Published:Updated:

தண்ணீருக்கு அடியில் யோகாசனம்... அசத்தும் நெல்லைச் சிறுமி பிரிஷா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தண்ணீருக்கு அடியில் யோகாசனம்... அசத்தும் நெல்லைச் சிறுமி பிரிஷா!
தண்ணீருக்கு அடியில் யோகாசனம்... அசத்தும் நெல்லைச் சிறுமி பிரிஷா!

"இயல்பாவே அவளுக்கு நெளிவுத்தன்மை மிக்க உடம்பு. அதனால நம்ம சிரமமா நினைக்கிற ஆசனங்களையும் அவ ரொம்ப ஈஸியா பண்ணிருவா. வெளிநாட்டிலிருந்து ஜிம்னாஸ்டிக் போஸ்களை அனுப்பி வச்சா அதையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செஞ்சு காட்டிருவா பிரிஷா."

யோகாசனத்தில் பல சாதனைகள் படைத்த நெல்லையைச் சேர்ந்த ஒன்பது வயதுச் சிறுமியான பிரிஷாவுக்குச் சென்னையில் உள்ள நியூ ஜெருசலேம் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரவிக்க உள்ளது. திருநெல்வேலியைச் சேர்ந்த கார்த்திக் - ப்ரியா தம்பதியரின் பத்து வயது மகள் பிரிஷா. இவரின் தாயார் மற்றும் பாட்டிக்கு யோகாவில் நல்ல பரிச்சயம் உண்டு. அதைப் பார்த்து வளர்ந்த பிரிஷாவுக்கு இயல்பாகவே யோகாவில் ஆர்வம் வந்து அதைக் கற்க ஆரம்பித்திருக்கிறார். 

கடந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தன்று இரண்டு மணி நேரத்திற்குள் எட்டு உலக சாதனைகளை செய்து அசத்தினார் பிரிஷா. இரண்டு மணிநேரத்திற்குள் எட்டு உலக சாதனைகளை சிறு வயதிலேயே நிகழ்த்தியதால் இன்னொரு உலக சாதனை பட்டமும் வழங்கப்பட்டது. இதோடு சேர்த்து இதுவரை மொத்தம் பதினான்கு உலக சாதனைகளுக்குச் சொந்தக்காரராக இருக்கிறார் பிரிஷா. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் முதல்வர் நாராயணசாமி பிரிஷாவை பாராட்டி பரிசு வழங்கியுள்ளனர். 

கண்ட பேருண்டாசனத்தை ஒரு நிமிடத்தில் 16 முறை செய்து முதல் உலக சாதனையை படைத்தார் பிரிஷா. ஏகபாத வாம தேவாசனத்தை 100 மீட்டர் முன்பக்கமாகவும் பின்பக்கமாகவும் தண்ணீரில் செய்து சாதனை படைத்தார். ஏகபாத வாம தேவாசனத்தை 130 முறை முன்பக்கமாகவும் பின்பக்கமாகவும் டம்ப்ளிங் செய்து சாதனை படைத்தார். சுப்த பத்மாசனம் மற்றும் குப்த பத்மாசனத்தைத் தண்ணீரில் 100 மீட்டர் நீந்தி சாதனை படைத்தார். நீருக்கடியில் 50 யோகாசனங்களைச் செய்துள்ளார். பத்மாசனத்தில் 130 முறை தண்ணீரில் டம்ப்ளிங் செய்த சாதனையும் உலக சாதனைகளில் அடங்கும். 

மிக இளம் வயதில் 14 உலக சாதனைகளை நிகழ்த்திய காரணத்திற்காக நியூ ஜெருசலேம் பல்கலைகழகம் பிரிஷாவிற்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வரும் குடியரசு தினத்தன்று வழங்க உள்ளது. யோகா லிட்டில் மாஸ்டர், யோகா ஸ்ரீ, யோகா ரத்னா, யோகா ராணி, யோகா கலா, ஆசனாஸ்ரீ, இளம் சாதனையாளர், சாதனைச் செல்வி, யோகா சாதனா என பிரிஷாவிற்கு கிடைத்த பட்டங்களோடு தற்பொழுது டாக்டர் பட்டமும் இணையவிருக்கிறது. 

பிரிஷாவின் அம்மா பிரியா:

“நான் யோகாவுல எம்.எஸ்.சி பண்ணி இருக்கேன். நான் யோகா பண்ணிட்டு இருக்கும்போது என் மகள் அவளாகவே வந்து ஒவ்வொரு ஆசனங்களையும் செய்ய ஆரம்பிச்சா. நானும் அவளோட ஆர்வத்தை புரிஞ்சுகிட்டு தொடர்ந்து சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சேன். யோகாக்குன்னு தனியா எந்த மாஸ்டரையும் நாங்க வைச்சிருக்கிறது இல்லை. எனக்கு தெரிஞ்ச ஆசனங்களை நான் சொல்லிக் கொடுக்கிறது வழக்கம். சில கஷ்டமான ஆசனங்களை கூகுள்ல தேடிப் பாத்து சொல்றேன். அதை என் பொண்ணு எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பண்ணிக் காட்டுவா. 100க்கும் மேற்பட்ட பதக்கங்களை மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் வாங்கியிருக்கா. அதனாலதான் இந்த உலக சாதனை படைக்கலாம் என்ற எண்ணமே வந்தது. அந்த எட்டு உலக சாதனைகளையும் அவ ரொம்ப சீக்கிரமா இரண்டு மணி நேரத்தில் செஞ்சு முடிச்சா. அதுக்காகவே இன்னொரு உலக சாதனையும் சேர்த்து கொடுத்தாங்க. 

தரையில் மட்டுமில்லாமல் தண்ணீரிலும் யோகாசனங்களை அதிக நேரத்திற்குச் செய்வது, அதிகமுறை செய்வது என நிறைய உலக சாதனைகளை பண்ணியிருக்கா பிரிஷா. யோகா மட்டுமில்லாம அவளுக்கு சூட்டிங், கராத்தே, டான்ஸ், ட்ராயிங் எல்லாம் தெரியும். ஆனால் அதிக ஆர்வம் யோகா மேலதான் இருக்கு. இயல்பாவே அவளுக்கு நெளிவுத்தன்மை மிக்க உடம்பு. அதனால நம்ம சிரமமா நினைக்கிற ஆசனங்களையும் அவ ரொம்ப ஈஸியா பண்ணிருவா. வெளிநாட்டிலிருந்து ஜிம்னாஸ்டிக் போஸ்களை அனுப்பி வச்சா அதையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செஞ்சு காட்டிருவா பிரிஷா. பிரிஷா, நான், என் அம்மா மூணு பேரும் சேர்ந்து தண்ணீருக்கடியில் யோகாசனம் பண்ணி உலக சாதனை நிகழ்த்த திட்டமிட்டிருக்கோம். டாக்டர் பட்டம் வாங்குனதுக்கு அப்புறம் ஒரு கிராமத்துக்குப் போய் அங்க யோகாசனத்தை முழுமையாக இலவசமாக நானும் பிரிஷாவும் கற்றுக் கொடுக்க முடிவு பண்ணி இருக்கோம். யோகாவோட பயன்கள் எல்லாரையும் போய் சேரணும் அப்படிங்கறது தான் எங்களுடைய எண்ணம்” என்று கூறினார். இறுதியாகப் பேசினார் பிரிஷா.

“ ஃபோர்த் ஸ்டாண்டர்ட்தான் படிச்சிட்டு இருக்கேன். டாக்டர் பட்டம் வாங்க போறது ரொம்ப ஹாப்பியா இருக்கு. டெய்லி யோகா பண்றதுனால நம்மளோட கவனம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். அம்மாட்ட இருந்து இதெல்லாம் கத்துக்க ஆரம்பிச்சேன்.” என்று புன்னகையுடன் சுருக்கமாக முடித்துக்கொண்டார் பிரிஷா. 

இன்னும் பல உலக சாதனைகள் படைக்கவும் திட்டமிட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் பிரிஷா. செய்த சாதனைகளுக்கும், இனி செய்யப்போகும் சாதனைகளுக்கும் சேர்த்து “வாழ்த்துகள் பிரிஷா”. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு