Published:Updated:

“எங்களுக்கு தமிழ் அவங்களுக்கு ஆங்கிலம்!”

குடும்பத்துடன் கரிகாலன்-சு.தமிழ்ச்செல்வி
பிரீமியம் ஸ்டோரி
குடும்பத்துடன் கரிகாலன்-சு.தமிழ்ச்செல்வி

‘நிலவைத் தொடும் குழந்தைகள் நம் எல்லா வீடுகளிலும் இருக்கிறார்கள்.

“எங்களுக்கு தமிழ் அவங்களுக்கு ஆங்கிலம்!”

‘நிலவைத் தொடும் குழந்தைகள் நம் எல்லா வீடுகளிலும் இருக்கிறார்கள்.

Published:Updated:
குடும்பத்துடன் கரிகாலன்-சு.தமிழ்ச்செல்வி
பிரீமியம் ஸ்டோரி
குடும்பத்துடன் கரிகாலன்-சு.தமிழ்ச்செல்வி

நாம் செய்ய வேண்டியது நமது ஹால் அழுக்காகிவிடுமே என எண்ணாமல், சுவரில் ஒரு க்ரயான் நிலவைக் கொண்டு வருவதுதான்!’ தம் பிள்ளை களைப் பற்றி எழுதிய பத்தியை இப்படி முடித்திருப்பார் கவிஞர் கரிகாலன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உண்மையில், அவர் வீட்டில் க்ரயான் நிலாக்கள் இருக்கின்றனவா என்று பார்க்க விருத்தாச்சலத்தில் உள்ள அவரின் வீட்டுக்குச் சென்றோம். பெரியார் நகர் எனும் புறநகர்ப் பகுதி. அமைதியான சூழல். பசுமை சூழ்ந்த தோட்டம், காற்றுவீசும் பால்கனி, ஊஞ்சல் கட்டிய முற்றம், எங்கும் கலைந்து கிடக்கும் புத்தகங்கள் என வாசிப்புக்கு உகந்த சூழ்நிலை நிரம்பிய வீடு!

குடும்பத்துடன் கரிகாலன்-சு.தமிழ்ச்செல்வி
குடும்பத்துடன் கரிகாலன்-சு.தமிழ்ச்செல்வி

“முன்பு, வீடே க்ரயான் நிலாக்களாதான் இருந்துச்சு. இப்போ பசங்க வளர்ந்துட்டாங்க, ஆனாலும் சுவரில் எழுதிப்படிக்கிற மனநிலை மாறவே இல்லை!” கரிகாலன் சொல்ல, சிரிப்போடும் உற்சாகத்தோடும் தொடங்கியது உரையாடல். கவிஞர் கரிகாலன் - எழுத்தாளர் சு. தமிழ்ச்செல்வி இலக்கியத் தம்பதி. கரிகாலன் தமிழின் குறிப்பிடத்தகுந்த கவிஞர். நிலாவை வரைபவன் என ஒரு நாவல், ஆறாவதுநிலம், அபத்தங்களின் சிம்பொனி, பாம்பாட்டி தேசம் உள்ளிட்ட பத்துக் கவிதைத் தொகுப்புகள், மூன்று கட்டுரை நூல்கள் வெளிவந்துள்ளன. தமிழ்ச்செல்வி, எளிய மனிதர்கள் வாழ்க்கைப்பாடு களைத் தன் நாவல்களில் அழுத்த மாகப் பதிந்துவருபவர். மாணிக்கம், கீதாரி, கற்றாழை உள்ளிட்ட எட்டு நாவல்களும் இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளியாகியுள்ளன.

சிந்து, சுடர் இரண்டு மகள்கள். மகன் கார்க்கி. சோபாவில்தான் உட்காருவேன் என அடம்பிடிக்கும் ஃபெலீஷியா டாபர்மேன் வகையைச் சேர்ந்த பெண் நாய். இன்னும் சாம்சங், நோக்கியா, ரெட்மி என ஏழெட்டுப் பூனைக்குட்டிகளும் இந்த அழகிய குடும்பத்தின் உறுப்பினர்களே!

