Published:Updated:

பள்ளியின் இறுக்கத்தைக் கரைத்த, கல்லூரி மாணவர்கள் - ‘ஒன்டே டீச்சிங்!’

பள்ளியின் இறுக்கத்தைக் கரைத்த, கல்லூரி மாணவர்கள் - ‘ஒன்டே டீச்சிங்!’
பள்ளியின் இறுக்கத்தைக் கரைத்த, கல்லூரி மாணவர்கள் - ‘ஒன்டே டீச்சிங்!’

``ஒரு பொண்ணு, ‘பார்த்து, கேட்டெல்லாம் எழுதமாட்டேன், தெரிஞ்சா மட்டும்தான் பதில் எழுதுவேன்’னு சொன்னது, ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் இருந்துச்சு”

`டேய், ஸ்டோரி கேளுடா...’
`சார், டைமில்ல... டைமில்ல.’

`பாடம் கவனிச்சியாடா?’
`விஜய் மேல, சத்தியமா கவனிச்சேன் மிஸ்!’


ஆசிரியருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குமான உரையாடல் இது, என்றால் நம்பமுடிகிறதா. ஒருநாள் பயிற்சி ஆசிரியர்களாக வந்த கல்லூரி மாணவர்களிடம்தான் இப்படி உரிமையாகப் பதில் பேசிக் கலகலப்பூட்டியிருக்கிறார்கள் பள்ளி மாணவர்கள்.

அழகர்கோயில், சுந்தரராசா அரசு உயர்நிலைப்பள்ளியில், ஆங்கில மொழிப்பயிற்சி அளிக்க மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதுகலை இறுதியாண்டு ஆங்கிலத்துறை மாணவர்கள் 40 பேர் வந்திருந்தனர். மலையடிவாரப் பகுதி என்பதால் பள்ளியெங்கும் குளுகுளு தென்றலும் நிழல் பொழியும் மரங்களுமாக இயற்கைச்சூழல். காலையிலிருந்து முழுநாளும் ஆங்கிலம். பல்வேறு வகுப்புகளுக்கு விதவிதமாகப் பாடம். மரத்தடிகள் வகுப்பறைகளாயின.

ஒருநாள் ஆசிரியர் அனுபவம் எப்படி இருந்தது என்பதைப் பகிர்ந்துகொள்ளச் சொன்னேன். ``6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை விதவிதமான மாணவர்கள். `கொஞ்ச நஞ்சமா பாஸ்? நிறைய இருக்கு குறிச்சுக்கோங்க, சொல்றோம்’ என உற்சாகமாகத் தொடங்கினர் காலேஜ் மக்காஸ்.

``எனக்கு 6-ம் வகுப்பிலிருந்து ஒரு பொண்ணும், இரண்டு பசங்களும். வேடிக்கை பார்த்துட்டே இருந்தவன்கூட, நான் சொன்னக் கதையை மூணு தடவை திரும்பத் திரும்பத் தடுமாறாம சொன்னான். ஆனா, அவன் பெயரைத் தப்பில்லாம எழுதத் தெரியலை. நிறைய உதாரணங்கள் சொல்லித் தந்தேன். கன்டென்ட்டைவிட, உதாரணங்கள்தான் மனசுல தங்கிடுது. டீச்சிங்னா, பசங்க லெவலுக்கு இறங்கிடணும்ல!’’ என்றார் பிரியதர்ஷினி. 

``யாரும் உடனிருந்து சொல்லிக் கொடுக்காமலே பலவற்றைச் சரியாகப் புரிந்து நடந்துகொள்ளும் பக்குவம் மாணவர்களிடம் இருக்கிறது’’ எனச் சொல்லும் நிவேதா, ஒன்பதாம் வகுப்புக்குப் பாடம் நடத்தினார். ``ஒரு பொண்ணு, ‘பார்த்து, கேட்டெல்லாம் எழுதமாட்டேன், தெரிஞ்சா மட்டும்தான் பதில் எழுதுவேன்’னு சொன்னது, ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் இருந்துச்சு” என்றதும், எல்லோரும் தங்களையெண்ணி ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டனர். “அவள், டாக்டர் ஆகணுமாம். பியூர் சயின்ஸ் கோர்ஸ்தான் எடுப்பாளாம். பிளான்லாம் பண்ணிட்டா!’’ என்று நிவேதா சொன்னதும் பலரும் அது நினைவாகட்டும் என்பதாகக் கைதட்டினர்.

``மொழியை மட்டுமல்ல, எதையும் ஒரே மூச்சில் கற்க முடியாது. எல்லாச் சொற்களும் தகவல்களும் தினமும் அவர்களுக்கு விருப்பமானவற்றின் ஊடாகச் சென்றுகொண்டேயிருக்க வேண்டும். அதுதான் எளிய கல்வி, எல்லோருக்குமான நிரந்தரக் கல்வி. ``இங்கன்னு இல்ல, எல்லா ஸ்கூல்லயும் கவிதை, கட்டுரைன்னு போட்டிகள்லாம் ஏனோதானோன்னு கடமைக்குத்தான வைக்கிறாங்க? அதைச் சரிபண்ணனும். இங்கிலீஷ்லேயும் போட்டிகள் வைக்கணும்.” எனக் கல்வி குறித்த தெளிவோடு பேசுகிறார் ஜெமிமா மேலும், “ராக்கெட் பற்றிக் கேட்டால், ஜெட்டைச் சொல்றாங்க. எல்லாத்தையும் பசங்க தெளிவா தெரிஞ்சிக்கணும். அப்போதான் தனக்கு என்ன தேவைன்னு அவங்களால தெரிஞ்சுக்க முடியும்” என்கிறார் ஜெமிமா. 

``நான் 10-வதுக்குப் பாடம் எடுத்தேன். பெரும்பாலும், கல்விசார்ந்த பின்புலத்தோட வர்றவங்கதான் படிக்கிறாங்க. அப்படியான சூழல் இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க? நாமதான் அவங்களுக்குக் கைகொடுக்கணும். மாணவர்களை நிறைய பேசவிடணும், ப்ரோ. ஆனால், மாணவர்களைப் பேசவிடுகின்ற வகுப்புகள், பல்கலைக்கழக அளவில்கூட மிகக்குறைவு என்கிற இந்த அபாயகரமான சூழலை மாற்ற வேண்டும். மாணவர்கள்தான் முன்வந்து வகுப்பறைகளை மீட்க வேண்டும்!’’ என்றார் விக்கி. 

`மாணவர்களுக்குப் பாடத்தைவிட அவுட் ஆஃப் சிலபஸில்தான் அதிக விருப்பம். எனவே, அப்படி அவர்களுக்குப் பிடித்த பேசுபொருளில் இருந்துதான் கல்வியைப் புகட்ட வேண்டும். வெறுமனே ஒப்புவித்தலும் ஒப்பேத்துதலுமாக வகுப்புகள் நகர்வதால், கல்வியின் முக்கியத்துவம் புரியாமலே வளர்கின்றனர். சரியான பதில்களுக்கு `குட்’ சொல்லக்கூட ஆளில்லை என அவர்கள் வருந்துவதாகத் தெரிவிக்கின்றனர். ‘இயல்பாகவே இந்த மாணவர்களிடம் கவன ஆற்றல் இருக்கிறது’ என்பதும், ‘தேர்வு வைக்கச்சொல்லி ஆர்வம் காட்டுகின்றனர்’ என்பதும் பொதுக்கருத்தாக அனைவரும் சொன்னவை, பள்ளிக் கல்வித்துறை மற்றும் தேர்வாணையத்தின் கவனத்துக்கு! 

தான் சென்ற வகுப்பில் தன்னால் மறக்கவே முடியாத நினைவொன்றைப் பகிர்ந்தார் பிரியா! ``நல்லா டெஸ்ட் எழுதினாள்னு பொண்ணுக்குக் கொஞ்சம் சாக்லேட் தந்தேன். பசங்களும் என்கிட்ட சாக்லேட் கேட்டாங்க. அவக்கிட்ட, `நீயே கொடு'ன்னேன். அவள் கொடுக்கல. பசங்களும் வாங்கல. அப்புறம்தான், பசங்க சொன்ன விஷயங்கள்ல இருந்து தெரிஞ்சிக்கிட்டேன், அவள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவள்னு. இதையெல்லாம் என்னால ஜீரணிக்கவே முடியலை. அவள் சொன்னா, `நான், டாக்டர் ஆகப்போறேன்'ன்னு. `ஹெல்ப் எதுனாலும் கேளு’ன்னு போன் நம்பர் கொடுத்தேன்’’ எனச் சொல்லும்போது பிரியாவின் குரல் உடைந்து தழுதழுத்தது.

`பின்னூட்டத்தை, தப்பாக இருந்தாலும் பரவாயில்லை என்று ஆங்கிலத்தில் எழுதினான்’ `ஒருவன் தமிழ்ல தப்பில்லாம எழுதினான்’ என்று பின்னூட்டங்களைப் பற்றி கூறியவை, அரசுப் பள்ளி குறித்த பொதுப் புத்தியைச் சுக்குநூறாக்குவதோடு, நம் மனப்பாடக் கல்விமுறையையும் கேள்விகளையும் எழுப்பியது. மாணவர்களின் அன்புமிகுந்த நெருக்கத்தைத் தங்களிடம் உணர்த்திய நொடிகளை ஒவ்வொருவரும் விளக்கியபோது எல்லோரும் நெகிழ்ந்துபோனோம் என்கின்றனர் கல்லூரி மாணவர்கள். “பீட்பேக் கேட்டேன், கவிதையா எழுதித் தந்தாங்க’’ எனத் தங்களுக்குள்ளான பாசப்பிணைப்பைச் சொன்னார் ஜெனிஷா. வார்த்தைக்கு வார்த்தை, `என்னோட பிள்ளைங்க’ என்று உருகினார் ஜெனிட்டா. 

மாணவர்களுக்குப் பிடித்த முறையில் வகுப்பைச் செலுத்தினால் உணர்வுபூர்வமாக நெருங்கிவிடுகின்றனர். “கூல்டிரிங்க்ஸ் வாங்கித் தந்தாங்க. அவங்களையும் குடிக்கச் சொன்னேன். `கிளாஸ் எடுங்க மிஸ், அப்புறம் குடிக்கிறோம்’ன்னு ஆர்வமா இருந்தாங்க” என்று பிரியா சொல்ல, ``அட நீவேற, எனக்குக் கொய்யாக்கா, ஜூஸ்லாம் வாங்கித் தந்தாங்களே!” எனக் குஷியானார் ஜெனிஷா. “கிளம்பும்போது, போகவிடாம அழுதாங்க’’ எனப் பிரியா சொன்னதும், “என்னையும்தான்! `ஏன் போறீங்க, இன்னும் இரண்டு மூணு நாள் வர்றீங்களா... நான், ஹெச்.எம்கிட்ட பேசுறேன். ப்ளீஸ் மிஸ்’னு அவங்க கெஞ்சினபோது எனக்கு அழுகையே வந்துடுச்சு’’ என்றார் ஜெமிமா. இதைச் சொல்லும்போது, அந்தப் பிரிவின் ஏக்கம் அவரது கண்களில் தெரிந்தது.

இந்தப் பள்ளியைத் தத்தெடுத்து, ஒருநாள் ஆங்கில ஆசிரியப் பயிற்சியைப் பாடத்திட்டத்தில் வகுத்து, ஆண்டுதோறும் தங்களது துறை மாணவர்களை வழிநடத்தி வருகின்றனர், பேராசிரியர்கள் டாக்டர்.ஜெ.ஜான்சேகர் மற்றும் டாக்டர்.ஜெ.பால்ஜெயகர் இருவரும். பள்ளி நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று, எதிர்வரும் கல்வியாண்டுகளில் கூடுதல் நாள்களுக்கு இந்த `சிறப்பு வகுப்புகளை’ நடத்தத் திட்டமிட்டுள்ளனர். 

நல்ல முயற்சிகள் தொடரட்டும். 

அடுத்த கட்டுரைக்கு