Published:Updated:

பூதம், அரக்கன் கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லலாமா? எதையெல்லாம் தவிர்க்கணும்?

கதை
கதை

சிறார் புத்தம் ஒன்றை வைத்துக்கொண்டு, மகளுக்கு கதை சொல்லிக்கொண்டிருந்தார், அந்தத் தாய். பக்கத்துக்குப் பக்கம் பெரிய பெரிய வண்ணப் படங்களுடன் குழந்தைகளை மட்டுமின்றி, பெரியவர்களையும் சுண்டி இழுத்தது அந்தப் புத்தகம்.

சிறார் புத்தம் ஒன்றை வைத்துக்கொண்டு, மகளுக்கு கதை சொல்லிக்கொண்டிருந்தார் அந்தத் தாய். பக்கத்துக்குப் பக்கம் பெரிய பெரிய வண்ணப் படங்களுடன் குழந்தைகளை மட்டுமின்றி, பெரியவர்களையும் சுண்டி இழுத்தது அந்தப் புத்தகம்.

``மலை மேலிருந்து இறங்கி வந்த அந்த அரக்கர்கள், ஊருக்குள்ளே புகுந்து குழந்தைகளைத் தூக்கிட்டுப் போய்ட்டாங்க''

ஐந்து வயது மகள், அந்தப் புத்தகத்தில் உள்ள ஓவியங்களைப் பார்த்தாள். திடகாத்திரமான உடல், தோள் வரை புரளும் ஒழுங்கற்ற தலைமுடி, முரட்டுத்தனமான முகத்துடன் சில உருவங்கள், குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு மலைமீது ஏறுகிறார்கள். பின்னணியில் அழுகிற அம்மாக்களும் வீடுகளும்.

கதை
கதை

``இவங்கதான் அரக்கர்களா?'' என்று கேட்டாள் மகள்.

``ஆமா...'' என்றார் தாய்.

``நம்மளை மாதிரிதானே கை கால் இருக்கு'' என்று மகள் கேட்க, அதற்கு சட்டென தாயால் பதில் சொல்ல முடியவில்லை.

``அ... அது வந்து... ஆனா, அவங்க தலைமுடியைப் பாரு... எப்படி க்ளீன் இல்லாம இருக்கு. உருவத்தைப் பாரு, எப்படி இருக்கு?'' என்றார்.

அடுத்ததாக, மகள் சாதாரணமாகக் கேட்ட கேள்விதான், அந்தத் தாயை ரொம்பவே திணறவைத்தது.

``ஏன் அரக்கர்கள், பூதங்கள் எல்லாமே காட்டுக்குள்ளிருந்தும் மலையிலிருந்தும் மட்டுமே வருகிறார்கள்? ஊருல இருக்காதா?''

வேறு தாயாக இருந்தால், ``அதெல்லாம் காட்டுக்குள்ளேதான் இருக்கும்'' என்று சொல்லி கடந்துவிட்டிருப்பார். ஆனால் அந்தத் தாய், நிறைய வாசிப்பவர். முக்கியமாக சுற்றுச்சூழல், தொன்மை கலாசாரங்கள், அரசியல் விஷயங்களை நிறைய படிப்பார்.

எனவே, அதே கேள்வியை அந்தக் கதையை எழுதிய நண்பரான சிறார் எழுத்தாளரிடமே கேட்டார். இருவரும் விவாதித்தபோது, அவர்களுக்குள் நிறைய கேள்விகளும் சிந்தனைகளும் வந்தன.

`இந்த அரக்கர்கள், பூதங்கள் என்கிற கதையெல்லாம் முதன்முதலில் எப்படிப் பிறந்திருக்கும்? அப்படி எழுதியவர்கள் எதை மையமாக வைத்து, யாரை மனத்தில் வைத்து எழுதியிருப்பார்கள்? ஒருவேளை, அவர்கள் எல்லாம் காட்டுக்குள் வசிக்கும் பழங்குடியினராக இருந்திருக்கலாமே... அவர்களுக்கும் நிலங்களில் வசிப்பவருக்கும் நடந்த உரிமைப் போராட்டத்தை இப்படிக் கதைகளாக மாற்றி அவர்களைக் கொடூரர்களாகச் சித்திரித்து இருக்கலாமே.

kids
kids
pixabay

இன்றும், பல்வேறு கனிம வளங்களுக்காக, நாட்டின் வளர்ச்சிக்காக எனச் சொல்லி, காட்டுக்குள்ளும் மலையிலும் இருக்கும் மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படுகிறதல்லவா? அதை எதிர்த்துப் போராடும் அந்த மக்களை சமூக விரோதிகளாக, வில்லன்களாகச் சொல்கிறார்களே... அப்படி இதுவும் இருந்திருக்கலாமே.

நாகரிகம் என்கிற பெயரில் சிலர் வகுத்த விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளாமல், தன் இயல்பில், தன் வழிமுறையில் வாழும் கூட்டத்தை காட்டுமிராண்டிகள் என்று சொல்வதை முழுமையாக ஏற்றுக்கொள்ளலாமா? தன் படை பலத்தால், புத்தியின் தந்திரத்தால், எத்தனை இனங்களை எத்தனை பேர் அழித்துள்ளார்கள்... தங்களை நியாயப்படுத்த, எதிராளியைக் கொடூரமாகச் சித்திரிப்பது என்றும் நடப்பதுதானே. இந்த அரக்கர்கள், பூதங்கள் விஷயம் அப்படியானதாக இருக்கலாம் இல்லையா?

குழந்தைக்குச் சொல்லும் ஒரு பூதம் கதைக்கு இவ்வளவு யோசிக்க வேண்டுமா? அது சும்மா கதைதானே, சுவாரஸ்யத்துக்காகத்தானே அத்தகைய உருவங்கள் என்று நினைக்கலாம். அதன்மூலம் நல்ல விஷயங்களைச் செய்ய வேண்டும், தவறு செய்யக்கூடாது என்பதைத்தானே சொல்லப் போகிறோம். அதற்கு ஏன் இவ்வளவு ஓவராக யோசிக்க வேண்டும் என்று தோன்றலாம்.

ஆனால், கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். சில அடிப்படை ஃபார்முலாக்களை வைத்து காலம் காலமாகக் கதைகளை உருவாக்கிவருகிறோம். பல அடிப்படைகளின் ஆதிமூலம் என்ன என்று ஆராயாமலே நம் பங்குக்கு அதை வளர்த்துவருகிறோம். கதைகள் வழியே சில நம்பிக்கைகளை, விதிமுறைகளைக் குழந்தைகளுக்குள் ஆழமாகப் பதிக்கிறோம்.

kids
kids
pixabay

நாம் சொல்லும் கதைகள் வழியே, நல்லவர்களின் உருவம் இப்படி இருக்கும். கொடூரமானவர்கள் தோற்றம் இப்படி இருக்கும் என்பதாகக் குழந்தைகளின் மனத்தில் பதிகிறது. அதன் காரணமாக, ஓர் இடமும் சூழலும், அங்கிருப்பவர்களின் செய்கைகளும் அப்படியாகவே குழந்தைகளுக்குள் பதிந்துவிடுகின்றன.

இருட்டுக்குள் பேய் இருக்கும், பேய் தோற்றம் இப்படி இருக்கும், ஆவிகள் இப்படியெல்லாம் செய்யும் என்று கதைகள் உள்ளன. இருட்டைக் கண்டாலோ, ஓர் இடத்தைக் கண்டாலோ குழந்தைகள் பயப்படுவது அதனால்தானே. அந்தப் பயம், அவர்கள் வளர்ந்த பிறகும் தொடர்கிறதல்லவா? அப்படித்தானே காடும் மலையும் இயற்கையும், அங்குள்ள மனிதர்களும் குழந்தைகள் மனத்தில் தவறாகப் பதியும். அத்தகைய இடங்களையோ, மனிதர்களையோ சந்திக்கும்போது, குழந்தைகளும் அப்படித்தானே நினைப்பார்கள்.

பேய், ஆவி என்பதெல்லாம் கற்பனை, தவறானது என்கிறபோது, அரக்கர்கள், பூதங்கள் அதன்வழியே குறிப்பிடப்படும் இடங்கள் பற்றிய முடிவுகளும் தவறானதுதானே? அதனால், குழந்தைகளுக்குச் சொல்லும் கதைகளில் கவனமாக இருங்கள். அதன் அடிப்படை என்னவாக இருக்கும்? எதற்கு இப்படிச் சொல்லப்படுகிறது என்று யோசியுங்கள். அதன்பிறகு, அத்தகைய வழியில் கதைகள் சொல்லலாமா வேண்டாமா என்று முடிவெடுங்கள். வேண்டாம் என்றால் வேறு எப்படிச் சொல்லலாம்... எந்த ஃபார்முலாக்களைத் தவிர்க்கலாம் என்று முடிவெடுங்கள்.

kids
kids
pixabay

சில வரலாறுகள் சிலரால் பல்லாண்டுகளாக தவறாகச் சொல்லப்பட்டிருக்கும். பிறகு, நிஜத்தில் நடந்தது இதுதான் என்று ஒருவர் ஆராய்ந்து வெளிப்படுத்துவார். கதைகளும் வரலாறு போலத்தான். வரலாற்றுக்கும் கதைகளுக்கும் எப்போதுமே நெருங்கிய பிணைப்பு உண்டு. கதைகள் வழியேதான் வரலாறு அனைவருக்கும் எளிதாகச் சென்றுசேரும். மனத்தில் ஆழப் பதிந்து அழியாமல் இருக்கும். அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் பரவும்.

எனவே, குழந்தைகளுக்கு கதைகள் சொல்லும்போது கவனமாக இருங்கள். பிறரின் உடல் குறைகளை மட்டுமல்ல, கலாசாரம், பண்பாடு, மொழி, இடம் சார்ந்து கேலிசெய்து சொல்லப்படும் கதைகளைத் தவிருங்கள்.

பின் செல்ல