Published:Updated:

கல்விச் சீர் என்பது அரசுப் பள்ளிக்கு வரமா... சாபமா? ஓர் அலசல்!

கல்விச் சீர் என்பது அரசுப் பள்ளிக்கு வரமா... சாபமா? ஓர் அலசல்!
கல்விச் சீர் என்பது அரசுப் பள்ளிக்கு வரமா... சாபமா? ஓர் அலசல்!

இது குறித்து, பாசிட்டிவான பார்வைகள் முன் வைக்கப்பட்டாலும், சில மாற்றுக் கருத்துகளும் வரத்தான் செய்கின்றன.

னைவருக்கும் கல்வி என்பது அரசுப் பள்ளிகளின் வழியேதான் சாத்தியமாகிக்கொண்டிருக்கிறது. ஏனெனில், தனியார் பள்ளிகளில் கட்டணம் கட்டி, தம் பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியாத பெற்றோர்களுக்கு ஒரே வழி அரசுப் பள்ளிகள்தான். ஆனாலும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்த வண்ணமே இருக்கிறது. இதைத் தடுக்க, அரசும் ஆசிரியர்களும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். சில ஆசிரியர்கள் ஊர் மக்களின் பங்களிப்பாக, பள்ளியின் தேவைக்களுக்கான பொருள்களை வாங்கித் தரும்படி செய்கிறார்கள். இது கல்விச் சீர் என்ற அழைக்கப்படுகிறது. இந்தக் கல்விச் சீர் பழக்கம் கடந்த ஆண்டில் பல பள்ளிகளில் நடந்தன. இதைப் பார்த்த அரசு, தேர்ந்தெடுத்த பள்ளிகளில் கல்விச் சீர் விழாவைக் கண்டிப்பாக நடத்த வேண்டும் என்றும் அதற்கான நெறிமுறைகளை, கடிதம் வழியே தெரிவித்துள்ளது. 

அரசின் இந்த முடிவுக்கு ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் கலந்தே வருகின்றன. பெயர் குறிப்பிட விரும்பாத ஆசிரியர்கள் சிலர், "அரசின் இந்தத் திட்டம் நல்ல முயற்சிதான். இதனால், அரசுப் பள்ளியின் அடிப்படைத் தேவைகள் தீரும். இதைத் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் பின்பற்ற வேண்டும்" என்று தெரிவித்தனர்.

கல்விச் சீர் எனும் முறையைப் பரவலாக அறிமுகப்படுத்தியவர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் கருப்பையன். அவரிடம் பேசியபோது, "நான் கல்விச் சீர் பழக்கத்தை முன்னெடுக்க ஒரே காரணம், பொதுமக்களும் அரசுப் பள்ளி மீது கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான். தம் பிள்ளைகள் படிக்கும் அரசுப் பள்ளியில் வசதிகள் சரியாக இருக்கிறதா... அரசு அளிக்கும் பொருள்கள் சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா... என்பதை அவர்களும் அறிய வேண்டும். அதற்கு ஊர்மக்களும் தங்களால் இயன்ற பொருள்களை வாங்கித் தரும்போதுதான் அது நடக்கும். அதாவது, தாங்கள் வாங்கித்தந்த பொருள் எப்படி இருக்கின்றன எனச் சோதிக்கும் ஆர்வம் அவர்களுக்கு வரும். அப்படியே பள்ளியின் மற்ற செயல்பாடுகளில் அவர்களை ஈடுபட வைக்க முடியும் என்று நான் நம்பினேன். அப்படியே நடந்தது. முத்து என்பவர் '5 ரூபாய் கொடுத்து, இவ்வளவுதான் இருக்கிறது சார்' என்றபோது, அதை மகிழ்ச்சியோடு வாங்கிக்கொண்டோம். அந்தப் பணத்துக்கு துடைப்பம் ஒன்றை வாங்கினோம். அதை அவருக்குத் தெரியப்படுத்தவும் செய்தோம். என்னைப் பொறுத்தவரை கல்விச் சீர் என்பது ஊர்மக்கள் தங்களின் பள்ளியாக நினைக்க வைப்பதற்கே" என்றார். 

இது குறித்து, பாசிட்டிவான பார்வைகள் முன் வைக்கப்பட்டாலும், சில மாற்றுக் கருத்துகளும் வரத்தான் செய்கின்றன. கல்வியாளர் சங்கமம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் அரசுப் பள்ளி ஆசிரியருமான, சதீஷ்குமாரிடம் பேசியபோது, "பெற்றோர்களும் ஊர்மக்களும் விரும்பி அளித்தால்தான் அது உண்மையான கல்விச் சீராக இருக்கும். ஆனால், நிர்பந்தமாகச் செய்ய வைக்கும்போது சடங்காக மாறிவிடும். மாணவர்களின் பெற்றோர்களுக்கு அது சுமையாகிவிடும். கட்டணம் ஏதுமில்லை என்றுதான் அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க வைக்கிறோம். இப்போது சீர் என்று சொல்லி பெற்றோர்களிடம் பணம் அல்லது பொருளாகக் கேட்டால், சரியாக இருக்காதே!" என்கிறார்.

"இது, மக்களிடமிருந்து பள்ளியை விலக்கி வைத்துவிடும்" என்று வேறு கோணத்தில் பேசுகிறார் ஆசிரியர் சுடரொளி, "கல்விச் சீர் விழாக்கள் நடத்த வேண்டும் என்பதை அரசு ஆணையாக இல்லாமல், வழிகாட்டும் நெறிமுறையாகத்தான் சொல்லியுள்ளது. ஆனபோதும் தேர்ந்தெடுத்த பள்ளிகளில் நடத்த வேண்டிய அவசியம் வந்துவிட்டது அல்லவா! ஊர் மக்களில் பொருளாதார ரீதியில் வளமாக உள்ளவர்களிடம் கேட்கலாம் என்று சொல்லியிருந்தாலும், அதற்கான சூழல் அந்த ஊரில் இல்லையென்றால், பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களைத்தானே வலியுறுத்திக் கேட்க வேண்டியிருக்கும். அந்தப் பணத்தைக் கொடுத்து, தம் பிள்ளைகளைத் தனியார் பள்ளியிலேயே சேர்த்திருக்கலாம் என்றுதானே சராசரி பெற்றோர் நினைக்கக்கூடும். சில பள்ளிகளில் எந்த மாணவர் தந்தார், எவர் தர வில்லை என்ற பட்டியலிடும் வேலைகளும் நடந்தனவாம். அதனால்தான் சொல்கிறேன். இந்த முறை மக்களிடமிருந்து அரசுப் பள்ளியை விலக்கி வைத்துவிடலாம். தொடக்கத்தில் நடந்த கல்விச் சீர் என்பது மக்களாக விரும்பி பள்ளிகளுக்குக் கொடுத்தது. ஆனால், இப்போது சீர் விழா நடத்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் ஏதாவது செய்து போட்டோவும் வீடியோவும் அனுப்ப வேண்டும் என்பதால், பெற்றோருக்குச் சுமையாகிவிடவே வாய்ப்பு அதிகம். பள்ளிக்குத் தேவையான விஷயங்களை நிறைவேற்ற வேண்டிய தமது பொறுப்பை, அரசு கைகழுவுகிறதோ என்ற சந்தேகம் பலருக்கும் எழத்தொடங்கிவிட்டது. ஆசிரியர்களும் பெற்றோர்களும் ஊர்மக்களும் சேர்ந்து அரசின் கல்வித்துறை சார்ந்த செய்துகொடுக்க வேண்டியவற்றைக் கோரி பெற வேண்டும். மேலும், மற்ற அரசுத் துறைகள் வழியே பள்ளிக்குக் கிடைக்க வேண்டியவற்றையும் பெறுவதற்கு முயற்சிகளை எடுக்க வேண்டும். அப்படிப் பெற வேண்டியவற்றைப் பெற்றும், தேவைப்படும் சூழல் இருந்தால், அவற்றை வாங்குவதற்கு இந்த சீர் என்பதைப் பயன்படுத்திக்கொள்வதே சரியாக இருக்க முடியும். அப்போதுதான் பள்ளியுடன் ஊர்மக்களுக்கு ஒரு நெருக்கம் ஏற்படும்" என்கிறார். 

பின் செல்ல