"எங்களுடையது சாதி மறுப்பு, காதல் திருமணம். எழுத்தும், சமூகச் செயற்பாடுகளுமே எங்கள் வாழ்வின் செய்தியாக இருக்கிறது! எங்களோட ஆசைகளை, கனவுகளை பிள்ளைங்க மேல எப்போதும் திணிச்சதே இல்ல! சரியான விஷயங்களை அடையாளம் காட்டறோம். தேர்ந்தெடுக்கும், முடிவெடுக்கும் உரிமை அவர்க ளுடையது. ப்ளஸ் டூ வரைக்கும் மூணு பேரையும் டியூசனுக்கு அனுப்பியது இல்ல. வேறு எந்த கிளாஸுக்கும் அனுப்பியதும் இல்லை. ரேங்க் எடுப்பதை ஒரு நிபந்தனையாக்கியது இல்லை. அதனால் ரேங்க் கார்டை ஒளிச்சு வைக்கும் அவசியம் அவங்களுக்கு ஏற்பட்டதில்லை!” கரிகாலன் சொல்ல, ‘ஆமாம்’ என்று ஆமோதிப்பதைப்போலத் தலையாட்டினார் தமிழ்ச்செல்வி.

“மூத்த பொண்ணு சிந்து, எம்.பி.பி.எஸ் முடித்து, சென்னை எம்.எம்.சியில எம்.எஸ் படிக்கிறா. படிப்புதான் அவ உலகம். இன்னிக்கு ஒருநாள் லீவு எடுத்துட்டு வான்னு சொன்னாலும், முடியல, மறுத்துட்டா! இரண்டாவது மகள் சுடர், எம்.பி.பி.எஸ் முடிச்சிருக்கா. பி.ஜி நீட் தேர்வுக்குத் தயாராகுறா! எங்க ஊரான திருவாரூர் மருத்துவக் கல்லூரியில்தான் ரெண்டு பிள்ளைங்களுமே எம்.பி.பி.எஸ் படிச்சாங்க. அதுல எனக்குப் பூரண மகிழ்ச்சி! பிள்ளை களைப் பார்க்க ரெண்டுபேரும் அடிக்கடி பைக்கிலேயே திருவாரூர் போவோம். இந்த பைக் பயணம் அபூர்வமானது. கணவன் மனைவியிடையே நெருக்கத்தை, புரிதலை வளர்ப்பது. மகன் கார்க்கி, சென்னை சீர்மிகு சட்டப் பள்ளியில் பி.ஏ., எல்.எல்.பி (ஹானர்ஸ்) நான்காமாண்டு படிக்கிறான். எங்களோட எழுத்துல ஏதாவது ஓர் இடத்தில இவங்களுடைய அடையாளம் எங்களையும் அறியாம வந்துடும்” இயல்பாகக் குடும்பத்தை அறிமுகப்படுத்துகிறார் தமிழ்ச்செல்வி.

“ ‘சுடர்’ என்பது ஆண் பேரா, பெண் பேரான்னு குழம்பி, அட்டென்டென்ஸ்ல எங்க எழுதறதுன்னு டீச்சர்ஸ் குழம்பிடுவாங்க. பாரதி பாட்டுலேருந்து எடுத்து இந்தப் பெயரை அம்மா வெச்சாங்க’’ என்னும் சுடரை இடைமறிக்கிறார் கார்க்கி.

“சின்ன வயசுல அப்பாவும் நானும் பைக்ல புக்ஃபேர் முடிஞ்சு நெய்வேலியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தோம். அப்போ நான் எட்டாவது படித்துக்கொண்டிருந்தேன். நம்ம சாதி முறை, சமூக நீதி குறித்தெல்லாம் அப்பா சொல்லியபடி வந்தார். அது அப்போ புரியல. ஆனால், இப்போ ஒரு வழக்கறிஞரா முத்தலாக், 10 சதவிகித இட ஒதுக்கீடு போன்ற டிபேட்டுகளில் நாம் எந்தப் பக்கம் நிற்பது என்கிற தெளிவைக் கொடுத்திருக்கு.

ஈழப்போராட்டமோ, ஜல்லிக்கட்டோ, காவிரிப்பிரச்னையோ... ஓர் ஓவியனா எல்லாவற்றையும் வரைஞ்சு பார்க்க, எழுதிப்பார்க்க இந்தச் சூழல்தான் என்னை ஊக்குவிக்குது. அக்கா இரண்டு பேரும் டாக்டர்கள். நான் சட்டம் படிக்கிறேன். எந்த இடத்துலேயும் அப்பா, அம்மா, அக்கா யாரும் என்னை இதுதான் படிக்கணும்னு வற்புறுத்தவில்லை” என்று சொல்லும் கார்க்கியை அணைத்துக்கொள்கிறார் கரிகாலன்.

திருவாரூர்
திருவாரூர்

``சிந்து, சுடரிடம் எதைப்பற்றியும் பேச முடியும். இசை, இலக்கியம், அரசியல் போக்குகளை அறிந்தவர்கள். படிப்பறிவைத் தாண்டி, உலகத்தில் நடக்கும் மாற்றங்களை உணர்ந்துகொள்வது, மனிதர்களை நேசிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது எனப் பிள்ளைகள் வளர்கிறார்கள். பிள்ளைகள் அறிவாளிகளா வளர்றாங்க, என்பதைவிட நல்ல மனசோட வளர்றாங்க. என்பதே மகிழ்ச்சி’’ நெகிழ்கிறார் தமிழ்ச்செல்வி.

“மூவரில் யார் உங்களின் இலக்கியவாரிசு?” “மூன்று பேருமே எழுதுவாங்க. என்ன, இங்கிலீஷ்லதான் எழுதறாங்க. இப்போ அவங்களுக்கு எழுத நேரமில்ல. படிப்பெல்லாம் முடிஞ்சபிறகு மூவருமே எழுவாங்கங்கிற நம்பிக்கை இருக்கு!’’ என்ற அப்பாவை இடைமறித்த சுடர், “நான் தமிழில்தான் கவிதை எழுதினேன். அதை, அப்பாவின் நண்பர் ஒருவரிடம் காட்டினப்போ, ‘கரிகாலன் மாதிரியே எழுதியிருக்கியே’ன்னு சொன்னாங்க. அதற்குப் பிறகு எனக்குன்னு ஒரு ஸ்டைலை உருவாக்க நினைச்சேன். தமிழில்தான் சிந்திக்கிறேன். ஆனா பழக்கம் காரணமா, இங்கிலீஷ்ல எழுதுறேன். எதிர்காலத்துல நம்ம தாய்மொழியில நிச்சயமா எழுதுவேன்’’ என்கிறார் சுடர். “நானும் தமிழில்தான் நாவல் எழுதணும்னு இருக்கேன். எப்ப எழுதுவேன்னு தெரியல, ஆனா, நிச்சயம் எழுதுவேன்’’ ஆர்வம் காட்டுகிறார் கார்க்கி.

“படைப்பூக்கத்தோடு தொடர்புள்ள வேலை என்பதால், ஆசிரியர் வேலையை ஆர்வத்தோடு செய்யறோம். வீட்டிலேயும், பள்ளியில பிள்ளைகளோடும் சமூகம் சார்ந்த பிரச்னைகளை விவாதிக்க வாய்ப்பிருக்குது. ஒரு பிரச்னையில் இருக்கிற நியாயத்தை நம்ம பக்கமா நின்னு பார்க்காம, அடுத்த மனிதர்கள் பக்கமா இருந்து யோசிக்கிற பிள்ளைகளோட மனநிலை பிடிச்சிருக்கு” என்ற வர்களிடம், `‘குடும்பப் பாட்டு போல, குடும்பப் பழக்கம் ஏதாவது இருக்குமே!” என்றோம்.

“ஓ... நிறைய இருக்கு! ஒன்று மட்டும் சொல்றோம். எங்க ஊரு திருத்துறைப்பூண்டி பக்கத்துல உள்ள கற்பகநாதகுளம். அங்கு வருடத்துக்கு ஒருமுறை போவோம். அப்போ அங்கிருந்து வேளாங்கண்ணி அன்னையோட ஆலயம், நாகூர் தர்கான்னு ஒரு சுற்று போவோம். அப்போ வேளாங்கண்ணியில ஆண்டுதோறும் குடும்பத்தோடு குரூப் போட்டோ எடுப்போம். அதுதான் எங்க குடும்பப் பழக்கம். அவற்றை இப்போ வரிசைப்படுத்திப் பார்த்தா, புள்ளைங்க எப்படி வளர்ந்திருக்காங்கன்னு சந்தோஷமா இருக்கு!” என்கிறார் அந்தப் படங்களை எடுத்துவந்தவாறே தமிழ்ச்செல்வி.

மேஜையில் பரப்பிய அந்தப் படங்களை, அம்மாவின் தோளில் கைவைத்துக்கொண்டு, மெல்லிய சிரிப்போடு பார்க்கிறார் கார்க்கி. சிறுவனிலிருந்து வளரிளம் பருவத்துக்கு வளர்ந்ததைக் காட்டும் படங்கள் அவை.