Published:Updated:

ஜகம் புகழும் புண்ணிய கதை !

வீயெஸ்வி, ஓவியங்கள்: கேஷவ்

ஜகம் புகழும் புண்ணிய கதை !

வீயெஸ்வி, ஓவியங்கள்: கேஷவ்

Published:Updated:

தமிழ் மூவர் என்று போற்றப்படும் அருணாசலக் கவிராயர், முத்துத்தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை ஆகியோர் செம்மொழியாம் தமிழ் மொழிக்குப் பெருமையும் புகழும் சேர்த்தவர்கள். இவர்களில் அருணாசலக் கவிராயர்தான் இந்தக் கட்டுரையின் கதாநாயகன்.

தஞ்சாவூர் மாவட்டம், தில்லையாடியில் நல்லதம்பி பிள்ளை- வள்ளியம்மை தம்பதிக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர் அருணாசலக்கவி (1711-1779). இளமையிலேயே பெற்றோரை இழந்து, சகோதரர்களின் பொறுப்பில் வளர்ந்தவர். குறிப்பிட்ட வயது வந்ததும், தருமபுரம் வந்தடைந்தார். தம்பிரான்களிடம் தெலுங்கும் கிரந்தமும் கற்றார். 18 வயதுக்குள் பண்டிதராக உயர்ந்தார். தமிழிலும் கிரந்தத்திலும் உள்ள சைவ ஆகமங்களை தாமே படித்து அறிந்தார். தருமபுரம் மடத்தின் சிறந்த அறிஞராகத் திகழ்ந்த அம்பலவாண கவிராயரிடம் பல நுட்பங்களைக் கேட்டும் தெளிவு பெற்றார்.

''அருணாசலா, நீங்கள் இந்த மடத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும்!'' என்று வேண்டினார் அம்பலவாணர். ஆனால், மறுத்துவிட்டார் அருணாசலர். 'அறத்தாறு’ என்பது இல்வாழ்க்கையே என்று உணர்ந்தவராக, கருப்பூரில் உள்ள நங்கை ஒருத்தியை மணந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜகம் புகழும் புண்ணிய கதை !

இனிதே நகர்ந்தது இல்வாழ்க்கை. வணிகத்தின் பொருட்டு புதுச்சேரிக்குச் செல்லும் வழியில், சீர்காழியில் உள்ள தருமபுர மடத்தில் தங்கினார் அருணாசலர். இவருடைய சகலை சிதம்பரம் பிள்ளை, மடத்தின் பண்டார சந்நிதி. அருணாசலரை அங்கேயே தங்கும்படியும், சீர்காழியின் சிறப்பைப் பள்ளு இலக்கியமாகப் பாடும்படியும் கேட்டுக் கொண்டார் சிதம்பரம் பிள்ளை. அன்றிரவே 'சீர்காழிப் பள்ளை’ப் பாடி, பணியாளரிடம் கொடுத்துவிட்டு, தம்பிரானிடம் சொல்லாமல் புதுவைக்குப் புறப்பட்டுவிட்டாராம் அருணாசலர்.

நாட்கள் நகர்ந்தன. புதுவையில் இருந்து சீர்காழி மடம் திரும்பிய அருணாசலரை, அங்கு அவருக்காகக் கட்டப்பட்ட புது வீடு வரவேற்றது. பண்டார சந்நிதிகள் கட்டிக் கொடுத்த வீடு அது. அங்கிருந்தபடியே பாடல்கள் பல இயற்றினார் அருணாசலர். அருவியாகக் கற்பனை பெருக்கெடுத்து ஓட, சீர்காழி தலபுராணம் உள்ளிட்ட பல படைப்புகள் அடுத்தடுத்து உருவாகின.

மாலை நேரங்களில் இலக்கியப் பேருரை நிகழ்த்துவதையும், மாணவர்களுக்குப் பாடம் போதிப்பதையும் வழக்கமாகக் கொண்டார் அருணாசலக் கவிராயர். சட்டநாதபுரம் என்ற ஊரில் இருந்து வெங்கடராமையர், கோதண்டராமையர் ஆகிய இருவரும் இவரிடம் மாணவர்களாக இணைந்தார்கள்.

''ஐயா, தாங்கள் ராமகாதையை பாடல்களாக உருவாக்க வேண்டும்...'' - பெயர்களிலேயே ராமர் இருந்த காரணத்தாலோ என்னவோ, ஆசானிடம் இப்படியொரு வேண்டுகோளை முன்வைத்தார்கள் இந்த இருவரும்.

யோசித்தார் கவிராயர். 'வால்மீகி இயற்றியது ராமாயணம். அவரைத் தொடர்ந்து கம்பரும் வேறு சிலரும்கூட ராமகாவியத்தை பல்வேறு மொழிகளில் பாடிவிட்டார்கள். இதில் நான் என்ன புதியதாகச் செய்துவிட முடியும்?’ எனச் சிந்தித்தபடியே உறங்கச் சென்றுவிட்டார்.

பொழுது புலர்ந்தது. புல்லினங்கள் பூபாளம் பாடின. புத்தம்புது யோசனை உதிர்த்தது கவிராயருக்கு. 'ராமனின் கதையை இசை நாடகமாக வடித்தால் என்ன?’

விநாயகர் தோத்திரமாக நேரிசை வெண்பா உருவாகியது.

ஜகம் புகழும் புண்ணிய கதை !

ஆனை முகனே அரனார் திருமகனே
சேனையர்கோ னாகவளஞ் செய்வோனே - ஞானமே
நாடகத்தைக் கொண்ட உன்றன் நல்லருளா லேராம
நாடகத்தைச் சொல்லுவேன் நான்.
வெங்கடராமனும், கோதண்டராமனும் பூரித்து மகிழ்ந்தார்கள்.

அருணாசலக் கவிராயரிடமிருந்து ராமாயணப் பாடல்கள் பிரவாகமாகப் பொங்கி வர, அவற்றுக்கு இசையமைத்து இன்பமுற்றார்கள் மாணவர்கள் இருவரும்.

கனமான வால்மீகர் சுலோகஞ் செய்தார்
கம்பரும் ராமாயணத்தைக் கவியாச் செய்தார்
உன தாசையாலே நாடகமாச் செய்தேன்
உளறினால் என்ன பலன் உண்டாம் என்றால்
முனிமார் சொல்லிய ராம மந்திரத்தை
மூவரும் ஓதிய ராம மந்திரத்தை
வனவேடன் மராமரா மென்றே முத்தி
வழி கண்டான் அது கொண்டே மொழிகின்றேனே!

- என்று விருத்தங்களும் பாடல்களும் அறிமுகமாகப் பாடி, ஸ்ரீராமச்சந்திரனுக்கு ஜயமங்களமும் பாடி, பால காண்டத்துக்குள் நுழைந்தார் கவிராயர். அடுத்தடுத்து, மற்ற காண்டங்கள் வளர்ந்தன. 'மகுடாபிஷேகம் கொண்டானே ஸ்ரீராமச்சந்திரன்... மகுடாபிஷேகம் கொண்டானே’ என்று பட்டாபிஷேக வைபவத்துடன் தமது ராம நாடகக் கீர்த்தனைகளை நிறைவு செய்தார்.

ஜகம் புகழும் புண்ணிய கதை !

கம்பனின் ராமகாதை போல் இந்நூலும் திருவரங்கத்து இறைவன் முன்னிலையில் அரங்கேற வேண்டும் என்று விரும்பினார் கவிராயர். இதற்காக கோயில் நிர்வாகிகளை அணுகினார். 'இறைவன் அனுமதித்தால் எங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இல்லை...’ என்று பதில் வந்தது. 'ஏன் பள்ளிகொண்டீர் ஐயா, ஸ்ரீரங்கநாதரே..?’ என்று இறையருள் வேண்டிப் பாடினார். அன்று இரவு, கவிராயரின் கனவில் தோன்றினார் அரங்கர். 'கோயில் பணியாளர்களை நும் கவியில் பாடினால் நூல் அரங்கேறும்’ என்று அருளினார். அதேபோல், கோவிலார் கனவிலும் தோன்றி, 'பெருமாளுக்குத் தொண்டு செய்யும் பணியாளர்களைப் பற்றி கவிராயர் பாடியபின் நூலை அரங்கேற்றுங்கள்’ என்றும் உத்தரவானது.

நாடகத்தின் முன்மொழிப்பாட்டான 'தோடயம்’ பகுதியில், பலரையும் பாடி இணைத்தார் கவிராயர். கவிச்சக்ரவர்த்தி கம்பர் அரங்கேற்றிய அதே மண்டபத்தில் அருணாசலக் கவிராயரின் ராம நாடகமும் அரங்கேறி, அலங்கரித்தது. அவை இன்று வரை பலராலும் கச்சேரி மேடைகளில் பாடப்பட்டு வருகின்றன.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒருநாள்...

சென்னை, செட்டிநாடு வித்யாச்ரமத்தின் குமாரராஜா முத்தையா ஹாலில் திரை விலகியபோது, தமிழ் மூவரில் ஒருவரான அருணாசலக் கவிராயரின் ராம நாடகப் பாடல்களைப் பாடி மகிழ்ந்து, மகிழ்விக்க பாடகி டாக்டர் எஸ்.சௌம்யாவின் தலைமையில் இன்றைய இளம் இசைக்கலைஞர்கள் நால்வர் தயாராக அமர்ந்திருந்தார்கள்.

பரத் சுந்தர், சந்தீப் நாராயண், நிஷா ராஜகோபாலன், கே.காயத்ரி... பக்கவாத்தியமாக எம்.எஸ்.அனந்தகிருஷ்ணன் (வயலின்), பூங்குளம் சுப்ரமணியன் (மிருதங்கம்), கே.வி.கோபால கிருஷ்ணன் (கஞ்சிரா). டீம் லீடராக இருந்தாலும், நடுநாயமாக இடம் பிடித்துக்கொள்ளாமல், வலது ஓரமாக உட்கார்ந்து, கதையை விளக்கி, மற்றவர்களை ஆட்டு(பாட்டு)வித்துக்கொண்டிருந்தார் சௌம்யா!

ஜகம் புகழும் புண்ணிய கதை !

'ஸ்வதந்திரா’ என்று தலைப்பிட்டு, The Artery ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சிக்கு அனுமார் பலம் கொடுத்தது, ஹிந்து கார்ட்டூனிஸ்ட் கேஷவ் வரைந்து கொடுத்து, பெரிய திரையில் புரொஜக்ட் செய்யப்பட்ட ஓவியங்கள். ஏற்கெனவே தான் வரைந்து வைத்திருந்த ஒரு சில ராமாயண ஓவியங்களுடன், இந்த நிகழ்ச்சிக்கென்று சௌம்யா தேர்ந்தெடுத்த பாடல்களுக்கு ஏற்ப புதியதாக சிலவற்றை வரைந்து கொடுத்தாராம் கேஷவ். கச்சேரி மேடையில் ஒளியும் ஒலியும்!

அறிமுக பாசுரமும், விநாயகர் தோத்திரமும் முடிந்த பின், அஸாவேரி ராகத்தில் 'ஸ்ரீராமசந்திரனுக்கு ஜயமங்களம்’ பாடினார்கள் நான்கு பேரும். நடுநடுவே சௌம்யாவும் இணைந்தார். பின்னால் திரையில் தத்ரூபமாக ஆனைமுகத்தோன் அருள்பாலித்தார், கேஷவ் கை வண்ணத்தில்.

இப்பூவுலகில் ராமன் அவதரிப்பதை, 'பரப்பிரும்ம சொரூபமே ஸ்ரீராமன் ஆகப் பாரில் வந்து பாடும்’ என்று கௌளிபந்து ராகத்தில் அழைக்கிறார் கவிராயர்.

மேடையில் இப்படி வரிசையாகப் பாடும்போது, நம் காதுகள் இசையை உள்வாங்கிக்கொள்ள, அட்டகாசமாக அணிவகுத்து வரும் ஓவியங்கள் மீதே கண்கள் பதிந்துவிடுகின்றன. 'அட, நம்ம கதையை இங்கே நாலு பேர் ஜோரா பாடறாங்களே’ என்று ஓவியத்தில் வரும் ராமாயணப் பாத்திரங்கள் உயிர் பெற்று வந்து பேசுவது போன்ற பிரமையும் ஏற்படுகிறது.

