Published:Updated:

`பிள்ளைத் தமிழ் மர பொம்மைகள்’ விற்கும் ஃபேஷன் டிசைனர் கார்த்திக் சங்கர்!

"குழந்தைங்களை மனசுலவெச்சு தொடங்கப்பட்ட இந்தப் பொம்மைப் பொருள் விற்பனையில, வயசான நபர்களும் மத்திய வயசுக்காரங்களும்தான் அதிகளவு பொருள்களை விரும்பி வாங்குறாங்க. அவங்களோட சிறுவயது நினைவலைகளை ஞாபகப்படுத்தியதா மகிழ்ச்சியோடு சொல்றாங்க."

`பிள்ளைத் தமிழ் மர பொம்மைகள்’ விற்கும் ஃபேஷன் டிசைனர் கார்த்திக் சங்கர்!
`பிள்ளைத் தமிழ் மர பொம்மைகள்’ விற்கும் ஃபேஷன் டிசைனர் கார்த்திக் சங்கர்!

விருப்பத்துடன் ஒரு படிப்பை முடித்துவிட்டு, விருப்பமே இல்லாத ஒரு வேலைக்குச் சென்று காலத்தைக் கடத்துவது ஒருவகை என்றால், `யார் என்னவோ சொல்லிவிட்டுப் போகட்டும்... என் மனசுக்குப் பிடிச்ச வேலையைத்தான் செய்வேன்' என வைராக்கியம் உந்தித்தள்ளுவது மற்றொரு வகை. நம்மில் பலரும் அந்த இரண்டாவது பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு இன்னும் தயங்கிக்கொண்டே இருக்கலாம். ஆனால், திருப்பூரைச் சேர்ந்த கார்த்திக் சங்கர் அப்படியல்ல. ஃபேஷன் துறை சார்ந்த படிப்பை முடித்துவிட்டு, அதில் நாட்டமில்லாமல் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்களை விற்பனை செய்துவருகிறார்.

`பிள்ளைத்தமிழ் மர பொம்மைகள்' என்ற பெயரில் கார்த்திக் சங்கரும் அவரின் நண்பர்களும் இணைந்து நடத்திவரும் இந்தப் பொம்மைக் கடையில், எந்தவிதமான ரசாயனக் கலவைகளும் சேர்க்கப்படாத பாரம்பர்ய சிறுவர் விளையாட்டுப் பொருள்களை மட்டுமே விற்பனை செய்கிறார்கள். இந்தக் காலத்துக் குழந்தைகள் கண்டிராத கைச்சக்கரம், மண் குருவி, கிக்கிட்டி, மரவண்டி, நத்தைவண்டி, கிலுகிலுப்பை போன்ற விளையாட்டுப் பொருள்களை எல்லாம் மீண்டும் நம் வீட்டுக் குழந்தைகளின் கையில் கொண்டுசேர்ப்பதே தங்களின் நோக்கமும் லட்சியமும் என்கிறார்கள் இந்த இளைஞர்கள்.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்குதான் பிள்ளைத்தமிழ் மர பொம்மைகள் கடையைக் கண்டோம். வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருந்த கடையைப் பார்த்ததும் ``இதன் உரிமையாளர் யார்?'' என்று நாம் கேட்க, ``என்னைப் பார்த்தா ஓனரா தெரியலையாங்ணா?'' என்று சிரித்தவாறே முன்வந்தார் இளைஞர் கார்த்திக் சங்கர்.

``எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. குடும்பத்தோடு திருப்பூர்லதான் வசிக்கிறோம். கல்லூரியில கார்மென்ட் டிசைனிங் புரொடக்‌ஷன் படிச்சேன். அந்த வேலையில என்னால முழுசா கவனம் செலுத்த முடியலை. ஏதோ ஒண்ணு தப்பா இருக்கேன்னு குழப்பத்துல இருந்தேன். அந்த நேரத்துலதான் ஊத்துக்குளியில இருக்கும் இயல்வாகை அமைப்பு நடத்திய சில நிகழ்வுகள்ல பங்கெடுக்க ஆரம்பிச்சேன். அங்கே நம்மாழ்வார் ஐயாவின் வார்த்தைகளைப் பின்பற்றி நடத்தப்படும் பனை விதை சேகரிப்புப் பயணம், பனைமரம் பாதுகாப்பு சைக்கிள் பயணம் போன்ற மரபுசார்ந்த நிகழ்ச்சிகள்ல ஆர்வத்தோடு கலந்துக்கிட்டதுக்கு அப்புறம்தான் என் பாதையும் இதுவேன்னு ஒரு நம்பிக்கை வந்துச்சு.

மண்ணுக்கும் மக்களுக்கும் தீங்கு இல்லாத ஒரு தொழிலைத்தான் நாம எடுத்துச் செய்யணும்னு ஆணித்தரமாக முடிவுபண்ணேன். இதுக்காக சென்னையைச் சேர்ந்த ஜெகதீஷ் என்கிற அண்ணன் எனக்கு உதவினார். அவருடன் சேர்ந்து சில காலம் பயணிச்சேன். இயற்கை வாழ்வியல், தற்சார்பு வாழ்க்கைனு ஆரோக்கியமான உலகம் நம்மைச் சுற்றி இருப்பது தெரிஞ்சது. இவற்றுக்குத் தொடர்புடைய ஏதாவது ஒரு தொழிலைத் தொடங்கலாம்னு யோசிச்சப்போதான் ஜெகதீஷ் அண்ணனே `குழந்தைகளுக்கான மர விளையாட்டுப் பொம்மைகளை விற்பனை செய்யலாம்'கிற ஐடியா தந்தார்.

இன்னிக்கு குழந்தைகளுக்கு நாம வாங்கித் தரும் எல்லா விளையாட்டுப் பொருளுமே பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தியும், ரசாயனக் கலவைகளை அள்ளி இரைச்சும்தான் உருவாக்கப்படுது. குறிப்பா, மோட்டார் விளையாட்டுப் பொருள்கள்தான் சந்தையில குவிஞ்சு கிடக்குது. அதைவெச்சு விளையாடுறது குழந்தைங்களுக்கு ஆரோக்கியமில்ல.

`இன்னிக்குப் புழக்கத்துல இல்லாத மண்ணின் கலாசாரம் சார்ந்த பல விளையாட்டுப் பொருள், பொம்மைகள் குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்தலாம். அதுக்கு நாம மர பொம்மை விளையாட்டுப் பொருள்களை மக்கள்கிட்ட கொண்டுபோலாம்'னு நண்பர்கள் நிதிஷ், தமிழ்செல்வன், பூபதி ஆகியோரோடு சேர்ந்து முடிவெடுத்தேன். அவங்க மூணு பேரும் அவங்கவங்க வேலையைச் செஞ்சுக்கிட்டே பொம்மை விற்பனையையும் பார்த்துக்கிட்டாங்க. நான் மட்டும் இதே தொழில்ல முழு நேரமா ஈடுபடத் தொடங்கினேன்.

பொருட்காட்சி அரங்குகள், கண்காட்சி நடைபெறும் ஊர்கள், இயற்கை வேளாண் சந்தைகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள்ல எங்க ஸ்டால்களை அமைச்சோம். அதுபோக வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் மூலமாவும் வாடிக்கையாளர்கள் கிடைச்சாங்க. இதுல ஆச்சர்யம் என்னன்னா, குழந்தைங்களை மனசுலவெச்சு தொடங்கப்பட்ட இந்தப் பொம்மைப் பொருள் விற்பனையில, வயசான நபர்களும் மத்திய வயசுக்காரங்களும்தான் அதிகளவு பொருள்களை விரும்பி வாங்குறாங்க. அவங்களோட சிறுவயது நினைவலைகளை ஞாபகப்படுத்தியதா மகிழ்ச்சியோடு சொல்றாங்க.

இந்தத் தொழில்ல, லாபம் பார்க்கிற அளவுக்கு எங்களுக்கு இன்னும் வருமானம் வரலை. இருந்தாலும் மர பொம்மைகளை அவங்க பிள்ளைங்களுக்கும் பேரக்குழந்தைங்களுக்கும் ஆசையோடு வாங்கித் தருவதைப் பார்க்கும்போது, மனசுக்கு நிறைவாவும் நம்பிக்கையாவும் இருக்கு. இதே நம்பிக்கையை எங்க பெற்றோர்களும் எங்க மேல வெச்சா, நாங்க நிச்சயமா ஜெயிச்சுக்காட்டுவோம்'' என்கிறார் இளைஞர் கார்த்திக் சங்கர்.