Published:Updated:

``ஒரு குழந்தையின் கண்ணீரே என்னைக் கோமாளியாக மாற்றியது!" குழந்தைகள் நாடகக் கலைஞர் வேலு சரவணன்

சுனாமி, புயல் என்ற துயரங்களில் தமிழ்நாடு மூழ்கியபோதெல்லாம், அங்கே சென்று வாடியிருந்த குழந்தை மலர்களுக்குப் புத்துணர்ச்சியை அளித்தவர், வேலு சரவணன். இந்த நேரத்தில் தனது கோமாளிப் பயணம் குறித்த அனுபவத்தைப் பகிர்கிறார்.

``நம்மைச் சுற்றி இருக்கும் பல மனிதர்கள், ஒரு புழு பூச்சியைப் பார்ப்பதுபோல பார்ப்பார்கள். வேலையை விட்டுட்டு பைத்தியக்காரன் மாதிரி திரியறான் என்று நகைப்பார்கள். கோமாளியாக இருப்பவனுக்கு சமூகத்தில் கிடைக்கும் மரியாதை இதுதான். ஆனால், இந்த அவமானங்களை எல்லாம் மனதின் ஓரத்துக்குத் தள்ளிவைத்துவிட்டு, கோமாளியாகக் கம்பீரமாக வலம்வருவதற்கு காரணம் குழந்தைகள்தாம். அவர்களின் சிரிப்பில்தான் எனது 30 ஆண்டுக்கால கோமாளிப் பயணம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், என்னை முதன்முறையாக முழுமையான கோமாளியாகக் கண்டுகொண்டதே, ஒரு குழந்தையின் கண்ணீர்த் துளிக்குள்தான்'' என்கிறார் வேலு சரவணன்.

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கான நாடகக் கலைஞர் என்று சொன்னதும், நினைவுக்குள் உச்சரிக்கும் பெயர் வேலு சரவணன். புதுவைப் பல்கலைக்கழகத்தின், தவத்திரு சங்கரதாஸ் நிகழ்கலைப் பள்ளியின் உதவிப் பேராசிரியர். இருப்பினும், `வேலு மாமா' என்கிற கோமாளியாகக் குழந்தைகள் முதல் அனைவருக்குள்ளும் குட்டிக்கரணம் போட்டுக்கொண்டிருக்கிறார். இவரது `கடல் பூதம்' நாடகம், நேற்றைய இன்றைய குழந்தைகளின் ஆழ்மனதுக்குள் புதைந்திருக்கும் அழியா பொக்கிஷம். `கடல் பூதம்', `குதூகல வேட்டை', `தேவலோக யானை', `அல்லி மல்லி', `பூதக்கண்ணாடி', `பனி வாள்', `கர்ணன்', `மிருகம்', `காவல்கார கோமாளி' போன்ற குழந்தைகளுக்கான பல்வேறு நாடகங்களை உருவாக்கி நடித்துள்ளார்.

வேலு சரவணன்
வேலு சரவணன்

அங்கன்வாடி பள்ளியின் 15 குழந்தைகள் மத்தியில் தொடங்கி, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, வளைகுடா நாடுகளில் இந்தக் கோமாளி சூரியனால் மலர்ந்த குழந்தைகளின் சிரிப்புகள் இன்றுவரை வாடாமல் உள்ளன. இந்த விடுமுறை நேரம், இவரால் இன்னும் பல சிரிப்பு மலர்கள் பூத்திருக்க வேண்டிய நேரம். ஆனால், கொரோனா ஊரடங்கு, சூரியக் கோமாளியை வீட்டுக்குள் பூட்டிவிட்டது. சுனாமி, புயல் என்று தமிழ்நாடு துயரங்களில் மூழ்கியபோதெல்லாம், அங்கே சென்று வாடியிருந்த குழந்தை மலர்களுக்குப் புத்துணர்ச்சியை அளித்தவர். இந்த நேரத்தில் தனது கோமாளி பயணம் குறித்த அனுபவத்தைப் பகிர்கிறார்.

``இப்போதைய புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் வெள்ளாட்டுமங்கலம், கம்பர்கோவில் என்கிற குக்கிராமம்தான் நான் பிறந்த ஊர். மொத்தமே 40 வீடுகள் உள்ள ஊரில் கடைகளோ, பள்ளிக்கூடமோ கிடையாது. என் தாத்தா மாட்டுத் தரகர். நான் பள்ளிக்குச் சென்றதைவிட அதிகம் சென்றது மாட்டுச் சந்தைகளுக்குத்தான். வகுப்பறையில் இருந்ததைவிட, ஆடு மாடுகளுடனே அதிகம் இருந்தேன். படிப்பில் அதிகம் நாட்டமில்லை. கோயில்களில் நடக்கும் நாடகங்களைப் பார்த்துவிட்டு, அதேபோல நண்பர்கள் முன்னிலையில் நடித்துக் காட்டுவேன்.

பட்டப்படிப்புக்கு இயற்பியலில் சேர்த்து விட்டுட்டாங்க. கல்லூரியிலும் நாடகம் நடிப்பவனாகத்தான் என் அடையாளம் இருந்தது. இந்த நேரத்தில் 1988-ம் ஆண்டில், புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக நாடகத்துக்கான துறை தொடங்கப்பட்டது. இதுல சேர்ந்து கத்துக்கிட்டு எப்படியாவது புரூஸ் லீ மாதிரி ஆக்‌ஷன் ஸ்டாராகிடணும் என்கிற எண்ணத்துடன்தான் விண்ணப்பித்து, என் மாமாவுடன் புதுச்சேரிக்குக் கிளம்பினேன்'' என்கிற வேலு சரவணன், அதன் பிறகு சொன்னதெல்லாம் குழந்தைமை நிறைந்த வார்த்தைகள்.

வேலு சரவணன்
வேலு சரவணன்

``என் மாமா மீனாட்சி சுந்தரம் ஒரு சுற்றுலாப் பிரியர். எல்லா ஊர்கள் பற்றியும் அங்குள்ள மனிதர்கள் பற்றியும் தேடித் தேடித் தெரிஞ்சுக்க விரும்புவார். அவரோடு புதுச்சேரியில் வந்து இறங்கியாச்சு. ஜமீன்தார் கார்டன் என்கிற இடத்தில் நேர்முகத் தேர்வு. அந்த முகவரிக்கு காலையில 6.30 மணிக்கே போய்விட்டோம். எனக்குப் புத்தக வாசிப்பு, இலக்கிய அறிவு எதுவும் அப்போது கிடையாது. நாடகத்தில் நடிக்க இலக்கிய வாசிப்பு முக்கியம்னு தெரியாது. அந்த நாடகத்துறைக்கான இயக்குநர் இந்திரா பார்த்தசாரதி. தவிர, க.நா.சு, கி.ரா, பிரபஞ்சன் போன்ற ஜாம்பவான்களும் பொறுப்பில் இருந்தாங்க. நானோ இந்திரா பார்த்தசாரதின்னா ஒரு பெண் என நினைச்சுக்கிட்டிருந்தேன். அதிகாலையிலே அங்கேபோய் கதவைத் தட்டினதும் ஒருவர் திறந்தார். `இந்திரா பார்த்தசாரதி அம்மாவைப் பார்க்கணும்'னு சொன்னேன். அவரோ, `அப்படியா... இந்திரா பார்த்தசாரதி அம்மா இல்லே அப்பா'னு சொன்னார். அவர்தான் புகழ்பெற்ற எழுத்தாளர் க.நா.சு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படித்தான் ஆரம்பிச்சது என்னோட நாடகத்துறை படிப்புக்கான அனுபவம். அங்கே சேர வந்திருந்த மற்ற எல்லா மாணவர்களுமே ஓரளவு சீனியர்கள். நிறைய வாசிக்கிறவங்களா இருந்தாங்க. கல்லூரி முடிச்சுட்டு நேராக அங்கே போயிருந்த ஒரே ஆள் நான்தான். எல்லோரையும்விட ரொம்ப சின்ன பையனா இருந்தேன். இந்திரா பார்த்தசாரதி, கி.ரா போன்றவர்களும் நூலகம் போய் புத்தகம் படிங்க, புத்தகம் படிங்கன்னே சொல்றாங்க. எனக்குக் கடுப்பாகிப் போச்சு. நடிக்கக் கூப்பிட்டுட்டு எதுக்கு படி படின்னு சொல்றாங்க. இடம்தெரியாம வந்து மாட்டிக்கிட்டோமோன்னு நூலகம் பக்கமே போக மாட்டேன். நான் இப்படி இருக்கிறதைப் பார்த்துட்டு, `தினம் ஒரு தமிழ்ப் புத்தகம், ஒரு ஆங்கிலப் புத்தகம் படிச்சுட்டு, அடுத்த நாள் அதுபற்றி வகுப்பில் எல்லோரும் பேசணும்'னு ஒரு சட்டமே கொண்டுவந்துட்டாங்க. கட்டாயத்தால் படிக்க ஆரம்பிச்சவன்தான். இப்படித்தான் இலக்கியம் எனக்கு அறிமுகமாச்சு.

ஒரு வருஷம் கழிச்சு எங்க மாணவர்கள் சார்பில், ஒளரங்கசீப் நாடகம் அரங்கேற்றம். திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தர்தான் சிறப்பு அழைப்பாளர். இந்த விஷயம் என் ஊருக்கும் பழைய கல்லூரி மாணவர்களுக்கும் தெரிஞ்சதும், சரவணன் சொன்ன மாதிரியே புரூஸ் லீ ஆகிடுவான்டான்னு நினைச்சுக்கிட்டாங்க. அந்த நேரத்தில் எங்க காலேஜுக்கு அதிகமாக வந்த வாழ்த்து தந்தியே எனக்குத்தான். ஆனால், எனக்கோ நாடகத்தில் ஒற்றை வசனம் பேசும் சின்ன கேரக்டர்'' என்று சிரிக்கிறார்.

வேலு சரவணனுக்குள் இருந்த கோமாளியும் கடல் பூதமும் பிறந்தது இதன் பிறகுதான்.

``அந்த வெறுப்புடனே கல்லூரிக்குள் சுத்திக்கிட்டிருந்தேன். அப்போ, ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்த நேரம் ஒதுக்கப்படும். எனக்கான நாள் வந்தப்போ, தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் இசை நாடகப் பாணியின் புகழ்பெற்ற நடிகரான மதுரை டி.எம்.தங்கப்பா வந்திருந்தார். அவருடன் ஐயா இந்திரா பார்த்தசாரதி, இணைப் பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் முன்னிலையில், `கடல் பூதம்' நாடகத்தை நடத்தினேன். அதுவரைக்கும் நாடகம்ன்னாலே சீரியஸாகவே மற்ற மாணவர்கள் செய்துகிட்டு இருக்க, நான் கோமாளியாக நடத்தின இந்த நாடகத்தைப் பார்த்து எல்லோரும் சிரிச்சு ரசிச்சாங்க. `நீ ரொம்ப வித்தியாசமா செய்யறே. நம்ம தமிழ் நாடகங்களில் இதுவரைக்கும் வந்த பஃபூன்களிலேயே நீ வேறுபட்டவன். இதை விட்டுடாதே'னு பாராட்டினாங்க. அன்னிக்கு அறைக்கு வந்ததும் கண்ணாடியில் என்னைப் பார்த்துக்கிட்டேன். ஒரு மான் மாதிரி நான் தெரிஞ்சேன்.

வேலு சரவணன்
வேலு சரவணன்

இந்த நேரத்தில், தெருக்கூத்து கலையின் புகழ்பெற்ற புரிசை கண்ணப்ப தம்பரான், எங்களுக்காகத் தெருக்கூத்து பயிற்சி நடத்த வந்தார். அவரின் கூத்தில் எனக்குக் கட்டியக்காரன் வேடம். அது எனக்கு நிறைய கற்றலை கொடுத்துச்சு. ரெண்டு வருடப் படிப்பை முடிச்ச பிறகு, என்ன செய்யறதுன்னு தெரியலை. ஊருக்குப் போகவும் மனசில்லை. பாண்டிச்சேரியிலேயே கிடைச்ச இடங்களில் தங்கிக்கிட்டு சுத்திக்கிட்டிருந்தேன். அப்போ, ஆரோவில்லில் இருந்த உதவி என்கிற பள்ளியில் நாடகம் நடத்த, அங்கே ஆசிரியராக இருந்த நண்பர் கணேசன் ஏற்பாடு செய்தார். அதுதான் பார்வையாளர்களுக்கு முன்னாடி நான் நடத்துற முதல் அரங்கேற்றம்.

`கடல் பூதம்' மற்றும் சோவியத் எழுத்தாளர் நிக்கோலஸ் நோசவ் எழுதிய `மூன்று வேட்டைக்காரர்கள்' கதையைக் கொஞ்சம் மாற்றி, `குதூகல வேட்டை' என இரண்டு நாடகங்களை நடத்தினேன். குழந்தைகள் அவ்வளவு சிரிச்சு சிரிச்சு ரசிச்சாங்க. அந்தப் பள்ளியில் இருந்த அனுபென் என்கிற மூதாட்டிக்கு என்னை ரொம்ப பிடிச்சுப் போச்சு. அவங்களை என்னுடைய ஆசிரியர்களில் ஒருவராகச் சொல்வேன். நிறைய ஊக்கப்படுத்தினாங்க. `பாண்டிச்சேரியின் கலர் உன்கிட்ட இருக்கு'னு சொல்வாங்க.

பிறகு, புதுவை மாநில கல்வித்துறையின் முன்னாள் இயக்குநர் ஜான் லூயிஸ் அறிமுகம் கிடைச்சது. அவர்தான் பாண்டிச்சேரி முழுவதும் உள்ள பள்ளிகளில் நாடகம் நடத்த ஏற்பாடு செய்தார். `நான் சர்க்குலர் அனுப்பிடறேன். எல்லாப் பள்ளிகளிலும் போய் நாடகம் நடத்திக்க. ஆனா, வருமானத்துக்கு நீதான் பார்த்துக்கணும்'னு சொல்லிட்டார். அவர்தான் `உங்க நாடகக் குழுவுக்கு ஒரு பெயர் வைக்கணுமே'னு சொன்னார். `மொத்தமே ரெண்டு பேர்தான். இதுக்கு எதுக்குப் பெயர்'னு சொன்னதை ஏத்துக்கலை. `புருஸ் லீ நாடகக் குழுன்னு வைக்கலாமா'னு அப்பவும் புரூஸ் லீயை விடாமல் கேட்டேன். மறுத்துவிட்டார். அப்புறம்தான், `ஆழி குழந்தைகள் நாடகக் குழு' பிறந்துச்சு.

நாடகம்
நாடகம்

அந்தப் பெயரோடு நாங்க போன முதல் இடம், வானரப்பேட்டை அருகே இருக்கிற ஓர் அங்கன்வாடி பள்ளி. மொத்தமே 15 குழந்தைகள்தான். பள்ளி ஆசிரியர், ஆயா, அக்கம்பக்கம் இருக்கிறவங்கன்னு 30 பேர். அவங்க முன்னாடி `கடல் பூதம்' நாடகத்தை நடத்தினோம். சிரிச்சு சிரிச்சு ரசிச்சுட்டிருந்த குழந்தைகள், கடலில் கிடைக்கிற சொம்பிலிருந்து பூதம் கத்திக்கிட்டே வெளியே வரும் காட்சியில், பயந்து அழ ஆரம்பிச்சுட்டாங்க. அதிலும் ஒரு குழந்தை தேம்பி தேம்பி அழுதுட்டே இருக்கு. ஒரு அம்மா அந்தக் குழந்தையைத் தூக்கிட்டு வெளியே போய்ட்டாங்க. உடனே ஒரு பாட்டி, `என்னங்கடா நாடகம் நடத்தறீங்க. இப்படியா குழந்தைகளை அழ வைக்கிறது'னு விளக்குமாற்றைத் தூக்கிக்கிட்டு வந்துட்டாங்க. பூதமா நடிச்சவன் பயந்துபோய், சமையலறைக்குள்ளே போய் கதவை மூடிக்கிட்டான். பாட்டி கோபமா பேசிக்கிட்டே இருக்காங்க. அப்போ அதிகமா அழுத அந்தக் குழந்தையை நான் பார்க்கிறேன். அந்தக் கண்களிலிருந்து உருண்டுவரும் கண்ணீர்த்துளிகளைப் பார்க்கிறேன். அதுக்குள்ளே, ஒரு கோமாளியாக ஒரு படகில் நான் போய்கிட்டிருக்கேன். முழுமையான கோமாளியாக நான் பிறந்த இடம் அங்கேதான்'' என்கிறார்.

``ஒவ்வொரு பள்ளியிலும் நாடகம் நடத்திட்டு, தொப்பியை ஏந்தி பிள்ளைகளிடம் வசூல் பண்ணுவோம். பெண் பிள்ளைகள் அவங்க ஜாமென்ட்ரி பாக்ஸ்ல வெச்சுருக்கிற சேமிப்பு காசை எடுத்து சந்தோஷமா கொடுப்பாங்க. ஆம்பிளை பசங்க அப்படி இல்லை. அதனால, பசங்ககிட்ட வாங்கற பொறுப்பை ஆசிரியர்களிடமே விட்டுருவோம். ஒரு நாடகம் நடத்திட்டு வெறும் 21 ரூபாயோடு திரும்பிய அனுபவம் எல்லாம் இருக்கு. ஆனா, அந்தக் குழந்தைகளின் சந்தோஷத்துக்கு முன்னாடி அதையெல்லாம் மறந்துடுவேன்'' என்கிறார் இந்தக் கோமாளி.

அதன் பிறகு, பாண்டிச்சேரியின் பல பள்ளிகளில் கடல் பூதமும் கோமாளியும் குழந்தைகளை மகிழ்ச்சியில் குளிப்பாட்டினார்கள். பின்னர், 1992-ம் ஆண்டு, `மெட்ராஸ் கிராஃப்ட் பவுண்டேஷன்' என்ற அமைப்பு மூலம் சென்னையில் 40 நாள்கள் 40 பள்ளிகளில் நாடகம் நடத்தியது, தீவுத் திடலில் நடத்தப்படும் அரசுப் பொருள்காட்சியில் மூன்று மாதங்கள் தங்கியிருந்து, அதுவரை பொருள்காட்சியில் நாடக அரங்கு பக்கம் எட்டியே பார்க்காத மக்களையும் வரவைத்து வெற்றிபெற வைத்தது, ஞாநி மூலம் `பரீக்‌ஷா' குழு ஏற்பாடு செய்த பயிற்சி பட்டறையில் பலருக்கும் கற்றுக்கொடுத்தது எனத் தொடர்ந்தது கோமாளியின் பயணம்.

வேலு சரவணன்
வேலு சரவணன்

`பள்ளிதோறும் ஒரு கோமாளி' என்பதுதான் வேலு சரவணனின் மாபெரும் ஆசை. ``மால்களில், கடைகளில், திருவிழாக்களில், திருமண நிகழ்ச்சிகளில் என ஓடியாடி மகிழ்ச்சியாக இருக்கிற இடங்களில் எல்லாம் ஒரு கோமாளியைப் பார்க்க முடியுது. ஆனா, ஒருநாளின் பெரும் பகுதியை ஒரே இடத்துல உட்கார்ந்து தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணக்கு எனப் பாடங்களை அடுத்தடுத்து மூளைக்குள் செலுத்திக்கிற குழந்தைகளுக்கு எவ்வளவு மனச்சோர்வு உண்டாகும். இடையிடையில ஜன்னல் வழியா ஒரு கோமாளி எட்டிப் பார்த்தால், திடீர்னு உள்ளே நுழைந்து துள்ளினால், அது குழந்தைகளுக்குள் எவ்வளவு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். இதுபற்றி நான் பல பள்ளிகளில், முக்கிய இடங்களில் சொல்லும்போதெல்லாம் அவங்க அதிர்ந்துபோறாங்க. `படிக்கிற இடத்துல கோமாளியை விட்டு, பிள்ளைகளைக் கெடுக்கறதா?'னு கோபப்படறாங்க. சிரிக்க வைக்கிறது அவ்வளவு பெரிய குற்றமாகப் பார்க்கப்படுது. என்ன செய்ய?'' என விரக்தியுடன் சிரிக்கிறார் வேலு சரவணன்.

``இதுவரைக்கும் `கடல் பூதம்' நாடகத்தை மட்டுமே 4,000-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கேன். இது இல்லாமல் இன்னும் பல நாடகங்கள். இதில், எத்தனையோ மறக்க முடியாத அனுபவங்கள் இருக்கு. அதில், ரெண்டு அனுபவங்களை மட்டும் சொல்ல விரும்பறேன். வளம் குன்றா வேளாண்மை ஆராய்ச்சி கழகம் சார்பாக, எம்.எஸ்.சுவாமிநாதன் ஒருங்கிணைப்பில், பிச்சாவரம் தீவுப் பகுதிகளில் இருக்கும் சதுப்புநிலக் காடுகளைப் பாதுகாக்கும் விழிப்புணர்வு நாடகங்களை நடத்த ஏற்பாடு செய்தாங்க. அங்கே பல குழந்தைகளுக்கு நாடகப் பயிற்சி கொடுத்து, சுற்றியுள்ள கிராமங்களில் நாடகம் நடத்தினோம்.

நாடகம்
நாடகம்

சில வருடங்கள் கழிச்சு இயற்கைப் பேரழிவு சுனாமி ஏற்பட்டுச்சு. அப்போ, துயரத்தில் இருக்கும் மக்களை ஆசுவாசப்படுத்த மறுபடியும் அதே கிராமங்களில் நாடகம் நடத்த அழைப்பு வந்துச்சு. மரணம், துயரமான சம்பவங்கள் என்றாலே எனக்கு பயம். அந்த மாதிரி இடங்களைத் தவிர்க்க பார்ப்பேன். `உங்க நாடகம் அவங்களை கொஞ்ச நேரமாவது துயரத்தை மறந்து சிரிக்க வைக்கும்னு சொன்னதால சம்மதிச்சு போனேன்.

அங்கே பார்த்த காட்சிகள் என்னை உலுக்கி எடுத்துடுச்சு. சில வருடங்களுக்கு முன்னாடி பசுமையான இடங்கள், பரபரப்பான மனிதர்கள் என இருந்த அந்த இடம் மொத்தமாக மாறியிருந்துச்சு. வீடுகள், உடைமைகளை இழந்து வெறித்த பார்வையோடு மக்கள் ஆங்காங்கே உட்கார்ந்துக்கிட்டிருக்காங்க. நான் முன்னாடி பயிற்சி கொடுத்து நாடகத்தில் நடித்த பிள்ளைகளில் சிலரே சுனாமிக்குப் பலியான செய்தி தெரிந்து கலங்கிட்டேன். அங்கிருந்த எல்லாக் குழந்தைகளின் கண்களிலும் பயம் உறைஞ்சு இருந்துச்சு. அங்கே என்னுடைய நாடகத்தை ஆரம்பிச்சேன். முதல்ல சில குழந்தைகள் திரும்பிப் பார்த்தாங்க. பக்கத்தில் வந்து உட்கார்ந்து சிரிக்க ஆரம்பிச்சாங்க. அவங்க சிரிப்பைப் பார்த்து பெற்றோர்கள் பார்வையில் மாற்றம். அவங்க முகங்களிலும் மெல்ல புன்னகை வந்துச்சு. அத்தனை பெரிய துயரத்தை அந்தப் புன்னகை வழியே ஒரு புகை மாதிரியே அவங்க வெளியே விடறதா எனக்குத் தோணுச்சு.

ஒரு கோமாளியாக ரொம்ப ரொம்ப பெருமைப்பட்ட நிமிடம் அது. தொடர்ந்து சுற்றியுள்ள பல கிராமங்களுக்குப் போய் நாடகத்தை நடத்தினோம். அப்புறமா, யுனிசெப் தூதராக, சுனாமி பாதிப்புகளைப் பார்வையிட்டு நிவாரண உதவிசெய்ய, கடலூரின் தாழங்குடா பகுதிக்கு வந்திருந்தார், முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன். சுனாமி பாதிப்பு பகுதிகளில் பங்காற்றிய கலைக்குழுக்களில் சிறந்த குழுவாக, எங்களின் ஆழி தேர்ந்தெடுக்கப்பட்டது. பில் கிளிண்டன் முன்னிலையில், `தேவலோக யானை' என்கிற நாடகத்தை நடத்தினேன்.

வேலு சரவணன்
வேலு சரவணன்

இன்னொரு மறக்க முடியாத இடம், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை. அங்குள்ள குழந்தைகள் பிரிவுக்கு என்னைக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. குகை மாதிரி உள்ளே போய்கிட்டே இருக்கு. போகப்போக எனக்குள் இனம்புரியாத பயம், நடுக்கம். அங்கே உடல் மெலிந்து, தலைமுடி இழந்து, உயிர்ப்பில்லாத கண்களும், முகக் கவசமுமாகக் குழந்தைகள். அவங்களைப் பார்த்துக்கிற பெற்றோர் என மிகத் துயரமான காட்சியாக இருந்துச்சு. பிறந்து சில நாள்களே ஆன குழந்தைகள்கூட தொட்டிலில் இருந்துச்சு. நாடகத்தை ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்தில் முகக் கவசம் அணிந்த அந்தக் குழந்தைகளின் உதடுகள், சிரிப்பில் விரியறதைப் பார்க்கிறேன். தங்கள் குழந்தையின் முகத்தில் சிரிப்பைப் பார்த்து பெற்றவர்கள் கண்களில் சந்தோஷக் கண்ணீர் பிறக்குது. அந்தக் கண்களாலே எனக்கு நன்றி சொல்றாங்க. நெகிழ்ந்து போய்ட்டேன். டாக்டர் சாந்தா அம்மாவும் அங்கே வந்தாங்க. மருத்துவமனையின் மற்ற பகுதிகளுக்கும் என்னை அழைச்சுட்டுப்போய் அறிமுகம் செய்துவெச்சாங்க'' என்று நெகிழ வைக்கிறார் வேலு சரவணன்.

மனிதர்கள் சந்தோஷமாக இருக்கும் தருணங்களைவிட, துயரங்களில் இருக்கும் தருணங்களில்தான் ஒரு கோமாளியின் தேவை அதிமுக்கியமாகிறது. கோமாளியும் ஒரு தூய்மைப் பணியாளர் மாதிரிதான். துயரங்கள் இருக்கும் இடங்கள், துயரங்கள் இருக்கும் மனங்களைத் தேடிச்சென்று தன் கோமாளித்தனத்தால் துடைத்து சுத்தப்படுத்துகிறான். சிரிப்பு என்கிற கிருமிநாசினியைத் தெளிக்கிறான்.

நாடகம்
நாடகம்

``இப்பவும் ஒரு பெருந்துயரம் உலகை உலுக்கிக்கிட்டிருக்கு. மனிதர்களை தனிமைப்படுத்தி வீட்டுக்குள் முடக்கிவெச்சிருக்கு. இந்த நேரத்துல, ஒவ்வொரு மனிஷனுமே ஒரு தூய்மைப் பணியாளனாக மாறணும். தன்னைத் தானே மனத்தூய்மை செய்துக்கணும். ஆமாம்! ஒவ்வொருவருக்குள்ளேயும் ஒரு கோமாளி இருக்கான். நீங்க பெரிய ஸ்டாராக இருக்கலாம். மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளியா இருக்கலாம். அந்தப் பிம்பங்களை, கம்பீரங்களை ஒதுக்கிவெச்சுட்டு, உள்ளே இருக்கிற கோமாளியை வெளியே கொண்டுவாங்க. உங்களை நீங்களே சிரிப்பால் சுத்தப்படுத்திக்கங்க. முடிந்தால் மற்றவர்களையும் சுத்தப்படுத்துங்க.''

ஒரு தலைமைத் தூய்மைப் பணியாளனாக வழிசொல்கிறார் இந்தக் கோமாளி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு