Published:Updated:

பெற்றோர்களே... விடுமுறையில் உங்கள் குழந்தைகளோடு விளையாட 5 ஜாலி யோசனைகள் #JollyTasks

விடுமுறையில் இருக்கும் பிள்ளைகளை எப்படிச் சமாளிக்கிறதுன்னு எப்பவும் `லைட்டா' ஒரு பீதி நமக்குள்ளே இருக்கும். விடுமுறையை அவங்க நல்லா அனுபவிக்கட்டும். அதேநேரம், விளையாட்டாகவும் ஜாலியாகவும் சில டாஸ்க் கொடுத்து, அவங்களை கற்பனைத் திறனுடன் நல்ல விஷயங்களையும் செய்ய வைக்கலாமே...

1
Children ( Pixabay )

அக்கம்பக்கம் பிள்ளைகளைச் சேர்த்துக்கிட்டு ஆர்ப்பாட்டத்தோடு வீட்டுக்குள்ளே பூகம்பம் வரவெச்சுட்டு இருக்காங்களா? எல்லோரையும் பிடிச்சு ரவுண்டா உட்காரவைங்க.

``10 நிமிஷம் அமைதியா கண்களை மூடி மனசுக்குள்ளே என்னவெல்லாம் தோணுதுன்னு திங்க் பண்ணுங்க. கண்களுக்குள்ளே ஏதாவது காட்சி வந்தாலும் கவனிங்க. அப்புறம், பேப்பர் எடுத்துக்கிட்டு என்னவெல்லாம் தோணுச்சு, என்ன காட்சிகளைப் பார்த்தீங்கன்னு எழுதுங்க'' எனச் சொல்லுங்கள்.

குறைந்தது அரை மணி நேரம் அமைதி உண்டாகும். அந்த நேரத்தில், நம் வேலைகளைப் பார்க்கலாம். இதனால், அவர்களின் கற்பனை வளம் பெருகுவதுடன் நாமும் அதைத் தெரிஞ்சுக்கலாம். ரொம்ப சின்னப் பிள்ளைகளாக இருந்தால், வரிசையாகச் சொல்லச் சொல்லி பகிரச்சொல்லலாம்.

2
Toys ( Pixabay )

வீட்டுல அண்ணன்-தங்கை, அக்கா-தம்பி என இருந்தாலே இந்தியா-பாகிஸ்தான் மாதிரிதான். அதிலும் லீவு நாளில் சொல்லவே வேண்டாம். இவர்களுக்குள் ஒற்றுமையை வரவைக்க, ``வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்தே, ஒருவருக்குத் தெரியாமல் இன்னொருவர் கிராஃப்ட் செய்து பரிசாகக் கொடுக்கணும். அதைக் கொடுக்கிறதுக்கான காரணமும் சொல்லணும். ஈவ்னிங் வரைக்கும் டைம்'' எனச் சொல்லுங்க.

அவர்களின் கிராஃப்ட் திறமையை வெளிப்படுத்தின மாதிரியும் இருக்கும்; பரிசு கொடுத்துக்கொள்வதன் மூலம் (அந்த நேரத்துக்காவது) பாசமலர்களாக மாறுவாங்க.

3
Drama ( Pixabay )

வீட்டின் படுக்கை அறை, டைனிங் டேபிள், ரைட்டிங் டேபிள், ஹால், சோபா ஆகியவற்றை ஒழுங்படுத்தி, விரிப்புகள் மற்றும் சின்னச் சின்னப் பொருள்களால் அலங்கரிக்கச் சொல்லுங்க. ``அவசரம் வேண்டாம். ஒரு மணி நேரம், ரெண்டு மணி நேரம் நல்லா திங்க் பண்ணி வித்தியாசமா செய்ங்க. அதை போட்டோ எடுத்து வாட்ஸ்அப் குரூப்களில் அனுப்பலாம்'' எனச் சொல்லுங்க.

வீட்டை ஒழுங்குப்படுத்துவதன் அவசியமும் புரியும்; அவர்களின் வித்தியாசமான படைப்பாற்றலும் வெளிப்படும். அதை போட்டோ எடுத்து உங்க உறவுகள் மற்றும் நண்பர்கள் குழுவுக்கு அனுப்பி, அந்தப் பாராட்டுகளால் அவர்களை மேலும் உற்சாகப்படுத்துங்க.

4
Rainbow ( Pixabay )

எந்த நேரமும் ஸ்மார்ட்போனில் கேம் விளையாடிட்டு, வீடியோ பார்த்துட்டு இருக்காங்களே என்பதுதான் இப்போ பெரிய கவலை. அந்த ஸ்மார்ட்போன் மூலமே அவங்களை படைப்பாளிகளாக மாற்றலாம்.

அடுக்குமாடிகளில் குடியிருக்கீங்களா? ``இப்போ நீங்கதான் டிவி ரிப்போர்ட்டர். நம்ம செக்யூரிட்டி, வேறு பணியாளர்கள், அக்கம் பக்கம் தாத்தா பாட்டிகளிடம் ஆளுக்கு ஒருவரா போய் பேசுங்க. அவங்க சின்ன வயசு விளையாட்டு, வீடு, வாழ்க்கை முறை பற்றி கேளுங்க. அவங்க சொல்றதை வீடியோவா எடுத்துட்டு வாங்க. யாரு எப்படியெல்லாம் பேட்டி எடுக்கறீங்கன்னு பார்க்கலாம்'' எனச் சொல்லுங்க.

தன்னைச் சுற்றி இருப்பவர்களின் மற்றும் நமது முந்தைய வாழ்க்கை முறையைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பாகவும் இருக்கும். கேள்வி கேட்கும் திறனும் வளரும். வீடியோவைப் பார்த்து, இன்னும் சில உட்கேள்விகளைக் கேட்டிருக்கலாம் என ஆலோசனையும் சொல்லுங்க. அடுத்தமுறை நிறைய கேள்விகள் கேட்பாங்க.

5
Kids Playing

நண்பர்களுடன் சேர்ந்து ஒரு கதையை உருவாக்கி, அவரவர்களிடம் இருக்கும் பொம்மைகள், சின்னச் சின்னப் பொருள்களையே கேரக்டர்களாக்கி, தோற்பாவைபோல ஒரு நாடகம் நடத்தச் சொல்லுங்கள். நிறைய பேர் இருந்தால், இரண்டுக்கும் மேற்பட்ட குழுவாகவும் தனித் தனி நாடகங்கள் போடச் சொல்லலாம். இதற்கான டிஸ்கஷன், பொருள்களைச் சேகரிப்பது என அவர்களின் தேடல் உருப்படியாக இருக்கும். குழுச் செயல்பாடு, ஒருங்கிணைப்பு, கற்பனை வளம் எனப் பல குணங்கள் உருவாகும்.