Published:Updated:

சொல்வனம்

ஓவியங்கள்: டிராட்ஸ்கி மருது

சொல்வனம்

ஓவியங்கள்: டிராட்ஸ்கி மருது

Published:Updated:

ஊரான் கையில் 

இடது பக்கமோ வலது பக்கமோ

இரண்டு சக்கரமோ நான்கு சக்கரமோ

லகு ரகமோ கன ரகமோ

பேருந்தோ லாரியோ கன்டெய்னரோ

நகரோ புறநகரோ

கிராமமோ தேசிய நெடுஞ்சாலையோ

நால்வழிச் சாலையோ புறவெளிச் சாலையோ

எதுவென்று எழுதியிருக்கோ நம் தலையில்

நல்லதே நடக்குமென்றும்

நடப்பதே நல்லதென்றும் ஓரமாய் நட

நமதென்று நாமிருப்போம்

காரும் லாரியும் தமதென்று தானிருக்கும்

ஊரான் கையில் உயிர்!

- ஜெயா பாரதிப்ரியா

சொல்வனம்

இன்னும் கொஞ்ச தூரம்தான்!

இவனை என்ன செய்வதென்றே

தெரியவில்லை

இவன் போக்கில் போனால்

நமக்குத்தான் அசிங்கம்

டாஸ்மாக் திறக்கும் முன்பே

போய் நிற்பவனை

என்ன செய்வது

இன்று என்ன கிழமை

என்று கேட்டுப்பாருங்கள் அவனை

வாழ்க்கைப் பந்தயத்தில்

ஒதுங்கி நிற்பவனைப் பார்த்து

ஊர் பரிகசிக்காது

வாழ்க்கை ஒரு வாய்ப்பு என்று

எப்போது உணர்வான்

தோன்றி மறைந்தவர்கள்தான்

பெரும்பாலோர்

கல்வெட்டுபோல் நிலைத்தவர்கள்

எத்தனை பேர்

இதெல்லாம்

நினைத்துப்பார்க்கின்றானா அவன்

பாம்பின் விஷத்தால்

பாம்புக்குக் கெடுதலில்லை

நடைபோடு இடுகாட்டுக்கு

இன்னும் கொஞ்ச தூரம்தான்!

- ப.மதியழகன்

வண்ணாத்தி  மொவன்

முப்பது பழைய வேட்டி

இருவது கிழிஞ்ச சேலை

சுத்துப்பட்டு ஊருல

எழவு எல்லாத்துக்கும் நாந்தேன்

பந்த சோடிப்பு

பாட சோடிப்பு

அப்பனும் ஆத்தாளும்

அழகாத்தான் வச்சாங்க

மாயவன்னு பேரு!

எந்த சாதிப்பயலா இருந்தாலும்

வலிக்காம சொல்றான்

வண்ணாத்தி மொவனுக்கு

சேதி சொல்லுங்கனு!

- வினையன் 

சொல்வனம்

மருந்து

எறும்பு மருந்து வாங்க

கடைவீதிக்குச் சென்றேன்

மகளுடன்.

ஏம்பா,

நம்ம வீட்டு எறும்புகளுக்கு

உடம்பு சரியில்லையா

என்று அப்பாவியாகக்

கேட்டாள்.

மருந்து வாங்காமல்

திரும்பிவிட்டோம்!

- தினேஷ்