Published:Updated:

கதை எழுதலாம் வாங்க - சகி

கதை எழுதலாம் வாங்க - சகி

கதை எழுதலாம் வாங்க - சகி

கதை எழுதலாம் வாங்க - சகி

Published:Updated:

ழக்கம் போல அவன் (ரகு) கடலுக்கு முதுகைக் காட்டிக்கொண்டும், அவள் (சுமதி) கடலைப் பார்த்துக்கொண்டும் அமர்ந்திருந்தார்கள். காபியைப் பருகிக்கொண்டே சுமதி சொன்னாள்.

கதை எழுதலாம் வாங்க - சகி

`‘எனக்கு உன்னைப் பிடித்திருந்தது. பொய் இல்லை. என்னைப் பெண் பார்க்க வந்த அன்று, நீ அணிந்திருந்த ஆகாய நிறச் சட்டை, வெள்ளையாக நீ சிரித்தது, இயல்பாக என் அப்பாவிடமும், அம்மாவிடமும் பேசியது, நல்ல காபி எதுவாக இருக்க வேண்டும் என்று என் அம்மாவுக்கு நீ வகுப்பு எடுத்தது, அதைக் கேட்டு இயல்புக்கு மேல் அம்மா ஆச்சர்யப்பட்டது, குழந்தைகளின் படிப்பு பற்றி விசாரித்தது (அவர்கள் வாங்கிய மார்க்குகள் பற்றி விசாரித்தது தேவையில்லை என்றாலும்), எல்லாம் பிடித்திருந்ததுதான். வீட்டு மனுஷன் மாதிரி விலகல் இல்லாமல் நீ பேசியது எல்லாருக்கும் பிடித்திருந்தது. ஆனால்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எனக்கு அது போதுமானதாக இருக்க முடியாதில்லையா? என் வாழ்க்கையை உன்னிடம் ஒப்படைத்து, ஒரு கூரையின் கீழ் வாழ வேண்டி இருக்கே.''

கடல் அதிகமாக இரைவது போல இருந்தது. பௌர்ணமியாக இருக்குமோ, என்னவோ?

பெரிய, சர்வதேச கம்பெனியில் நல்ல நாற்காலியில் நிறைய சம்பாதிப்பதாக அப்பா சொன்னார். பிக்கல்பிடுங்கல் இல்லாத குடும்பம் என்று அம்மா சொன்னார். நகைநட்டு, பணம்காசு என்று கொள்ளை அடிக்கிற குடும்பம் இல்லை என்றார் தரகு. ஒரு நண்பராகப் பழகலாம் என்று ஆரம்பித்தோம். காற்றில் மிதந்து வந்த மனசை நிறைக்கும் மல்லாரி மாதிரி, எல்லாம் நன்றாகப் போயிற்று.

நகர மக்கள் இன்னும் விட்டு வைத்திருக்கும் மரங்களின் கீழ் நிறைய நடந்தோம். காபி ஷாப்புகளில் நிறைய பேசினோம். ``எனக்கு ஒன்று தோன்றுகிறது, ரகு. கல்யாணத்துக்கு முன்பு ஆணும் பெண்ணும் பேசிக்கொள்வது அத்தனை நம்பகமானதுதானா? பாவனைகள் இல்லாது பகிர்ந்துகொள்கிறோமா? எனக்கு நிறைய சந்தேகங்கள். நடைபாதையில் உன் கால்களுக்குள் குறுக்கிட்ட அந்த நாய்க்குட்டியை அப்படி எட்டி உதைத்துத் தள்ள வேண்டுமா? அது துடித்து அழுதுகொண்டு ஓடியது என் மனசை அறுத்துவிட்டது. என்றைக்கது? ஆங்... பொங்கல் தொடர்பான விடுமுறை. நீ எனக்குத் தேர்ந்தெடுத்து என் பிறந்தநாளுக்கு அன்பளித்த சுடிதார், ரத்தச் சிவப்பும் கறுப்புப் பூக்களும். அவ்வளவு அழுத்தமான வர்ணம் எனக்குப் பிடிக்காது... சொன்னேன். உனக்குப் பிடிக்கும் என்றாய். என்ன சொல்ல? விதி, உனக்கென்று ஒரு மூளையையும் மனசையும் வைத்தது போல, எனக்கும் தனியாக வைத்திருக்கிறதே. அவற்றுக்கு நான் என்ன பதில் சொல்ல? என் அம்மா விழுங்கிக்கொண்டது போல, நானுமா? ஏன்? எனக்கு அளிக்கப்பட்ட ஒரு கப் தேநீரை நான் சிந்தி வீணாக்கலாமா? இன்னொரு கப் வாழ்க்கை எனக்கு அருளப்படாதே! இல்லையா, ரகு.

