Published:Updated:

பறந்து சென்ற குக்கீஸ் பட்டாம்பூச்சி

பறந்து சென்ற குக்கீஸ் பட்டாம்பூச்சி

ட்டர் குக்கீஸ், சுஜிதாவின் மனசுக்குப் பிடித்த தின்பண்டம். பசுநெய் கலந்த மாவு பிசைந்து, அம்மா செய்யும்  குக்கீஸ் வாசனை மூக்கைத் துளைக்கும். நாக்கில் எச்சில் ஊறவைக்கும்.

பள்ளிக்குப் போயிருந்த சுஜிதா, சற்று நேரத்தில் திரும்பிவிடுவாள். அம்மா, ‘மைக்ரோவேவ் அவன்’-ல் இருந்த பிஸ்கட் தட்டை, சூடு தணிய மேசை மீது வைத்தார். பட்டாம்பூச்சி வடிவில் பிஸ்கட்டுகள். உடைத்த முந்திரிப்பருப்புகளைத் தூவினால், பட்டர் குக்கீஸ் ரெடி. அப்போதுதான் அந்த ஆச்சர்யம் நிகழ்ந்தது.

பறந்து சென்ற குக்கீஸ் பட்டாம்பூச்சி

தட்டிலிருந்த ஒரு பட்டாம்பூச்சி, சமையல் அறையில் இருந்த குளிர்சாதனப் பெட்டியின் ஒற்றைக் கதவு திறக்கப்படுவதைப் பார்த்தது.

‘‘அச்சச்சோ... சூட்டிலிருந்து வெளிவந்தாயிற்று.  இனி, குளிரவிடுவார்களோ?  நான் வெளியே செல்ல ஆசைப்படுகிறேன்” என்று வாய்விட்டுச் சொன்னது.

இதைக் கேட்ட மற்ற பிஸ்கட்டுகள், ‘கிக்கிபுக்கி... கிக்கிபுக்கி’ எனச் சிரித்தன.

‘‘எதுக்கு இப்படிச் சிரிக்கிறீங்க?” என்ற பட்டாம்பூச்சியின் குரலில் எரிச்சல்.

“நாமெல்லாம் குக்கீஸ். மனிதர்கள் சாப்பிடுவதற்காகவே உருவாகிறவர்கள். நமக்கான கடமையைச் செய்துதானே ஆக வேண்டும்!” என்றது இன்னொரு பட்டாம்பூச்சி.

உடன் பிறந்தவர்களின் பேச்சைக் கேட்ட பட்டாம்பூச்சி வருந்தியது. ‘‘உங்களுக்கு பயம். தடைகளை உடைத்துச் செல்ல தயக்கம். நான், காற்றுவெளியில் சுதந்திரமாகப் பறந்து திரிய நினைக்கிறேன்” என்றது.

மற்ற குக்கீஸ்கள் பதில் பேசவில்லை.

“சுஜிதாம்மா... தயவுசெஞ்சு என்னை தோட்டத்தை சுத்திப் பார்க்கவிடறீங்களா?” என்ற பட்டாம்பூச்சியின் குரல், சுஜிதா அம்மாவின் காதுகளைத் தொடவில்லை.

தட்டிலிருந்து தாவிய பட்டாம்பூச்சி, ஜன்னல் கம்பியில் உட்கார்ந்தது. வெளியே எட்டிப் பார்த்தது. ஓர் இலவம்பஞ்சு விதையை உல்லாசமாகக் கடத்திக்கொண்டு நகர்ந்த காற்றைப் பார்த்தது.

‘‘காற்றே... காற்றே... இயற்கையைப் பார்க்க ஆசை. என்னையும் தூக்கிச் செல்கிறாயா?’’ எனக் கெஞ்சியது.

‘‘இலவம்பஞ்சைவிட நீ கனமானவள்.உன்னைச் சுமந்து செல்ல, என்னை சற்றே பலசாலி ஆக்கிக்கொள்கிறேன்” என்ற காற்று, பட்டாம்பூச்சியைச் சுமந்து பறந்தது.

ஜன்னலைக் கடந்ததும் பூந்தோட்டம் கண்ணில் பட்டது. அங்கிருந்த ஒரு பூஞ்செடி மீது அமர்ந்த குக்கீஸ் பட்டாம்பூச்சி, “உன் பெயர் என்ன?” எனக் கேட்டது.

பறந்து சென்ற குக்கீஸ் பட்டாம்பூச்சி

“பட்டாம்பூச்சியான உனக்கு பூவைத் தெரியாதா? மக்கு... மக்கு’’ என்றது அந்த பூஞ்செடி.

“நிஜமாகவே தெரியாது. நான், ஆரோக்கியமான நெய், மைதா மாவு, சர்க்கரை கலந்து உருவான பட்டாம்பூச்சி” என்றது அது.

புரியாத, ஏடாகூடமான பதிலைக் கேட்டதும், “உனக்குத் தேன் கிடையாது. தூரப் போ!” என்றது பூ.

அங்கிருந்து பறந்த குக்கீஸ் பட்டாம்பூச்சி, காசித்தும்பை செடியைப் பார்த்து, தன் கவலையைக் கசியவிட்டது. தும்பைப் பூக்கள் அனுதாபப்பட்டன.

காற்று, வேறு திசையில் கிளம்பியதால், அதனுடன் பயணம் செய்தது பட்டாம்பூச்சி. மரங்களை, செடிகளை, பூக்களைப் பார்த்து வியந்தது.  

சற்றும் எதிர்பாராத நேரம், வானில் மேகங்கள் ஒன்று திரண்டன. திடீரென்று காதைத் துளைக்கும் ஓசையுடன் இடிச் சத்தம். ‘‘அச்சச்சோ... மழை வரப்போகுது. நான் வடக்குப் பக்கம் போகணும். இதுதான் எனக்குக் கிடைத்துள்ள கட்டளை. மழையில் நனைந்தால் நீ கரைந்துவிடுவாய். சீக்கிரம் வீட்டுக்குப் போய்விடு’’ என்றது காற்று.

அருகிலிருந்த ஒரு செடியின் அகன்ற இலை, ‘‘என்னிடம் வா பட்டாம்பூச்சியே. உன்னை மூடிப் பாதுகாக்கிறேன்” என்றது.

இலையின் அரவணைப்பில் சென்றதும், ‘என்ன செய்வது?’ என்ற படபடப்பு, குக்கீஸ் பட்டாம்பூச்சியின் மனதில் வலுத்தது. அந்த நேரம், வாசலில் ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய ஒரு சிறுமி,  கையில் வைத்திருந்த வண்ணக் குடையை விரித்தாள்.

‘‘அதோ, அவள்தான் சுஜிதா. அவள் அருகே வரும்போது, தாவி ஏறிக்கொள். நனையாமல் உள்ளே சென்றுவிடலாம்” என்றது அந்த அகன்ற இலை.

சுஜிதாவின் மலர்ந்த முகம், சடை அழகு, அழகாக ஆடிய காதணி ஆகியவற்றை சில நொடிகளில் பார்த்துவிட்ட குக்கீஸ் பட்டாம்பூச்சி, ‘எவ்வளவு அழகான சிறுமி?’ எனத் தனக்குள் சொல்லிக்கொண்டது.

சுஜிதா செடிக்கு அருகே வந்தபோது, மடங்கி இருந்த இலை சட்டென நிமிர்ந்தது. அதன் மீது இருந்த குக்கீஸ் பட்டாம்பூச்சி, அந்தரத்தில் மிதந்து, சீருடை அணிந்த சுஜிதாவின் சட்டைப் பைக்குள் விழுந்தது. இலைக்கு நன்றி சொன்னது.

உள்ளே வந்த சுஜிதா, தனது சீருடையைக் கழற்றி, நாற்காலி மீது போட்டாள். சட்டைப் பைக்குள் இருந்து மெள்ள எட்டிப் பார்த்தது குக்கீஸ் பட்டாம்பூச்சி.

கும்பலாக சிரிப்பொலி வந்தது. நாற்காலிக்கு அருகே இருந்த மேஜையில் இருந்த தட்டில் உடன் பிறந்தவர்கள் இருந்தார்கள்.

‘‘ஏன் திரும்பி வந்துவிட்டாய்?” எனக் கேட்டது ஒரு குக்கீஸ்.

வெளியுலகில் நடந்த கதையை அழகாக விவரித்த பட்டாம்பூச்சி, ‘‘எனக்கான கடமையை நிறைவேற்ற வந்துவிட்டேன்” என்று மலர்ச்சியாகச் சொன்னது.

சிரித்த சுஜிதா, சட்டென கண்களைத் திறந்தாள். குக்கீஸ் மணம் நாசியைத் தீண்டியது.

‘‘என்ன தூக்கத்தில் சிரிப்பு?” எனக் கேட்டார் அம்மா.

‘‘பறந்து சென்ற குக்கீஸ் பட்டாம்பூச்சி” என்ற சுஜிதா, தனது கனவைச் சொன்னாள்.

‘‘குட்டி எழுத்தாளரே, உனக்கு மட்டும் இப்படியான கனவுகள் வருகிறதோ. சரி, சாப்பிட வா” என்றார் அம்மா.

‘‘ம்ஹூம்... முதலில் இதை, கதையாக எழுதி முடிக்கிறேன்” என்றபடி தனது எழுது மேஜைக்கு ஓடினாள் சுஜிதா.

ஹாலில் மணம் பரப்பிக் காத்திருந்தன, பட்டர் குக்கீஸ் பட்டாம்பூச்சிகள்.

கொ.மா.கோ.இளங்கோ

மகேஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு