Published:Updated:

900 பெயர்களைக் கூறி அசத்தும் கோவை சிறுமி ஆராத்யா!

900 பெயர்களைக் கூறி அசத்தும் கோவை சிறுமி ஆராத்யா!
900 பெயர்களைக் கூறி அசத்தும் கோவை சிறுமி ஆராத்யா!

குழந்தைகள் எதுசெய்தாலும் அழகுதான். ஆனால், ஆராத்யா செய்வது அழகு மட்டுமல்ல, சாதனையாகவும் மாறியுள்ளது. ஆம்! இரண்டு வயதான ஆராத்யா தனது நினைவாற்றல் திறனால் ``இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்ல்“ பதிவு செய்துள்ளார் என்பது ஆச்சர்யம்தானே? உலக நாடுகளின் பெயர்கள் தொடங்கி, அந்த நாடுகளின் கொடிகள், இந்திய மாநிலங்கள், வண்ணங்கள், வடிவங்கள், உலக அதிசயங்கள், பறவைகள், பூச்சிகள், கடல் விலங்குகள் என்று 80-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் சுமார் 900 வார்த்தைகள் நினைவில் வைத்து, கேட்கும்போது பிழையில்லாமல் தெளிவாகச் சொல்லுகிறார் கோவை சிறுமி ஆராத்யா. இது மட்டுமல்லாமல் ஆங்கிலத்தில் பாட்டுப் பாடுதல், திசைகள், பருவங்கள், மாதங்கள், இந்தி மொழியில் ஒன்று முதல் 20 வரை எண்களைச் சொல்லுவது என்று இவரின் திறமைகளின் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது.

எல்லோரையும் ஈர்க்கும் ஆராத்யாவின் நினைவாற்றல் திறனைப் பார்ப்பவர்கள் `பெரியவர்களுக்கே சவால் விடுவார் ஆராத்யா' என்று சொல்லத் தயங்குவதே இல்லை. `ஆராத்யா கோவைக்குக் கிடைத்த பெருமை' என்று அக்கம் பக்கம் வீட்டினர் கொஞ்சி வருகின்றனர் இந்தச் செல்லச் சிறுமியை. சூப்பர் ப்ரெயின் சுட்டியின் நினைவாற்றல் திறனைப் பற்றி அவரின் அம்மா இந்துவிடம் பேசினோம்.

``ஆராத்யாவுக்கு ஒன்றரை வயதிலிருந்தே கதைகள் சொல்ல ஆரம்பிச்சோம். அப்படிச் சொல்லி, நான்கு புத்தகங்களை முடிச்சுட்டோம். ஒருநாள் முதல் கதை புக் எடுத்துக் காட்டினேன். அந்தப் புத்தகத்தில் இருக்கிற படங்களின் பெயர்கள் தவறில்லாமல் சொன்னாள். நன்றாக நினைவில் வைத்துக்கொள்கிறாளே என்று, சின்னச் சின்ன வார்த்தைகளைச் சொல்லிக்கொடுத்தோம். காட்டு விலங்குகள், பழங்கள், எண்கள், காய்கறிகள், நாட்டின் பெயர்கள், கொடிகள் படங்கள் உள்ளிட்டவற்றைக் காட்டினோம். மூன்று நாள்களுக்குப் பிறகு நான் கேட்காமலே அவளாகவே சொன்னாள். நாங்க இதுவரைக்கும் 35 புத்தகங்களிலிருக்கும் வார்த்தைகளைக் கற்றுக்கொடுத்திருக்கோம். அவளும் ஆர்வத்தோடு தெரிந்துகொள்கிறாள். நாங்க காய்கறி மார்க்கெட் போகும்போது, `மா தி இஸ் ஆப்பிள்” என்று ஒவ்வொரு பழங்களின் பெயர்களைச் சொல்லுவா. இந்தியாவில் இருக்கும் மாநிலங்களை நாங்க படங்களாச் சொல்லித்தரல. வடிவங்களாகச் சொல்லிக் கொடுத்தோம். அது அவளின் மனதில் நன்றாகப் பதிந்துவிட்டது. எப்போ கேட்டாலும் அந்த மாநிலத்தின் வடிவத்தை எடுத்து பெயர் சொல்லுவாள். உலக அதிசயங்கள் அனைத்தையும் சொல்லுவா! நாங்க இவளுடைய நினைவாற்றல், கவனிக்கிற விதம், உள்வாங்கும் சக்தி ஆகியவற்றைப் பார்த்தவுடனே ஆராத்யாவை உற்சாகப்படுத்த ஆரம்பிச்சிட்டோம். நானும் என் கணவரும் எங்க பாப்பாவுக்குப் பக்க பலமா இருக்க நினைக்கிறோம். அதேநேரம், அவ விரும்பாத எதையும் திணிக்கக் கூடாதுனு உறுதியா இருக்கோம். அவளைச் சாதிக்க வைப்போம். எல்லாமே அவளுடைய விருப்பம்தான். அவ இதுவரைக்கும் கார்ட்டூன்ஸ் பார்த்ததில்லை. சோட்டா பீம், டோரா போன்றவற்றை கார்ட்டூன்கள் புக்ஸ்லதான் பார்த்திருக்கா. நாங்க இதுவரைக்கும் ஆராத்யா முன்னாடி டி..வி போட்டதில்லை. அவளுக்கு புக்ஸ் மட்டும்தான் உலகம். வாரத்தில் நான்கு நாள் வெளிய அழைத்துச் செல்லுவோம். நல்ல விளையாட விடுவோம்" என்று பெருமையுடன் சொல்லிவந்தவரிடம், குழந்தைகளை சாதனையாளராக மாற்றுவது எப்படியெனக் கேட்டதற்கு,

``எல்லாக் குழந்தைகளுக்கும் திறமைகள் இருக்குது. அதைப் பெற்றோர்கள் கண்டுபிடிச்சு உற்சாகப்படுத்தினாலே போதும் அவர்கள் நிச்சயம் சாதிப்பாங்க. நாங்க அவளுடைய குழந்தைப் பருவத்தை அவ போக்கிலே விட்டுருக்கோம். அவளுக்கு எதில ஆசையோ அதை செய்யச் சுதந்திரம் கொடுப்போம். இப்ப இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்ல பதிவு செய்ததைப் போல கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்க்கு முயற்சிகளைச் செஞ்சுட்டிருக்கோம்" என்கிறார் ஆராத்யா அம்மா இந்து.

சாதனைக்குத் தயாராகும் சுட்டி ஆராத்யாவுக்கு ஆயிரம் பூங்கொத்துகள்!