Published:Updated:

மகாபாரத மகா புருஷர்கள்!

'கலைவித்தகர்’ ஆருர்தாஸ் ஓவியங்கள்: பாரதிராஜா

மகாபாரத மகா புருஷர்கள்!

'கலைவித்தகர்’ ஆருர்தாஸ் ஓவியங்கள்: பாரதிராஜா

Published:Updated:

 தந்தைக்குப் பெண் கேட்ட தனயன்!

ஆதிகாலத்தில் அஸ்தினாபுரத்தில் ஆட்சி புரிந்த அரசன் துஷ்யந்தனின் சந்திர வம்சத்தில் தோன்றிய 'பிரதீபன்’ என்பவனுக்குப் பிள்ளையாய்ப் பிறந்தவன் 'சந்தனு’! வாலிப வயதில் கங்கை நதிக்கரையில் பாகீரதியைக் கண்டு மோகித்து, அவளை மணந்துகொள்ள விரும்பிக் கேட்கிறான். அதற்கு அவள் சம்மதித்து ஒரு நிபந்தனை விதிக்கிறாள். அதாவது, அவள் எது செய்தாலும் அவன் ஏன், எதற்கு என்று கேட்கக் கூடாது என்பதாகும். அதற்குச் சந்தனு உடன்பட்டு, அவளை மணந்து, மனைவியாக்கிக்கொள்கிறான். அதன் பயனாக பாகீரதி ஒரு குழந்தையை ஈன்றெடுத்து, அதைக் கொண்டுபோய் கங்கா நதியில் வீசிவிடுகிறாள்.

அவளுக்குக் கொடுத்த வாக்கின்படி சந்தனு அதைப் பற்றிக் கேட்காமல் இருந்தவன், அடுத்தடுத்து அவள் தனக்குப் பிறந்த குழந்தைகளை கங்கையில் வீசியபோதும் பேசாமல் இருந்தவன், எட்டாவதாக அவள் ஓர் ஆண் குழந்தையைப் பெற்று வழக்கம்போல கங்கையில் வீச எத்தனிக் கையில் தடுத்துக் காரணம் கேட்கிறான். 'இப்படிச் செய்தால் என் வம்சம் வாரிசற்றுப் போய்விடாதா?’ என்று பதறுகிறான். பாகீரதி உடனே, ''எனக்குக் கொடுத்த வாக்கை நீர் மீறியதால், இனி உம்முடன் இணைந்து வாழமாட்டேன். அதே நேரம், இந்தக் குழந்தையை நானே வளர்த்து உம்மிடம் ஒப்படைக்கிறேன். ஆனால், இவன் உமது வம்சத்துக்கு வாரிசாக மாட்டான்'' என்று கூறி, சந்தனுவிடமிருந்து பிரிந்து சென்றுவிடுகிறாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மகாபாரத மகா புருஷர்கள்!

அந்த ஆண் குழந்தைக்கு 'காங்கேயன்’ என்று பெயரிட்டு வளர்த்து ஆளாக்கி, அவன் வாலிப வயதுக்கு வந்ததும், அவனைக் கொண்டு வந்து தன் கணவன் சந்தனுவிடம் ஒப்படைத்துவிட்டுப் போய்விடுகிறாள் பாகீரதி. சந்தனு தன் மகனுக்கு தேவவிரதன் என்று பெயரிடுகிறான்.

ஒருநாள், சந்தனு கங்கை நதிக்கரையில் உலவிக் கொண்டிருந்தபோது எங்கிருந்தோ ஓர் இனிய நறுமணம் வீசுவதை உணர்ந்து, அந்த மணம் வந்த திசையை நோக்கிச் செல்கிறான். சற்றுத் தூரம் கடந்ததும் ஓர் இடத்தில், அழகே உருவான இளம் பருவ மங்கை ஒருத்தியைக் காண்கிறான். அவளைக் குறித்து விவரம் கேட்ட சந்தனு, அவள் பெயர் 'பரிமளகந்தி’ என்னும் 'மச்சசந்தி’ என்றும், மீனவ குலத்தைச் சேர்ந்தவள்; நதியின் இக்கரைக்கும் அக்கரைக்குமாக அன்றாடம் படகோட்டுகிறவள் என்றும் அறிந்து, அவளை மணந்துகொள்ள விரும்புகிறான். அவள் தனது தந்தையிடம் கேட்கும்படி கூற, அதன்படி அவன் தன்னைப் பற்றிய விவரத்தைக் கூறி, அனுமதி கேட்கிறான். அதற்குப் பரிமளகந்தியின் தந்தை,

''நீரோ அரசர். அத்துடன் உமக்கு ஒரு மகன் இருப்பதாகவும் கூறுகிறீர். நாளைக்கு அவன்தான் உமது வாரிசாகப் பட்டம் சூட்டப் பெற்று அரியணையில் அமரப்போகிறான். அதன் பிறகு என் மகள் ஆதரவற்றுப் போய்விடுவாளே! ஆகவே, உமது முதல் மகனுக்குப் பதிலாக என் மகள் வயிற்றில் பிறக்கும் பிள்ளையே உமக்கு வாரிசாகி, மகுடம் சூட்டப்படுவான் என்று வாக்குறுதி தந்தால், என் மகளை உமக்கு மணம் செய்விக்கிறேன்'' என்கிறார். அந்த நிபந்தனைக்கு சந்தனு மன்னன் சம்மதிக்க மறுத்து, அரண்மனைக்குத் திரும்பிவிடுகிறான்.

ஆனாலும், பேரழகியான மச்சகந்தியை மறக்க முடியாமல் சோகத்துடனும் சோர்வுடனும் இருக்கும் அவனது நிலைகண்ட தேவவிரதன், 'முந்தின நாள் கங்கைக் கரையில் இருந்து திரும்பியதில் இருந்து தந்தை ஏன் இப்படி வாட்டமாக இருக்கிறார்? அங்கு என்ன நடந்தது?’ என்று தேரோட்டியிடம் கேட்க, அவன் பரிமள கந்தியைப் பற்றிய விவரத்தைக் கூறுகிறான்.

உடனே தேவவிரதன், மச்சகந்தியின் தந்தையைச் சந்தித்து, அவர் மகளை தன் தந்தைக்காகப் பெண் கேட்டு, அவரின் நிபந்தனைப்படி தனது மகுடத்தைத் தியாகம் செய்வதாகத் தெரிவிக் கிறான். அதற்குப் பரிமளகந்தியின் தந்தை, ''நீ தியாகம் செய்யலாம். ஆனால், உனக்குப் பிறக்கும் பிள்ளை உனக்குப் பதிலாக பட்டத்துக்கு நாளை வாரிசு உரிமை கோரினால், அப்போதும் என் மகளின் வாழ்வு பாதிக்கப்படக்கூடும் அல்லவா?'' என்கிறார்.

அதற்கு தேவவிரதன், ''உண்மைதான். அப்படியானால், உமது மகள் வயிற்றில் பிறக்கும் பிள்ளை மட்டுமே அரசு வாரிசாக வரும் பொருட்டு, என் வாழ்நாளில் ஒருபோதும் நான் திருமணமே புரிந்துகொள்ள மாட்டேன். இது என் அன்னை மீது ஆணை!'' என்று அவரது கைப்பற்றிச் சத்தியம் செய்து கொடுத்த மாத்திரத்திலேயே, தேவ கணங்கள் தோன்றி மலர்மாரி பொழிவித்து, 'பீஷ்ம... பீஷ்ம’ என்று வாழ்த்தி, ஆசீர்வதிக்கின்றனர். 'பீஷ்ம’ என்றால், மானிடரில் கடுமையான விரதத்தை நிறைவேற்றுபவர் என்று பொருள். அதிலிருந்துதான் அவர் 'பீஷ்மர்’ என அழைக் கப்படலானார்.

மகாபாரத மகா புருஷர்கள்!

