Published:Updated:

புத்தம் புது காலை: ஞாபகங்களை அணைத்துக் கொள்ளுதல்... டெடி பியர் உருவான கதையும், நமக்கான யோசனையும்!

"இறந்தபின்னும் மற்றவர்களின் நினைவுகளில் வாழ்பவர்கள் உண்மையில் மரணிப்பதில்லை..." என்ற வரிகளுக்கேற்ப மரணமும் நினைவும் ஊடாடும் கதைதான் டெடி பியர் உருவான கதையும்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

1869-ம் ஆண்டு, ரஷ்ய நாட்டின் கெர்சன் நகரில் ஒரு ரஷ்ய யூதக் குடும்பத்தில் பிறந்தவர் மோரிஸ் மிச்டாம். தனது 18 வயதில் தனது நாட்டில் நடந்த இனப் படுகொலையிலிருந்து தப்பிக்கும் மிச்டாம், அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு 1887-ம் ஆண்டு கையில் ஒரு பைசா கூட இல்லாமல் வந்து சேர்கிறார்.

கையில் பணம்தான் இல்லையே தவிர மனதில் நம்பிக்கை இருக்கிறது. மெல்ல, புரூக்லின் நகரில் ஒரு சிறிய பெட்டிக்கடை ஆரம்பித்து அதில் மிட்டாய்கள் விற்று பிழைப்பு நடத்துகிறார். ஓரிரு ஆண்டுகள் போகிறது. அதே அகதிமுகாமில் அவரைப் போலவே வந்த ரஷ்ய யூதப் பெண்ணான ரோஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் மோரிஸ் மிச்டால்.

கணவரின் கடையை உடனிருந்து கவனித்துக் கொண்ட மனைவி ரோஸ், தான் அகதிகள் முகாமில் கற்றுக்கொண்ட குழந்தைகளுக்கான சிறு துணி பொம்மைகளைச் செய்து, அவற்றை கடையில் விற்கத் தொடங்குகிறார். திருமணமான சில வருடங்களில் ஜோசப், பெஞ்சமின், அமீலியா, எமிலி, ஃப்ரெட்ரிக் என ஐந்து குழந்தைகள் பிறக்கின்றன. ஆனால், அதில் அமீலியாவும், ஃப்ரெட்ரிக்கும் நிமோனியா காய்ச்சல் காரணமாக அடுத்தடுத்து இறந்து போக, மனதளவில் இடிந்து போகிறார் ரோஸ்.

Theodore Roosevelt
Theodore Roosevelt
Samuele Wikipediano 1348, via Wikimedia Commons

தனது குழந்தைகள் இறந்தபிறகு, வருத்தத்தில் பொம்மைகள் செய்வதையே நிறுத்திவிட்ட ரோஸ், ஒரு நடைப்பிணம் போல வருமானத்திற்காக கடையை மட்டும் தொடர்ந்து நடத்தி வருகிறார். ஆனால், வறுமை குடும்பத்தை வாட்டிக் கொண்டுதான் இருக்கிறது.

இந்த நேரத்தில் 1902-ம் ஆண்டு நவம்பர் மாதம், மிசிசிப்பி மற்றும் லூசியானா மாநிலங்களுக்கிடையே ஏற்பட்ட எல்லை சர்ச்சைகளைத் தீர்க்கச் செல்கிறார் அப்போதைய அமெரிக்க அதிபரான தியோடர் ரூஸ்வெல்ட். ஒருநாள் தனது ஓய்வுநேரத்தில் மிசிசிப்பி காட்டிற்குள் ரூஸ்வெல்ட் வேட்டையாடச் செல்கையில் காயமடைந்த கரடிக்குட்டி ஒன்றைக் காண்கிறார்.

அருகிலிருந்த்வர்கள் அந்த கரடிக்குட்டியை சுடச் சொல்லி வற்புறுத்தியபோது, ஏற்கெனவே காயம்பட்டிருந்த அந்த கரடிக்குட்டியை தான் சுட மறுத்ததுடன், மற்றவர்கள் அதைச் சுடுவதையும் தடுத்துவிடுகிறார் தியோடர் ரூஸ்வெல்ட்.

சாதாரணமாக அவர் செய்த அந்த விஷயம், மறுநாள் அமெரிக்காவே பாராட்டும் விஷயமாக மாறிப்போனது. அன்றைய வாஷிங்டன் போஸ்ட் "கரடியைக் காப்பாற்றிய அமெரிக்க அதிபர்" என்று அந்தச் செய்தியை பெரிதாய் வெளியிட்டு, அதற்குக் கீழே கிளிஃபர்ட் பெர்ரிமென் என்ற ஓவியரின் கார்ட்டூனையும் வெளியிடுகிறது. அமெரிக்க அதிபரும், கரடிக்குட்டியும் நிற்கும் அந்தக் கார்ட்டூனுக்கு, தியோடர் ரூஸ்வெல்ட்டின் செல்லப்பெயரையும் சேர்த்து 'Ted and Bear' என்று வைத்த பெயர், அவரது அந்தச் செயலை இன்னும் புகழடைய வைத்து விடுகிறது.

நாடே இதைப் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்க, அந்த செய்தியை மனைவி ரோஸிடம் காட்டிய மோரிஸ் மிச்டாம், இந்த சமயத்தில் அந்த கார்ட்டூனில் இருந்தது போலவே சில கரடி பொம்மைகளைச் செய்து தரச் சொல்லி மனைவியிடம் கேட்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் கரடி பொம்மையை செய்த ரோஸ், இந்தமுறை சற்று பெரியதாக, கிட்டத்தட்ட அந்த கார்ட்டூனில் இருப்பதைப் போலவே பஞ்சு அடைக்கப்பட்ட சில மென்மையான கரடி பொம்மைகளைச் செய்கிறார்.

Teddy's Bear
Teddy's Bear

மெத்தென்று பெரிய தொப்பையும் முட்டைக் கண்களுமாய் உள்ளம் கொள்ளை கொள்ளும் வடிவில் இருந்த அந்த பொம்மைகளுக்கு 'டெடி'ஸ் பியர்' (Teddy's Bear) என்று பெயரிட்ட மோரிஸ் மிச்டாம், அதில் இரண்டை, அமெரிக்க அதிபரின் குழந்தைகளுக்குப் பரிசாக அனுப்பிவைக்க, அதுவும் செய்தியாகி கார்ட்டூனைக் காட்டிலும் பிரபலமாகிறது.

இதைத் தொடர்ந்து, அதே போல தங்களுக்கும் ஒரு டெடி பியர் வேண்டுமென்று கேட்டு, மிச்டாமின் சிறிய கடைக்குப் படையெடுக்கிறது மக்கள் கூட்டம். செய்யச் செய்ய விற்றுத் தீர்த்த அனைத்து டெடி பியர்களைப் பார்த்து, 1907-ல் மிச்டாம் தம்பதியினர் தொடங்கியது தான் 'ஐடியல் நாவல்டி & டாய் கம்பெனி' என்ற டெடி பியர் கம்பெனி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வியாபார ரீதியில் அவர்கள் தயாரித்த டெடி பியர்கள் இன்னும் மென்மையாக அங்கோரா ஆட்டின் முடிகள் கொண்டு தயாரிக்கப்பட வியாபாரம் அள்ளிக்கொண்டு போனது. கூடவே பல்வேறு காமிக்ஸ்கள், மற்ற மிருகங்களின் பொம்மைகள் தயாரிப்பு என கிட்டத்தட்ட 200 வெவ்வேறு பொம்மைகளுடன், ஆரம்பித்த சில வருடங்களிலேயே அமெரிக்காவின் சிறந்த பொம்மை நிறுவனமாகவே உருவெடுக்கிறது மோரிஸ் மிச்டாமின் ஐடியல் நாவல்டீஸ்.

இப்படி, 1902-ம் ஆண்டு ஒரு சாதாரண பொம்மையாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இந்த டெடி பியர்கள், இன்று உலகம் முழுவதும் பல நிறங்களில், பல அளவுகளில், பல வடிவங்களில் பெண்களையும் குழந்தைகளையும் வசீகரித்து வந்திருக்கின்றன என்றாலும் 'மெலடி மெக்ப்ரைட்' என்ற பெண்ணை அது வேறுவிதமாக பாதித்தது.

Teddy's Bear
Teddy's Bear

அமெரிக்காவின் டேர் கவுன்ட்டி மாகாணத்தில் வசித்துவந்த மெலடி மெக்ப்ரைட்க்கு எல்லாமே அவரது தந்தைதான். சிறுவயதில் இருந்தே தந்தை கொடுத்த ஊக்கத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய மெக்ப்ரைட், கல்லூரி முடிக்கும்போது இடியாக வந்தது, 2013-ல் தனது தந்தை இறந்த செய்தி.

தந்தையின் மரணத்தைத் தாங்க முடியாத மெக்ப்ரைட், தந்தை தனக்கு வாங்கிக் கொடுத்த டெடி பியருக்கு தந்தையின் சட்டையை அணிவித்துக் கட்டிக் கொள்வாராம். ஒருமுறை அதைப் பார்த்த மெக்ப்ரைட்டின் தோழி ஒருவர் கூறிய யோசனைப்படி, தனது தந்தை உபயோகித்த சட்டைகளைக் கொண்டு ஒரு டெடி பியர் பொம்மையைத் தானே உருவாக்குகிறார் மெக்ப்ரைட்.

தனது தந்தை எப்போதும் தன்னுடன் இருப்பது போல உணர்ந்த அவர், அதிலிருந்து தனது புதிய யோசனையை மற்றவர்கள் துயர் துடைக்கவும் செயல்படுத்தத் துவங்குகிறார்.

புத்தம்புது காலை: மண்ணுக்கும் விண்ணுக்கும் சம்பந்தம் உண்டென சொல்லும் மிளகாய்!

'Huggable Memories' அதாவது ஞாபகங்களை அணைத்துக் கொள்ளுதல் என்ற டெடி பியர் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியவர், இறந்த பிரியமானவர்களின் உடைகளைக் கொண்டு பொம்மைகளைத் தயாரித்து அவர்களுக்கு வழங்கி வருகிறார். அன்றிலிருந்து இன்றுவரை ஒவ்வொருவரின் துக்கங்களை சந்தோஷங்களாக மாற்ற முயன்று வருகிறேன் என்று சொல்லும் மெலடி மெக்ப்ரைட், "தொழிலாகத்தான் செய்கிறேன் என்றாலும் கோவிட் பெருந்தொற்றில் எண்ணற்றவர்களின் கண்ணீரை என்னால் கொஞ்சமாவது குறைக்க முடிந்தது" என்று சந்தோஷப்படுவதுடன், இங்கு நமக்கு ஒரு புதிய யோசனையையும் தருகிறார்.

நமது நாட்டிலும் கோவிட் பெருந்தொற்று பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை நிலைகுலைந்து போனது.

டெடி பியர்
டெடி பியர்

"என்னோட அம்மாவோட முகத்தை கடைசியா ஒருமுறை கூட பாக்க முடியல", "என் அப்பாவுக்குப் பண்ணவேண்டிய காரியம் எதையும் பண்ண முடியல...", "என் கணவரோட கடைசி வார்த்தைகளை என்னால கேக்கக் கூட முடியல" என்று எண்ணற்ற அழுகுரல்கள் ஒலித்துக்கொண்டுதான் இருந்தது. இன்றும் பலர், அவர்களது பிரியமானவர்களின் உடைகளை கட்டிக்கொண்டு தூங்க முடியாமல் தவிப்பதை நம்மால் உணரவும் முடிகிறது.

அந்தக் குரல்களை அமைதிப்படுத்த, அந்தக் கண்ணீரைக் குறைக்க... மெக்ப்ரைட்டின் 'ஹக்கபில் மெமரீஸ்' போல இங்கும், யாராவது ஒருவர் தொழில்முறையாகவே இறந்தவர்களின் உடைகள் கொண்டு அந்தக் குடும்பங்களுக்கு பொம்மைகளைத் தயாரித்து வழங்க முன்வரலாம் தானே?

ஒரு தொழிலாக நிச்சயமாக இது நல்ல வருமானத்தைத் தரும் என்பதுடன், எண்ணற்றவர்கள் தங்களது பிரியமானவர்களின் உடைகளையும், ஞாபகங்களையும் ஒன்றாக அணைத்துக் கொள்ளவும் இது உதவும் தானே?

நிலையற்ற மனித வாழ்வில் நினைவுகளுக்கு மட்டும் மரணம் என்பதே இல்லை என்றிருக்க, இதுபோன்ற ஆறுதல்களால் நம்முடன் நிச்சயம் அவர்களும் இருப்பார்கள் அல்லவா?!

ஞாபகங்களை அணைத்துக் கொள்வோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு