Published:Updated:

பெர்லின் பங்கரும் ஹிட்லரின் கடைசி நிமிடங்களும்... #MyVikatan

அடால்ஃப் ஹிட்லர்
அடால்ஃப் ஹிட்லர்

ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு புகைப்படங்களாகவும் ஆவணங்களாகவும் கல்வெட்டாகவும் வீடியோக்களாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சிறு வயதிலிருந்தே வரலாறுகள் மீதும் அதை வரைந்தவர்கள் மீதும் எப்போதுமே ஒரு ஈர்ப்பு. அதனாலேயே ஹிட்லர், நெப்போலியன், சீசர், என உலக சரித்திரத்தைப் புரட்டிப் போட்ட பலரைப் பற்றியும் தேடித் தேடி படிப்பேன். அப்பொழுதெல்லாம் இன்டர்நெட்டோ, விக்கிபீடியாவோ, யூடியூப்போ இல்லாத காலமாகையால் முற்றுமுழுதாக சரித்திரங்களையும் சம்பவங்களையும் எழுத்தில் பொறிக்கப்பட்ட நாவல்கள் மூலம் கதையாகவும் நூல்கள் மூலம் தகவல்களாகவுமே அறிந்து தெரிந்து கொள்வேன்! எனது தந்தை வரலாற்றைக் கரைத்துக் குடித்தவர் என்றபடியால் அவர் வாய் வழி மூலமாகவும் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளைக் கேட்டு வளர்ந்தேன்!! வெளிநாடுகளுக்குச் செல்வது என்பது அந்த நாள்களில் ஒரு பகற் கனவு. ஆயினும் அப்போதெல்லாம் இந்த வரலாறுகள் வரையப்பெற்ற பூமிக்கெல்லாம் கண்டிப்பாகச் சென்று பார்க்க வேண்டுமென தீர்மானம் பூண்டிருந்தேன். அதன் பின் மேற்படிப்பு, வேலை என வாழ்க்கை இடம் மாறிக்கொண்டே இருந்தாலும் வரலாறு மீதான காதலும் மோகமும் மட்டும் இன்னும் அப்படியே இருப்பதால் சந்தர்ப்பம் கிட்டும் போதெல்லாம் இது சார்ந்த இடங்களைத் தேடிச்சென்று பார்ப்பதை வாடிக்கையாக்கிக் கொண்டுள்ளேன்.

ஹிட்லர்
ஹிட்லர்

ஹிட்லர் எனும் ஒரு சரித்திரத்தின் மீது எனக்கு எப்போதுமே ஒரு தீரா பிரமிப்பு உண்டு. ஹிட்லர் பற்றிய பல எதிர்மறையான கருத்துகளும் விமர்சனங்களும் வசைகளும் இருந்தாலும் எங்கோ ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து பிற்காலத்தில் மிகப் பலம் வாய்ந்த ஜெர்மனியையே தனது உள்ளங்கைக்குள் உள்ளடக்கிக்கொண்ட, உலகையே புரட்டிப்போட்ட உலக மகா யுத்தத்தின் அடி நாதமாய் இருந்த அந்த நாஜித் தலைவன் வாழ்ந்த வீழ்ந்த சரித்திரம் படிக்கப் படிக்க சுவை குறையா ஒரு சுவாரஸ்யம்..!! இன்றுவரை ஹிட்லர் பற்றிய எனது தேடல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது!!

அதனாலேயே முதன் முதலாக ஜெர்மனிக்குப் போகும் ஒரு வாய்ப்பு கிடைத்த போது நான் ஒரு கணம் கூட யோசிக்காமல் டிக் செய்தது பெர்லின்! ஏனெனில் ஹிட்லர் பற்றிய பெரும்பான்மையான நினைவுகள் பெர்லினைச் சுற்றியே சுழல்கின்றன! அதிலும் அண்ட சராசரத்தையே ஒரு உலுக்கு உலுக்கிய ஒருவன் தன் அந்திம காலத்தைக் கழித்த அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பெர்லின் பங்கரைக் காண அவ்விடம் செல்லலாமென தீர்மானித்தேன்.

ஏப்ரல் 20, 1889 அன்று மாலை 6:30 மணிக்கு ஜெர்மன் பவேரியாவிலிருந்து(Bavaria)எல்லையைத் தாண்டிய ஒரு சிறிய ஆஸ்திரிய கிராமமான பிரவுனாவ் (Braunau)இல் ஹிட்லர் பிறந்தார்! 1895 ஆம் ஆண்டில், ஆறாவது வயதில், இளம் அடோல்ஃப் ஹிட்லரின் வாழ்க்கையில் இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடந்தன. முதலாவதாக, அவர் ஆரம்பப் பள்ளியில் நுழைந்தபோது, அதுவரை அவர் அனுபவித்த சுதந்திரமான, கட்டுப்பாடற்ற, கவலையற்ற நாள்கள் முடிவுக்கு வந்தன. இரண்டாவதாக, அவரது தந்தை ஆஸ்திரிய சிவில் சேவையிலிருந்து ஓய்வூதியத்தில் ஓய்வு பெற்றார். ஆறு முதல் எட்டு வயதிற்கு இடையில், அடோல்ஃப் தனது குடும்பம் வசிக்கும் இடத்தை அடிப்படையாகக்கொண்டு இரண்டு வெவ்வேறு பள்ளிகளில் பயின்றார்.

ஹிட்லர்
ஹிட்லர்

மிகவும் திறமை மிக்க மாணவனாகத் திகழ்ந்த இவர், தொடர்ந்து அதிக மதிப்பெண் பெற்றதற்காகவும் வகுப்பில் சரியாகச் செயல்பட்டதற்காகவும் அவரது ஆசிரியர்களால் தொடர்ச்சியாகப் பாராட்டப்பட்டு வந்துள்ளார்! ஆயினும் secondary பாடசாலைக்கு மாறியபின் அவரது கல்வியில் சறுக்கல் ஏற்படத் தொடங்கியுள்ளது. 1905 ஆம் ஆண்டில் அவர் முறையான கல்வியை முற்றிலுமாக விட்டுவிட்டு, ஒரு நோக்கமில்லாமல் வாசிப்பு, ஓவியம் என அலைந்து திரிந்தபடியே தனது நீண்டகாலக் கனவான ஓவியராகும் இலட்சியத்தை நோக்கிப் பயணித்தார். 1907 ஆம் ஆண்டில், அவரது தாயார் இறந்தபின், ​​புகழ்பெற்ற அகாடமி ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸில் சேர அவர் வியன்னாவுக்குச் சென்றார்.

அங்கிருந்து ஜெர்மனியப் படையில் இணைந்தது முதல் ஒரு மாபெரும் சர்வாதிகாரியாக உருவெடுத்ததுவரை அது ஒரு தனிச் சரித்திரம்.. பெர்லின் பற்றிய என் அனைத்துக் கட்டுரைகளிலும் ஹிட்லரை தவறாமல் தொட்டுச் சென்றிருப்பேன்.. பிறப்பு, வளர்ப்பு, வாழ்வு, வளர்ச்சி, ஆட்சி, அதிகாரம் என பிரமிப்பின் உச்சத்திற்குச் சென்ற ஹிட்லரின் வாழ்க்கையின் வீழ்ச்சியும் இயற்கையின் நியதிப்படி இறுதிக்கட்டத்தை வந்தடைந்தது... உலக வல்லரசாக ஜெர்மனியை மாற்றியமைத்து, ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா என அனைத்து பலம் பொருந்திய வல்லரசுகளையே ஆட்டங்காண வைத்த அந்த ஆட்ட நாயகனின் அந்திம திக்திக் நிமிடங்கள் உறையவைக்கும் ஒரு தனி சரித்திரம்..

ரஷ்யர்கள் போலந்தின் குறுக்கே கிழக்கு ஜெர்மனியை நோக்கி முன்னேறியதும், நேச நாட்டு விமானப்படைகள் பெர்லினையும் குண்டுவெடிப்புத் தாக்குதல்களால் பேரழிவிற்கு உட்படுத்தியதால், ஜனவரி 1945 -ல் ஹிட்லர் பதுங்குக் குழிக்குப் பின்வாங்கினார். ஏப்ரல் 1945 தொடக்கத்தில், 2.5 மில்லியன் ரஷ்ய வீரர்கள் ஜெர்மன் தலைநகரை அடைந்தனர். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அவர்கள் நகர மையத்தை அடைந்து, ஹிட்லரின் அடைக்கலத்தின் சில நூறு கெஜங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள்.

இரண்டாம் உலகப் போர் பெர்லினை நெறுக்கிய போது, ​​இந்த பங்கர்கள் பொதுமக்களுக்கான வான்வழித் தாக்குதலிலிருந்து பாதுகாப்பாக ஒதுங்கவும், இராணுவ வீரர்களுக்கும், மிக முக்கியமான உறுப்பினர்களுக்குமான விரிவான நிலத்தடி தங்குமிடமாகவுமே செயல்பட்டது. இவ்வாறான வான்வழித் தாக்குதல் முகாம்கள் தலைநகர் முழுவதும் பல இருந்தன. இவை, பெர்லினின் கிட்டத்தட்ட 4 மில்லியன் மக்கள் தொகையை தாக்குதலின் போது பாதுகாப்பதற்கான இடமாகச் செயற்பட்டன.

பெர்லின் பங்கர் பதுங்குக் குழி ஆரம்பத்தில் ஹிட்லருக்கு ஒரு தற்காலிக வான்வழித் தாக்குதலிலிருந்து தப்பிக்க தங்குமிடமாகக் கட்டப்பட்டது. ஆனால், பெர்லினில் அதிகரித்த குண்டுவெடிப்பு தாக்குதலால் அது ஹிட்லரின் நிரந்தரத் தங்குமிடமாக விரிவாக்க வழிவகுத்தது. ஹிட்லரின் இந்தப் பதுங்குக் குழி 1936 மற்றும் 1944 என இரண்டு கட்டங்களாகக் கட்டப்பட்டு நிறைவடைந்தது.

இந்தப் பெர்லின் பதுங்குக் குழி ஜெர்மன் போர் தொழில்நுட்பத்தின் ஒரு மிகவும் அதிநவீனத் தயாரிப்பு ஆகும். இது 2,700 சதுர அடியில் 30 அறைகளையும், பல வெளியேறல்களையும் கொண்டிருந்தது. அதில் ஒன்று இப்போது வாகன நிறுத்தும் இடமாக மாறியிருக்கும் நியூ ரீச் சான்சலரியின் தோட்டத்திற்குச் செல்கிறது!

பெர்லின் பங்கரும் ஹிட்லரின் கடைசி நிமிடங்களும்... #MyVikatan

இந்த வசதி தரை மேற்பரப்பிலிருந்து 5 மீட்டர் கீழே உள்ளது. அதாவது இது பெர்லினின் நிலத்தடி நீருக்கும் கீழே இருக்கிறது! கவர் மற்றும் சுவர்கள் armored concreteடின் இரண்டு அடுக்குகளால் செய்யப்பட்டன. மேலும் இதற்குள்ளேயான காற்றோட்டம், மரண வாயுவுக்கு எதிரான வடிகட்டி (filter system against lethal gas) அமைப்பைக் கொண்டிருந்தது.

ஆங்கிலோ-அமெரிக்கன் வான்வழித் தாக்குதல்கள் கடுமையான சமயத்தில், அதாவது 1945 ஜனவரியில் ஹிட்லர் பதுங்குக் குழிக்கு வந்தபோது, ​​அவர் தனது பிரத்யேக ஊழியர்களையும் அவரது நெருங்கிய உதவியாளரான மார்ட்டின் போர்மனையும் அழைத்துச் சென்றுள்ளார்.

ஹிட்லரின் காதலியான ஈவா ப்ரான் பிப்ரவரியில் அங்கு வந்து அவருடன் இணைந்து கொண்டார். ஏப்ரல் மாதம், பெர்லினில் உள்ள பொது அறிவொளி பிரசார அமைச்சரும், என்.எஸ்.ஏ.டி.பி., நாஜி கட்சியின் தலைவருமான ஜோசப் கோயபல்ஸ் (Josef Goebbels, minister of public enlightenment propaganda and head of the NSADP, the Nazi party) தனது மனைவி மற்றும் 6 குழந்தைகளுடன் வந்து சேர்ந்தார்.

ஏப்ரல் 29 அதிகாலை 6 மணிக்கு, ஹிட்லர் ஈவா பிரானை மணந்தார். பின்னர் தனது கடைசி விருப்பத்தையும் ஒரு அரசியல் சாட்சியத்தையும் தனது செயலாளர் ட்ராட்ல் ஜங்கேக்கு ஆணையிட்டார். அவரது விருப்பப்படி, அவர் தனது உடலையும் ஈவா பிரானையும் தகனம் செய்ய வேண்டும் என்ற தனது தனிப்பட்ட விருப்பத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் விதித்தார். ‘எதிரிகளின் கைகளில் விழுவதை விட’ மரணத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

ஏப்ரல் 29 ஆம் தேதி காலையில், முசோலினியின் இத்தாலிய கட்சிக்காரர்கள் மற்றும் கிளாரெட்டா பெட்டாச்சி மூலமாக, மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட செய்தி பதுங்குக் குழிக்குள் இருந்த மக்களுக்குக் கிடைத்தது. இதையடுத்து ஹிட்லர் தனது ஊழியர்களை இறுதி முடிவுக்குத் தயார் செய்ய உத்தரவிட்டார். ஹிட்லரின் எஸ்.எஸ் மெய்க்காப்பாளர்கள் அவரது தனிப்பட்ட ஆவணங்களை அழித்து விட்டு வந்தனர். பங்கரின் இன்னோர் இடத்தில் மருத்துவர் ஒருவருக்கு, ஹிட்லரின் அல்சேஷன் நாய்க்கும் அவரது காதலி ஈவாக்கும் விஷம் தயார் பண்ண அறிவுறுத்தப்பட்டது. இதில் மிகவும் சோகமான விடயம் என்னவென்றால், ஏப்ரல் 29 அன்றுதான் அதுவரை காதலியாகவே இருந்து வந்த ஈவாவை, ஹிட்லர், தான் தற்கொலை செய்து கொள்ள சுமார் 40 மணிநேரத்திற்கு முன்னதாக திருமணம் முடித்து மனைவியாக்கிக் கொண்டார்! ஏப்ரல் 29 மதியம் ஹிட்லர் தனது உடனடி ஊழியர்களைத் தவிர மற்ற அனைவருடனும் கைகுலுக்கி விட்டுப் பின் பங்கர் அறைக்குள் சென்றுள்ளார்!

கடுமையான விஷக் காப்ஸ்யூல்ஸ் முதலில் ஹிட்லரின் நாய்க்கும் அதைத் தொடர்ந்து அவரது மனைவிக்கும் கொடுக்கப்பட்டது! தன் முடிவை தானே நிர்ணயிக்க ஆசைப்பட்ட அந்த ஆட்ட நாயகன், அதன் பின் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்! பேர்லின் பங்கரின் சுவர்களில் சிதறிய இரத்தத்துளிகளின் ஈரம் காயும் முன்பே தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களினதும் விதியை எதிரிகளின் கையில் விளையாடக் கொடுக்காது, தானே அதையும் வரைந்து முடித்து ஏப்ரல் 30, 1945 இல், அடோல்ஃப் ஹிட்லரும் ஈவா பிரானும் தங்கள் உயிரைப் பறித்துக்கொண்டு நியூ ரீச் சான்சலரியின் தோட்டத்தில் தகனம் செய்யப்பட்டனர்.

பெர்லின் பங்கரும் ஹிட்லரின் கடைசி நிமிடங்களும்... #MyVikatan

மே 1 ஆம் தேதி ஜோசப் கோயபல்ஸ்ஸும் அவரது மனைவி மக்தா கோயபல்ஸும் தங்கள் குழந்தைகளுக்கு பொட்டாசியம் சயனைடு விஷம் கொடுத்ததோடு தாமும் தற்கொலை செய்து கொண்டனர். அடுத்த நாள், பெர்லின் சரணடைந்தது! சோவியத் ராணுவம் அனைத்து அரசாங்கக் கட்டடங்களையும் பதுங்குக் குழியையும் ஆக்கிரமித்தது.

2004 ஆம் ஆண்டில், பதுங்குக் குழியில் கடைசி நாள்களைப் பற்றிய ஜெர்மன் திரைப்படம் (இத்தாலி, ரஷ்யா மற்றும் ஆஸ்திரியாவுடன்) “டவுன்ஃபால்” (Der Untergang) வெளியிடப்பட்டது.

நான் இந்த பெர்லின் பங்கருக்குள் போகும்போதே அந்தச் சுவர்களில் சிந்திய குருதி வாடை என் நாசிக்குள் நுழைவது போன்ற ஒரு உணர்வு! இனம்புரியாத ஒரு அமைதி அங்கே குடிகொண்டு உள்ளது. அது தற்போது சுற்றுலாப் பயணிகளுக்கான ஒரு மியூசியம் ஆக மாற்றப்பட்டிருந்தாலும் அங்கே ஒரு மயான அமைதி நிலவுவதை உணர முடிகின்றது. அதன் ஒவ்வொரு தளத்திலும் ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு புகைப்படங்களாகவும் ஆவணங்களாகவும் கல்வெட்டாகவும் வீடியோக்களாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அவர் பயன்படுத்திய தளபாடங்கள், பொருள்கள், ஆடைகள் என அத்தனையும் மிகவும் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன.. உள்ளே புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளதால் அந்த ஆவணங்களையும் நினைவுகளையும் மனதில் பத்திரப்படுத்தியவாரே ஒவ்வொரு அறையாய் நகர்ந்து சென்றேன்..

ஒரு சாதாரண குடும்பத்தில் ஆறாவது பிள்ளையாகப் பிறந்த ஒரு குழந்தை எப்படி பிற்காலத்தில் பலம் வாய்ந்த ஜெர்மனியின் தலைவனாக உருவெடுத்து, உலகையே உலுக்கிப் போட்ட, உலகப்போரின் பிரதான சூத்திரதாரியாக மாறினான் என்பது வரையிலான அனைத்து வரலாறுகளும் அங்கே காட்சி வடிவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன..

ஹிட்லரின் நாஜிப் படைகள் கொன்று குவித்த லட்சக்கணக்கான கோடிக்கணக்கான மக்களின் புகைப்படங்களைப் பார்க்கும் பொழுது ரத்தம் உறைந்து போகிறது. கூட்டி அள்ளி கொள்ளி வைப்பதற்காகக் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளைப் போல அங்கங்கே மனித உடல் குவியல்களைப் பார்க்கும்பொழுது மனம் ஒருகணம் மரத்துப்போகிறது!! வரலாற்றின் வழிகளில் சிந்தப்பட்ட ரத்தத் துளிகளின் வாடை இன்னும் வலியோடு வீசுகிறது! அவரால் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி உயிர்களின் ஓலம் இன்னும் அந்த இடத்தைச் சுற்றி உரக்க ஒலித்தபடி உள்ளதாய் உணர்ந்தேன். நிர்வாணம் ஆக்கப்பட்ட பெண்களையும் நிர்கதியாக விடப்பட்ட குழந்தைகளையும் பார்க்கும்பொழுது உடைந்து சிதறும் உள்ளம், கருகிக் குவித்த உடல்களைப் பார்க்கும் பொழுது கரித் துண்டாகி கீழே விழுகிறது...

பெர்லின் பங்கரும் ஹிட்லரின் கடைசி நிமிடங்களும்... #MyVikatan

எல்லாவற்றிற்கும் இரு பக்கங்கள் இருப்பது போலவே ஹிட்லருக்கும்! அவர் அன்று கண்ட கனவின் விளைவே இன்றைய ஒன்றிணைந்த ஐரோப்பாவும் யூரோ நாணயமும். ஹிட்லரின் மறு பக்கத்தையும் புரட்டிப்போட்டு நான் படித்திருந்ததால் அங்கே காணும் காட்சிகளை வைத்து அந்த சர்வ வல்லமை பெற்று வாழ்ந்து வீழ்ந்தவன் அதே மேல் ஒட்டு மொத்த வெறுப்பை என்னால் உமிழ முடியவில்லை.

ஹிட்லர் இறுதியாகத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் அறை, அவர் கடைசியாகப் பயன்படுத்திய அனைத்துப் பொருள்களும் தளபாடங்களுடனும் சுற்றிலும் கண்ணாடியால் மூடப்பட்டு பத்திரமாக பாதுகாக்கப்பட்டுள்ளன..

ஒட்டுமொத்த உலகின் தலையெழுத்தையே மாற்றி எழுதிய ஒரு சர்வாதிகாரி தன் இறுதி நிமிடங்களில் தனது தலைவிதியைத் தானே நிர்ணயிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடு தனது உயிரை மாய்த்துக்கொண்ட அந்தக் கடைசி திக் திக் நிமிடங்கள் நிறைந்த அந்த அறையைப் பார்க்கும் பொழுது ஏதோ இனம் புரியாத ஓர் உணர்வு உச்சி முதல் உள்ளங்கால் வரை பரவிச் சிலிர்த்துப் போகிறது!! சொல்லில் அடங்காத ஒரு சோகம், ஒரு பாரம் மனதை அழுத்த, கனத்த இதயத்துடன் அந்தக் கல்லறையை விட்டு வெளியேறினேன்...

-றின்னோஸா-

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு