Published:Updated:

மெய் நிகர் தீபம்

கதிர்பாரதி

மெட்ரோபாலிட்டன் நகரின் வேகம் பரபரக்கும் சாலை அது. 

பின்னிருக்கையில் உட்காரப் பழகாத மலரொன்றை

அமர்த்தியிருக்கிறான் தகப்பனெனப்படுபவன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

செல்பேசியில் தன் காதலியோடு உல்லாசித்தபடியே

செலுத்துகிறான் இருசக்கர வாகனத்தை.

இடையிடையே வெடித்துச் சிரிக்கிறான்

அப்போதெல்லாம் வாகனம் சமன் குலைகிறது.

மலர் சிறிது சிறிதாக இடது பக்கம் சரிந்துகொண்டே வருகிறாள்.

பார்க்கும் நீங்கள் பதைபதைக்கிறீர்கள்.

'விபத்துத் திருப்பம் இது’ என்ற அறிவிப்பைக் கண்ணுறும்போது

நெஞ்சகத்தின் இடது பக்கத்தில் கை வைத்துக்கொள்கிறீர்கள்.

கல்லெறி தூரத்தில் தெரிகிறது ஒரு மேம்பாலம்.

பாதுகாப்பற்ற அதன் ஆரம்ப முனையில் நுழைகிறபோது

மெய் நிகர் தீபம்

அவர்களின் செல்பேச்சும் உச்ச உல்லாசத்துக்குள் நுழைகிறது.

சிலிர்த்து தலையைச் சிலுப்புகிறான் தகப்பன்.

தன் கைக்கொள்ளா தகப்பனின் தொப்பையைப் பிடித்தபடியும்

ஆபத்தான கோணத்தில் சரிந்தபடியும்

அந்த மலர் எதையோ பார்த்துப் புன்னகைக்கிறாள்.  

பாலத்தின் முடிவிலிருக்கும் யூ-டர்னில் திரும்பும்போது

இருக்கையிலிருந்து மலர் உறுதியாக உதிர்ந்துவிடுமென

உங்களுக்குத் தெரிந்துவிடுகிறது.

அக்கணத்திலிருந்து உங்கள் ரத்தம் கொதித்துயர

தத்தளிக்கிறீர்கள்... தவதாயப்படுகிறீர்கள்.

சட்டென சேனலை மாற்றிவிட்டுப் போகிறான்

உங்கள் வீட்டுச் சிறுவன்.

இப்போது 'கண்டாங்கி கண்டாங்கி கட்டிவந்த பொண்ணு...’

கானம் ஒளிர்கிறது.

சுவாசத்தில் நெருக்கடி தளர

கதாநாயகக் காதலனாக மாறிப்போகும் நீங்கள்

'இந்த நெஞ்சுக்கு சொத்தெழுதித் தீராது’ என்ற வரியில்

கதாநாயகக் காதலி காட்டும் நாணம்கொண்டு

இதயத்தைப் பின்னோக்கி நீவிவிடுகிறீர்கள்.

இப்போது உங்கள் கையில் சுடர்கிறது

காதலின் தீபம் ஒன்று!