ஸ்பெஷல் -1
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்

நனையும் பூகோளம்!

கிட்ட வந்து ஒட்டி விளையாடிய கவின் பயலை
விரட்டியபடி இருந்தேன்.
'என்னை எப்பம்மா தொடவிடுவிங்க
நாம எப்பம்மா சேர்ந்து தூங்கலாம்’
எனக் கேட்டவாறு சிணுங்கினான்.
கொடியதோர் அவஸ்தையைத் தரக்கூடிய இக்காய்ச்சல்
அவனுக்கும் தொற்றக் கூடாதெனும் விழிப்பில்
கடந்தன நாட்கள்.
துயில்கொள்ளும் தருணங்களில்கட்டிலின் ஓரம் நிற்பதும்
நெடுநேரம் உலாவுவதுமாக இருந்தான்.
'போய்த் தூங்குப்பா’ என்றதும்
பதிலேதும் அளிக்காமல்
கவிழ்ந்த மலரென விலகிச் சென்றான்.
டம்ளரில் கனன்ற சுடுநீர் சில்லிட்டுக் கிடந்தது.
கண்களை மூடித் துயில்பவனைத்
தள்ளிநின்று கண்ணுற்றுத் திரும்புகையில்
'தூங்கலையாம்மா’ எனும் ஈர மொழி உதிர்த்து
கசங்கிய விழிகள் மிதக்கப் பகிர்கிறான் கவின்.
இரவின் நிசப்தம் கலைக்கும் அவனது சொற்துளியில்
வெளியில் நனைந்துகொண்டிருந்தது பூகோளம்!

- அ.ரோசலின்

சொல்வனம்

தார்ப்பாம்பு!

த்தனை சக்கரங்கள்
ஏறி மிதித்தாலும்
அசராமல் ஊறும்
தார்ப்பாம்பு
ஒற்றை மழை மிதிக்கு
நசுங்கி
நாலாபுறமும்
சிதைந்துகிடக்கிறது!

- உழவன்

பிடுங்கித் தின்ற வெட்கம்!

வமானத்தை யாராச்சும்
ஆணி அடிச்சு மாட்டுவாங்களா?

அடகுக் கடை சேட்டுக்குத் தெரியும்போல
இதுவரை ஒருதடவைகூட
கொடுத்ததில்லை
காலண்டரோ, கீ செயினோ!

ஆனா
புதுசா வந்த மலையாள கம்பெனி தந்த
வருஷ காலண்டரை
மாட்டவும் முடியலை
யாருக்கும்
கொடுக்கவும் முடியலை.

அவமானத்தை யாராச்சும்
ஆணி அடிச்சு மாட்டுவாங்களா?

- இரா. சுந்தரராமன்.

உறங்கும் கடவுள்!

ஒரு வாளி நீருக்குள்
நீந்தப் பழகிவிட்ட மீனுக்கும்
குளிக்கப் பழகிவிட்ட எனக்கும்
வித்தியாசங்கள் அதிகமில்லை
படுக்கையை நனைத்த குழந்தை
உடுப்புகளின்றி தூங்குதல்போல்
உன் நினைவில் நனைகையில்
நிர்வாணமாகும் மனது
விடிகாலையிலேயே மணியடித்து
பூஜைக்காக எழுப்பப்பட்ட கடவுள்
திருட்டுத்தனமாக
உறங்கிக்கொண்டிருப்பார்
படுக்கையறைக் குழந்தைகளோடு!

- வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

உங்கள் கவிதைகளை, 'சொல்வனம்’, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை,சென்னை-2 என்ற முகவரிக்கு, அல்லது solvanam@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு எண்ணுடன் அனுப்புங்கள்.