Published:Updated:

மிஞ்சி இருப்பது...

பிரபஞ்சன், ஓவியம்: மருது

மிஞ்சி இருப்பது...

பிரபஞ்சன், ஓவியம்: மருது

Published:Updated:
மிஞ்சி இருப்பது...

ராகவன் சார், நேற்றே சொல்லிவிட்டிருந்தார். மிருதுளா இன்று மாலை 6 மணி போல அவரைப் பார்க்க வருகை தர இருப்பதாகவும், அந்த அம்மாள் வரும்போது, நான் அவருடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் தகவலைக் கொண்டு வந்த ஆறுமுகம் சொன்னான்.

மிருதுளா, மாவட்ட அளவில் பெரிய அதிகாரி. அது ஒரு விஷயமில்லை. பொன்மலர் நாற்றமுடைத்து என்பதுபோல, அவள் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்தாள். பத்திரிகைகள் அவள் பேட்டியைத் தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டிருந்தன. காட்சி ஊடகங்களில், காலை நேரங்களில் அவள் வந்து பேசுவதை நானும் பார்த்திருந்தேன். மிருதுளா, ஆடை அணியும் விஷயத்தில் மிகவும் கவனம் கொண்டவள் என்றும் ஊடகங்கள் என் மூளையில் பதிவு செய்திருந்தன. இன்று அவள் கட்டிய சேலையை ஆறு மாதங்களுக்குப் பிறகே மீண்டும் உடுத்துவாள் என்றுகூட பேச்சு பரவி இருந்தது. புடவைகளுக்கு மேட்ச்சாக பிளவுஸுகளை அவள் தேர்ந்தெடுக்கும் நுணுக்கம் பற்றியும் பத்திரிகைகளில் வாசித் தது, என் நினைவுக்கு வந்தது. ஒன்றிரண்டு பத்திரிகைகளில் கதைகள் மற்றும் தொடர் கதைகள் எழுதிக்கொண்டிருந்தாள் அவள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான் 5 மணிக்கு மேல்தான் புறப்பட முடிந்தது. நாலரைக்கு முன்னால் புறப்படத் தயாரான நேரத்தில், ஆசிரியர் என்னை அழைத்து, சுனந்தாவின் கணவர் பெயர் கிருஷ்ணசாமியா, கிருஷ்ணமூர்த்தியா என் பதை உறுதிபடுத்தச் சொன்னார். நான் ’சாமி என்று நினைவு’ என்றேன். 'எனக்கு மூர்த்தி என்று ஞாபகம்’ என்றார். நான் என் நாற்காலியில் வந்து அமர்ந்து இரண்டு மூன்று பேரிடம் பேசி, கடைசியில் கிருஷ்ணப்ரியன் என்று கண்டுபிடித்தேன். என் துணை ஆசிரியரிடம் தவறைத் திருத்தச் சொல்லிவிட்டு, ஆசிரியரிடமும் சொல்லிவிட்டுப் புறப்பட்டுப் பேருந்தைப் பிடித்து ராகவன் சாரிடம் சென்று சேர்ந்தபோது மணி ஆறரையைத் தொட்டுக்கொண்டிருந்தது.

மிஞ்சி இருப்பது...

நல்லவேளை... மிருதுளா வந்திருக்கவில்லை. ராகவன் சார் சட்டை அணிந்திருந்தார். பழைய சட்டை. பொதுவாக அவர் வீட்டில் இருக்கும்போது சட்டை அணிவதில்லை. அவருடைய இரண்டாம் பெண்ணின் மகன் வந்து என்னிடம் ஹலோ சொல்லிவிட்டுப் போனான். அண்மையில்தான் அவனுக்குத் திருமணம் ஆகியிருந்தது. அமெரிக்காவில் அவனுக்கு வேலை கிடைத்திருந்தது.

'மிருதுளா இன்னும் வரலையாக்கும்..?’ என்றேன்.

'வருவா... நம்மை மாதிரியா? பெரிய உத்தியோகக்காரியாச்சே!’  வட்ட மேசை மேல் ராகவன் சார் அண்மையில் எழுதி முடித்திருந்த ஆராய்ச்சி பேப்பர்கள் ஒழுங்காக அடுக்கப்பட்டு, ஒரு பையின் உள்ளே இருந்தன.

'மீண்டும் இதில் ஏதாவது வேலை செய்தீர்களா?’

'வேண்டியிருக்கு. படிக்கப் படிக்கப் புதுசா ஏதேனும் கிடைச்சுண்டே இருக்கே! பழசை அடிச்சுட்டுப் புதுசைச் சேர்க்க வேண்டியிருக்கே! நியூயார்க்கிலே ஸ்மித்துன்னு ஒருத்தன் புதுசா ஒரு பேப்பர் வாசிச்சு இருக்கான்... கார்க்கி சம்வாதம்னு, உபநிஷத்தைப் பிழிஞ்சு எடுத்துட்டான். யாக்ஞவல்கியர் திணறிட்டார்.’

எனக்குத் தெரிந்து, அந்தப் புத்தகத்தை நாலாவது முறையாக அவர் எழுதிக்கொண்டிருந் தார். ஒவ்வொரு முறையும் ஃபைல் பெருத்துக் கொண்டே இருந்தது.

'ஆயிரம் பக்கத்துக்கு மேலே ஆகும்போல இருக்கே?’ என்றேன்.

'என்ன பண்றது... யாரும் அதிகம் கைவைக்காத விஷயம். ஒவ்வொண்ணுக்கும் விளக்கமும் சொல்லி, அப்புறம் இதுவரை சொல்லப்பட்ட பாஷ்யமும் சொல்லி, அப்புறம் என் ஆராய்ச்சியையும் ஸ்தாபனம் பண்ண வேண்டி இருக்கே. ஆனா, வாழ்நாள் முழுக்க உணர்ந்ததை, நான் வாங்கிண்டதைக் கொடுத்துட்டேன். பப்ளிஷானா, எனக்கு நிம்மதியா இருக்கும். என் முப்பத்தாறு புத்தகங்கள்ல இதுதான் பெஸ்ட்!’

வாசலில் ஏற்பட்ட சப்தம், மிருதுளாவின் வருகையைச் சொல்லியது. கை குவித்தபடி உள்ளே நுழைந்தாள். பின்னே, யூனிஃபார்மில் டிரைவரும், இரண்டு தாம்பாளத் தட்டுகளுடன் ஒருவனும் வந்தார்கள். வட்ட மேசையில் வைத்திருந்த ஸ்கிரிப்டை எடுத்துத் தரையில் வைத்தார் ராகவன் சார். மேசையின் மேல்  தட்டுகள் வைக்கப்பட்டன. ஒன்றில் வேஷ்டி, துண்டுகள் மற்றும் புடவைகள். மற்றதில் இனிப்பு பாக்கெட்டுகள், காரம் வகையறாக்கள், பிஸ்கட்டுகள்!

'என்னத்துக்கு இதெல்லாம்...’ என்று கூச்சப் பட்டார் சார்.

'பெரியவங்களச் சும்மா வெறும் கையோடு பார்க்கப் போவது சரியில்லையே...’

சாரின் மனைவி, குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் வந்து குழுமினார்கள். மிருதுளா எல்லோருக்கும் வணக்கம் சொன்னாள். எல்லோரையும் அறிமுகப்படுத்திய ராகவன் சார், என்னையும், பணி செய்யும் பத்திரிகையை யும் சொன்னார்.

'நீங்கதானா அது... உங்களை நான் படிச்சிருக்கேன். உங்க எடிட்டர் என்கிட்ட எழுதக் கேட்டுக்கிட்டுதான் இருக்கார். எனக்குத்தான் நேரமே ஒழியல.’

ராகவன் சார், ஆச்சர்யம் தவழும் முகத்தோடு, 'கேட்கணும்னு இருந்தேன். உங்களுக்கு இருக்கிற வேலைப் பளுவிலே எப்படி எழுத முடியறது..? ரொம்ப சிரமமாச்சே..!’ என்று சிலாகித்தார்.

மிருதுளா, இப்போது எழுதிக்கொண்டிருக்கும் தொடர்கதையின் சுருக்கத்தைச் சொல்லத் தொடங்கினாள். நான், ராகவன் சாரின் புத்தக அடுக்குகளைப் பார்க்கத் தொடங்கினேன். காபி, பலகாரம் வந்தது. கூரை ஒழுகி, புத்தகங்கள் பழுதுபட்டிருந்தன.

'என் ஆத்துக்காரி வடை ரொம்ப நன்னா பண்ணுவா’ என்றார் சார். அந்த மாமி பழைய வெளுத்துப் போன புடவையில், வெட்கப்பட்டுக்கொண்டு நின்றாள்.

'அற்புதமா இருக்கு’ என்றாள் மிருதுளா. அவள் சொல்லிக்கொண்டு வந்த கதையின் ஹீரோ, காதலிக்குக் கடிதம் கொடுத்துவிட்டுப் பதிலுக்குத் தவித்துக்கொண்டிருந்தான். அவள் என்ன பதில் சொல்லப் போகிறாள் என்பதில் எனக்குக்கூட பதற்றம் ஏற்பட்டிருந்தது. ராகவன் சார் வடையைப் பற்றிப் பேசி இருக்கக் கூடாது.

புத்தகங்களைப் பார்த்துக்கொண்டு வந்தவள், காலில் எதுவோ இடறியது. ராகவன் சாரின் ஃபைல். குனிந்து எடுத்தேன். என் கையிலிருந்த ஃபைலை சார் வாங்கிக்கொண்டார்.

'என்ன சார் அது?’

'உபநிஷத் ஆராய்ச்சி. ரொம்ப உசத்தியான வேலை. நானே சொல்லப்படாது. இது வெளிவந்தா ரொம்ப நன்னா இருக்கும்.’

'பப்ளிஷர்ஸ்கிட்ட கொடுக்க வேண்டியது தானே?’

'பிரச்னையே அதுதான். என் குடுமி, என் தோற்றம், என் சத்ரு. நான் எழுதுகிற விஷயமோ, வேத சம்பந்தம். யார் போடுவா?’

'என்னுடைய பப்ளிஷரையே கேக்கறேனே... எங்கே, கொடுங்க!’  மிருதுளா ஃபைலை வாங்கிப் புரட்டினாள். மிக எளிமையாகத் தோற்றம் அளிக்க வேண்டும் என்பதற்காக அவள் உடுத்தியிருந்த சேலை, மிகவும் விலை வாய்ந்ததாகத்தான் இருக்க வேண்டும். அதை அவள் உடுத்தியிருந்த நேர்த்தி முக்கியம். அந்த காதலி என்ன பதில் சொல்லி இருப்பாள்..?

'ஆயிரம் பக்கத்துக்கு மேலே வரும்போல!’

'நானே நிறைய எடிட் பண்ணிட்டேன். அப்புறமும் பெரிசாயிடுத்து. அந்த சப்ஜெக்ட் டுக்கு அத்தனை பக்கம்தான் நியாயம் பண்ண முடியும்.’

'உண்மைதான். எனக்கும்கூட வாரத்துக்கு நாலு பக்கம்தான் தர்றாங்க... ஒரு மேட்டருக்கு!’

மிருதுளா ஃபைலைப் புரட்டிக்கொண்டிருந்தாள். ராகவன் சாரின் முகத்தில் தென்பட்ட எதிர்பார்ப்பு, எனக்குக் கஷ்டமாக இருந்தது.

'சரி. நான் ஃபைலை எடுத்துட்டுப் போறேன். இதைப் புத்தகமாகக் கொண்டு வருவது என் பொறுப்பு...’

'ரொம்ப சந்தோஷம்’ என்றார் ராகவன் சார்.

'சார், கிழக்கப் பார்த்து நில்லுங்க...’

'என்னத்துக்கு...’ என்று கூச்சத்தோடு நின்றார் ராகவன் சார். அவர் மனைவியும் வந்து கணவனுடன் நின்றாள். மிருதுளா அவர்கள் கால்களில் விழுந்து வணங்கினாள்.

சம்ஸ்கிருதத்திலும் தமிழிலுமாக வாழ்த்துச் சொன்னார் ராகவன் சார்.

மிருதுளா புறப்பட்டுப் போன பிறகும், அவளைப் பற்றின பேச்சு நீடித்தது. மிருதுளா கொண்டு வந்த புடவையைப் புரட்டிக்கொண்டிருந்தாள் மாமி பரவசமாக. எனக்கு அந்த காதலி என்ன பதில் சொல்லியிருப்பாள் என்றே தோன்றிக்கொண்டிருந்தது.

* * * * * * * * * 

நான்கு மாதங்களுக்குப் பிறகு, பதிப்பாளர் கடிதம் எழுதியிருந்தார். அவ்வளவு பெரிய புத்தகத்தை, இந்த மாதிரி விஷயத்தை அவர்கள் போடுவதில்லையாம். 'என்றாலும், மரியாதைக்குரிய மிருதுளா மேல் உள்ள மரியாதை காரணமாகப் பிரசுரத்துக்கு எடுத்துக்கொள்கிறோம். புத்தகச் சந்தையின்போது புத்தகம் வெளிவரும்’ என்று எழுதி இருந்தார்.

'பரவாயில்லை. ஒருவழியா எடுத்துண்டான். புத்தகம் வந்துடும்’ என்று சந்தோஷத்துடன் சொன்னார் ராகவன் சார்.

'என் வாழ்நாள் உழைப்பு’ என்றும் சொன்னார். தொடர்ந்து, 'வெளிநாட்டுக்காரா தத்துவாசிரியர் புத்தகம் எல்லாம் வர்றது. ஏன் இந்தியத் தத்துவம் வரப்படாது..?’ என்று என்னிடம் கேட்டார். நான் யோசிக்கவேண்டி இருந்தது.

* * * * * * * * *

அமோகமாக ஜனவரி வந்தது. அமோகமாகப் புத்தகச் சந்தையும் விரிந்தது. கோடிக்கணக்கான ரூபாய் வியாபாரம் ஆனதாகப் பதிப்பாளர் சங்கத் தலைவர் பேட்டி அளித்திருந்தார். யாரோ ஊர் பேர் தெரியாத ஒரு பாவப்பட்ட எழுத்தாளர், 'என் 23 புத்தகங்களுக்கும் ராயல்டியே தரவில்லை, என் பதிப்பாளர்’ என்று சொன்ன கண்ணீர்க் கதையும் சின்ன அளவில் வெளிவந்திருந்தது

* * * * * * * * *

மிஞ்சி இருப்பது...

நான் புதிய பத்திரிகைக்கு மாறி, இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ராகவன் சார் முதுகு கூடுதலாக வளைந்திருந்தது. அமெரிக்காவுக்கு வேலைக்குப் போன பையனுக்கு ஆண் குழந்தை பிறந்து, குழந்தைக்கு ராகவன் சார் பெயர் சூட்டியிருந்தார். 'ஜனமேஜயன்’ என்று அவர் வைத்த பெயர், கர்நாடகமாக இருக்கிறதென்று, சுருக்கமாக 'ஜனா’ என்று ஆக்கிக்கொண்டான். ஆட்சி மாற்றம் ஏற்பட்டுப் புதிய மந்திரி சபை பதவி ஏற்றது. இரண்டு பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டார்கள். 638 பெண் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிக் கொல்லப்பட்டார்கள். மற்றபடி, எல்லாம் நல்லபடியே நடந்தது. மிருதுளாவுக்கு நாட்டின் உயரிய இலக்கியப் பரிசு கிடைத்தது.

* * * * * * * * *

ராகவன் சார், என்னை அழைத்திருந்தார்.

'என்ன சார் உடம்புக்கு?’

'உடம்புக்கென்ன..? முதுமை, கவலை, முடியலை, போகட்டும். பப்ளிஷருக்கு ஒரு கடிதம் எழுது. நான் கையெழுத்து போடறேன்.’

அவர் சொல்லச் சொல்ல, நான் எழுதினேன்.

'மகாராஜ ராஜஸ்ரீ அ.ஆ.இ.ஈ... உமாமகேஸ் வரன் அவர்களுக்கு, க்ஷேமம், ஆசீர்வாதம்.

இப்பவும் திருமதி மிருதுளா அவர்கள் மூலமாக நான் பதிப்புக்காக அனுப்பியிருந்த ’உபநிஷத்துக்கள்: அறிவுப் பலகணி ஞானத் திறவுகோல்' என்ற புத்தகம், ஆண்டு பல வாகியும் தாங்கள் வெளியிடாத காரணத்தால், என் கையெழுத்துப் பிரதியை உடனடியாகத் திருப்பியனுப்ப வேண்டுகிறேன். நூலின் மகத்துவத்தைத் தாங்கள் புரிந்துகொள்ள வில்லை என்பதே என் வருத்தம்...’

* * * * * * * * * 

மூன்றாம் நாளே பதிப்பாளர் பதில் எழுதியிருந்தார். அதையும் நான் படிக்க நேர்ந்தது. எங்கள் இருவர் முன்னும் மாமி வைத்துப் போன காபி டம்ளர்களில், ராகவன் சாரின் காபி டம்ளர் கவிழ்த்துக்கொண்டது. ராகவன் சார் வேட்டியில் காபிக் கறை பட்டுவிட்டது.

'சே... இதுவும் சரியில்லை. அந்தப் படவாவும் சரியில்லை’ என்றார் ராகவன்.

கடித வாசகம்:

திரு.ராகவன் அவர்களுக்கு,

வணக்கம். தங்கள் கடிதம் கிடைத்து, விவரம் அறிந்தேன். இது மாதிரி புத்தகம் எல்லாம் நாங்கள் போடுவதில்லை. இருந்தாலும், அரசு செயலாளர் மிருதுளா அம்மையார் சிபாரிசு செய்ததால், போனால் போகிறது என்று ஒப்புக் கொண்டேன். அடுத்த ஆண்டு என் மணிவிழா. அதையொட்டி 60 புத்தகங்கள் போட உத்தேசித்துள்ளேன். அந்தப் பட்டியலில் உங்கள் புத்தகத்தையும் (சுருக்கி) போடலாம் என்று இருந்தேன். தாங்கள் திருப்பி அனுப்பக் கோரியதால், எழுத்துப் பிரதியைத் தேடி எடுக்கச் சொல்லியிருக்கிறேன். கிடைத்ததும் அனுப்பி வைக்கிறேன்.

இப்படிக்கு,

உமாமகேஸ்வரன்.

* * * * * * * * *

'என்ன பண்ணலாம்?’ என்றார் ராகவன் சார்.

'திருப்பி அனுப்பச் சொல்லி மீண்டும் எழுதுவோம்.’

'அனுப்பிவிட்டால்..?’

'இவன் இல்லையென்றால் அவன்.’

அவர் தலை குனிந்து யோசித்தார்.

'சரி. ஒரு ஆட்டோ பிடி. போவோம்.’

இருவரும் பதிப்பகம் போனோம். வெயில் கடுமையாக இருந்தது. வண்டி, வாகனங்கள் எப்போதும் போல மூர்க்கமாகப் பாய்ந்தன. ராகவன் சார் கோபத்தில் இருப்பது தெரிந்தது. என்ன நடக்குமோ என பதற்றம் என்னைப் பற்றிக்கொண்டது.

பதிப்பாளர் சிரித்தபடி வரவேற்றார். நாங்கள் அமர்ந்துகொண்டோம். திடுமென கன்றுக்குட்டி உயர நாய் ஒன்று வந்து, எங்களை நோட்டமிட்டது. பதிப்பாளரின் செயலாளர் போன்ற தோரணையில் அது தென்பட்டது. பிறகு, மெல்ல நகர்ந்தது.

'என் செல்லம், டைகர்’ என்றார் பதிப்பாளர்.

'பையா’ என்று அழைத்தார் பதிப்பாளர்.

என்னைவிட வயதான மனிதர் ஒருவர் வந்து நின்றார்.

'ராகவன் சாரோட ஸ்கிரிப்ட்டை எடுத்தாடா!’

எங்கள் முன் தேநீர்க் கோப்பைகள் வைக்கப்பட்டன. நாங்கள் பருகினோம்.

அந்தப் 'பையா’, ராகவன் சாரின் ஃபைலைக் கொண்டு வந்து மேசையில் வைத்தார்.

ராகவன் சார் தாழ்ந்த, ஈரமான குரலில், 'இதைப் பிரசுரிக்கவே முடியாதா?’ என்றார். இப்படியான குரலில் அவர் பேசி நான் கேட்டது இல்லை.

'முடியாதுன்னு சொல்லலையே. மிருதுளா அம்மா கொடுத்து, முடியாதுனு சொல்ல முடியுமா? நீங்க அவசரப்பட்டுட்டீங்க...’

'இல்லை, வருஷம் பலவாச்சேன்னுதான்...’

'சார், ஒரு விஷயத்தை நீங்க புரிஞ்சுக்கணும். நாங்க பணம் போடறோம். செலவழிச்சுப் புத்தகம் போடறோம். அது விக்கணும். நீங்க எழுதற சமாசாரம் எல்லாம் ரொம்பப் பெரிசு! அது உங்களுக்கு. காசு கொடுத்து வாங்கறவன் அப்படி நினைக்கணும். பணத்தை வெறுமே புத்தகமா வெச்சிருக்க பைத்தியமா எங்களுக்கு! எனக்கு உங்க புத்தகத்தைப் புரிஞ்சுக்க முடியலைனு சொல்றீங்க. அது தேவை இல்லை. எது விக்கும், எது விக்காதுனு எனக்குத் தெரியும். அந்த ஞானம் எனக்குப் போதும். உங்கள் புத்தகத்தை எடுத்துக்கிட்டதே, மிருதுளா அம்மா சொன்னதாலதான்...’

'மன்னிக்கணும். ஏதோ ஒரு உத்வேகத்துல அப்படி எழுதிட்டேன்...’

'பரவாயில்லை. நீங்க பெரிய படிப்பாளி. மிருதுளா நேத்துகூடச் சொன்னாங்க. ஆனா, காலம் கெட்டுக் கிடக்கே. என்ன பண்றது. நல்லது விலை போகாத காலம் சார் இது.’

'லோகம் அப்படித்தான் இருக்கு.’

'என் கோடவுன்ல ஏராளமான குப்பை சேர்ந்துடுச்சு. இதையெல்லாம் வெச்சிக் காப்பாத்த முடியாது. நீங்க ஸ்கிரிப்ட்டை எடுத்துட்டுப் போங்க.’

'இருக்கட்டும். நீங்க போடும்போது போடலாம். என்ன அவசரம்’ என்றார் ராகவன் சார்.

'அப்பவுமே இதை அப்படியே போட முடியாது. சுருக்கிப் போடணும். உம்மால அது முடியாது. எங்களிடம் ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் அருமையா எடிட் செய்துவிடுவார்கள். மிருதுளாம்மா சொன்னாங்கன்னுதான்...’

ராகவன் சார் பதில் சொல்லவில்லை. அமைதியாக இருந்தார். மேசைமேல் தன் விரலால் எதையோ எழுதியவாறு இருந்தார்.

'உங்க கடிதத்துல ரொம்ப கோபமா எழுதியிருந்தீங்க. எனக்கு வருத்தமா போயிடுச்சு.’

'மன்னிக்கணும் சார்... எழுத்தாளன்கிட்ட இருக்கிறது, இப்போ மிஞ்சியிருக்கிறது இந்த வெத்து ஜபர்தஸ்து கோபம் மட்டும்தானே? மன்னிச்சிடுங்க... உலகம் புரியலை நேக்கு!’

'சரி’ என்றார் பதிப்பாளர்.

அந்தப் 'பையா’ மீண்டும் எதிர்ப்பட்டான். அவன் கையில் சாரின் ஃபைல் இருந்தது. கோடவுனுக்குக் கொண்டுபோவானாக இருக்கும். ’பையா'வே எடிட் செய்வானாக இருக்குமோ?

* * * * * * * * *

நாங்கள் நடந்தே திரும்பினோம். காபி சாப்பிட்டோம். சார் வீடுவரை வந்து, அவரை விட்டுவிட்டு நான் விடைபெற்றேன்.

ராகவன் சார் எதை எதையோ பேசினார்... அந்த ஞான நூல் பற்றி மட்டும் எதுவும் பேசவில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism