Published:Updated:

6 வயதில் வீட்டு பட்ஜெட், 14 வயதில் வீட்டு பட்ஜெட் ஆப் - அசத்தும் கெளசல்

6 வயதில் வீட்டு பட்ஜெட், 14 வயதில் வீட்டு பட்ஜெட் ஆப் - அசத்தும் கெளசல்
6 வயதில் வீட்டு பட்ஜெட், 14 வயதில் வீட்டு பட்ஜெட் ஆப் - அசத்தும் கெளசல்

ஆசிய அளவிலான முதலீட்டார்கள் கூட்டத்தில், இவருடைய பிசினஸ்ஸுக்காக மூன்று லட்சம் பங்கினையும் பெற்றுத்திரும்பியுள்ளார். இது குறித்து கெளசல் பகிரும் தகவல்கள்.

''ஆசைப்படுற எந்தப் பொருளை வாங்குகிறதுக்கு முன்னாடியும் அப்பா அம்மா தர்ற பணம் எவளோ, அதுல ஆசைப்படுற பொருளை வாங்குனது போக மீதம் பணம் இருக்குமா, அப்படி வர்ற பணத்தை வைச்சு என்ன பண்ணலாம்னு ஒவ்வொரு முறையும் யோசிப்பேன். சின்னச் சின்ன செலவுகளைக்கூட டைரியில நோட் பண்ணி வைச்சுப்பேன். என்னோட நடவடிக்கைகள்தான் நான் ஆப் உருவாக்க அடிப்படையா அமைஞ்சது'' எனப் புன்னகை பொங்கப் பேசுகிறார் கெளசல். 14 வயது கெளசல் வரவு செலவு கணக்குகளை மெயின்டெயின் செய்யும் `மை லாட்’ என்ற ஆப்பினை உருவாக்கியுளார். சமீபத்தில் தாய்லாந்தில் நடந்த ஆசிய அளவிலான முதலீட்டாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு தன்னுடைய ஆப்காக மூன்று லட்சம் முதலீட்டை அள்ளி வந்திருக்கிறார் இந்தச் சுட்டி.

"என்னோட அம்மா டாக்டர். அப்பா பிசினஸ் மேன். ரெண்டு பேரும் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்தாலும், அதோட மதிப்பு என்னங்கிறதைப் புரிய வைக்க தவறலை. அதனால பணத்தோட மதிப்பைச் சின்ன வயசுலேயே உணர்ந்துட்டேன். எனக்கு ஆறுவயசாகும்போதே வீட்டில் மாத பட்ஜெட் போடும்போது நானும் கலந்துப்பேன். ஆரம்பத்தில் பட்ஜெட் பற்றியெல்லாம் எதுவும் தெரியலைனாலும், அம்மா அப்பாகிட்ட கேட்டு தெரிஞ்சுப்பேன். அவங்களும் கோபப்படாமல் பொறுமையா சொல்லிக்கொடுத்தாங்க. அப்புறம் கொஞ்ச கொஞ்சமா கத்துக்கிட்டு வரவு செலவு கணக்குகளை அம்மா கூட சேர்ந்து நோட் பண்ணி வைக்க ஆரம்பிச்சேன். என்னோட ஆர்வத்தைப் பார்த்துட்டு என்னோட அம்மா ஒரு குறிப்பிட்ட தொகையை என் கையில் கொடுத்து அந்த மாசத்துக்கான தினப்படி செலவுகளை நோட்ல எழுதி வைக்கச் சொன்னாங்க.

நானும் கையில கிடைச்ச 50 பைசாவுக்குக்கூட கணக்கு எழுதி வைக்க ஆரம்பிச்சேன். மாச கடைசியில அம்மாகிட்ட ஒப்படைச்சதும் அசந்து போயிட்டாங்க. இப்படித்தான் கணக்கு/அக்கவுன்ட்ஸ் மேல ஆர்வம் வர ஆரம்பிச்சது. என்னதான் டைரியில் குறிச்சு வச்சாலும், பல நேரம் தவறுகள் வந்திருக்கு. அதைச் சரி பண்ண பலமணி நேரமாகும். அக்கவுன்ட்ஸ் பத்தி நிறைய வீடியோஸ் பார்க்க ஆரம்பிச்சேன். நிறைய ஆப் டவுன்ட்லோடு பண்ணி பார்த்தேன். ஆனா, எதுலேயும் நான் எதிர்பார்த்த தகவல்கள் கிடைக்கலை. அப்படி பார்க்கிறப்ப தோணின ஐடியாதான் ஆப் டெவலப் பண்ற அளவுக்கு வந்து நின்னது'' என்ற கெளசல் ஆப் உருவான விதம் பற்றி விவரித்தார். 

அப்பாகிட்ட என்னோட தேடலை பற்றிச் சொன்னதும், என்னைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி ஆப் டெவலப்பிங் கோர்ஸ்ல சேர்த்துவிட்டாங்க. பத்து வயசில் ஆப்களை பற்றிப் படிக்கிறதெல்லாம் கஷ்டம்னு மாஸ்டர்கள் சொன்னப்பகூட நான் என் முடிவுல உறுதியா நின்னேன். மாஸ்டர்ஸ் சொன்ன மாதிரி ரொம்ப சிரமமா இருந்தது.

ஆறுமாசத்தில் அட்வான்ஸ் கோர்ஸ்கள் கத்துகிட்டு ட்ரெயின் ஆயிட்டேன். என்னுடைய ஆப்பில் என்னென்ன விஷயங்கள் இருக்கணும்கிறதை முதலில் பட்டியலிட்டேன். என் ஃபிரெண்ட்ஸ்கிட்டேயும் ஐடியாஸ் கேட்டேன். நிறைய முறை பிளான் பண்ணதுக்கு அப்புறம்தான் `மைலாட் ஆப்’ உருவாச்சு. இதுல நம்முடைய சேமிப்பை நோட் பண்ணி வச்சுக்க முடியும். ஆப்பை உருவாக்கி முதலில் அப்பாகிட்டதான் ஒப்பினியன் கேட்டேன். யூஸ் பண்ணி பார்த்துட்டு, நிஜமா பயனுள்ளதாக இருக்குனு பாராட்டுனாங்க. அப்புறம் ஃப்ரெண்ட்ஸ், டீச்சர்னு சிலரிடம் ஒப்பினியன் கேட்டேன். எல்லாரிடம் இருந்தும் பாசிட்டீவ் கமென்ட்ஸ் வரவே போன வருஷம் ஆப்பை வெளியிட்டோம். இதுவரை 25000 பேர் என்னுடைய ஆப்பினை டவுன்லோடு பண்ணியிருக்காங்க" என்ற கெளசல் சட்டென்ற முகமலர்ச்சியுடன் தாய்லாந்து முதலீட்டாளர்கள் கூட்டம் பற்றி பேச ஆரம்பித்தார். 

தாய்லாந்தில் கடந்த மாதம் ஆசிய ஆளவிலான முதலீட்டாளர்கள் கூட்டம் நடந்தது. என்னுடைய ஆப்புக்கு இன்வெஸ்ட்மென்ட் வாங்குறதுக்காக நான் இந்தியாவின் சார்பாக கலந்துக்கிட்டேன். மூன்று லட்சம் ரூபாய் இன்வெஸ்ட்மென்டும் கிடைச்சுது. இப்போ அடுத்தகட்ட டெவலெப்புக்கு பிளான் பண்ணிட்டு இருக்கேன். என்னுடைய ஆப்பை மில்லியன் நபர்களை டவுன்லோடு பண்ணவைக்கிறதுதான் என்னுடைய ஃப்யூச்சர் பிளான். அதை நோக்கி என்னுடைய பயணம் இருக்கும்" என்கிறார் கெளசல்.

அடுத்த கட்டுரைக்கு