Published:Updated:

நெடுஞ்சாலை வாழ்க்கை! - 23

கா.பாலமுருகன், படங்கள்: ரமேஷ் கந்தசாமி

சேலம் டு நாக்பூர் பயணத்தில், லாரி ஏறிய இரண்டாவது நாள் ஆந்திர மாநிலம் கதரி என்ற ஊரை நெருங்கியிருந்தோம். மதிய உணவுக்காக சிறிது நேரம் லாரியை நிறுத்தி, கடைசிக் கட்ட சமையலை முடித்துவிட்டுச் சாப்பிட்டோம். சிறிது ஓய்வுக்குப் பிறகு லாரியைக் கிளப்பினார் சேகர். அனந்தபூர் நெருங்கிக்கொண்டிருந்தோம். அங்கிருந்து நால்வழிச் சாலை என்பதால், கேபின் அதிர்வும் ஆட்டமும் குறைந்து கொஞ்சம் ஓய்வாகப் பயணிக்கலாம் என ஆவலுடன் காத்திருந்தோம்.

 மஞ்சள் வெயிலில் கானல் அலைகள் நெளிய, கண்களைச் சுருக்கியபடியே அனைத்தையும் பார்க்க வேண்டியிருந்தது. அனந்தபூர் நகருக்குள் நுழையாமல் புறநகரின் வழியே நால்வழிச் சாலையில் ஏறி, ஹைதராபாத் நோக்கிச் செல்லும் சாலையில் மிதக்கத் தொடங்கியபோது, அனந்தபூர் டு கர்நூல் பகுதியின் ஆபத்துகளைச் சொல்லத் துவங்கினார் சேகர்.

‘‘அனந்தபூரில் இருந்து ஹைதராபாத் வரை சுமார் 500 கி.மீ தூரம். இதில் அனந்தபூரில் இருந்து கர்நூல் தாண்டும் வரை இரண்டு இடங்கள் மிகச் சிக்கலானவை. புத்தி, தோனி ஆகிய பகுதி, முன்பு நக்சல் நடமாட்டம் அதிகம் இருந்தவை. இது மலைப்பாங்கான இடம் என்பதால், கன ரக வாகனங்கள் மிக மெதுவாகச் செல்லும். வழிப்பறிக் கொள்ளையர்களுக்கு இந்த இடங்கள்தான் மிகச் சாதகமானவை. அதனால், இந்த இடங்களில் லாரி ஓட்டுநர்கள் குழுவாகக் கடப்பது வழக்கம். அப்படியும் சில சமயம், வரிசையாகச் செல்லும் வாகனங்களுக்கு குறுக்கே மாடுகள் கூட்டம் புகுந்துவிடும். அதை ஒதுக்கிவிட ஆள் இருக்காது. வழிப்பறி செய்யும் இடம் என்பதால், லாரியைவிட்டு இறங்கத் தயக்கமாக இருக்கும். ஹாரன் அடித்து மாடுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கி முன்னேறி, அந்தப் பகுதியைக் கடந்த பிறகுதான் தெரியும்; முன்னால் சென்ற லாரியில் வழிப்பறி செய்திருக்கிறார்கள் என்பது. மாடுகள் கூட்டத்தை உள்ளே விடுவது, திருடுவதற்கான ஒரு டெக்னிக் என்பது எங்களுக்கு ரொம்ப காலமாகத் தெரியாது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நெடுஞ்சாலை வாழ்க்கை! - 23

மாட்டு வண்டிகளில் வந்து வழிமறிப்பது; டிராக்டரை சாலையின் குறுக்கே நிறுத்துவது என விதவிதமான முறையில் தங்கள் தொழிலை அவர்கள் குழுவாகத் திறம்பட செய்துகொண்டே இருந்தார்கள். நாங்களும் ஒவ்வொருமுறையும் விதவிதமான வழிகளில் தப்பித்துக் கொண்டுதான் இருந்தோம்.

ஆந்திராவின் இந்தப் பகுதியில் முக்கியமான விஷயம் என்னவென்றால், உயிருக்கு ஆபத்து இருக்காது. பணம், மதிப்புமிக்க பொருட்களை மட்டுமே எடுத்துக்கொள்வார்கள். அதனால், நாங்களும் பணத்தைப் பலவாறாகப் பதுக்கி, கொஞ்சமாக வைத்திருப்பதுபோல நடிப்போம். சில நேரங்களில் விலை மதிப்புமிக்க சரக்குகளை ஏற்றிச்செல்லும்போது, லாரியுடன் கடத்துவதும் நடந்திருக்கிறது. நக்சல் பகுதி என்பதால், போலீஸ் பாதுகாப்பு அறவே இருக்காது. நான்கு வழிச்சாலை அமைத்த பிறகு, இந்த இடங்களில் மெதுவாகச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதால், ஓரளவு வழிப்பறி பயம் குறைந்துள்ளது. மேலும் இப்போது போலீஸ் நடமாட்டமும் இருக்கிறது.


அதேபோல், ஹைதராபாத் புறநகர் பகுதி மிக மோசமான இடம். ஒரு மாநிலத் தலைநகரில் இருக்கிறோமே என பாதுகாப்பாக உணர முடியாது. லாரியில் கொண்டுசெல்லும் பொருட்களைத் திருடுவதற்கென்றே பல கும்பல்கள் சுற்றுகின்றன. ஓய்வெடுக்கலாம் என நம்பி நிறுத்தினால், பொருட்களை இழந்துவிடுவோம். ஆயிரம் இரண்டாயிரம் மிச்சம் பிடிக்க, இரவு பகல் பார்க்காமல் உழைத்துப் பிழைக்கும் எங்களிடம், திருடிப் பிழைக்கவே பெரிய கொள்ளைக்கூட்டம் நெடுஞ்சாலையில் அலைகிறது’’ என்று சொன்ன சேகர், நிறுத்திய இடம் தோனி என்ற ஊரின் தாபா.

நெடுஞ்சாலை வாழ்க்கை! - 23

‘‘என்ன இங்கே நிறுத்திட்டீங்க?” என்றபோது, ‘‘இப்போ அவ்வளவு பிரச்னை இல்லை சார். பயப்படாம வாங்க!’’ என தைரியம் சொன்னார். பாரக் கயிறை இறுக்கிக் கட்டிவிட்டு, தாபாவில் இருந்த தொட்டியில் குளியல் போட்டோம். சிவா, பாத்திரங்களைக் கழுவி, இரவு உணவுக்கான ஆயத்த வேலைகளைச் செய்தார். புத்துணர்ச்சியோடு மீண்டும் புறப்பட்டோம். இரவு தங்கல் இல்லை. எனவே, அதற்கு ஏற்றவாறு நாமும் ஆயத்தமாகிக்கொண்டோம்.
கர்நூல், ரமப்பேரி, பெத்தகொட்டா, சாத்நகர் கடந்ததும் அனைவரும் இரவு உணவு முடித்துவிட்டு, ஹைதராபாத் நகரைக் கடக்கும்போது இரவு 11 மணியைத் தாண்டியிருந்தது. பைபாஸ் சாலையில் இருந்து பார்க்கும்போது, நகரின் ஒளி வெள்ளம் வானம் வரை பாய்ந்திருந்தது.

இரவு நேரம்தான் டிரைவர்களுக்கு சாதகமானது. அதிகமாக சிறு வாகனப் போக்குவரத்துகள் இல்லை என்றாலே, லாரி தடங்கல் இல்லாமல் முன்னேறிக்கொண்டே இருக்கும். அதேபோல், டிரைவர்களுடன் நாம் உரையாடுவதற்கும் இதுதான் உகந்த நேரம்.

இரவின் அமைதியும் முக உணர்ச்சியைக் காண முடியாத மென் இருட்டும், பகலில் பகிரத் தயங்கிய பல விஷயங்களின் வாசலாக இருக்கிறது. 20 ஆண்டுகளின் உழைப்பு விளைச்சலில் கிடைத்த இந்தப் பழைய லாரிதான் சேகரின் ஒரே சொத்து. சொந்தமாக வீடு கட்டும் கனவு, குழந்தைகளின் படிப்பு, தன் குடும்பத்தின் எதிர்காலம் என முக்காலமும் இந்த லாரி எனும் மூலதனத்தில்தான் அடங்கியிருக்கிறது. எதிர்காலத்தில் லாரித் தொழில் எப்படி இருக்குமோ என்ற அச்சம், இவர்களைக் கவலைகொள்ள வைக்கிறது. கையூட்டுகளிலும் கமிஷன்களிலும் கணிசமான பணத்தை இழந்துகொண்டே இருக்கும் இவர்களை, ‘அதை இவ்வளவுதான் என முறைப்படுத்திவிடுங்கள்; புண்ணியமாகப் போகும்’ என்று புலம்பவைக்கிறது. லாரி வாடகைக் கூலியின் பெரும் பகுதியை, டீசலுக்கும் டோல்கேட்களுக்கும் கொடுத்து விட்டு, ஐநூறு ஆயிரத்தை மிச்சம் பிடிக்கும் இவர்களுக்கு, நால்வழிச் சாலை வரமா - சாபமா?

பேச்சு சுவாரஸ்யத்தில் நிஜாமாபாத், நிர்மல் கடந்து அடிலாபாத் நெருங்கியிருந்தோம். விடிவதற்குச் சிறிது நேரமே இருந்தது. அடிலாபாத் - ஆந்திரப் பிரதேசத்தின் எல்லை. இதைக் கடந்தால், மஹாராஷ்ட்ரா மாநிலம். எல்லை கடப்பதற்கான சடங்குகளை முடிக்க, சோதனைச் சாவடியில் ஏராளமான லாரிகள் வரிசைகட்டி நின்றன. ஏதோ வெளிநாட்டுக்குப் பயணம் செல்வதைப் போல, ‘என்ன லோடு? எவ்வளவு வேல்யூ? இவ்வளவு கொடு!’ பிறகு, பில்களில் சில முத்திரைகள். பாஸ்போர்ட், விசா பெறுவது போன்ற விசாரணைகளின் இறுதியில், கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால்தான், டோல் கதவு திறக்கும். அதேபோல், மஹாராஷ்ட்ரா மாநிலத்துக்கான சடங்குகள் முடித்து வெளியேறியபோது, ‘விட்டு விடுதலையானோம்’ என்ற உணர்வு.

கரஞ்சி என்ற இடத்தில், சாலையில் வழிமறித்த காக்கி உடைக் காவலர்களின் சைகைக்குக் கட்டுப்படுவதா வேண்டாமா என்ற அல்லாட்டத்தில், உரத்த மிரட்டல் குரலுக்கு அடங்கி லாரியை நிறுத்தினார் சேகர். என்னமோ ஏதோ என நாம் பதைபதைக்க... கம்பீரமாக லாரியருகே வந்து, ‘மாமூல் கொடு’ என அதிகாரமிக்க தோரணையில் கேட்டான் அந்த காக்கி உடுப்புக்்காரன். இருநூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு வண்டியைக் கிளப்பினார் சேகர். ‘‘ஏன் லாரியை நிறுத்தத் தயங்கினீர்கள்?’’ என்றபோது, ‘‘இந்த இடத்தில் பல கொள்ளை, கொலைகள் போலீஸ் உடையில் நடக்கின்றன. அதனால்தான் நிறுத்த யோசித்தேன்’’ என்றவரிடம், ‘‘அப்போ இவங்க போலீஸ் இல்லையா?’’   என்று கேட்டேன்.

‘‘அது யாருக்குத் தெரியும்? ஒருவேளை போலீஸின் ஆட்களாகக்கூட இருக்கும்’’ என குண்டைப் போட்டார்.

(நெடுஞ்சாலை நீளும்)