மிதிலை நகர் வீதியில் ராம லட்சுமணனுடன் விசுவாமித்திரர் நடந்து வர, மாடத்தில் சீதை நின்றுகொண்டிருக்க, 'ஆரோ இவர் ஆரோ, என்ன பேரோ அறியேனே’ என்ற கவிராயரின் பாடலை பைரவி ராகத்தில் சந்தீப் நாராயணன் பாடியதும்...

ஜகம் புகழும் புண்ணிய கதை !

கௌசிகர், ஸ்ரீராமனின் வரலாறு
சொல்லும் விதமாக, சங்கராபரணத்தில்

'ஆர் என்றெண்ணாமலே நாளும் இவன் அதிசயங்களைச் சொல்லக் கேளும்’ என்று ஆரம்பித்து, 'சூராதிசூரன் ராமன் எனும் பேரன் சுகுணதீரன் ரவிகுல குமாரன் இவனை...’ என்று அனுபல்லவியிலும், 'பருத்தவில் இவன் கைக்குப் போதுமோ போதாதோ பார்க்க வேணும் இன்னோர் ஆசை...’ என்று மூன்றாவது சரணத்திலும் அருணாசலக் கவிராயர் பாடியிருப்பது காதுகளுக்கு விருந்து!

கெட்டி மேளம் முழங்க, ராகவன் சீதையை பாணிக்கிரகணம் செய்து, பிராட்டியின் கரம் பிடித்து அக்னியை வலம் வந்து, பாதத்தை மோகமுடன் பற்றி அம்மி மீது வைக்க... மண விழா மங்களகரமாக முடிகிறது.

ஊர் திரும்பும் வழியில், ராமருக்கும் பரசுராமருக்கும் இடையே நடந்த சம்வாதத்தை சந்தீப் மற்றும் பரத்சுந்தர் மாறி மாறி மாடுலேஷனுடன் பாடியது அழகு!

தன் மனதைக் கலைக்க வந்த கூனியை கைகேயி கோபிக்கும் காட்சியை கேஷவ் கற்பனையில் கண்டிருந்த அசத்தலான ஓவியத்தை நாம் ரசித்துக்கொண்டிருக்க, ராமன் பிரிதலைக் குறித்து சீதை உசேனி ராகத்தில் வருத்தப்படும் கட்டம்...

எப்படி மனம் துணிந்ததோசாமி வனம் போய்வருகிறேன்
என்றால் இதை ஏற்குமோ பூமி
எப்பிறப்பிலும் பிரியவிடேன் என்று கை தொட்டீரே
ஏழையான சீதையைநட் டாற்றிலே விட்டீரே!

அடுத்து, ஆரண்ய காண்டத்தில் ஓரிரு பாடல்களை முடித்துக்கொண்டு, சுந்தர காண்டத்துக்குள் நம்மை அழைத்து செல்கிறார் சௌம்யா.

ஜகம் புகழும் புண்ணிய கதை !

'அந்த ராம சவுந்தரியம் அறிந்து சொல்லப்போமோ அம்மா’ (கேதாரகௌள ராகம் - கே.காயத்ரி) என்று சீதையிடம் ராமனை அனுமன் வர்ணித்துவிட்டு,

'கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையைக் கண்டேன் ராகவா’ என்று ராமனிடம் நல்ல தகவலை அனுமன் பூரிப் புடன் பகிர்ந்துகொள்ளும் காட்சியை கேஷவ் கை வண்ணத்தில் காணும்போது சிலிர்ப்பு ஏற்படுகிறது. தொடரும் விபீடண சரணாகதியும், யுத்தக் காட்சிகளும் முடிந்து ராமனுக்கு மகுடாபிஷேகம் செய்து மகிழ்கிறார் அருணாசலக் கவிராயர். அந்தப் பட்டாபிஷேக ஓவியம்... வாவ்!

அருணாசலக் கவிராயரின் எளிமையான ராம காதையை தங்களின் இனிமையான குரலால் நம் காதுகளில் தேன் போல் வார்த்த சௌம்யா குழுவினரின் பங்களிப்பு அபாரம் என்றால், ராமாயண கதாபாத்திரங் களை தன்னுடைய ஓவியங்களால் நம் கண்முன் நிறுத்திய கார்ட்டூனிஸ்ட் கேஷவ், அன்றைய மாலை நேரத்தின் ஆட்ட நாயகன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism