சேலத்தில் இருந்து புறப்பட்ட லாரி, கிருஷ்ணகிரி, குப்பம் தாண்டி மதனபள்ளியை நோக்கி மெதுவாகச் சென்றுகொண்டிருந்தது. சுற்றிலும் பிரம்மாண்டமான வறண்ட கல் மலைகள். அதன் பள்ளத்தாக்குப் பகுதியில் விவசாய நிலங்கள் பச்சை பூசிக் கிடந்தன.

வெயில் ஏறத் தொடங்கியதும் லாரிக்குள் வெப்பம். தூங்கிக்கொண்டிருந்த சக டிரைவரான சிவா எழுந்து, மதியச் சாப்பாட்டுக்கான சமையல் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார். நேரடியாக டிரைவரானவர் சிவா. கிளீனராக இருந்து டிரைவரானவர் சேகர். கிளீனர் என்ற சமூகம் இப்போது அறவே இல்லை. காரணம், இப்போது இந்தத் தொழில் தரும் வருமானம், வாழ்க்கை நடத்துவதற்கான நம்பிக்கையைத் தரவில்லை. மேலும், எட்டாம் வகுப்பு படித்திருந்தால்தான் லைசென்ஸ் என்ற விதிமுறை, வர நினைப்பவர்களையும் துரத்திவிடுகிறது என்கிறார்கள். ‘‘நான்கு வழிச் சாலை இல்லாத காலத்தில் பயணம் எப்படி இருந்தது?’’ என்று சேகரிடம் கேட்டேன். ‘‘மிக நிதானமான, வருமானம் தரக்கூடிய வாழ்க்கையாக இருந்தது’’ என்றவர், அந்தக் காலகட்டத்துக்குள் மூழ்கிப் போனார்.

‘‘அப்போது டிரைவர் தொழில் நல்ல தொழிலாக இருந்தது. டிரைவராக வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர்களுக்கு ஒரே வழி, முதலில் கிளீனர் ஆவதுதான். அந்த வேலை நினைத்ததும் கிடைக்காது. பலமான சிபாரிசின் மூலம் பலநாள் அலைக்கழிப்புக்குப் பிறகு, ‘அடுத்த புதன்கிழமை வந்து ஏறிக்கோ’ என்று சொல்லும் வரை நிம்மதியாக இருக்க முடியாது. அப்படி கிளீனராக லாரியில் நான் ஏறியபோது வயது 19. என்னுடைய குருநாதர், திருச்சியைச் சேர்ந்த இளங்கோ. கிளி என்று அழைக்கப்படும் கிளீனர் சமூகத்துக்கு குருநாதர்கள் டிரைவர்கள்தான். இவர்களின் மனம் கோணாமல் நடந்துகொண்டால்தான் சீக்கிரம் தொழில் கற்றுக்கொள்ள முடியும். கிளீனருக்கான வேலை இதுதான் என்று வரையறுத்துச் சொல்ல முடியாது. கேபினை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முன் பக்கக் கண்ணாடிகளை மாலையானதும் நீர்விட்டுக் கழுவி, நியூஸ் பேப்பரைக் கொண்டு துடைத்து பளிச்சென வைக்க வேண்டும். லாரியில் ஆக்ஸில்களில் இருக்கும் ஸ்பிரிங் கட்டுகளுக்கும் மெயின் சாஃப்ட் ராடுக்கும் தினமும் கிரீஸ் அடிக்க வேண்டும். பேட்டரியில் ‘தினமும் என்னைக் கவனி’ என எழுதப்படுவதே கிளீனர் சமூகத்துக்குத்தான். தினமும் பேட்டரி ஷெல் மூடிகளைத் திறந்து, நீரின் அளவு சரியாக இருக்கிறதா எனச் சோதிக்க வேண்டும்.

லாரி நிற்கும்போதெல்லாம் டயர்களில் கல் சிக்கி இருக்கிறதா எனப் பார்த்து, அதை அகற்ற வேண்டும். பாரக்கயிறு இறுக்கமாக இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும். தளர்ந்திருந்தால் ஒற்றை ஆளாக அதை இறுக்கிக் கட்டத் தெரிந்திருக்கவேண்டும். டயர்களைக் கழற்றி மாற்றத் தெரிந்திருக்க வேண்டும். கேபினின் இடதுபக்கம் இருக்கும் பலகைதான் கிளிகளின் நிரந்தர இடம். லாரியின் இடது பக்கம் எது நடந்தாலும் கிளிதான் பொறுப்பு. அதனால், எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். சமையல் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும். உடல் வலிக்கிறது என்று ஓய்வு எடுக்க முடியாது. டிரைவர்கள் மனமிறங்கி, ‘கொஞ்ச நேரம் தூங்கு’ என்று சொன்னால்தான். அதேபோல், தூங்கிக்கொண்டிருக்கும்போது ஒரே குரலுக்கு எழுந்துவிட வேண்டும்.

வாடகையில் 100 ரூபாய்க்கு 15 ரூபாய் கமிஷன். இதை இரண்டு டிரைவர்கள் மற்றும் கிளீனர் பங்கிட்டுக்கொள்ள வேண்டும். கிளீனருக்கு 100 ரூபாய்க்கு 3 ரூபாய். மீதி 12 ரூபாயில் இரண்டு டிரைவர்களுக்குத் தலா 6 ரூபாய். இதில்தான் அளவாகச் சாப்பிட்டு மிச்சம் பிடிக்க வேண்டும். சம்பளம் என்பது இல்லை என்றாலும், கிளீனரின் இலக்கு டிரைவராவது என்பதால், எப்போது ஸ்டீயரிங்கை கையில் தருவார்கள் என எல்லா நேரமும் எதிர்பார்ப்போடு இருக்க வேண்டும். ஒருசில டிரைவர்கள் டிரைவர் சீட்டில் உட்காரவே விடமாட்டார்கள்; சிலர் எங்காவது நிறுத்தியிருக்கும்போது, கொஞ்சம் தள்ளி நிறுத்த அல்லது ரிவர்ஸ் எடுத்துப் போட அனுமதிப்பார்கள். ஆரம்ப கட்டச் சோதனைகளில் தடுமாறாமல் நம்பிக்கையுடன் செயல்படுவது அறிந்தால்தான், அவர்கள் ஓய்வெடுக்க நினைக்கும்போது சில கிலோ மீட்டர் ஓட்ட அனுமதி கிடைக்கும். அப்போது அதில் ஏதும் தவறு செய்துவிடக் கூடாது. அப்படி தவறு நடந்தால், மீண்டும் சில காலம் காத்திருக்க வேண்டியதுதான்.

டிரைவரின் நம்பிக்கையைப் பெற்று, அவர்கள் கிளீனரை ஓட்ட விட்டு ஓய்வெடுக்க ஆரம்பித்தால், நாம் டிரைவராகிவிட்டோம் என்று அர்த்தம். டிரைவர்தான் ஆகிவிட்டோமே என உடனே வேறொரு லாரிக்கு டிரைவராகி விட முடியாது. சில காலம் அவர் நம் நடவடிக்கையைக் கவனிப்பார். அவர் சொல்லும் வேலை எதுவாக இருந்தாலும், தட்டிக் கழிக்கக் கூடாது. அப்போதுதான் வேறு லாரியில் ஏற முடியும். ஏனென்றால், இவர் நம்மைப் பற்றி நற்சான்றிதழ் அளித்தால்தான், வேறு லாரியில் டிரைவராக ஏற அனுமதி கிடைக்கும். அதனால், குருவின் சொல்படி நடப்பது முக்கியம். அவர் பரிந்துரைத்த பின்புதான் டிரைவராக முடியும். இதை சில டிரைவர்கள் தவறாகப் பயன்படுத்துவதும் உண்டு. அதை எல்லாம் சகித்துக்கொண்டுதான் இந்தத் தொழிலைப் பழக வேண்டும். என்னுடைய குரு, இளங்கோ மிக நல்லவர். மூன்று ஆண்டுகள் கிளீனராக இருந்தேன். லாரியின் ஒவ்வொரு பாகமும் நம் உடலுடன் பழக வேண்டும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் லைசென்ஸ் எடுத்து டிரைவர் ஆனேன்.

இப்போது அப்படித் தேவை இல்லை. சிவா ஊரில் டிராக்டர் ஓட்டிப் பழகினான். லைசென்ஸ் எடுத்தான். லாரி ஏறிய முதல் நாளே, ‘எப்போது ஓட்டக் கொடுப்பீர்கள்?’ என்று கேட்டான். என்ன அவசரம் என்றால், ‘சும்மா உட்கார்ந்து வர போரடிக்கிறது’ என்றான். குரு - சிஷ்யன் என்கிற முறை இப்போது இல்லை. நான்கு வாழிச் சாலை அதற்கான தைரியத்தைக் கொடுக்கிறது. மற்றபடி தொழில் நுணுக்கங்கள் அறிந்திருக்கிறார்களா என்றால், அது இல்லை. எந்த இடத்தில் பிரேக்கில் கால் வைக்கக் கூடாது; பிரேக்கை மிதித்தால் ஏன் ஆக்ஸில் உடைகிறது என்பதை இவர்களுக்குக் கற்றுத்தர இப்போது யாரும் இல்லை. அவர்களே தவறிழைத்து, அவர்களாகவே கற்றுக்கொள்கிறார்கள். எல்லாமே வேகம்தான்; அவசரம்தான். அப்போது இருந்த நிதானம் இப்போது இல்லை!” என்றார்.
கதரி என்ற ஊர் அருகே வந்துவிட்டதை மைல் கல் சொல்ல... சாலையோரம் இருந்த மரத்தடியில் மதிய உணவுக்காக நிறுத்தினார்.

(நெடுஞ்சாலை நீளும்)