Published:Updated:

12 லட்சம் ரூபாய் மதிப்பு பொருள்களை அரசுப் பள்ளிக்காகத் திரட்டிய ஆசிரியர்! #CelebrateGovtSchool

"எஸ்.எஸ்.எஸ். திட்டத்தில், பள்ளி வளர்ச்சிக்காக நாம் அளிக்கும் தொகையின் மூன்று மடங்கை அரசு நமக்குத் திரும்ப அளிக்கும். இதற்கு நாம் அளிக்கும் தொகையை டிடி-யாகத் தர வேண்டும்."

12 லட்சம் ரூபாய் மதிப்பு பொருள்களை அரசுப் பள்ளிக்காகத் திரட்டிய ஆசிரியர்! #CelebrateGovtSchool
12 லட்சம் ரூபாய் மதிப்பு பொருள்களை அரசுப் பள்ளிக்காகத் திரட்டிய ஆசிரியர்! #CelebrateGovtSchool

``மக்களை பள்ளியின் செயல்பாடுகளில் ஈடுபட வைத்துவிட்டாலே, இது நம் பள்ளி என்ற உணர்வோடு, தேவையான விஷயங்களுக்கு உதவுவார்கள்" என்ற நம்பிக்கையுடன் பேசத் தொடங்கினார் ஆசிரியர் கருப்பையன். புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றிய பனங்குளம் வடக்கு கிராமத்தில் உள்ள, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றுபவர்தான் கருப்பையன். இந்தப் பள்ளிக்கு பணி மாறுதலாகி வந்து ஆறு மாதங்கள்தாம் ஆகிறது. ஆனால், பல மாற்றங்களைச் செய்திருக்கிறார். இவர் ஏற்கெனவே பணிபுரிந்த நெடுவாசல் வடக்கு ஊரின் தொடக்கப்பள்ளியை தமிழகமே அறியும்படிச் செய்தவர். அவரிடம் பேசினேன். 

``இந்தப் பள்ளிக்கு மாறுதலாகி வந்ததும், ஏற்கெனவே பணியாற்றிய பள்ளியின் வளர்ச்சிக்குப் பல செயற்பாடுகளைச் செய்ததால், என் மீது எதிர்பார்ப்பு இருந்தது. முதலில் நான் செய்தது, சக ஆசிரியர்களுக்கு இருந்த தயக்கங்களைப் போக்கி, அவர்களையும் சேர்ந்து செயல்படும் அளவுக்குத் தயார் செய்தேன். பிறகு, ஊரிலிருந்து டீக்கடைகளுக்கு வரும் மக்களோடு உரையாடினோம். அதன் அடுத்தகட்டமாக, `ஊர் மக்களைப் பள்ளிக்கு வரச் சொல்லி, நோட்டீஸ் கொடுத்தோம். டீக்கடை போன்ற இடங்களிலும் ஒட்டினோம். கூட்டம் நடத்தத் திட்டமிட்ட அன்று 100 நாற்காலிகளோடு காத்திருந்தோம். எங்களின் நம்பிக்கையை மக்கள் பொய்யாக்கவில்லை. சுமார் 150 பேர் வந்து, கூடுதலாக நாற்காலிகள் போடும்படி செய்துவிட்டனர். இதுவே எங்களின் முதல் வெற்றியாக நினைத்தோம். 

கூட்டத்திற்கு வந்திருந்தவர்களிடம், `நீங்கள் பண உதவிகளைத் தர வேண்டாம். இந்தப் பள்ளி முன்னேற யோசனைகளை மட்டும் சொல்லுங்கள்' என்றோம். சில தயக்கங்களைக் கடந்து, பலரும் யோசனைகளை முன் வைத்தனர். எல்லாவற்றையும் குறித்துக்கொண்டோம். மொத்தம் 127 ஆலோசனைகள் பெறப்பட்டன. உண்மையில் நாங்கள் யோசிக்காத பல ஐடியாக்களைத் தந்தார்கள். இது எங்களின் இரண்டாவது வெற்றி. 

மக்கள் தந்த ஆலோசனைகளில் நடைமுறை சாத்தியம் உள்ளதையும், உடனடியாகச் செய்வதையும் பட்டியலிட்டோம். அதற்காக, மீண்டும் மக்களிடம் சென்றோம். அரசு மக்களுக்காக எவ்வளவு உதவித் திட்டங்களை வகுத்துள்ளது. அவற்றை நாம் முறையாகக் கேட்டாலே தேவையான உதவிகள் கிடைத்துவிடும். உதாரணமாக, எஸ்.எஸ்.எஸ். திட்டத்தில், பள்ளி வளர்ச்சிக்காக நாம் அளிக்கும் தொகையின் மூன்று மடங்கை அரசு நமக்குத் திரும்ப அளிக்கும். இதற்கு நாம் அளிக்கும் தொகையை டிடி-யாகத் தர வேண்டும். இதை ஊர்மக்களிடம் தெரிவித்து, நிதி திரட்டினோம். அதோடு, வழக்கமாக எங்களுக்கு உதவி செய்யும் நண்பர்களையும் தொடர்புகொண்டோம். என்னிடம் படித்து, இன்று வெளிநாடுகளில் வேலை செய்யும் மாணவர்களையும் தேடிப் பிடித்தோம். இப்படிச் சிறுக, சிறுக 4 லட்சம் ரூபாய் தயார் செய்து, மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினோம். அதன்மூலம், பள்ளிக்குத் தேவையான 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் கிடைத்தன" என்கிறார் ஆசிரியர் கருப்பையன்.

``என்னென்ன பொருள்களை வாங்கினீர்கள்?" 

``கூடுதலாக இரண்டு வகுப்பறைகள் கட்டினோம். அடுத்து, கம்ப்யூட்டர் லேப் அமைத்தோம். அடுத்து இரண்டு வகுப்பறைகளில் புரஜெக்டர் வசதியை உருவாக்கினோம். கழிவறை வசதிகளை நிறைவேற்றிக்கொண்டோம். மாணவர்களுக்கு எப்போதுமே சுழலும் நாற்காலிகள் மீது தனி ஈர்ப்பு இருக்கும். எனவே அனைவருக்கும் சுழலும் நாற்காலிகள் வாங்கினோம். அடுத்து, ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் ஆர்.ஓ. பிளான்ட் மூலம் சுத்தமாக நீரைக் குடிக்கும் வசதியை ஏற்படுத்தினோம். நூலகத்தை மேம்படுத்தி, அலமாரிகள் வாங்கினோம். பிரின்டர் மற்றும் ஸ்கேனர்களை வாங்கினோம். இவை, தேர்வு வினாத்தாள் உள்ளிட்டவற்றைத் தயாரிக்க உதவியாக இருக்கும். அடுத்து, நம் பள்ளியில் நடைபெறும் ஆக்கபூர்வமான விஷயங்களைப் பதிவு செய்து, மாணவர்களின் பெற்றோருக்குக் காட்டிட கேமரா ஒன்றும் வாங்கினோம். விளையாட்டுக் கருவிகள் இல்லாத நிலையில் எல்லா மாணவர்களும் விளையாடும் விதத்தில் பல வித விளையாட்டுப் பொருள்களை வாங்கினோம். இவையெல்லாமே மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவே. மேலும். அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தவும் உதவும் என்று திடமாக நம்புகிறேன்" என்கிறார் உறுதியாக. 

அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்காக முன்னெடுக்கும் முயற்சிகள் வெல்லட்டும்.