சினிமா தியேட்டர் இருட்டில், நீ காட்டிய கண்ணியம் எனக்குப் பிடித்திருந்தது. இந்த முப்பத்தாறு நாட்களும் நீ என்னிடம் காட்டிய சிநேகத்தின் வாசனை எனக்குப் பிடித்திருந்தது. அதேசமயம், மேசை துடைக்கும் அந்த முதியவரை, ஏதோ ஒரு துளி உன் சட்டையில் பட்டுவிட்டது என்பதற்காக அப்படிப் பேசி, கத்தி, முதலாளி வரை, விஷயத்தைக் கொண்டு போனது சரிதானா? இதை அப்போதே உனக்குச் சொன்னேன். அந்தப் பாஷைதான் அவர்களுக்கு புரியும் என்றாய். அவர்கள் என்பவர்கள், வாய்ப்பு கிடைக்காதவர்கள் மட்டும்தானே?''

சுமதி, தன் காபியின் இறுதிப் பகுதிக்கு வந்திருந்தாள். ``போன ஞாயிற்றுக்கிழமை நாம் போன அந்த உணவகம், மனதிலேயே நிற்கிறது, ரகு. என்ன அழகான இடம் அது. ஒரு பூங்காவுக்குள் உட்கார்ந்து சாப்பிடுவது போல அல்லவா இருந்தது. நீ புகை பிடித்தாய். ஏதோ ஒரு நகைப்புக்குரிய விஷயம் சொன்னாய். எனக்கும் சிரிப்பு வந்தது. அதைத் தொடர்ந்து உன் சிகரெட்டை பக்கத்தில் இருந்த செடியின் அகன்ற இலையில் வைத்துத் தேய்த்தாய். சிகரெட்டின் நெருப்புக் கங்கு, இலையைப் பொசுக்கியது. செடி, கதறும் சப்தம் எனக்குக் கேட்டது என்றேன். நீ சிரித்தாய். நான் கையறு நிலையில் இருந்தேன். நீ என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே இருந்தாய்!''

காபியை முடித்தாள் சுமதி. அவன் கண்களைப் பார்த்துச் சொன்னாள். `‘ஆகவே, நாம் நண்பர்களாக, அல்லது அறிமுகம் ஆனவர்களாக மட்டுமே இருப்போமே, ரகு. எதற்குக் கணவன் - மனைவி என்கிற உறவு. நீ புரிந்துகொள்வாய். உனக்கும் எனக்கும் சக இருதயரான துணை கிடைக்காமலா போகும்!''

கடல் இப்போது அமைதியாக இருந்தது.

 முதல் பரிசு பெற்ற வாசகியின் சிறுகதை

அவனும் அவளும்!

கதை எழுதலாம் வாங்க - சகி

``ஆனால்... என்ன சுமதி...” என்றான் குழப்பமாக ரகு. சுமதியின் மனக்கண்ணில்  போனவாரம் நடந்தது விரிந்தது...

ரகு, பெண் பார்த்து விட்டுச் சென்ற இரண்டாம் நாள் மாலை மணி மூன்றிருக்கும். சுமதியின் செல்போன் மெலிதாகக் கிணுகிணுத்தது. அவள் வேலையில் மூழ்கியிருந்ததால் அதனை எடுக்கவில்லை. ஏறத்தாழ மணி ஐந்தரை நெருங்கையில் மீண்டும் போன் முணுமுணுத்தது. சுமதி சட்டென போனை எடுத்தாள். நம்பரைப் பார்த்துவிட்டு குழப்பமாக காது கொடுத்தாள்.

‘`மூணு மணிலேர்ந்து டிரை பண்ணிட்டிருக்கேன். கிட்டத்தட்ட பதினஞ்சு மிஸ்டுகால்... போனை எடுக்காமல் என்ன பண்ணிட்டிருக்கே...” என்றான் ரகு படபடவென்று.

சுமதிக்குள் சுறுசுறுவென்று கோபம் மூண்டது. `அலுவலகத்தில் வேலை பார்க்காமல் என்ன செய்வார்கள்?' பட்டென்று கேட்க வாய் துடித்தது. நிதானப்படுத்திக்கொண்டாள்.
``ஆபீஸ் முடிஞ்சதும் காந்தி பார்க் பக்கத்துல இருக்கிற ஹோட்டலுக்கு வா...” என்றவன், பதிலை எதிர்பாராமல் துண்டித்தான்.

சிறிது யோசனைக்குப் பின் ஆட்டோ பிடித்து சென்றாள். ஹோட்டல் வாசலில் ரகு நின்றிருந்தான். இருவரும் உள்ளே நுழைந்து ஒரு டேபிளில் அமர்ந்தார்கள்.
அவளைக் கேட்காமலேயே, `‘இரண்டு பாஸந்தி... இரண்டு மெதுவடை...” என்றான்.

``எனக்கு என்ன வேணும்னு நீ கேட்கவே இல்லையே.... எனக்கு பாஸந்தி பிடிக்காது.”

‘`இந்த ஹோட்டல் பாஸந்தி சூப்பரா இருக்கும்... அதான் ஆர்டர் பண்ணேன். அப்புறம் சுமதி, உன்னை எதுக்கு வரச் சொன்னேன்னா, என்னைப் பத்தி நீ தெரிஞ்சுக்கணும்” என்றவன், டம்ளரில் இருந்த நீரைப் பருகினான்.

``லுக் சுமதி... என்னைப் பொறுத்தவரைக்கும் நீ வெள்ளை பேப்பரா இருக்கணும். அப்போதான் நான் அதில எனக்குப் பிடிச்ச மாதிரி எழுதிக்க முடியும்” என்று சிரித்தான்.

பாஸந்தியும், மெதுவடையும் வந்தன. அவற்றைச் சுவைத்தவாறே... அவனது வேலை லட்சியம், கனவு, குடும்பம், அதை அவள் கவனித்துக்கொள்வது எப்படி, முக்கியமாக அவளால், அவன் குடும்ப ஒற்றுமை பிரியாமல் இருப்பது எப்படி, அவன் குடும்பத்தாரிடம் அவள் அனுசரித்துப் போவது எப்படி, அவனுடைய நண்பர்கள்... என மூச்சு விடாமல் பேசி முடித்தான்.

அமைதியாக இருந்தாள். ``ஹேய்... என்ன சாப்பிடாம அப்படியே வெச்சிட்டே... வேஸ்ட்தானே. பணம், மரத்திலயா காய்க்குது?” என்றவாறே எழுந்தவன்,

``ஸாரி, எனக்கு டைம் ஆயிடுச்சு... கிளம்பறேன். நான் சொன்னதை மறந்துடாதே... நீதான் என்னைப் பாத்துக்கணும்... பை பை...'' என்றவாறே பைக்கை உதைத்து, சாலையில் விரைந்தான். திருமணத்துக்கு முன் அவளை வண்டியில் அழைத்துச் செல்லக் கூடாது என்பது, அவன் அம்மாவின் கட்டளையாம்.

``ஆனால்... என்ன சுமதி....” என்று மீண்டும் ஒலித்த ரகுவின் குரல், அவளை, நிகழ்காலத்துக்கு திருப்பியது.

‘`எல்லாம் ஓ.கே ரகு. ஆனா, ஏதோ ஒண்ணு மிஸ்ஸிங்... எல்லாருக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு. ஆனால், நீ இன்னும் என்னோட மனசுக்கு நெருக்கமாகலே.”

``நான் உன்கிட்ட தினமும் பேசலியா... உன்னைப் பாக்கணும்னு துடிக்கலியா...”

``தினமும் பேசின... இல்லேன்னு சொல்லல..! ஆனா, நீ மட்டும்தான் பேசின... உன்னைப் பத்தி மட்டுமேதான் பேசின... என்னைப் பத்தி நீ என்ன தெரிஞ்சுக்கிட்டே?

உன்கிட்ட பேசினதுல இருந்து... இல்லல்ல நீ பேசினத கேட்டதுல இருந்து சொல்றேன்... உனக்கு என்மேல அன்பு இல்ல... ஆளுமை உணர்வுதான் அதிகமா இருக்கு. உனக்கு ஏவல் செய்ய, உன்னோட கோபதாபங்களைக் கொட்ட ஒரு அடிமையாத்தான் என்னைப் பாக்குற. நீ எங்க வீட்டு மனுஷங்ககிட்ட இயல்பா பழகினது, ஜோவியலா பேசினது எல்லாம் நீ உன்னை நல்லவன்னு வெளிப்படுத்திக்க போட்டுகிட்ட ஒரு முகமூடி!”

- விரல்களால் கடற்கரை மணலை அளைந்தாள்.

‘`ஏதோ ஒண்ணு மிஸ்ஸிங்னு சொன்னேன்ல... அது என்ன தெரியுமா? அன்புள்ள மனசு... `உனக்கு நான் இருக்கேன்’கிற பாதுகாப்பு உணர்வு... அது எனக்கு உன்கூட பேசும்போது கொஞ்சம் கூட வரல...”

- காற்றில் பறந்த தலைமுடியை ஒதுக்கினாள்.

‘`முடிவா நீ என்னதான் சொல்ல வர்றே...” என்றான் ரகு, குரலில் கடுமையை ஏற்றியவாறே.

‘’இந்தக் கல்யாணம் நடந்தா... நம்ம ரெண்டு பேருக்குமே அது தீராத கவலையைத் தரும். எதுக்கு ரிஸ்க்? நீ நீயா இரு... நான் நானா இருக்கேன்!”

- எழுந்த சுமதி, காலியான காபி கப்பை அருகிலிருந்த குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு, புடவையை உதறிக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

கதை எழுதலாம் வாங்க!

`கதை எழுதலாம் வாங்க' போட்டியில் அளவற்ற ஆர்வத்துடன் கலந்துகொண்டு... கற்பனை வளத்துடனும், தெளிவான நடையுடனும் படைப்புகளை வாரிவழங்கி திக்குமுக்காட வைத்து

விட்டார்கள் வாசகிகள்! சிறுகதைகளுக்கான ஆரம்ப வரிகளை பிரபல எழுத்தாளர்கள் அளிக்க...  அதை வாசகிகள் எழுதி முடிக்கும் இந்தப் போட்டி, ஆரம்பத்திலேயே ஜெட் வேகம் எடுத்துவிட்டது!

கதை எழுதலாம் வாங்க - சகி

21.4.15 இதழில் எழுத்தாளர் பிரபஞ்சன், தான் வழங்கிய ஆரம்ப வரிகளை நூல் பிடித்து, வாசகிகள் எழுதிக்குவித்த கதைகளில் இருந்து முதல் பரிசுக்குரிய (` 1,000) கதையாக, கோயம்புத்தூர் வாசகி தேஜஸ் எழுதிய கதையை தேர்ந்தெடுத்திருக்கிறார். இரண்டாவது பரிசுக்குரிய  (` 750) கதையாக சென்னை வாசகி பொற்கொடி எழுதிய கதையை அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.

தன்னுடைய ஆரம்ப வரிகளுக்காக பிரபஞ்சன் எழுதிய கதையும், பிரபஞ்சன் கொடுத்த ஆரம்ப வரிகளுக்கு தன் கற்பனை மூலம் முழு வடிவம் கொடுத்த தேஜஸ்ஸின் கதையும் இங்கே இடம் பெறுகின்றன. இரண்டாம் பரிசு பெற்ற பொற்கொடியின் கதை www.vikatan.com-ன் அவள் விகடன் பக்கத்தில்...

பிரபஞ்சன் படம்: எம்.உசேன்

எழுத்தாளர் தேவிபாலா ஆரம்ப வரிகளை அளித்த  `கதை எழுதலாம் வாங்க - 2' போட்டிக்கும் கதைகள் குவிந்துள்ளன. போட்டி முடிவுகள்... அடுத்த இதழில்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism