைத்திறந்து பேச ஆரம்பிப்பார். இந்த வீடியோக் காட்சி வெளியே இருக்கும் ஸ்க்ரீனில் ஒளிபரப்பாகும். ``என்னை வாழ வைத்த தமிழ் மக்களே...கொரோனாவால என்னால நேரடியா உங்களைச் சந்திக்க முடியல. நான் தினமும் ஒவ்வொரு ஊருக்காக இங்கிருந்து பேசுறேன். அதை என் மக்கள் மன்ற நிர்வாகிகள் அந்தந்த ஊரில் இதேபோல பெரிய ஸ்க்ரீனில் நான் பேசுவதைக் காட்டுவார்கள். ஆகவே என்னை மன்னித்து இந்த எளியவனை நேரில் பார்க்க ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் கல்யாண மண்டபமோ விளையாட்டு மைதானமோ நீங்கள் வரவேண்டும். முதலில் வரும் உங்களுக்கு பாபா முத்திரை போட்ட டிஷர்ட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என்பதை சந் தோஷமாகத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விர்ச்சுவல் யாத்திரைக்கு `மாத்துறோம் எல்லாத்தையும் மாத்துறோம் யாத்ரா' எனப் பெயர் வெச்சிருக்கேன். உங்க ஊர்ல ஸ்க்ரீனில் காட்சிகள் தெளிவாகத் தெரிஞ்சா நீங்க தான் காரணம். ஒருவேளை புள்ளிபுள்ளியாத் தெரிஞ்சாலும் நீங்கதான் காரணம். இப்போ இல்லைனா எப்பவும் இல்லை. நன்றி, வணக்கம்!’’

போவோமா ஊர்கோலம்...

எடப்பாடி: ``என் ஆட்சியிலே நான் கொண்டுவந்த பல நல்ல திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க `எழுச்சி விவசாயி எடப்பாடி யாத்திரை’ ஆரம்பிக்கிறேன். தமிழகம் முழுவதும் என் தலைமையிலான அரசு செய்த பணிகள் அத்தனையையும் அண்ணன் கடம்பூரார் குறும்படங்களாக எடுத்து விலையில்லா விளம்பர சிடிக்களாக வீடுதோறும் கிடைக்க வழி செய்திருக்கிறார். மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூரார் அத்தனை சாதனை சிடிக்களும் நியாயவிலைக் கடைகளில் இலவசமாகக் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறார். தமிழகம் முழுவதும் நான் நேரில் வந்து பார்க்க நேரமின்மை காரணமாக இருப்பதால் சேலம் பகுதியை நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன். இதைக்கூட மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், `சேலத்து மாம்பழத்தைச் சுற்றிவரும் வண்டு' என எனைக் கிண்டலடிப்பார். அவருக்கு ஒன்றை மட்டும் இன்றைக்குச் சொல்ல நான் கடமைப்பட்டி ருக்கிறேன். நான் வண்டுதான். ஆனால் நீங்கள் ஒரு மண்டு!"

போவோமா ஊர்கோலம்...

ஓபிஎஸ்: ``புரட்சித்தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சியின் அருமை பெருமைகளை கிராமம் தோறும் கொண்டு சேர்க்க மாட்டுத்தாவணியில் ஆரம்பித்து தேனியில் முடிவடையும் பிரமாண்டமான சாதனை யாத்திரை பயணத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம். அதில் மாண்புமிகு பாரதப்பிரதமரின் கிஷான் திட்டங்களையும், அபியான் திட்டங்களையும் இன்னபிற கணக்கிலடங்காத சாதனை களையும் விளக்கிக்காட்ட உள்ளோம். அமித் ஷா அவர்களால் தமிழகத்துக்குக் கிடைக்கப்போகும் 67 ஆயிரம் கோடி ரூபாய்க்கான திட்டங்களின் சிறப்புகளையும் விளக்கிக் காட்ட உள்ளோம். என்னுடன் பயணிக்க ‘தேனியின் தோனி’ எனக் கழகத் தொண்டர்களால் அன்போடு அழைக்கப்படும் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் அவர்களும் இணைந்து பயணம் மேற்கொள்ள இசைந்திருக்கிறார். இந்த யாத்திரைக்கு `நடக்கும் என்பார் நடக்காது யாத்திரை' எனப் பெயர் வைத்திருக்கிறோம். நன்றி!’’

போவோமா ஊர்கோலம்...

ராமதாஸ்: மிகப் பிரமாண்டமான பேரணியை தைலாபுரத்தின் ஈசான மூலையில் ஆரம்பித்து போர்ட்டிகோ வரை தனி ஆளாக நடந்து மேற்கொள்ள இசைந்திருக்கிறார் மருத்துவர் அய்யா. அவர் உடல் தைலாபுரத் தோட்டத்தில் இருந்தாலும் உள்ளம் பண்ருட்டி பலா மரக் காடுகளுக்குள்ளும், பெரம்பலூர் முந்திரிக் காடுகளுக்குள்ளும் சுற்றுவதாய் சுடச்சுட அறிக்கை தயாரித்திருக்கிறார்.``பா.ம.க-வின் புரெவி அன்புமணிக்கு 2021 தேர்தலில் ஒரே ஒரு வாய்ப்பு தாருங்கள். காலில் விழுந்து ஆட்சியைப் பிடித்த யார் யாருக்கோ வாய்ப்பு தருகிறீர்கள். தமிழகம் தழைக்க ஒரு மாற்றம் முன்னேற்றம் அன்புமணிக்கு வாய்ப்பு வழங்கக்கூடாதா? ஆகவே இந்த `மாற்றம் முன்னேற்ற யாத்திரை'க்கு உங்கள் ஆதரவு வேண்டும்.’’

போவோமா ஊர்கோலம்...

ஸ்டாலின்: “சாம்பாருக்குத் துவரம்பருப்பு. சக்திமிக்கவன் உடன்பிறப்பு. வார்த்தைகளை மாற்றிச்சொல்கிறேன், பழமொழிகளைத் தப்பாய்ச் சொல்கிறேன் என்று குற்றம் சாட்டுபவர்களைக் கண்டிப்பதற்காக ‘தப்பாச் சொன்னா தப்பா?’ யாத்திரை தொடங்கவிருக்கிறேன்’’ என்று ஸ்டாலின் அறிவிக்கலாம். ‘நில் கவனி, செல், சைக்கிளுக்குத் தேவை பெல்’ என்று கலர்கலர் டிஷர்ட்டில் சைக்கிள் ஓட்டி சின்னப்பசங்களை மட்டும் பயமுறுத்தக்கூடாது, ஆமா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism