இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப்படும் லதா மங்கேஷ்கர் பாரத் ரத்னா, பத்மபூஷண், பத்மவிபூஷண் உட்பட ஏராளமான உயரிய விருதுகளைப் பெற்றவர். தனது 70 வருடங்களுக்கும் மேலான கலையுலக வாழ்க்கையில் 30,000-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களைப் பாடியவர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பல் உறுப்புகள் செயலிழந்ததால் கடந்த ஜனவரி 6-ம் தேதி, தனது 92 வயதில் மறைந்தார். ஒரு சகாப்தத்தின் இசைப் பயணம் முடிந்தது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில் மார்ச் 27-ம் தேதி அன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவின்போதும், தற்போது லாஸ் வேகாஸில் நடைபெற்ற 64-வது கிராமி விருதுகளிலும் லதா மங்கேஷ்கர் நினைவுகூரப்படாமல் விடுபட்டிருப்பது, இசை ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பலரும் இதைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
லாஸ் வேகாஸில் 64-வது கிராமி விருதுகள் கோலாகலமாக நடைபெற்றது. இசைத்துறையில் சிறப்பான பங்காற்றிய கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. நினைவு அஞ்சலி செலுத்தும் பிரிவில் இந்த ஆண்டு நம்மை விட்டு கடந்து சென்ற இசைக் கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும். ஆனால், அதில் இந்தியாவின் குரலாக விளங்கிய லதா மங்கேஷ்கரை நினைவுகூராததால் பலரும், ஹாலிவுட்டின் மிகப்பெரிய இசை விருதுகளை நடத்தும் நிறுவனமான `ரெக்கார்டிங் அகாடமி'யை விமர்சித்து வருகின்றனர்.

பன்முகத் தன்மையோடு இசை விருதுகள் வழங்கும் விழா எனக் குறிப்பிடப்படும் கிராமி விருதுகள், அமெரிக்க இசையை மட்டும் கெளரவிப்பதாகவும், பன்முகத்தன்மை என்ற வார்த்தையிலிருந்து தவறிவிட்டதாகவும், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த ஜனவரி 15-ம் தேதி, இந்தியாவின் மூத்த இசையமைப்பாளரான பப்பி லஹிரி (Bappi Lahiri) தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறலால் (obstructive sleep apnea) இறந்தார். அவரையும் கிராமி விருதுகள் நிகழ்ச்சி நிறைவுகூராமல் ஒதுக்கிவிட்டது என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டு வருகிறது.