ஸ்பெஷல் -1
Published:Updated:

கவிதைக் குருவி! - கவிதை

க.அம்சப்ரியா

கவிதைக் குருவி! - கவிதை

ன்றைய என் எல்லா மகிழ்ச்சிக்கும்
அந்தக் குருவியே காரணமாயிருந்தது.
இதை எந்த வேடனும்
கொன்றுவிடாமல் இருந்ததற்கென
நன்றி சொன்னேன் வனதேவதையிடம்.
இந்தக் குருவிக்கு
சங்கடமும் சலிப்பும் இல்லாமல்
அரிசி இறைக்கும் அம்மாவுக்கு
பாரதியொன்றும் பரிச்சயமில்லை
அவளுக்கும் ஒரு நன்றியை
உரித்தாக்க வேண்டும்.
முறம்வைத்து குருவியைப் பிடிக்கும்
சிறுவர்களின் உலகத்தைக்
கைப்பற்றிக்கொண்ட கணினிக்கு
ஆயுதபூஜையில்
பூ வைத்துக் கொண்டாடத்தான் வேண்டும்.
ஓய்வெடுக்க இலைகள் உதிரா
கிளைகள் வைத்திருக்கும் மரத்துக்கு
நன்றிக்கடனாய்
எவரும் அதன் மீது ஆணியடிக்காமல்
பார்த்துக்கொண்டேன்.
எப்படியெல்லாமோ மகிழ்ச்சிப்படுத்துகிற
இந்தக் குருவிக்கு
பிரதி உபகாரமாய்
ஒரு வேண்டுகோளையும் வைத்தேன்
நாளை வருகையில்
உறவுக்கூட்டத்தோடு வரும்படி.
நன்றியின் உச்சக்கட்டமாக
இந்தக் கவிதைக்குத் தலைப்பாக்கினேன்!