சந்தனு மன்னனை மணந்துகொண்ட பரிமளகந்தி 'சத்தியவதி’ என்னும் பெயர் பெற்று, 'விசித்திரவீர்யன்’, 'சித்திராங்கதன்’ என்னும் இரு பிள்ளைகளை ஈன்றெடுக் கிறாள். அவர்களில் சித்தி ராங்கதன் தன் பெயர் கொண்ட ஒருவனால் போரில் மாண்டுபோகிறான். எஞ்சியிருந்த விசித்திரவீர்யனுக்கு மணமுடிப்பதற்காக பீஷ்மர் காசி மன்னனின் அம்பா, அம்பிகை, அம்பாலிகை ஆகிய மூவரையும் பெண் கேட்கச் செல்கிறார். அவர்களை மணந்துகொள்ளும்பொருட்டு அங்கு வந்திருந்த ஏனைய தேசத்து அரசர்களுடன் போரிட்டு வெல்கிறார் (பீஷ்மர் பரசுராமரிடம் வில்வித்தை பயின்றவர்). அம் மூன்று கன்னிகைகளையும் அழைத்து வரும்போது, அவர்களில் ஒருத்தியான அம்பா, ஏற் கெனவே சௌபல நாட்டு அரசன் சால்வனை தான் விரும்பியிருப்பதாகக் கூற, அவளை அவனிடம் அனுப்பிவிட்டு, அம்பிகை, அம்பாலிகை இருவரையும் தன் சகோதரனான விசித்திர வீரியனுக்கு மணமுடித்து வைக்கிறார் பீஷ்மர்.

அற்பாயுள் படைத்திருந்த விசித்திரவீரியன் சந்தான பாக்கியம் (பிள்ளைப்பேறு) பெறுவதற்கு முன்பாகவே மாண்டுபோய்விடுகிறான். அம்பிகை, அம்பாலிகை இருவருக்கும் மீண்டும் மணம் செய்வித்து, சந்தான பாக்கியம் பெற்று வம்சவிருத்தி செய்விக்கவேண்டிய கடமைக்கு பீஷ்மரும், பொறுப்புக்கு தாய் சத்தியவதியும் ஆளாகிறார்கள். சத்தியவதிக்கு, அவள் சந்தனுவை மணந்துகொள்ளும் முன்பு பராசர முனிவரைச் சேர்ந்ததால் பிறந்த வியாச முனிவரின் நினைவு வருகிறது. அவர் அவளிடம் ஒருமுறை, ''நீ எப்போது என்னை நினைக்கிறாயோ, அப்போது நான் வந்து உனக்கு வேண்டிய உதவி புரிவேன்'' என்று சொல்லியிருக்கிறார்.

அதன்படி, தாய் சத்தியவதி நினைத்ததும் வியாச முனிவர் வந்து, தனது தாயாரின் விருப்பத்தையும் வேண்டுகோளையும் நிறைவேற்றும்பொருட்டு முதலில் அம்பிகையைச் சேர, அவருடைய ஜடா முடித் தோற்றத்தைக் கண்டு அஞ்சி, தன் இரு கண்களையும் இறுக மூடிக்கொண்டுவிடுகிறாள். அதன் காரணமாக அவளுக்குப் பிறக்கும் பிள்ளை குருடாகப் பிறக்கிறது. அவன்தான் மூத்தவன் திருதராஷ்டிரன்!

அடுத்தபடியாக, வியாச முனிவர் அம்பாலிகையைக் கூட வந்தபோது, அவரது ரிஷித் தோற்றத்தைக் கண்ட அவள் அதிர்ச்சியுற்று முகம் வெளுத்து உதிரம் குன்றிப்போகிறாள். அதன் காரணமாக அவளுக்குப் பிறக்கும் குழந்தை 'பாண்டு’ என்கிற ரத்தச் சோகையோடு பிறக்கிறது. அவன்தான் பஞ்ச பாண்டவரின் தந்தையான பாண்டு மன்னன்.

இவ்விரு குழந்தைகளையும் கண்ட சத்தியவதி, இன்னொரு முறை அம்பாலிகையைச் சேரும்படி வியாசரைக் கேட்டுக்கொள்கிறாள். அவரும் சம்மதித்த நிலையில் அம்பாலிகை அதற்கு உடன்படாமல், தன்னைத் தவிர்த்துக்கொண்டு தனக்குப் பதிலாக அறிவும் அழகும் ஒருங்கே அமையப்பெற்ற தன் தோழியை ஏற்பாடு செய்கிறாள். அவளும் அந்தக் கோரிக்கையை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டு, எந்த ஒரு எதிர்ப்பு உணர்வும் இன்றி வியாசருடன் ஈடுபட்டு, அழகிய ஓர் ஆண் மகவை ஈன்று எடுக்க, அதைக் கண்டு 'பிதாமகி’ (பாட்டி) சத்தியவதி சந்தோஷம் கொள்கிறாள்.

அந்தக் குழந்தைதான், அழகும் அறிவும் சேர்ந்து வளர்ந்து, பின் நாட்களில் நீதிக்கும் நேர்மைக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த 'விதுரர்’.

மகாபாரத மகா புருஷர்கள்!

பங்காளிக் காய்ச்சல் கொண்ட கௌரவர்களுக்கும், பாண்டவருக்கும் மூள இருந்த 'குருக்ஷேத்திர யுத்தம்’ நிகழாமல் தவிர்ப்பதற்காக விதுரர் எவ்வளவோ நீதிபோதனைகளை எடுத்துக் கூறியும்கூட, அவை ஏற்றுக்கொள்ளப்படாதது கண்டு வருந்தி, இறுதியில் இரு சாராருக்கும் இடையில் நடுநிலை வகித்து, யுத்த நடவடிக்கைகளில் இருந்து விலகிக்கொள்கிறார் அவர். யுத்த முடிவில் அவருடைய அறிவுரைகளும் நீதியும்தான் நிலைபெறுகிறது. அதன் பின்னர்தான் 'விதுரநீதி’ என்னும் வாசகமே தோன்றலாயிற்று. அதன் வாயிலாக, விதுரர்தான் 'உலகின் முதல் நீதிபதி’ என்னும் பெயருக்கும் பெருமைக்கும் உரியவர் ஆகிறார்.

தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும்பொருட்டு, தனது இல்லற வாழ்வைத் துறந்து, கடும் பிரம்மசரிய விரதம் பூண்டு, சகோதரனுக்கு மணம் செய்வித்து, வம்சம் வளரக் காரணமாக இருந்த பீஷ்மர், மகாபாரத இதிகாசத்தில் மதிப்புக்குரிய இடத்தைப் பெற்றவர் ஆவார்.

தனயன் இறந்த செய்தி கேட்டு உயிர் துறந்த தந்தை!

'துரோணம்’ என்னும் சொல்லுக்கு 'வில்’ என்றும் ஒரு பொருள் உண்டு. வில்வித்தைக்கு குருவாக இருந்து, காண்டீப வீரர்களை உருவாக்கியதன் காரணமாக அவருக்கு துரோணர் என்ற பெயர் வந்திருக்கலாம். பாரத்வாஜ முனிவருக்கும், பாரிஜதாநந்தரின் புதல்வியான திரூபிக்கும் பிறந்தவர் அவர். அரசகுமாரனான துருபதனோடு ஒரே குருகுலவாசத்தில் கல்வி பயின்று, அவனுக்கு நெருங்கிய தோழனாக இருந்தவர். அக்காலத்தில், 'நான் அரியணை அமர்ந்ததும் என் ராஜ்ஜியத்தில் சரிபாதியை உனக்குக் கொடுப்பேன்’ என்று துருபதன் துரோணரிடம் கூறியிருக்கிறான்.

பிற்காலத்தில், துருபதன் அரசன் ஆனபிறகு, தன் மகன் அஸ்வத்தாமனுக்கு பால் வேண்டி, ஒரு பசு வழங்குமாறு கேட்பதற்காக துருபதனிடம் செல்கிறார் துரோணர். 'பாதி ராஜ்ஜியம் தருவேன்’ என்று கூறியதையெல்லாம் மறந்து, துரோணரைப் பரிகசித்து எள்ளி நகையாடுகிறான் துருபதன். அதைக் கண்டு வெகுண்ட துரோணர், ''என் மாணவனை விட்டு உன்னைத் தோற்கடித்து, கட்டி இழுத்து என்னிடம் கொண்டுவரச் செய்கிறேன், பார்!'' என்று சபதம் செய்து, பீஷ்மரிடம் சென்றார். அவர் மூலமாக பாண்டவர்களுக்கு வில்வித்தை பயிற்றுவித்து, அர்ச்சுனனை அந்த வித்தையில் அசகாய சூரனாக்கி, தன்னை எள்ளி நகையாடிய துருபதனனை வென்று, சபதமிட்டது போலவே அவனைக் கட்டி இழுத்து வந்து தன் முன் நிறுத்தி வைக்கச் செய்தார் துரோணர். பிறகு அவனை மன்னித்து விடுவித்தார்.

பின்னாளில், குருக்ஷேத்திர யுத்தத்தில் துரோணரும் அவருடைய ஒரே மகனான அஸ்வத்தாமனும் துரியோதனனுக்குத் துணையாக அவன் பக்கம் இருந்து பாண்டவருக்கு எதிராகப் போரிடுகின்றனர்.

பதினைந்தாம் நாள் யுத்தம் தீவிரமடைந்து உக்கிரமாக நடைபெறுகிறது. அஸ்வத்தாமன் அதிபராக்கிரமத்துடன் போரிட்டு, பாண்டவ சேனையைச் சேர்ந்த வீரர்களைக் கொன்று குவித்துக்கொண்டிருப்பதைக் கண்ட கிருஷ்ணர், அவனை வீழ்த்த ஓர் உபாயத்தைக் கையாள்கிறார்.

தந்தையான துரோணரும், தனயனான அஸ்வத்தாமனும் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அதீத பாசத்தை துருப்புச் சீட்டாக்கி, ஒரே நேரத்தில் அவ்விருவரையும் சாய்க்கத் திட்டமிடுகிறார். அதற்காக 'அஸ்வத்தாமன்’ என்னும் பெயர் கொண்ட ஒரு யானையை வீழ்த்தச் செய்து, அது இறந்துவிட்டது என்ற பொருளில் ''அஸ்வத்தாமா ஹதஹ குஞ்சரஹ'' என்று உரத்து அறிவிக்கும்படி தருமரிடம் தெரிவிக்க, அவரும் அவ்வாறே அந்த வாக்கியத்தைக் கூறும் தருணத்தில், ''அஸ்வத்தாமா ஹதஹ'' என்பதை அடுத்து வரும் 'குஞ்சரஹ’ என்னும் வார்த்தை கேட்காதவாறு சங்க நாதம் எழுப்புகிறார் கிருஷ்ணர்.

ஆகவே, 'அஸ்வத்தாமா ஹதஹ’, அதாவது 'அஸ்வத்தாமன் இறந்து விட்டான்’ என்று காதில் விழ, துரோணர் அதிர்ச்சியுற்று, புத்திர

வாஞ்சை மேலீட்டால் மனம் தளர்ந்து, வீரம் குன்றி துயரத்தால் உயிர் துறக்கிறார். வேறொரு பகுதியில் யுத்தத்தில் ஈடுபட்டிருந்த அஸ்வத்தாமன், உயிருக்கு உயிரான தம் தந்தை மாண்டுபோனதை அறிந்து திடுக்கிட்டு பலமிழந்து எளிதாக வெல்லப்பட்டு வீழ்ந்து மடிகிறான்.

ஆக, பகவான் ஸ்ரீகிருஷ்ணரே ஆனாலும், சூழ்ச்சியின் மூலமே துரோணரை வெல்ல முடிந்தது. அந்த அளவுக்கு வீரத்திலும் வில் வித்தையிலும் சிறந்து விளங்கியவர் துரோணர்.

பீஷ்மர், விதுரர், துரோணர் இம்மூவரும் மகாபாரத மகாபுருஷர்கள் என்றால், அது மிகையில்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism