Published:Updated:

விட்டாச்சு லீவு... குழந்தைகள் குதூகலிக்க வித்தியாசமான 5 விளையாட்டுகள்! #HappyHolidays

அரையாண்டு விடுமுறையில் அதகளம் பண்ணிட்டிருக்காங்களா உங்க பிள்ளைகள்? `போர் அடிக்குது... போர் அடிக்குது... வெளியே கூட்டிட்டுப் போங்க' எனப் போர்க்கொடி தூக்க ஆரம்பிச்சுட்டாங்களா?

விடுமுறை
விடுமுறை

ரையாண்டு விடுமுறையில் அதகளம் பண்ணிட்டிருக்காங்களா பிள்ளைகள்? `போர் அடிக்குது... போர் அடிக்குது... வெளியே கூட்டிட்டுப் போங்க' எனப் போர்க்கொடி தூக்க ஆரம்பிச்சுட்டாங்களா? வீட்டிலே வெச்சு சமாளிக்கவும், அதேநேரம் உற்சாகத்தைக் கொடுக்கும் சில வித்தியாசமான குழு விளையாட்டுகளைச் சொல்லிக்கொடுங்க. இது, அவர்களின் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலும் இருக்கும்.

1.சேர்ந்து சேர்ந்து வார்த்தைகளை உருவாக்கு!

Vikatan

குழுவாக விளையாட, விறுவிறுப்பும் கலாட்டாவுமான விளையாட்டு இது.

வெள்ளைத் துண்டுத்தாள்களில் விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் பெயர்களையோ, புதுப் புதுச் சொற்களையோ தனித் தனி எழுத்துகளாக எழுதுங்கள். உதாரணமாக, `சிங்கம்' என்றால், சி, ங், க, ம் என நான்கு தாள்களில் எழுதுங்கள். இப்படி நிறைய பெயர்களை எழுதி மடித்துக்கொள்ளுங்கள்.

எத்தனை குழந்தைகள் இருக்கிறார்களோ, அதற்கேற்ப குழுக்களை உருவாக்குங்கள். துண்டுத்தாள்களைக் குலுக்கிப் போட்டு, ஆளுக்கு ஒரு சீட்டு எடுக்கச்சொல்லி விசில் ஊதுங்கள். வரும் எழுத்துகளைச் சேர்த்து, பெயர்களை உருவாக்க வேண்டும். தங்கள் குழுவில் வார்த்தைக்கான எழுத்து இல்லாதபோது, அடுத்த குழுவில் ஒரு சீட்டு கொடுத்து மறு சீட்டு பெற்றுக்கொள்ளலாம்.

விடுமுறை
விடுமுறை

இது எல்லாம் குறிப்பிட்ட நிமிடத்துக்குள், அடுத்த விசில் அடிப்பதற்குள் குழந்தைகள் செய்ய வேண்டும். பின்னர், உருவாக்கிய வார்த்தைகளுக்கு ஏற்ப, ஒவ்வொரு குழுவுக்கும் மதிப்பெண் கொடுங்கள்.

ஜோடி சேர்ந்துவிட்ட பெயருள்ள தாள்களைத் தனியாக வைத்துவிட்டு, ஜோடி சேராத எழுத்துகளை இன்னும் எடுக்கப்படாத தாள்களுடன் சேர்த்து அடுத்த சுற்றை ஆரம்பிக்கலாம்.

இந்த விளையாட்டு குழந்தைகளுக்கு ஜாலியாக இருப்பதுடன், பல்வேறு தமிழ்ச் சொற்களை, பெயர்களை அவர்கள் அறிந்துகொள்ளவும் உதவும்.

2. வரைந்து வரைந்து விஷயத்தைச் சொல்லு!

குழந்தைகளின் ஓவியத் திறமையைக் கற்பனை ஆற்றலுடன் வெளிப்படுத்தவும், சித்திரங்கள் வழியே சொற்களைச் சிந்திக்கவும் ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு.

போல்டிங் போர்டு (அல்லது சார்ட்), சாக்பீஸ் (அல்லது பென்சில்) எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு குழந்தையை அழைத்து காதில் ஏதாவது ஒரு வார்த்தையைச் சொல்ல வேண்டும். Walk, Running, Slipping, Race, Thinking...

இப்படிச் சொன்ன வார்த்தையை அந்தக் குழந்தை ஓவியமாக வரைய வேண்டும். அதை, மற்ற பிள்ளைகள் கண்டுபிடிக்க வேண்டும். முழுமையாக வரைந்து முடித்த பிறகுதான் பதில் சொல்ல வேண்டும்; பாதியிலே சொல்லக் கூடாது என்று சொல்லி வையுங்கள். அப்போதுதான் வரையும் குழந்தையின் முழுத் திறமையும் வெளிப்படும்.

game
game
`அலைகளின் அம்மா யாரு?' சுட்டிகளுக்கான குட்டிக் கதை #BedTimeStories #VikatanPodcast

பிள்ளைகளை இரண்டு குழுக்களாகப் பிரித்தும் இந்த விளையாட்டை நடத்தலாம். ஒரு குழுவிலிருந்து ஒருவர் வரைய, அடுத்த குழுவினர் கண்டுபிடிக்க வேண்டும். பிறகு, அந்தக் குழுவுக்கு வாய்ப்பு. இப்படி இரண்டு குழுவுக்கும் மதிப்பெண் கொடுத்தவாறு ஆட்டத்தை விறுவிறுப்பாக்கலாம்.

3. இணைந்து இணைந்து நடித்துக் காட்டு!

நடிப்புத்திறனை வெளிப்படுத்த ஜாலியான ஒரு விளையாட்டு. ஒரு காட்சியைச் சொல்ல, அடுத்த சில நொடிகளில் அதை ஸ்டில்லாக நடிப்பில் வெளிப்படுத்த வேண்டும்.

இதைக் குழந்தைகள் ஒவ்வொருவரும் தனித்தனியாக என ஆரம்பித்து, பின்னர் இரண்டு பேர், மூன்று பேர் என்று குழுவாக மாறும். கடைசியில், அனைவரும் ஒரே காட்சிக்கு ஸ்டில்லாக நடிப்பார்கள். அதற்கேற்ப, நீங்கள் சொல்லும் காட்சியின் வார்த்தைகளும் இருக்க வேண்டும்.

உதாரணமாக... `காபி குடி', `குளி', `படி' என்று சொன்னதும், ஒவ்வொருவரும் தனித்தனியாக அதை ஸ்டில்லாகக் காட்ட வேண்டும். `குளி' என்பதற்கு ஒரு குழந்தை தண்ணீரை ஊற்றிக்கொள்வது போல இருக்கலாம். அல்லது, சோப்பு தேய்ப்பது போல இருக்கலாம். அல்லது, ஷவரில் நிற்பது போல இருக்கலாம்.

game
game

அடுத்து, இரண்டு பேர்களாகச் செய்யும் செயல், மூன்று பேர்களாகச் செய்யும் செயல் எனச் சென்று, நிறைய பேர் சேர்ந்த குழுவுக்கு `கிரிக்கெட் ஆடுங்க', `திருவிழா காட்சி' என்பது போல சொல்லுங்கள். அப்போது, ஒரே இடத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களை வெளிப்படுத்த வேண்டும்.

முக்கியமான ஒரு நிபந்தனையை விளையாட்டு ஆரம்பிக்கும் முன்பே சொல்லிடுங்க. அது, ஒருவருக்கு ஒருவர் பேசிக்கக் கூடாது. டிஸ்கஷன் செய்யக் கூடாது. வார்த்தையைச் சொன்னதும் மனதுக்குள் யோசித்து, ஒருவர் செய்வதை இன்னொருவர் செய்யாமல் மாத்திக்கணும் என்று சொல்லுங்கள்.

இந்த விளையாட்டு ஓர் இடத்தின், காட்சியின் முழுச்சூழலையும் கவனிக்கும் ஆற்றலைக் குழந்தைகளிடம் வளர்க்கும்.

4. தேடித் தேடிப் புதையலை ஒண்ணு சேரு!

ஒரே அளவிலான வெள்ளைத்தாள்களில் ஓவியங்களை வரைந்துகொள்ளுங்கள். அல்லது படங்களை ஒட்டிக்கொள்ளுங்கள். பின்னர், அவற்றைச் சமமான துண்டுகளாகத் கத்தரித்து, மடித்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைகளை இரண்டு குழுக்களாகப் பிரித்துவிட்டு, வெளியே போகச் சொல்ல வேண்டும். அந்தத் துண்டுப்படங்களை ஹால் மற்றும் அறையின் வெவ்வேறு இடங்களில் மறைத்து வைக்க வேண்டும். விசில் அடித்ததும் இரண்டு குழுக்களும் உள்ளே வந்து, துண்டுப்படங்களைத் தேடி எடுக்க வேண்டும்.

game
game
pixabay

அப்படி எடுத்த படங்களைச் சேர்த்து முழுமையாக்க வேண்டும். எந்தக் குழுவுக்காவது முழுமையாக ஒரு படம் வந்துவிட்டால், அந்தப் புதையல் அவர்களுக்கு. முழுமையாகாதத் துண்டுகளை வாங்கி, மீண்டும் மறைத்து வைத்து ஆட்டம் தொடர வேண்டும்.

இப்படியே அத்தனை படங்களும் முழுமையாகும் வரை யார் அதிகமான புதையல்களை வெல்கிறார்கள் என விளையாடலாம்.

5. படித்துப் படித்து வட்டம் போடு!

அக்கம்பக்கமெல்லாம் பிள்ளைகள் இல்லை. வீட்டுல இருக்கிற ஒரு (அல்லது இரண்டு) பிள்ளையை ஒரே இடத்தில் உட்காரவெச்சு, சுவாரஸ்யமா, உருப்படியா ஏதாவது விளையாட்டு சொல்லுங்க என்கிறீர்களா? இதோ...

ஒரு செய்தித்தாளையோ, பழைய புத்தகத்தையோ அவங்க கையில் கொடுங்க. அதில், ஊரின் பெயர்கள், மனிதர்களின் பெயர்கள், பொருள்களின் பெயர்கள் எனத் தனித் தனியாக வட்டம் போடச் சொல்லுங்கள். பின்னர், அவற்றை எண்ணிப் பார்த்து ஒரே மாதிரியான வார்த்தைகள் எத்தனை வந்தன எனப் பார்க்கச் சொல்லலாம்.

கிள்ளி தேவதைக்கு என்ன சோகம்? - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #BedTimeStories

ஒரு மாதத்தின் வெவ்வேறு செய்தித்தாள்கள் அல்லது பத்திரிகையைக் கொடுத்தும் இதைச் செய்யச் சொல்லலாம். சமீபமாக நடக்கும் விஷயத்தை அறிந்துகொண்டது போலவும் இருக்கும். புழக்கத்தில் இருக்கும் பல்வேறு வார்த்தைகளைத் தெரிந்துகொண்டது போலவும் இருக்கும்.