Election bannerElection banner
Published:Updated:

நேசம்

நேசம்

ள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பிய பாலா, பரபரப்புடன் கொல்லைப்புறம் சென்று, ஆசையோடு அவன் வளர்க்கும் பறவைகளைப் பார்த்தான்.

‘‘முகம்கூட கழுவாமல் அப்படி என்னடா அவசரம்? அந்தப் பறவைகளை அப்புறம் கொஞ்சக் கூடதா...” என்று அம்மாவின் குரல் கேட்டது.

அதை, பாலா காதில் வாங்கியதாகவே தெரியவில்லை. பச்சைக்கிளி, லவ் பேர்ட்ஸ், மைனா, வெள்ளைப் புறா... இப்படி அழகழகான பறவைகள் அங்கே இருந்தன. பாலாவைப் பார்த்த சந்தோஷத்தில் படபடவென இறக்கைகளை அடித்துக்கொண்டன.

நேசம்

மூன்று ஜோடி லவ் பேர்ட்ஸ் அவனிடம் இருந்தன. 500 ரூபாயில், வீடு போல ஒரு கூண்டை வாங்கியிருந்தான். பச்சைக்கிளிகள் இரண்டு இருந்தன. அவற்றுக்கு பேசவும் கற்றுக்கொடுத்திருந்தான். அவை, ‘‘பாலா... பாலா...” என்று கீச்சுக் குரலில் அழைக்கும்.

கிளிகள், அவன் தோள்களில் அமர்ந்து கன்னத்தைக் கொத்தி விளையாடும். அவற்றின் இறக்கைகள் வெட்டப்பட்டிருந்தன. அவற்றால் பறக்க முடியாது.

‘‘எனக்குத்தான் பரிசு. நிச்சயம் எனக்குத்தான் பரிசு” என்று தனக்குத்தானே பேசிக்கொண்டான் பாலா.

‘‘என்ன பாலா, தனியா பேசிட்டிருக்கே?” என்று கேட்டவாறு காபியுடன் வந்தார் அம்மா.

“எங்க கணக்கு ஆசிரியர் ஒரு போட்டி வெச்சிருக்காரும்மா. அதில், நான்தான் பரிசு வாங்கப்போறேன்” என்று உற்சாகமாகச் சொல்லிக் கொண்டே அம்மாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டான் பாலா.

ஆசிரியர் அருள்ஜோதி, சிறந்த கணித ஆசிரியர். மாணவர்களை ஊக்கப் படுத்துவதற்காக, புதுமையான போட்டிகளையும் நடத்துவார்.

ஒரு முறை தபால்தலை சேகரிக்கும் போட்டியை அறிவித்தார். அதில், பாலாதான்  முதல் பரிசு பெற்றான். இந்த முறை பறவைகள் வளர்க்கும்  போட்டியை அறிவித்ததும்,  தனக்குத்தான் அந்தப் பரிசு என்று உறுதியாக நம்பினான். ஏனென்றால், அதிகமாகப் பறவைகளை வளர்க்கும் அளவுக்கு வசதி படைத்தவர்கள் வேறு யாரும் அவன் வகுப்பில் இல்லை.

நேசம்

அன்று காலை... போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் வீடுகளுக்குக் கிளம்பினார் ஆசிரியர் அருள்ஜோதி. அவரோடு சில  மாணவர்களும் சென்றனர்.

மொத்தமே ஏழு பேர் வீட்டில்தான் பறவைகள் வளர்த்தார்கள். அதிலும், அழகான விலையுயர்ந்த கூண்டுகள் வாங்கிப் பறவைகளை வளர்ப்பது  பாலா மட்டுமே.

ஒரு மணி நேரத்தில் ஆறு பேர் வீடுகளிலும் பார்த்துவிட்டு, கடைசியாக பாலா வீட்டுக்கு வந்திருந்தார்கள். அவன்  வீட்டுக்கு இரண்டு வீடுகள் தள்ளி ஆனந்தகுமார் வீடு இருந்தது. சின்னஞ்சிறிய ஓட்டு வீடு. வீட்டைச் சுற்றிலும் காட்டாமணிச் செடி வேலி. அங்கிருந்து விதவிதமான பறவைகளின் இசைச் சத்தம்.

“ஹை... மைனா, தவிட்டுப்புறா, சிட்டுக்குருவி, வெண்புறா” என ஆசிரியருடன் வந்த மாணவர்கள் உற்சாகத்தில் கூவினர்.

‘‘ஆனந்த், நான் காலையில் இந்த வழியாகத்தானே வந்தேன். அப்போது ஒரு பறவைகூட இல்லையே” என்று ஆசிரியர் ஆச்சர்யத்துடன் கேட்டார்.

“சார், இதெல்லாம் இவன் வளர்க்கும் பறவைகள் இல்லே” சட்டென்று சொன்னான் பாலா.

“ஆமா சார். நம்ம சந்தோஷத்துக்காக இன்னொரு உயிரின் சுதந்திரத்தைப் பறிச்சு, கூண்டில் அடைக்கக் கூடாதுனு என் பாட்டி சொல்லுவாங்க. அதே நேரம், மற்ற உயிர்களின் பசிக்கு உணவிடணும்னு ஆசை. எங்க வீட்டுல தினமும் பறவைகளுக்காக தானியங்களைத் தூவி வைப்போம். பக்கத்திலேயே  பெரிய மண் பாத்திரத்தில் தண்ணீர் வைப்போம்” என்று  ஆனந்தகுமார் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, காக்கை ஒன்று அவன் தோளில் வந்து அமர்ந்து ஆச்சர்யப்படுத்தியது.

“காக்கைகள் எளிதில் மனிதர்களிடம் பழகாதே” என்று அசந்துபோன ஆசிரியர், ‘‘அது சரி, நீ ஏன் போட்டிக்குப் பெயர் கொடுக்கலை?” என்று கேட்டார்.

நேசம்

“சார், நான் பறவைகளை விலைக்கு வாங்கி வளர்க்கலையே. அதனால்தான்’’ என்றான்.

“இந்தப் பகுதியில் நீர்நிலையே இல்லை. மரங்களும் குறைவு. ஆனாலும் பறவைகள் தினமும் தேடிவரும் அளவுக்கு செய்திருக்கே. மற்றவர்களின் நேசத்தைவிட உன்னுடைய நேசம் ரொம்ப உயர்வானது ஆனந்த்’’ என்ற ஆசிரியர், சற்றே நிறுத்தினார்.

அவரது எண்ணத்தைப் புரிந்துகொண்ட மாணவர்கள் அனைவரும் கரவொலி எழுப்ப, தன் கையில் இருந்த பரிசை, ஆனந்த்குமாரிடம் கொடுத்தார்.

ஆசிரியரின் வார்த்தைகளில் இருந்த உண்மையை உணர்ந்த பாலாவும் சிரிப்புடன் ஆனந்தை அணைத்துக்கொண்டான்.

கமலவேலன்

ராம்கி

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு