Published:Updated:

'தாமரை பூத்த தடாகமடி!'

தமிழச்சி தங்கபாண்டியன்,  ஓவியம்: ஸ்யாம்

'தாமரை பூத்த தடாகமடி!'

தமிழச்சி தங்கபாண்டியன்,  ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:

“யம்மா... இத்தனை புள்ளைங்களும் இங்கன ஒட்டுமொத்தமா ஏன் நிக்குதுக?'' என்று பெரியம்மா வியந்துகொண்டு வர, களைகட்டியிருந்த மண்டபத்துக்குள் நுழைந்தோம். ஒரே வண்ணத்தில் உடையணிந்திருந்த அந்தப் பெண்கள், சொல்லிவைத்தாற்போல் அளவாகச் சிரித்து, வணக்கம் சொல்லி, பன்னீர் தெளித்தார்கள்.

கொஞ்சம் கல்கண்டை எடுத்துச் சுவைத்தபடி நடக்கையில், இடறி முன்விழுந்தது நீலவண்ண ஷராரா பாவாடையில் ஒரு குட்டிப் பாப்பா. தூக்கி எடுத்து பாவாடையை மேலேற்றித் "தடுக்காமல் இருக்கும்'' என்ற பெரியம்மாவிடம், “தேங்க்ஸ்'' என்று சொல்லிவிட்டு, பாப்பாவின் தொப்புள் தெரியும்படி மறுபடி பாவாடையை இறக்கிவிட்டவள் அதன் அம்மா போல. பெரியம்மாவுக்கு முகம் தொங்கிப்போனது.

சென்னைக்கு வந்த புதிதில் தொட்டதுக்கெல்லாம் “ஆத்தா, என்ன இப்படி?'' என்று முகம் தூக்கிக்கொண்டிருந்த பெரியம்மா, ஆவின் பால் விலையேற்றத்தைக்கூட பெரிசுபடுத்தாத அளவுக்கு இப்போது சமனப்பட்டுவிட்டாள். எப்பவாவதுதான் இன்னிக்குப் போலச் சட்டென்று முகம் சுணங்குவது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'தாமரை பூத்த தடாகமடி!'

முழுவதும் தாமரை மொக்குகளால் ரசனையோடு நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட மேடையில், மனம் லயிக்க...

‘மலர்ந்த தாமரைகள்
தங்களை செல்ஃபி எடுத்துக்கொண்டன
மொட்டுக்கள்'
என்றொரு அபத்தமான வரி குறுக்கிட, கவனத்தை மேடை அலங்காரத்திலிருந்து திருப்பி, பெரியம்மாவைப் பார்த்தேன்.

பொதுவாகக் கேள்விகளால் நிறைந்திருக்கும் உதடுகளை, ஒரு மாதிரி கெட்டித்துக்கொண்டு கூட்டத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். பத்து நிமிஷம் கடந்ததும், “மேலே போலாமா, பொண்ணு  மாப்பிள்ளையைப் பார்க்க'' என்றேன்.

“நான் எதுக்கு... இங்க டி.வில பார்த்தாச்சே'' என இழுத்தவள், என் முறைப்பைப் பார்த்து எழுந்துவிட்டாள்.

அவளது ஊரில் போன மாசம் நடந்த நோம்பக்குளம் அத்தைமகள் கல்யாணத்தை நினைத்துக்கொண்டேன். கிராமம்தான் அது. வீட்டுக்கு வெளியே நாலு மர பெஞ்சுகளை ஒன்றாகச் சேர்த்து ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருந்த மேடை. செவ்வந்திப் பூக்களை ஜன்னல் ஓரங்களில் தொங்கவிட்டிருந்ததுதான் ஒரேயொரு அலங்காரம். மூக்கைத் துளைக்கின்ற ஆட்டுக்கறிக் குழம்பின் வாசம், மேளம் வாசிப்பவர்களையும் விடவில்லை. கொஞ்சம் அந்தப்பக்கம் நோக்கித்தான் ‘சரவணப் பொய்கையில் நீராடிய முருகனை'க் கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். வந்தவர்களுக்குக் கிள்ளிக் கொடுத்தது போக, மீந்திருந்த கதம்பம்... அண்டா மூடியில் கொட்டப்பட்டுச் சிரித்துக்கொண்டிருந்தது.

சமையல் முடியும்முன்பே ரத்தப் பொரியல் வாங்கிச் சாப்பிட்ட கல்யாண வீட்டுப் பொடிசுகள், கையை முகர்ந்துகொண்டே போய் சந்தனத்தை உள்ளங்கையில் தடவிக்கொண்டிருந்தார்கள். மறுபடி வாங்கித் தின்ன கறி வாசனை தெரியாமலிருக்கவாம். நெருக்கி உட்கார்ந்திருந்த பெண்களிடமிருந்து வீக்கோ டர்மரிக் க்ரீமும், பாண்ட்ஸ் பவுடரும் கலந்து வந்த வாசனையும், மேல்துண்டை வாயில் மூடியபடிக் கண்களைச் சந்திக்காமல் தவிர்த்துக் கடந்த ஆண்களிடமிருந்து வந்த லேசான சாராய வாடையும், அந்த ஊர்க் கல்யாணங்களுக்கு மட்டுமான தனிப்பட்ட வாசனை. ஆனால், இந்த நகரத்து மண்டபங்கள் எல்லாமே தனித்த வாசனையின் முகம் தொலைத்த வெற்று இடங்கள்தான்.

“ஒரு தாமரைப் பூ கீழ கிடக்கு  மிதிச்சுடாதே'' என்றபடி பெரியம்மா தோளை இறுக்கிப் பிடித்தாள். கரிசல்காட்டுக்காரர்களுக்குத் தாமரைப் பூ அபூர்வம்தான்  தண்ணியே அதிசயம் என்கையில், தாமரை அபூர்வம்தானே?

'தாமரை பூத்த தடாகமடி!'

யாரோ வந்து நீண்ட வரிசையைக் கடந்து எங்களைத் தனியாக மேடைக்கு அழைத்துச் சென்றார்கள். பூங்கொத்தைக் கொடுத்துவிட்டு கிளம்பும்போது, குங்குமம், அட்சதைத் தட்டை பெரியம்மா தேடுவது தெரிந்தது. “வா பெரியம்மா, ஆட்கள் காத்திருக்காங்க'' என்ற என் அவசரக் கையிழுப்பில், சரசரவென்றுக் கீழே இறங்கிவிட்டவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. இறங்கும்போது, “பொண்ணு, மாப்பிள்ளை முகத்தைக் கூடச் சரியாய்ப் பார்க்கலையே'' என்று முணுமுணுத்தது கேட்டது. சாப்பிடப் போனோம். உட்கார்ந்து எழுந்த ‘பீன் பேக்' (Bean Bag) போல டைனிங் ஹாலுக்கு வெளியே ஒரு மாதிரிப் பிதுங்கிக் காத்துக்கொண்டிருந்தார்கள் ஆட்கள். மேடைக்கு அழைத்துச் சென்றவர்தான் இப்போதும்கூட வந்தார்.

நான் தயங்குவதைப் பார்த்து, “வாங்க வாங்க சும்மா, உள்ளே நம்ம பசங்கள உட்கார வெச்சிருக்கிறேன்'' என்றபடி கூட்டிச் சென்றார். நுழைவதற்கு முன்பான படிக்கட்டு முடியுமிடத்தில் கொஞ்சம் ஓய்வாக உட்கார்ந்திருந்த பெண்கள்  பீடா சுற்றிக் கொடுப்பவர்களா, பரிமாறுபவர்களா என்று தெரியவில்லை  அவரைப் பார்த்ததும் அரக்கப்பரக்க எழுந்தார்கள். நுழைந்தவுடன் எதிர்த்தாற்போல ஒரு இளவயதுப்பெண் கை துடைக்கின்ற டிஷ்யூக்கள் நிரம்பிய தட்டை நீட்டினாள். 'அதை ஒரு ஸ்டூலில் வைத்திருக்கலாமே, இவளெதற்குத் தூக்கி வைத்துக்கொண்டு' என்று நானும் பெரியம்மாவும் ஒருசேர நினைத்து, ஜாடையாகப் பார்த்துக்கொண்டோம். நிச்சயம் வெளியே வந்து சொல்வாள், “துண்டு வெச்சுட்டு நிக்க ஒருத்தியா?'' என்று. நினைத்ததற்கு மாறாக, பெரியம்மா சாப்பாட்டு மேசைக்குப் பக்கம் வந்தவுடனே “பார்த்தல்ல... ம்ஹூம்'' என்றாள்.

கொஞ்சம் அசெளகர்யமான காட்சிதான். மூடி வைக்கப்பட்டிருந்த சாப்பிட்ட இலைகளுக்கு முன்பாக நன்கு உடையணிந்த நான்கைந்து இளைஞர்கள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் அப்படி அமர்ந்திருக்கும்போதே இலை எடுக்கப்பட்டுப் புது மேசைக் காகிதம் விரிக்கப்பட்டது. எங்களை கூட்டிச் சென்றவர் சஃபாரி உடை அணிந்திருந்ததை அப்போதுதான் கவனித்தேன். கணிக்க முடியாத ஒரு கனவான் தோற்றத்தை அது தருவதாக ஒரு போலி மயக்கம் இந்த சஃபாரி உடை அணிபவர்களுக்கு. அவரைப் பார்த்ததும் உட்கார்ந்திருந்தவர்கள் எழ, கையமர்த்தியபடி, “இலை போடட்டும் போடட்டும்'' என்றார். அவர்கள் முகத்தில் எந்தச் சலனமுமில்லை.

ஒன்றும் புரியாமல், “இருக்கட்டும் இருக்கட்டும், எழுந்திருக்காதிங்கப்பா'' என்ற பெரியம்மாவைக் கையமர்த்தி, காதில் மெதுவாக, “அவங்க நமக்காகத்தான் இடம் பிடிச்சு உட்கார்ந்திருக்காங்க'' என்றேன். அவளுக்கு அது புரிந்ததா... இல்லையா என்று தெரியவில்லை ஆனால், அவளது முகத்தில் அதுவரை இருந்த குறுஞ்சிரிப்பு இப்போது இல்லை.

புது இலைகள் போட்டவுடன் எங்களை உட்காரவைத்துவிட்டு எழுந்த இரண்டு இளைஞர்களிடமும் என் ‘தேங்க்ஸ்'க்குப் பதிலாகச் சின்னத் தலையசைப்பு மட்டுமே. அலுத்துக் களைத்ததைக் காட்டிக்கொள்ளாத தொழில்முறை பயிற்சி தருகின்ற சக்கைச் சிரிப்பு அந்த உதடுகளில். அவர்கள் இடம்மாறி எதிர்த்தாற்போலிருந்த இருக்கைகளில் அமர்ந்தார்கள். மூடிய இலைகளின் முன் அவர்களது களைத்த முகங்களைப் பார்த்துக்கொண்டே முதலில் இனிப்பைச் சாப்பிட ஆரம்பித்தோம்.

'தாமரை பூத்த தடாகமடி!'

பெரியம்மா பேருக்கு ஏதோ சாப்பிட்ட மாதிரி இருந்தது. அவளது முகத்தில் அடுத்தவர்களுக்காக இருக்கின்ற கொஞ்சநஞ்ச அறிமுகச் சிரிப்பும் இப்போது இல்லை. நாங்கள் இலையை மூடிவைத்து, எழுந்திருக்கையில், அந்த இளைஞர்கள், ஹாலின் வலது மூலையில் அதேபோல மூடிய இலைகளுக்கு முன் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களில் ஒருவன் மட்டும் எழுந்து எங்கள் பின்பாக நடந்து வந்தான். கைகழுவும் இடத்தில் நான் அவனைப் பார்த்துக் கொஞ்சம் நட்பாகச் சிரித்தேன்.  “மன்னிக்கவும்'' என்று தொடர்பில்லாமல் ஏதோ சொல்லவும் செய்தேன். இரண்டையுமே அவன் கவனித்ததாகத் தெரியவில்லை. தட்டிலிருந்து டிஷ்யூ எடுத்துத் தந்த பெண்ணிடம் மறுத்துவிட்டு, சேலைத் தலைப்பில் கை துடைத்துக்கொண்டாள் பெரியம்மா. ஒருவருக்கொருவர் பேசாமலே மண்டபத்துக்்குள் வந்தோம். காதைப் பிளக்கும் மெல்லிசைச் சத்தத்தில் சைகைகளூடாகவே சம்பந்தப்பட்டவர்களிடம் விடைபெற்றுக்கொண்டோம்.

வெளியே வந்து படியருகே டிரைவருக்கு போன் செய்தபடி காத்திருந்தோம். கைப்பிடி வளைவில் குனிந்து பார்த்த பெரியம்மா என்னிடம் கண்ணால் சைகை காட்டினாள். மெதுவாகச் சாய்ந்து எட்டிப் பார்த்தேன். இடம் பிடித்த இளைஞர்களில் எங்களோடு கைகழுவியவன், பார்சல் ஒன்றைப் பிரித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அவனது நேர்த்தியான உடைக்குப் பொருத்தமற்ற பசி கண்களில் அடர்ந்திருந்தது. வளைவின் முடங்கில் மக்கிப் போய் உதிர்ந்து கிடந்த இலைகளின் புழுத்த வாடை நடுவே, கெட்டிச் சட்னியின் வாசமும் கலந்து கொஞ்சம் குமட்டியது.

கார் கதவைத் திறந்து ஏறி உட்கார்ந்த பின்பும் நானும் பெரியம்மாவும் பேசிக்கொள்ளவில்லை. மண்டபத்தின் வெளிவாசல் கடந்து கார் மெல்ல சிறு பாலத்தின் மீது வேகமெடுக்கையில், பெரியம்மா முந்தானையப் பிரித்து கொஞ்சம் கசங்கியிருந்த தாமரை மொக்கை எடுத்தாள். ஆசைப்பட்டு எடுத்து வந்திருப்பாள் போல. கையில் நான் அதை எடுத்து பார்ப்பதற்குள் “இலைக்கு முன்னால உட்கார்ந்து உட்கார்ந்து எந்திருச்சுட்டு, பார்சல்ல சாப்பிடறான். இது எதுக்கு எழவு... சனியன்?'' என்றபடி கண்ணாடியை இறக்கி, அதைத் தூக்கி எறிந்தாள்.

கீழே கூவம்... பூக்காத தாமரைக் குளங்களின் துர்க்கனவாய்த் தேங்கியிருந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism