Published:Updated:

கதை எழுதலாம் வாங்க - பொற்கொடி

தொங்கு தலைமுறை

கதை எழுதலாம் வாங்க - பொற்கொடி

தொங்கு தலைமுறை

Published:Updated:

சிறுகதைகளுக்கான ஆரம்ப வரிகளை பிரபல எழுத்தாளர்கள் அளிக்க... அதை வாசகிகள் எழுதி முடிக்கும் போட்டி, அவள் விகடன் இதழில் நடத்தப்படுகிறது. 21.4.15 தேதியிட்ட அவள் விகடன் இதழில் எழுத்தாளர் பிரபஞ்சன், தான் வழங்கிய ஆரம்ப வரிகளை நூல் பிடித்து, வாசகிகள் எழுதிக்குவித்த கதைகளில் இருந்து முதல் பரிசுக்குரிய கதையாக, கோயம்புத்தூர் வாசகி தேஜஸ் எழுதிய கதையை தேர்ந்தெடுத்தார். பிரபஞ்சன் எழுதிய கதையும், முதல்பரிசு பெற்ற கதையும் அவள் விகடன் இதழில் (19&05&15) பிரசுரமாகியிருக்கிறது. பிரபஞ்சன் தேர்ந்தெடுத்த இரண்டாவது பரிசுக்குரிய கதையை எழுதியவர், சென்னை வாசகி பொற்கொடி. இவர் எழுதிய கதை இங்கே இடம்பெறுகிறது.

கதை எழுதலாம் வாங்க - பொற்கொடி

வழக்கம் போல அவன் (ரகு) கடலுக்கு முதுகைக் காட்டிக்கொண்டும், அவள் (சுமதி) கடலைப் பார்த்துக்கொண்டும் அமர்ந்திருந்தார்கள். காபியைப் பருகிக்கொண்டே சுமதி சொன்னாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`‘எனக்கு உன்னைப் பிடித்திருந்தது. பொய் இல்லை. என்னைப் பெண் பார்க்க வந்த அன்று, நீ அணிந்திருந்த ஆகாய நிறச் சட்டை, வெள்ளையாக நீ சிரித்தது, இயல்பாக என் அப்பாவிடமும், அம்மாவிடமும் பேசியது, நல்ல காபி எதுவாக இருக்க வேண்டும் என்று என் அம்மாவுக்கு நீ வகுப்பு எடுத்தது, அதைக் கேட்டு இயல்புக்கு மேல் அம்மா ஆச்சர்யப்பட்டது, குழந்தைகளின் படிப்பு பற்றி விசாரித்தது (அவர்கள் வாங்கிய மார்க்குகள் பற்றி விசாரித்தது தேவையில்லை என்றாலும்), எல்லாம் பிடித்திருந்ததுதான். வீட்டு மனுஷன் மாதிரி விலகல் இல்லாமல் நீ பேசியது எல்லாருக்கும் பிடித்திருந்தது. ஆனால்...

பிரபஞ்சன் எழுதிய இந்த ஆரம்ப வரிகளில் இருந்து தொடர்கிறார் வாசகி பொற்கொடி.

“ஆனால்... என்ன?” என்று கேட்டவனின் பார்வை, கூர்மையுடன் அவள் மீது பதிந்தது.

“திருமணத்துக்குப் பின்தான் தெரிந்தது, உன்னால் எப்படியும் நிறம் மாறி, யாரையும் வசீகரிக்க முடியும் என்பதும் தேவை தீர்ந்ததும் அவர்களை அடியோடு விலக்கவும் முடியும் என்பதும்.”

“ஓ” என்றான் நக்கலாய்.

“ரகு! இந்த கடற்கரை ஓர ஃப்ளாட் என் கனவு. அதற்காகத்தான் ஆசைப்பட்டு இதை வாங்கினேன். கைக்கு எட்டு தூரத்தில் இருக்கும் இந்தக் கடலை ஒரு நாளாவது நீ ரசித்திருக்கிறாயா? வாழ்க்கை மிகவும் சிறியது. இருபது வயதிலிருந்து நாற்பது வயதுக்குள்தான், அதை வாழ்க்கைத் துணையுடன் ரசித்து வாழும் மனப்பக்குவமும் சூழ்நிலைகளும் நமக்கு கிடைக்கும். ஆனால், உன்னுடன் என்னால் எதையுமே ஷேர் பண்ணிக்க முடியலை ரகு” என்றபடி காபி கோப்பையை கீழே வைத்தாள் சுமதி.

கதை எழுதலாம் வாங்க - பொற்கொடி

மௌனமாய் தன்னை வெறித்தவனை நேராய் பார்த்தாள்.

“நீ ஒரு ஸினிக் (சிஹ்ஸீவீநீ) ரகு. யாரிடமும் உனக்கு நம்பிக்கை கிடையாது. அரசியல் பற்றிப் பேசினால் அரசியல் தலைவர்களின் ஒழுங்கீனங்களை பட்டியல் இடுகிறாய். ரிலாக்ஸேஷனுக்காக கிரிக்கெட் பார்த்தால், விளையாடுபவர்கள் எந்தெந்த நடிகைகளுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்பது பற்றிப் பேசி, விளையாட்டையே ரசிக்க விடாமல் செய்துவிடுகிறாய். கலையும் இலக்கியமும் உன்னைப் பொறுத்தவரை உபயோகமற்றவர்களின் வேலை. நல்ல சினிமாவை ரசித்து பாராட்டி விட்டேன் என்றால், தீர்ந்தது கதை; அத்துறையைச் சேர்ந்த சிலரின் அந்தரங்க வாழ்க்கையை அக்குவேறு ஆணிவேறாக அலசி, என்னை சங்கடத்துக்கு உள்ளாக்குவாய். என் அம்மாவுக்கு காபி வகுப்பு எடுத்தபோதே உன் கண்ணுக்கு குறைகள் மட்டும்தான் தெரியும் என்பதை நான் புரிந்துகொண்டிருக்க வேண்டும் ரகு.”

“ஓ! குறையே சொல்லக்கூடாதா?” ஏளனமாய் கேட்டவனை, ஏறிட்டாள் சுமதி.

கதை எழுதலாம் வாங்க - பொற்கொடி

“தாராளமாய் சொல்லலாம். நிறைகளையும் பாராட்டத் தெரிந்து இருந்தால்! இந்த உலகத்தில் எல்லா மனிதர்களுமே அன்புக்காக, பாராட்டுக்காக, அங்கீகாரத்துக்காக ஏங்குபவர்கள்தான் ரகு. உன்னுடன் இணைந்திருந்த இந்த இரண்டு வருடங்களில், என் சிரிப்பு, ரசிப்பு, சந்தோஷம் இவையெல்லாம் வெகுவாய் குறைந்துவிட்டது. என் சுயத்தையும் தொலைத்து நானும் உன்னைப்போல ஆகிவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது.”

“ஸோ... என்ன சொல்ல வருகிறாய்?”

“உன்னோட ஹிப்போக்கிரஸியை என்னால் தாங்க முடியவில்லை ரகு! வெளியுலகுக்கு உதாரணப் புருஷன் போல் காண்பித்துக் கொள்ளும் நீ, நான் ஆபீஸ் விட்டு லேட்டாய் வரும்போதும், உடன் வேலை செய்பவர்களிடம் போனில் பேசும்போதும் வீசும் அமிலப் பார்வை, என் மனதை பொசுக்குகிறது. ஒன்று, சென்ற தலைமுறை ஆண்களைப் போல் மனைவியை வேலைக்கு அனுப்பாமல் குடும்பத்தைப் பராமரிக்க வேண்டும். அல்லது இப்போதைய தலைமுறை இளைஞர்களைப் போல் மனைவிக்கு உரிய மரியாதை கொடுத்து இணையாய் நடத்த வேண்டும். இரண்டுக்கும் இடையில் தொங்குதலைமுறை போல், மனைவி சம்பாதிக்கவும் வேண்டும்; வாய் பேசாத, சுய கருத்தில்லாத அடிமையாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பதெல்லாம் ரொம்ப டூ மச் ரகு. என்னால் பொறுத்துப் போக முடியாது. உன் சந்தேக நோய் தீர்க்க என்னால் தினம் தினம் தீக்குளிக்க முடியாது. நாம் பிரிந்து விடுவதே மேல் என்று தோன்றுகிறது.”

கோபத்தில் கண்கள் சிவக்க அவளை வெறித்தவன், முகவாயைத் தேய்த்து ஏதோ யோசித்தவன், தன் நெற்றிபொட்டைத் தட்டிக் கொண்டான்.

“என்னுடைய யூகம் என்னவென்றால், இவ்வளவு திமிரான உன் பேச்சுக்கு பின்னால் எவனோ ஒருவன் இருக்க வேண்டும். போன மாதம் ஏதோ ப்ராஜெக்ட் டூர் என்று உன் ஆபீஸ் ஆண்களும் பெண்களுமாய் ஒரு வாரம் சென்றிருந்தாயே... அந்த கும்பலில் எவனையாவது என்
இடத்துக்கு செலக்ட் செய்து விட்டாயோ?”

அபாண்ட குற்றச்சாட்டால் செயலற்று திகைத்த சுமதி, அறுவறுப்பு மேலோங்க சட்டென்று எழுந்து கொண்டாள்.

“எத்தனை தலைமுறை தாண்டினாலும் உன் போன்ற ஆண்களால் பெண்களை புரிந்து கொள்ளவே முடியாது. எனிவே, மிஸ்டர் ரகு. குழம்பியிருந்த என் மனதை தெளிய வைத்ததற்கு நன்றி. வக்கீலிடம் கலந்து பேசி விவாகரத்து நோட்டீஸ் அனுப்புகிறேன். அது வரை காத்திராமல், இன்று மாலையே இந்த வீட்டை விட்டு நீங்கள் சென்றுவிட்டால் நல்லது.”

நிமிர்ந்த நடையுடன் திரும்பி பாராமல் நடந்து சென்றவளைக் கண்டு எழுந்தான் ரகு. முதன் முறையாகக் கடலைப் பார்க்க, அதன் பிரமாண்டம் அவனை அச்சுறுத்தியது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism